ரூ.7,000 கோடி டெபாசிட் செய்துள்ள ஆசியாவின் பணக்கார கிராமம்
- ஒருவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றால் அவரது குடும்பம் மட்டும் செல்வச் செழிப்பாக மாறுவது வழக்கமானதுதான். இதனை ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு கிராமத்தில் வீட்டுக்கு ஒருவர் வெளிநாட்டுக்கு சென்றதால் தற்போது ஆசியாவிலேயே பணக்கார கிராமமாக அது மாறி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குஜராத் என்றாலே அதற்கு தொழில் மாநிலம் என்ற மற்றொரு சிறப்பும் உண்டு.
- இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர்களையும், அரசியல் வாதிகளையும் உருவாக்கிய பெருமை குஜராத்துக்கு உண்டு. உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர்கள் அம்பானி, அதானி இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். அதேபோன்று, சுதந்திரப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய மகாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல், அரசியல்வாதிகளான பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான். இப்படி பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்டுள்ள குஜராத்தில் உள்ள ஒரு கிராமம்தான் தற்போது ஆசிய அளவில் பணக்கார கிராமமாக மாறி உலகின் கவனத்தை கவர்ந்துள்ளது.
- குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கிராமம்தான் மதாபர். புஜ் நகரிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தின் மக்கள் தொகை 2011-ல் 17,000 ஆக இருந்த நிலையில் தற்போது 32,000 ஆக அதிகரித்துள்ளது. மதாபர் கிராமத்தில் சுமார் 20 ஆயிரம் வீடுகள் உள்ளன. படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் இந்த கிராமத்தைச் சேர்ந்த மேலும் 1,200 குடும்பங்கள் வெளிநாட்டில் வசித்து வருகின்றன. பொருளாதார செழிப்புடன் விளங்கும் இந்த சாதாரண கிராமத்தில் பல பொது, தனியார் துறை வங்கிகள் போட்டிபோட்டுக் கொண்டு தங்களது கிளைகளை திறந்து வருகின்றன.
- குறிப்பாக, எச்டிஎப்சி, எஸ்பிஐ, பிஎன்பி, ஆக்ஸிஸ், ஐசிஐசிஐ, யூனியன் வங்கி உட்பட 17 வங்கிகளின் கிளைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பல வங்கிகள் தங்களது கிளைகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. பல வங்கிகள் இந்த கிராமத்தை நோக்கி படையெடுப்பதற்கு காரணம் அங்கிருக்கும் பணப்புழக்கம்தான். மதாபூர் கிராம மக்கள் ரூ,7,000 கோடிக்கும் அதிகமான தொகையை டெபாசிட்டாக வங்கிகளில் வைத்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
- மதாபூர் கிராமத்தின் இந்த பெருமை அனைத்துக்கும் முக்கிய காரணம் அங்குள்ள மக்கள் வெளிநாடுகளில் வேலை செய்து தனது குடும்பத்தினருக்கு மாதாமாதம் லட்சக்கணக்கில் பணம் அனுப்புவதுதான். இதனால், அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கோடிக்கணக்கான ரூபாயை டெபாசிட் செய்கின்றனர். இங்குள்ள குஜராத்திகள் மத்திய ஆப்பிரிக்காவின் கட்டுமானத் துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இக்கிராமத்தின் ஒரு பகுதியினர் பிரிட்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் வேலையில் உள்ளனர்.
- இங்குள்ள பெரும்பாலான கிராமவாசிகள் வெளிநாட்டில் வேலை செய்து வந்தாலும் அவர்கள் தங்களது கிராமத்துடன் இணைந்திருப்பதையே விரும்புகின்றனர். எனவேதான் அவர்கள் அங்கு சம்பாதிக்கும் பணத்தை நம்நாட்டு வங்கிகளில் முதலீடு செய்வதை பெரிதும் விரும்புகின்றனர். இதுமட்டுமல்லாமல் இந்த கிராமத்தில் வேளாண்மை தொழிலும் சிறப்பாக உள்ளது. சோளம், மாம்பழம் மற்றும் கரும்பு உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகின்றன.
- வேளாண் பொருட்கள் மும்பைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பங்களாக்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், கோயில்கள், ஏரிகள் சூழ்ந்துள்ள மதாபூர் கிராமம் குடிநீர், சாலை, சுகாதாரம் என அனைத்து அடிப்படை வசதிகளிலும் தன்னிறைவை கொண்டு விளங்குகிறது.
- லண்டனில் வசிக்கும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மதாபூர் கிராம சங்கத்தை நடத்தி வருகின்றனர். இதன்மூலம் தங்கள் கிராமத்தின் பெருமையை உலகம் முழுவதும் பரப்ப திட்டமிட்டுள்ளனர். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற அவ்வைப் பாட்டியின் பழமொழியை பின்பற்றி வாழும் மதாபூர் மக்களைப் போல நாமும் வாழ்ந்துகாட்டினால் மேலும் பல கோடீஸ்வர இந்திய கிராமங்களை உலகுக்கே முன்னுதாரணமாக்கலாம். நாமும் தன்னிறைவடையலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 09 – 2024)