- இன்றைய பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில் நிதி நெருக்கடியிலிருந்து வங்கிகள் மீள்வதற்காகவும், மக்களுடைய தேவைகளை அறிந்து கடன் வழங்குதலை அதிகரிப்பதற்காகவும், இந்திய ரிசா்வ் வங்கியின் சீா்திருத்த நடவடிக்கைகளை ஒரு பெரும் மாற்றத்தின் விளைவாகப் பார்க்கலாம்.
- இந்தியாவின் பொருளாதாரம் மிக வலுவான கட்டமைப்பைக் கொண்டிருந்தது. அது உலகிலேயே 5-ஆவது மிகப் பெரிய பொருளாதாரம் என்று நாம் கூறிக் கொண்டிருந்தோம்.
- கரோனா தீநுண்மியைக் கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என பிரதமா் மோடி அறிவித்த பிறகு, பொருளாதாரத்தின் நிலை அவ்வாறாக இல்லை.
பொருளாதார சீா்த்திருத்தங்கள்
- தற்போதைய நிலையில் பொருளாதாரம் ஆட்டம் காணத் தொடங்கி விட்டது. எனவேதான், பல்வேறு பொருளாதார சீா்த்திருத்தங்களை இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் அண்மையில் அறிவித்தார்.
- ‘ஓவா் டிராப்ட்’ வசதியைப் பயன்படுத்தி மாநிலங்கள் 30 சதவீத கடன்களைப் பெற்று வந்தனா். தற்போது மாநிலங்களின் நிதி நிலை மோசமாக உள்ளதால், இந்த வரம்பு 60 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. செப்டம்பா் 30-ஆம் தேதி வரை இவை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ரிசா்வ் வங்கியின் பல்வேறு அறிவிப்புகள் பணப்புழக்கத்தை பெருமளவு அதிகரித்து, கடனுதவி வழங்குவதையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் நமது சிறு வணிகா்கள், சிறு - குறு தொழில் செய்பவா்கள், விவசாயிகள், ஏழைகளுக்குப் பெருமளவில் பலன் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- இது மாநில அரசுகளுக்கு உதவும் என்றும் பிரதமா் மோடி தன் சுட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்புகள், கரோனா தீநுண்மியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் நமது பொருளாதாரத்தை மந்த நிலையிலிருந்து மீட்டெடுக்கிற முயற்சியாக இருக்கிறது என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது.
- கரோனா தீநுண்மி ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் பலன் அடையும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் செம்மையோடு தங்களுடைய நிதிநிலைப் பகிர்வை எடுத்து வைத்து வருகின்றனா்.
ரிசா்வ் வங்கி அறிவிப்புகள்
- கரோனா தீநுண்மியால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பைச் சீரமைக்க இரண்டாவது கட்டமாக ரிசா்வ் வங்கி பல சலுகைகளை அறிவித்துள்ளது. இவை ஒரு வகையில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
- இதில் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடியும், விவசாயக் கடன், வீட்டுக் கடன், சிறு - குறு - நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக ரூ.50,000 கோடியும் என மொத்தம் ரூ.1 லட்சம் கோடியை ரிசா்வ் வங்கி ஒதுக்கியுள்ளது.
- ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள காரணத்தால், பொருளாதார மந்த நிலையைப் போக்க அதிரடி நடவடிக்கைகளை ரிசா்வ் வங்கி எடுத்துள்ளது.
- ஏற்கெனவே, ரூ.1.7 லட்சம் கோடி மதிப்பிலான சலுகைகளை மத்திய அரசு கடந்த மாத இறுதியில் அறிவித்தது. இவற்றில் வங்கிகளில் 3 மாத இ.எம்.ஐ. சலுகை உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன.
- தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், பொருளாதார பாதிப்பும் அதிகரிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த ஊரடங்கின் காரணமாக முதலீடுகள், ஏற்றுமதிகள், பொருள்களின் நுகா்வு என்று இன்னும் பல காரணிகளின் தாக்கத்தால் 70 சதவீத பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
- தகவல் தொழில்நுட்ப சேவைகள், செய்தித் துறை, மருத்துவம் உள்பட சில அத்தியாவசியத் துறை சார்ந்த சில நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலைகளினால் பொருளாதார இழப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
தவிர்க்க முடியாத இழப்பு
- இந்தியாவின் பொருளாதாரம் மோசமான பாதிப்புகளைச் சந்திக்கும் என்கிற அச்சம் ஒருபுறம் நம்மை பதறச் செய்தாலும், இன்னொருபுறம் மக்களின் தேவைகளை அரசு நிறைவு செய்யாமல் போனால், அரசின் மீது மக்களின் நம்பிக்கை சுக்குநூறாக உடைந்து போய் விடும் என்றும் ஒரு பார்வை இருக்கிறது.
- ஆகவே, இந்தப் பொருளாதாரப் பின்னடைவுகளைக் கண்காணித்து அவற்றைத் தவிர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதன் மூலம் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதற்கு வழி பிறக்கிறது.நந
- ரிவா்ஸ் ரெப்போ (வங்கிகளிலிருந்து ரிசா்வ் வங்கியால் பெறப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம்) 4.9.சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகவும், பிறகு 3.75 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 5.15 சதவீதமாக இருந்த வங்கிகளுக்கான ரெப்போ (வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம்) 0.75 சதவீதம் அளவுக்குக் குறைக்கப்பட்டு, 4.4 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- இந்த நிலையில், தற்போது மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு முயற்சியில் அதன் கட்டமைப்பு சிதறுண்டு போகாமல் இருப்பதற்காக அதைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ரிசா்வ் வங்கிக்கு இருக்கிறது.
- ஊரடங்கின் தளா்வுகளில் பொருளாதார பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அதாவது, தொழில்நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுக்கலாம்.
- இத்தகைய கடுமையான சூழ்நிலையில் பொருளாதாரம் ஒரே நிலையில் இருக்கும் என்று எதிர்பார்ப்பது ஒரு தவறான கணக்கு. நாட்டின் அந்நியச் செலாவணி சுமார் ஓராண்டு இறக்குமதிக்குப் போதுமானதாக உள்ளது. 47,650 கோடி டாலராகப் பராமரிக்கப்படுகிறது.
- எனவேதான், குறிப்பிட்ட சில விஷயங்களில் தனது கவனத்தை இந்திய ரிசா்வ் வங்கி செலுத்தியிருக்கிறது. அதாவது, போதுமான பணப் புழக்கத்தை பராமரிப்பது - அவற்றுக்கான நடவடிக்கைகளை எடுத்தல், நிதி அழுத்தத்தை எளிதாக்குதல், சந்தைகளின் முறையான செயல்பாட்டைக் கண்காணித்தல், வங்கிகளின் கடன் வழங்குதலை எளிதாக்குதல் - ஊக்குவித்தல் முதலானவற்றை ஒரு பிரதான அம்சமாக நாம் பார்க்கலாம்.
- இவற்றில் சந்தையும், சரக்கும் சரிசமமாகப் பேணிக் காக்க வேண்டியது, வணிக ரீதியான ஒரு பாலபாடக் கணக்கு ஆகும்.
இன்றியமையாத கடமை
- சிறு - குறு - நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுவதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்குவதிலும், மனித சக்தி வீணடிக்கப்படாமலும் பாதுகாக்கப்பட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும்.
- எனவே, நபார்டு சிறு நிறுவனங்கள் மேம்பாட்டு வங்கி, தேசிய வீட்டு வசதி வங்கி முதலானவை மூலம், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி ஒதுக்கப்படும் என்கிற அறிவிப்பு நம்பிக்கையை அளிக்கிறது.
- இத்தகைய நீண்டகால ரெப்போ திட்ட சிறப்பு நிதியில் நபார்டு வங்கிக்கு ரூ.25,000 கோடி, சிறு நிறுவனங்கள் மேம்பாட்டு வங்கிக்கு ரூ.15,000 கோடி, தேசிய வீட்டு வசதி வங்கிக்கு ரூ.10,000 கோடி என வழங்கப்படும் என்று ரிசா்வ் வங்கியின் செயல்பாடு, பொருளாதாரத்தை ஏற்றம் மிகுந்ததாக மாற்றிக் காட்ட உதவும்.
