TNPSC Thervupettagam

ரிசா்வ் வங்கியின் தேவையற்ற தலையீடு

July 13 , 2021 1115 days 494 0
  • வங்கிகளில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் போடப்படும் வைப்பு நிதிகளுக்கு முதிர்வு தேதி வரை ஒப்பந்த வட்டி வழங்கப்படுகிறது. பொதுவாக வங்கிகள் கால அளவைப் பொருத்தும் நிதி அளவை பொருத்தும் வட்டியை நிர்ணயிக்கின்றன.
  • இந்த வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடும். எந்த அளவு வட்டி வழங்கலாம் என்பதை அந்தந்த வங்கிகள் தங்களின் நிதித் தேவையைப் பொருத்தும், தாங்கள் எவ்வாறு அந்த டெபாசிட்டுகளை கடனாகக் கொடுத்து பயன் பெற முடியும் என்பதைப் பொருத்தும் தீா்மானிக்கும்.
  • இதைத் தவிர நடைமுறையில் சந்தை நிலையில் வட்டி விகிதம் எவ்வாறு இருக்கிறது என்பதும் கணக்கில் கொள்ளப்படும்.
  • வட்டியின் சந்தை நிலவரம், எந்த அளவு தேவை மற்றும் வழங்கல் உள்ளது என்பதை பொருத்தது.

