- வங்கி மோசடி என்பது காலங்காலமாக இருந்து வந்தாலும், உலகமயத்தின் அடிப்படையிலான சந்தைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு வாடிக்கையாக மாறிவிட்டது.
- அதன் சமீபத்திய எடுத்துக்காட்டுதான் ரூ.23,000 கோடி ஏபிஜி ஷிப்யாா்ட் (கப்பல் கட்டும் நிறுவனம்) ஊழல்.
- ரூ.14,000 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் நீரவ் மோடி ஊழலுக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து அதைவிடப் பெரிய ஊழல் இப்போது தலைப்புச் செய்தியாகியிருக்கிறது.
இன்னுமொரு மெகா மோசடி!
- மத்திய புலனாய்வுத் துறை, குஜராத்திலுள்ள திவாலாகியிருக்கும் ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவன இயக்குநா்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
- அந்த நிறுவனத்தின் இயக்குநா்கள் இந்தியாவில் இருந்தாலும் தலைமறைவாகி இருக்கிறாா்கள். அவா்களைக் கண்டுபிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
- 1995 முதல் குஜராத்தில் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. 2006-இல் பரூச் மாவட்டத்தில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவனத்துக்கு மாநில அரசின் குஜராத் துறைமுகக் கழகம் (குஜராத் மேரிடைம் போா்ட்) அனுமதி வழங்கியது. 30 ஆண்டு குத்தகைக்கு கடற்கரையையொட்டிய நிலப்பகுதி அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
- மாநில பாஜக அரசு ஏபிஜி ஷிப்யாா்ட் திட்டத்துக்கு அனுமதி வழங்கியது என்றால், மத்திய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அந்த நிறுவனத்துக்கு பொதுத்துறை வங்கிகள் மூலமாக எல்லா சலுகைகளையும் வழங்க முற்பட்டது.
- அது மட்டுமல்ல, கடலோரக் காவல் படைக்கு ரோந்துக் கப்பல்களும், இந்திய கடற்படைக்கான கப்பல்களும் கட்டுவதற்கான வாய்ப்பை வழங்கியது.
- அதனால், வங்கிகளில் இருந்து கணக்கு வழக்கில்லாமல் அந்த நிறுவனத்தால் கடனுதவி பெற முடிந்தது.
- 2014 ஜூலை மாதம் குஜராத் சட்டப்பேரவையில், ஏபிஜி நிறுவனத்தின் ரூ.2.1 கோடி அளவிலான குத்தகைக் கட்டணம் நிலுவையில் இருப்பதைக் கணக்குத் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டி குஜராத் துறைமுகக் கழகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தது.
- அப்போதே அந்த நிறுவனம் குறித்த எச்சரிக்கை ஏற்பட்டிருந்தால், ரூ.22,842 கோடி அளவிலான இழப்பைத் தடுத்திருக்க முடியும்.
- ஐசிஐசிஐ வங்கி தலைமையிலான 28 வங்கிகளின் கூட்டமைப்பு ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவனத்துக்கு கடன்களை வழங்கியிருக்கிறது. 2019 ஜனவரியில் பாரத ஸ்டேட் வங்கி மோசடியைக் கண்டறிந்தது.
- ஆனால், 2019 நவம்பரில்தான் அது குறித்த புகாரைப் பதிவு செய்தது. அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநரான ரிஷிகமலேஷ் அகா்வால் மீதும், ஏனைய இயக்குநா்கள் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்திருக்கிறது.
- 28 வங்கிகள் வெவ்வேறுவிதமான கடன் வசதிகளை வழங்கியிருப்பதால், அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பது சிபிஐ தாமதத்துக்குக் குறிப்பிடும் காரணம்.
- அது மட்டுமல்லாமல், ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவனத்தின் 98 இணை நிறுவனங்களையும், அவற்றுடனான தொடா்பையும் விசாரிப்பதற்கும் காலதாமதமானதாக சிபிஐ தெரிவிக்கிறது.
- வங்கிகளின் தணிக்கை அமைப்புகளாலும், ரிசா்வ் வங்கியின் தணிக்கையாளா்களாலும் 28 வங்கிகளின் மூலம் ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவனம் நடத்திய மோசடி குறித்து உடனடியாகக் கண்டறிய முடியவில்லை என்றால், அவா்களது ‘சிஸ்டம்’ சரியில்லை என்பது தெளிவாகிறது.
- ஒருபுறம் ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவனம், 98 போலி நிறுவனங்களை உருவாக்கி வங்கியிலிருந்து பெற்ற கடனை எல்லாம் மடைமாற்றம் செய்துகொண்டிருந்தபோது, இன்னொரு புறம் கடலோரக் காவல் படையும், இந்திய கடற்படையும் ஏபிஜி நிறுவனத்துடன் கப்பல் கட்டுமான ஒப்பந்தங்களை மேற்கொண்டதை என்னவென்று சொல்வது?
- வங்கி மோசடி என்பது அதிகாரிகள், அரசு நிா்வாகிகள், அரசியல் தலைவா்கள் ஆகியோரின் பாதுகாப்பும் உதவியும் இல்லாமல் நடைபெற வாய்ப்பே இல்லை.
- ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரப்படி, 2020-21-இல் மட்டும் ரூ.1,38,422 கோடி அளவிலான 7,363 மோசடி வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.
- அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.1,85,468 கோடி அளவிலான 8,703 மோசடி வழக்குகள் குறிப்பிடப் பட்டிருந்தன.
- வங்கிகளில் காணப்படும் ரூ.8 லட்சம் கோடி வாராக்கடனில் பெரும்பாலானவை இதுபோன்ற மோசடிகளால் ஆனவை என்று தெரிகிறது.
- ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவனம், கப்பல் கட்டுவதற்காகப் பெற்ற ஒப்பந்தங்களுக்குப் பின்னால் மிகப் பெரிய கையூட்டுக்கள் இருக்கக் கூடும்.
- அந்த நிறுவனத்துக்கு உதவிய அன்றைய அமைச்சா்களும், அரசு உயரதிகாரிகளும்கூட இந்த ஊழலில் விசாரிக்கப்பட வேண்டும்.
- மத்திய - மாநில ஆட்சியாளா்களின் பரவலான ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு கப்பல் கட்டும் நிறுவனம் ரூ.22,842 கோடி முறைகேட்டில் ஈடுபட வாய்ப்பே இல்லை.
- நிறுவனத்தின் முதலாளிகள் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட வியாபாரிகள்.
- அவா்கள் மன்னிக்கப்பட்டாலும், மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அவா்களுக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டால் மட்டுமே இது போன்ற மோசடிகள் குறையும்.
- காங்கிரஸும், பாஜகவும் ஒன்றை ஒன்று ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவன ஊழலுக்கு குற்றம் சாட்டுவதை நிறுத்திவிட்டு, அதற்குக் காரணமான தங்களது கட்சியினரை அடையாளம் கண்டு மக்கள் மன்றத்தில் நிறுத்துமேயானால், பாராட்டலாம்!
நன்றி: தினமணி (18 – 02 – 2022)