- இந்திய ராணுவத்தில் பணியாற்றும் குறுகிய பணிக்கால சேவையில் (ஷார்ட் சர்வீஸ் கமிஷன்) இருக்கும் பெண் அதிகாரிகளுக்கு, நிரந்தர பணிக்கால சேவை (பர்மனென்ட் சர்வீஸ் கமிஷன்) வழங்கப்படுவதுடன் படைகளுக்குத் தலைமை தாங்கும் அந்தஸ்தும் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ராணுவத்தில் பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும் முயற்சியின் மிகப் பெரிய வெற்றி என்று இதைக் கருதலாம்.
ராணுவத்தில் பெண்கள்
- இந்திய ராணுவத்தில் பெண்கள் மிகச் சிறப்பாக பணியாற்றி வருவது புதிதொன்றுமல்ல. ராணுவத்தின் 10 படைப் பிரிவுகளில் படை வீரர்களுக்குத் தலைமை தாங்கி பெண்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
- இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள ராணுவத்தில் பெண்கள் பொறுப்பான பதவிகளை வகிப்பது புதிதொன்றுமல்ல. 1995 முதல் இஸ்ரேலிலும், 2001 முதல் ஜெர்மனியிலும் நேரடி போர்ப் பிரிவில் பெண்கள் பணியாற்றி வருகிறார்கள்.
- ராணுவத்தில் அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் கடினமான வழிமுறை. ராணுவத்திற்கு வெளியே இது குறித்த முழுமையான புரிதல் இல்லை. கடற்படை, விமானப் படை போலல்லாமல் ராணுவத்தில் பல்வேறு துறைகளும் சேவைப் பிரிவுகளும் உள்ளன. அவற்றைப் புரிந்துகொண்டால் மட்டுமே, பெண் அதிகாரிகளுக்குப் படையைத் தலைமை தாங்கும் வாய்ப்பும் நிரந்தர பணிக்கால சேவையும் வழங்கப்பட வேண்டும் என்கிற தீர்ப்பின் முக்கியத்துவத்தை உணர முடியும்.
பல்வேறு பிரிவுகள்
- இன்ஃபன்ட்ரீ எனப்படும் காலாட்படை, மெக்கனைஸ்ட் இன்பன்ட்ரீ, ஆர்மர்டு கார்ப்ஸ், ஆர்ட்டிலரி எனப்படும் பிரிவுகளை உள்ளடக்கியது காம்பாட் ஆர்ம்ஸ் எனப்படும் நேரடி போர்க்களப் பிரிவு. இதில் பெண் அதிகாரிகள் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.
- அடுத்தாற்போல, நேரடி போர்ப் பிரிவின் துணைப் பிரிவுகளான சிக்னல்ஸ், பொறியியல், ராணுவத்தின் விமானப் பிரிவு, புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றில் பெண் அதிகாரிகள் இணைக்கப்படுகிறார்கள். இவை அனைத்திலும் நேரடியாக எதிரிகளுடன் களத்தில் போராடும் தேவை கிடையாது.
- மூன்றாவதாக, ராணுவத்தில் பல சேவைப் பிரிவுகளும் இருக்கின்றன. ஆர்மி சர்வீஸ் கார்ப்ஸ், ஆர்மி ஆர்டினன்ஸ் கார்ப்ஸ், எலக்ட்டிரிக்கல் அண்ட் மெக்கானிகல் பிரிவு உள்ளிட்டவற்றில் பெண் அதிகாரிகள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.
- இவை மட்டுமல்லாமல், ராணுவத்தின் பயிற்சிப் பிரிவு, சட்டப் பிரிவு, மருத்துவப் பிரிவு ஆகியவற்றில் ஏற்கெனவே பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணிக்கால சேவை வழங்கப்படுகிறது.
நிரந்தரப் பணிக் காலச் சேவை
- ராணுவத்தின் 10-இல் 8 பிரிவுகளில் 1991 முதல் பெண் அதிகாரிகள் குறுகிய பணிக்கால சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள். இரண்டே இரண்டு துறைகளில் நிரந்தர பணிக்கால சேவையும் வழங்கப்பட்டிருக்கின்றன. கடந்த 2019 செப்டம்பரில் ஏனைய 8 ராணுவப் பிரிவுகளிலும் நிரந்தர பணிக்கால சேவை பெண் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால், 2014-க்குப் பிறகு ராணுவத்தில் சேர்ந்த பெண் அதிகாரிகளுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
- ராணுவத்தில் குறுகிய பணிக்கால சேவையில் 2014-க்கு முன்னால் இணைந்த பெண் அதிகாரிகள் நீண்ட நாள்களாகவே நிரந்தர பணிக்கால சேவைக்காகப் போராடி வருகிறார்கள். உச்சநீதிமன்றத்தின் திங்கள்கிழமை தீர்ப்பு மூலம் பணியில் இருக்கும் அனைத்து குறுகிய பணிக்கால சேவையில் இருக்கும் பெண் அதிகாரிகளும் நிரந்தர பணிக்கால சேவை வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
- நிரந்தர பணிக்கால சேவை வழங்கப்பட்டாலும்கூட, அவர்கள் தலைமைப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவதில் சில பிரச்னைகள் இருக்கின்றன. அது ஆண் அதிகாரிகளாகவே இருந்தாலும்கூட அனைவருக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. அதற்கு மிகக் கடுமையான தேர்வு முறை ராணுவத்தில் இருக்கிறது.
- சிறிய படைப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் அவர்களின் திறமை சோதிக்கப்பட்டு "கர்னல்' பதவியில் அவர்களின் செயல்பாடு கூர்ந்து பரிசோதிக்கப்பட்டு அதற்குப் பிறகுதான் அதற்கு மேலே உள்ள பொறுப்புகளுக்கு ஒருவர் நியமிக்கப்படுகிறார்.
- குறுகிய பணிக்கால சேவையில் இருக்கும் பெண் அதிகாரிகள் தங்களுக்கும் ராணுவத்தில் முக்கியமான பதவிகளில் நிரந்தர பணிக்கால சேவை அடிப்படையில் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோருகிறார்கள்.
பதவி உயர்வு
- அதை உச்சநீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது. ஆனால், ஆண் அதிகாரிகளைப் போல பெண் அதிகாரிகளும் தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும். பதவி உயர்வுக்கான ஆணையம் 30% ஆண் அதிகாரிகளுக்குத்தான் அந்த வாய்ப்பை வழங்குகிறது எனும்போது, பெண் அதிகாரிகளில் எத்தனை பேருக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்பதை இப்போதே கூறிவிட முடியாது.
- ஏற்கெனவே இந்திய ராணுவத்தில் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுகிறது. 10,000-க்கும் அதிகமான அதிகாரிகளுக்கான பதவி இடங்கள் நிரப்பப்படவில்லை. ராணுவத்தில் இருக்கும் 40,825 அதிகாரிகளில் பெண் அதிகாரிகள் 1,653 பேர் மட்டுமே. இந்த நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் பலர் நிரந்தர பணிக்கால சேவை பெறக்கூடும். ஆனால், ராணுவத்தின் தலைமைப் பதவிகளை எத்தனை பேர் அலங்கரிப்பார்கள் என்பதை அவர்களின் திறமைதான் முடிவு செய்யும்.
- 2018-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பெண் ராணுவ அதிகாரிகளுக்கும் நிரந்தர பணிக்கால சேவை என்கிற வாக்குறுதியை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இப்போது உச்சநீதிமன்றம் அதை முழுமையாக உறுதிப்படுத்தியிருக்கிறது.
நன்றி: தினமணி (19-02-2020)