TNPSC Thervupettagam

ரூ.706 கோடியில், 18 ஆயிரம் பெண் பணியாளர்கள் தங்க சிப்காட் தொழில் பூங்காவில் மெகா குடியிருப்பு வளாகம்

August 26 , 2024 94 days 78 0

ரூ.706 கோடியில், 18 ஆயிரம் பெண் பணியாளர்கள் தங்க சிப்காட் தொழில் பூங்காவில் மெகா குடியிருப்பு வளாகம்

  • நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு மிக முக்கியம். திட்டமிடுதல், விடாமுயற்சி, பொறுமை, சவால்களை எதிர்கொள்ளும் திறன் போன்ற குணநலன்கள் பெண்களிடம் இயற்கையாகவே மேலோங்கி உள்ளதால் நிறுவனங்கள் பெரும்பாலான பணிகளில் அவர்களுக்கே முன்னுரிமை தருகிறது.
  • அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள சிப்காட் பொருளாதார மண்டலத்தில் உள்ள நிறுவனங்களில் லட்சக்கணக்கான பெண்கள் வெளியூர்களில் இருந்து வந்து பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு போன்ற அடிப்படை வசதிகளை நிறுவனங்கள் ஏற்படுத்தித் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே உள்ளது.
  • இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பாக்ஸ்கான் பெண் பணியாளர்களின் போராட்டம் பெரிய அளவில் பேசப்பட்டது. தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறுவனம் செய்யவில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. அந்தப் போராட்டத்தின் பலனாகத்தான் பாக்ஸ்கான் பணியாளர்களுக்கு மிகப்பெரிய தங்குமிட வளாகம் கட்டும் திட்டம் உருப்பெற்று தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
  • பணிபுரியும் இடத்துக்கு அருகிலேயே பாக்ஸ்கான் நிறுவனம் இதுபோன்ற பெரிய அவிலான விடுதிகளை சீனாவில் அமைத்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இந்தியாவில்தான் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் திறமையான பெண் தொழிலாளர்கள் அதிகம் கிடைப்பார்கள் என்ற எண்ணம் தனியார் நிறுவனங்களிடம் மேலோங்கியுள்ளது.
  • அதன் காரணமாகவே, தனது ஆலைப் பணிகளில் ஆண்களை விட பெண்களுக்கே அதிக வாய்ப்புகளை வழங்குகின்றன. அதிநவீன உற்பத்தி ஆலைகளில் பெண்களின் பங்களிப்பே அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் இது 41 சதவீதமாக உள்ளது.

ரூ.706 கோடியில் குடியிருப்பு வளாகம்:

  • காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) பல ஏக்கர் நிலப் பரப்பில்பரவியுள்ளது. உயர் தொழில்நுட்ப தொழில் பூங்கா 570 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் தொழில் பூங்காவில் எலக்ட்ரானிக், ஆட்டோமொபைல், பார்மா, வன்பொருள் என ஏராளமான துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன.
  • இங்கு, 7 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிவதாக கூறப்படுகிறது. இங்கு பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் தங்குவதற்காக பிரத்யேகமான பிரம்மாண்ட குடியிருப்பு வளாகம் காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகாலில் கட்டப்பட்டுள்ளது.
  • இந்த குடியிருப்பு வளாகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் திறந்து வைத்தார். இதில் பாக்ஸ்கான் பெண் பணியாளர்கள் மட்டுமின்றி, மற்ற நிறுவனங்களில் பணிபுரிவோரும் தங்கலாம்.ரூ.706 கோடி செலவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பெண் பணியாளர் குடியிருப்பு வளாகம் மொத்தம் 13 பிளாக்குகளை உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு பிளாக்கிலும் 10 மாடி கட்டிடம் உள்ளது.
  • ஒவ்வொரு தளத்திலும் 24 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையிலும் 6 பெண்கள் தங்கும் வகையில் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிளாக்கிலும் 1,440 பெண் தொழிலாளர்கள் தங்க முடியும். மொத்தம் 18,720 பெண்கள் தங்கும் வகையில் இந்த விடுதி கட்டமைக்கப்பட்டுள்ளது.