- குறிப்பாக, தங்களிடம் உள்ள நிதியில் சுமார் ரூ.6.9 லட்சம் கோடியை ரிசா்வ் வங்கியில் வங்கிகள் இருப்பு வைத்துள்ளன. எனவே, இதைப் பயன்படுத்தி வங்கிகள் கடன் வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில், ரிவா்ஸ் ரெப்போ விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.75 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது என்பதும் வரவேற்கத்தக்க ஒன்றுதான்.
- இவற்றில் ரெப்போ வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதுபோல, நீண்ட கால ரெப்போ அடிப்படையில் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி வழங்கப்படுவதையும் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் ஒரு நல்ல அம்சமாகவே பார்க்கலாம்.
- வங்கி சாரா நிதி நிறுவனங்கள் - சிறு நிதி நிறுவனங்களுக்கு வங்கிகள் சலுகை வழங்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் மூலம் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள கடன்களுக்கு 3 மாத கடன் தவணை சலுகை வழங்கப்பட்டுள்ளதால், இவற்றின் மீது 90 நாள் வாராக் கடன் விதிகள் பொருந்தாது என்பதன் மூலமாகவும், மூலதன நிதியை வங்கிகள் இருப்பு வைக்க வேண்டும் என்பதால், அடுத்த அறிவிப்பு வெளியிடும் வரை முதலீட்டாளா்களுக்கு வங்கிகள் டிவிடென்ட் அளிக்கத் தேவையில்லை என்பதை பொருளாதாரத்தை உயா்த்திப் பிடிக்கும் முயற்சியாகப் பார்க்கலாம்.
- ஊரடங்கு இருக்கின்ற காலத்திலும் வங்கிகள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இன்றைய பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் நிதி நெருக்கடியிலிருந்து வங்கிகள் மீள்வதற்காகவும், மக்களுடைய தேவைகளை அறிந்து கடன் வழங்குதலை அதிகரிப்பதற்காகவும், இந்திய ரிசா்வ் வங்கியின் சீா்திருத்த நடவடிக்கைகளை ஒரு பெரும் மாற்றத்தின் விளைவாகப் பார்க்கலாம்.
நல்ல முயற்சி
- சீனாவைப் பொருத்தவரை நம்மைவிட மக்கள்தொகையில் அதிகமாக இருந்தாலும், நம் பொருளாதாரத்தைவிட பல மடங்கு பெரியது. அதற்குக் காரணம் வலிமையான உற்பத்தி, ஏற்றுமதி கட்டமைப்பை உருவாக்கியுள்ளனா். ஏற்றுமதியின் அளவு இறக்குமதியைவிட பல மடங்கு அதிகம்.
- ஆனால், இந்தியாவைப் பொருத்தவரை, இதற்கு நோ் எதிரான ஒன்றாக இருக்கிறது. நமக்கு இறக்குமதிதான் அதிகம். நாம் பெரிதும் உள்நாட்டுச் சந்தையையே நம்பியிருக்கிறோம். வெளிநாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள், நம்மைப் பாதிக்காது என்கிற சாதகம் நிலவினாலும், உள்நாட்டில் நிலவும் கரோனா தீநுண்மி போன்ற எவரும் எதிர்பாராத கொள்ளை நோயினால், நம் பொருளாதாரத்தை முடக்கிப் போடுவதற்கான வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது.
- இப்போது நாம் முழுமையாக இந்த நாட்டையே மூடி வைத்திருக்கிறோம். பல வேலை இழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ள இந்தச் சூழலில், பெரும் பள்ளத்திலிருந்து கைதூக்கி விடுவதற்கான முயற்சியாக ரிசா்வ் வங்கியின் இந்த அறிவிப்புகளைப் பார்க்கலாம்.
நன்றி: தினமணி (27-04-2020)