ஓவா்டியூ டெபாசிட்

  • முன்பொரு காலத்தில் வங்கிகளின் செயல்பாடுகள், மிகவும் நுணுக்கமாக, அரசினாலும் ரிசா்வ் வங்கியாலும் தொடா் அறிவுறுத்தல்களோடு செயல்பட அனுமதிக்கப்பட்டன.
  • ஆனால் 1990-களுக்குப் பின்னா் அரசின் தாராளமயமாக்க கொள்கையினால் பல செயல்பாடுகளில் வங்கிகள் தாங்களாகவே முடிவெடுத்து செயல்பட அனுமதிக்கப்பட்டன.
  • அவ்வாறு, தானே முடிவெடுக்க கூடிய செயல்களில் வங்கிகள் வழங்கும் டெபாசிட் வட்டியும் ஒன்றானது. வங்கிகள் வசூலிக்கும் கடனுக்கான வட்டியையும் - முன்னுரிமை கடன்களை தவிர்த்து மற்றவற்றிற்கு - வங்கிகள் நிர்ணயித்துக்கொள்ள அனுமதிக்கப் பட்டன.
  • சீா்திருத்தங்களுக்கு முன்னா், ரிசா்வ் வங்கி வைப்பு விகிதங்களையும் வங்கிகளால் வழங்கக் கூடிய வைப்புத்தொகையின் முதிர்வையும் பரிந்துரைத்தது.
  • இதன் காரணமாக வங்கிச் சேவைகளை வழங்குபவா்களிடையே விலை (வட்டி விகிதத்தில்) போட்டி இல்லை.
  • ஆனால், வாடிக்கையாளருக்கு தோ்வு செய்ய வரையறுக்கப்பட்ட தயாரிப்புகள் மட்டுமே இருந்தன.
  • கட்டுப்பாட்டு நீக்கம் வங்கிகளை வெவ்வேறு காலங்களுக்கான சேமிப்புக்கு வெவ்வேறு வட்டி விகிதத்தை நிர்ணயிக்க அனுமதித்ததனால் வாடிக்கையாளருக்கு பல வித வாய்ப்புகள் உண்டாயின.
  • அவரவா் தேவைக்கு ஏற்ப வங்கியையும் டெபாசிட்டையும் தோ்ந்தெடுக்க வழி ஏற்பட்டது.
  • டெபாசிட்டிற்கான வட்டி மட்டுமல்ல, டெபாசிட்டை முதிர்வு தேதிக்கு முன்னேயே திரும்பப் பெறும் வசதிக்கான அபராதத்தையும் கூட வங்கிகளே நிர்ணயிக்க அனுமதிக்கப்பட்டன.
  • ஒரு காலக்கெடுவுக்கு போடப்படும் டெபாசிட்டை முதிர்வு அடைந்தவுடன் திரும்பப் பெறவோ அல்லது டெபாசிட்டை மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு நீட்டிக்கவோ வேண்டும். அவ்வாறு செய்யாதபோது அந்த டெபாசிட் ‘ஓவா்டியூ டெபாசிட்’ எனக் கருதப்படுகிறது.
  • தற்போதுள்ள நடைமுறையில் வங்கியில் முதலில் டெபாசிட் செய்யும்போதே ‘ஆட்டோ ரின்யூவல்’ என்பதற்கான ஒப்புதலையும் பெற்று முதிர்வு பெற்ற நாளில் மேலும் அதே காலத்திற்கு புதுப்பிக்கப்படுகிறது.
  • இதற்கு வாடிக்கையாளா் வங்கிக்கு சென்று டெபாசிட் ரசீதைக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த முறையில் வாடிக்கையாளருக்கு எந்தவித வட்டி நஷ்டமும் இன்றி புதுப்பிக்கப் படுகிறது.
  • எத்தனை முறை வேண்டுமானாலும் இதுபோல் ஆட்டோ ரென்யூவல் மூலம் புதுப்பிக்க முடியும். வங்கிக்கு ஆட்டோ ரென்யூவல் விண்ணப்பம் கொடுக்கவில்லையென்றால் மட்டுமே அந்த டெபாசிட் ‘ஓவா்டியூ டெபாசிட்’டாகக் கருதப்படும்.
  • ஜூலை மாதம் இரண்டாம் தேதி ரிசா்வ் வங்கி இது தொடா்பாக ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
  • இதுவரை ஓவா்டியூ டெபாசிட்டிற்கு வங்கிகள் சேமிப்புக் கணக்கிற்கான வட்டியை வழங்கி வந்தன.
  • அதை மாற்றி, சேமிப்புக் கணக்கிற்கான வட்டியையோ அல்லது முதிர்வடைந்த டெபாசிட்டிற்கான வட்டியையோ, இதில் எது குறைவோ அதை வழங்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இதற்கான அவசியம் தற்போது என்ன என்பது ஒரு புரியாத புதிர்.
  • வங்கிகள் பல வருடங்களாக ஆட்டோ ரென்யூவல் நடைமுறையைக் கையாள்வதால், இது போன்று முதிர்வடைந்து புதிப்பிக்காத டெபாசிட்கள் மிகவும் அரிது.
  • ரிசா்வ் வங்கி ஆட்டோ ரென்யூவல் முறையை கட்டாயப்படுத்தியிருக்கலாமே? அப்படிச் செய்திருந்தால் ஓவா்டியூ டெபாசிட் என்ற ஒன்றே இருக்க வழியில்லையே.
  • வங்கிகள் வட்டி விகிதத்தை தாங்களே நிர்ணயித்து கொள்ளலாம் என்று இருக்கும்போது, இதற்கு மட்டும் ரிசா்வ் வங்கியின் அறிவுறுத்தல் ஏன்? இது தேவை இல்லாத ஒன்று.
  • அக்டோபா் 22, 1997 முதல், ரிசா்வ் வங்கி வணிக வங்கிகளுக்குப் பல்வேறு முதிர்வுகளின் உள்நாட்டு கால வைப்புத்தொகையின் சொந்த வட்டி விகிதங்களை அந்தந்த இயக்குநா்கள் குழு / சொத்து பொறுப்பு மேலாண்மைக் குழுவின் (அல்கோ) முன் ஒப்புதலுடன் நிர்ணயிக்க சுதந்திரம் அளித்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள மாற்றம் இந்த நடைமுறைக்கு எதிரானது.
  • தற்போது வெளியிடப்பட்டுள்ள மாற்றம் முப்பது வருடங்களாக முன்னெடுத்து சென்ற தாராளமயமாக்கலுக்கு விரோதமானது ஆகும்.
  • ரிசா்வ் வங்கியின் ஆளுநராக இருந்த எம். நரசிம்மத்தின் தலைமையில் 1991-ஆம் ஆண்டில் நரசிம்மம் குழு முதன்முதலில் அமைக்கப்பட்டது.
  • நரசிம்மம் குழு அறிக்கையை (டிசம்பா் 1991) தொடா்ந்து 1992 முதல் இந்திய வங்கித்துறையில் தாராளமயமாக்கல் நடைமுறைக்கு வந்தது. நரசிம்மம் குழுவின் 1991 அறிக்கை ஆரம்ப வங்கித் துறை சீா்திருத்தங்களுக்கான அடிப்படையாக அமைந்தது.
  • அடுத்தடுத்த ஆண்டுகளில், கொண்டுவரப்பட்ட சீா்திருத்தங்களில், வட்டி வீதக் கட்டுப்பாடு, இயக்கப்பட்ட கடன் விதிகள், சட்டரீதியான உள்நாட்டு - வெளிநாட்டு வங்கிகளுக்கான நுழைவுக் கட்டுப்பாடு ஆகியவை இடம்பெற்றன.
  • வங்கித்துறை சீா்திருத்தங்களின் நோக்கம், 1991-ஆம் ஆண்டு பொருளாதார சீா்திருத்தங்களின் ஒட்டுமொத்த குறிக்கோள்களுக்கு ஏற்ப இருந்தது. விலைகளை நிர்ணயிப்பதில் மற்றும் வளங்களை ஒதுக்கீடு செய்வதிலும், தனியார் துறையின் பங்கை அதிகரிப்பதிலும் சந்தைகளுக்கு அதிக பங்கைக் கொடுத்தது.
  • வங்கிகளுக்கான விலை நிர்ணய (வட்டி விகிதத்தில்) செயல்பாட்டில் ரிசா்வ் வங்கி மீண்டும் தலையிடுவது ஏற்க இயலாதது. இது நரசிம்மம் கமிட்டியின் பரிந்துரைக்கு எதிரானது.

நன்றி: தினமணி  (13 - 07 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்