4,000 பேர் அமரக்கூடிய மெகா உணவகம்:

  • சிப்காட் செயல்படுத்தியுள்ள இந்த தங்குமிட திட்டத்தில் 4,000 பேர் அமர்ந்து உணவருந்தக் கூடிய வகையில் பெரிய டைனிங் ஹால் அமைக்கப்பட்டுள்ளது. பெண் தொழிலாளர்கள் தங்களது உடல்நலனை பேணுவதற்கு ஏதுவாக, உட்புற மற்றும் வெளிப்புற பகுதிகளில் விளையாட்டு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • சுற்றுச்சூழலை பாதிக்காத, எதிர்கால தலைமுறைக்கு ஏற்ற வகையில் சிப்காட் பூங்கா விடுதியில் 1 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் சோலார் பவர் பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஒவ்வொரு பிளாக்கிலும் சோலார் வாட்டர் ஹீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
  • நீர் தட்டுப்பாட்டைப் போக்கிட நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும் வகையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகள் இந்த வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை அமைப்பும் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பெண் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த தங்கும் விடுதியைச் சுற்றிலும் 1,170 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
  • இவை தவிர, ஜிம், விளையாட்டு மைதானங்கள், சானிட்டரி நாப்கின் எரியூட்டிகள், அனைத்து அறைகளிலும் கொசு வலைகள், சுத்தமான குடிநீரை பெறுவதற்காக ஆர்ஓ பிளாண்ட், நவீன சமையலறைக் கூடம் என பெண் பணியாளர்களின் அனைத்து தேவைகளையும் கருத்தில் கொண்டு நன்கு திட்டமிட்டு அடிப்படை வசதிகள் இந்த வளாகத்தில் பார்த்து பார்த்து உருவாக்கப்பட்டுள்ளன.

48,000 பணியாளரில் 70% பெண்கள்:

  • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை ஒப்பந்த அடிப்படையில் தயாரிக்கும் பாக்ஸ்கானின் வணிகம் இந்தியாவில் 10 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.84 ஆயிரம் கோடி ஆகும். அதேபோன்று பாக்ஸ்கான் இதுவரை இந்தியாவில் 1.4 பில்லியன் டாலரை (ரூ.11,760 கோடி) முதலீடு செய்துள்ளது.
  • வரும் ஆண்டுகளில் அந்த நிறுவனம் முதலீட்டை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. பாக்ஸ்கான் நிறுவனத்தில் தற்போது 48,000 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 70 சதவீதம் பெண்களாவர், எஞ்சிய 30 சதவீதம் மட்டுமே ஆண் பணியாளர்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

25% பேர் திருமணமானவர்கள்:

  • ‘‘பாக்ஸ்கானை பொருத்தவரை பாலின வேறுபாடுகளுக்கு இடமளிக்காமல் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகிறது. குறிப்பாக, இந்தியாவில் பெண் பணியாளர்களின் பங்கு அதிகம். மேலும், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு திருமணமான பெண்களே அதிக பங்களிப்பை வழங்கியுள்ளனர். எனவே, அவர்களிடம் வேறுபாடு காட்டப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது.
  • புதிதாக பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் திருமணமான பெண்கள். முன்னர் நிகழ்ந்த தவறுகள் அனைத்தும் சுட்டிக்காட்டப்பட்டதும் அவை சரிசெய்யப்பட்டுவிட்டன’’ என்று தங்கும் விடுதி திறப்பு விழாவின்போது பாக்ஸ்கான் தலைவர் யங் லியு விளக்கம் அளித்தார்.
  • வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வேலைதேடி வரும் பெண்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி வரும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும், தங்கும் சூழல், உணவு முறை குறித்தும் பெற்றோர் கவலையில் ஆழ்கின்றனர். ஆனால், தற்போது இந்தமெகா குடியிருப்பு வளாகம் திறக்கப்பட்டதன் மூலம் அதுபோன்ற பெண் பிள்ளை பெற்றோர்களின் கவலை நீங்கியுள்ளது.
  • இந்த திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு பெண்கள் அதிக அளவில் பணிபுரியும் நாட்டின் பல்வேறு பொருளாதார மண்டலங்களில் இதுபோன்ற நவீன வசதிகளைக் கொண்ட பாதுகாப்பான விடுதிகளை பரவலாக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
  • கூகுளின் பிக்சல் போன் மற்றும் ட்ரோன்கள் தயாரிப்பை பாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பெண் பணியாளர்களுக்கு இந்த மெகா விடுதி திறப்பு ஒரு வரப்பிரசாதம்தான்.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்