TNPSC Thervupettagam

ரெட்டைமலை சீனிவாசன்

June 15 , 2019 1843 days 7066 0
  • நவீன இந்தியாவின் மிகப் பெரும் தூணான அம்பேத்கருடன் தோள் சேர்ந்து தலித்துகளின் சமத்துவம் மற்றும் சமூக உரிமைகளுக்காக நிகரற்ற உத்வேகத்துடன் போராடிய ஒரு சமூகநீதிச் சேவகர் ரெட்டைமலை சீனிவாசன் ஆவார்.

  • ரெட்டைமலை சீனிவாசன் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மதுராந்தகம் தாலுகாவின் கோழியாளம் கிராமத்தில் 1859 ஆம் ஆண்டு ஜூலை 07 ஆம் நாள் பிறந்தார்.
  • இவரின் தந்தைப் பெயர் ரெட்டைமலை என்பதாகும்.
  • இவர் மக்களால் தாத்தா என அன்பாக அழைக்கப்பட்டார்.

 

இளமைக்கால வாழ்க்கை
  • இவர் தனது இளநிலைப் பட்டத்தை கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் பெற்றார்.
  • பட்டியலிடப்பட்ட வகுப்பின் முதல் பட்டதாரியாக இவர் கருதப்படுகிறார்.
  • இவர் 1887 ஆம் ஆண்டு ரேணுகா நாயகி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

 

ஆரம்பகால செயல்பாடுகள்
  • இவர் பிரபல தலித் சிந்தனைவாதியான அயோத்தி தாச பண்டிதரின் மைத்துனராவார்.
  • அயோத்தி தாஸ் தனது முதல் மனைவியின் மரணத்திற்குப் பிறகு சீனிவாசனின் சகோதரியான தனலெட்சுமியை மணந்திருந்தார்.
  • நீலகிரியில் தனது ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் சீனிவாசன் பிரம்மஞான சபையுடனும் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டுடனும் நெருக்கமாகப் பணியாற்றினார்.
  • மேலும் இவர் மதராஸின் பட்டியலிடப்பட்ட சாதியினர் கூட்டமைப்பு மற்றும் மதராஸ் மாகாண நலிவுற்ற வகுப்பினர் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றினார்.
  • 1890 ஆம் ஆண்டு சென்னை வந்த இவர் 1891 ஆம் ஆண்டில் பறையர் மகாஜன சபையை நிறுவி அதனை வழி நடத்தினார். இது பின்னர் 1893 ஆம் ஆண்டில் அது ஆதி திராவிட மகாஜன சபையாக மாறியது.
  • 1894 ஆம் ஆண்டில் இவர் பஞ்சமி நிலங்களை மீட்டு, ஏழைகளுக்கு வீட்டு மனைப் பட்டா, விளை நிலங்கள் மற்றும் குழந்தைகள் கல்வி ஆகியவற்றைப் பெற உதவினார்.
  • 1895 ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசின் வைசிராயான எல்ஜின் பிரபு சென்னைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது இவர் மக்களுடன் சென்று அவரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினார்.
  • இந்திய குடிமைப் பணியாளர் தேர்வுகளைக் கண்டிப்பாக இந்தியாவில் நடத்த வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் மனுவிற்கு எதிராக 1893 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று வெஸ்லியன் மிஷனரி அரங்கில் ஒரு கூட்டத்தினை இவர் ஏற்பாடு செய்தார்.
  • உயர் சாதி இந்துக்கள் குடிமைப் பணியாளர்களானால் அவர்கள் தாழ்த்தப்பட்ட ஏழை வகுப்பினரை ஒடுக்குவர் எனக் கூறி இந்த நடவடிக்கையை அவர் எதிர்த்தார்.
  • ஒரு பெரியக் கூட்டத்தில் ஜெனரல் சர் ஜார்ஜ் செஸ்னியிடம் 3412 மக்களால் கையொப்பமிடப்பட்ட ஒரு எதிர் மனுவை அவர் அளித்தார்.
  • மேற்கண்ட நிகழ்வானது, நலிவுற்ற வகுப்பினர் தங்களைத் தாங்களே திடப்படுத்திக் கொண்டு அதே நேரத்தில் தங்கள் உரிமைகளுக்காக தாங்களேப் போராட வேண்டியதை உறுதிபடுத்தியது.
  • 1893 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது 32 ஆம் வயதில் “பறையன்” எனும் பெயரில் தமிழ் செய்தித் தாளொன்றை அவர் தொடங்கினார். இது நலிவுற்ற வகுப்பினரின் (பின்னர் பட்டியலிடப்பட்ட வகுப்பு என வகைப்படுத்தப்பட்டது) துயர்களை வெளிப்படுத்தியது
  • இந்தப் பத்திரிக்கை 7 ஆண்டுகளுக்குச் சிறப்பாக வெளி வந்தது. பிறகு அவர் தென்னாப்பிரிக்காவிற்குச் சென்ற பின்பு மெதுவாக அப்பத்திரிக்கை நலிவுற்றுப் போனது.
  • 1898 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று, பல பள்ளிகளில் எவ்வாறு நலிவுற்ற வகுப்பினரின் குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதை விளக்கி ஒரு மனுவை அவர் அரசிடம் சமர்ப்பித்தார்.
  • அந்த மனுவிற்குப் பதிலளிக்கும் வண்ணம் சென்னை நகராட்சியானது பள்ளிகளை நிறுவ வேண்டும் என்ற உத்தரவை அரசு பிறப்பித்தது.

 

காந்தியுடன்
  • 1900 ஆம் ஆண்டு முதல் 1921 வரை அவர் இந்தியாவிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்காவிற்கும் பின்னர் தென் ஆப்பிரிக்காவிற்கும் சென்றார்.
  • 1902 ஆம் ஆண்டில் கிழக்கு ஆப்பிக்காவின் ஸான்ஸிபாரில் காந்தியின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ஆனால் 1906 ஆம் ஆண்டில் தான் தென்னாப்பிரிக்காவின் பீனிக்ஸ் நகரில் அவர் காந்தியைச் சந்தித்தார்.
  • காந்தி தென்னாப்பிரிக்க நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்த போது சீனிவாசன் அதே நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றினார்.
  • காந்தி தனது கையொப்பத்தைத் தமிழில் மோ.க. காந்தி (தமிழில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி) என இடுவதற்கு முக்கியக் கருவியாக சீனிவாசன் இருந்தார்.
  • தீண்டாமை, மத அடிப்படையிலான சீர்திருத்தங்கள் மற்றும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் போன்ற விவகாரங்களில் காந்தியின் நிலைப்பாட்டை சீனிவாசன் விமர்சித்த போதிலும் பூனா ஒப்பந்த விவகாரத்தில் எரவாடா சிறையில் காந்தியை மூன்று முறை இவர் சந்தித்தார்.
  • “காந்தி ஒரு உயர்ந்த மனிதர் என்றும் தாழ்த்தப்பட்டோரின் சார்பாக ஒரு லட்ச ரூபாயைச் சேகரித்து அவர்களது குழந்தைகளின் கல்விக்காகச் செலவழித்து, தீண்டாமையை ஒழிப்பதற்காக பல ஆண்டுகள் அவர் போராடினார். ஆனால் உயர் சாதி இந்துக்களின் மனதை காந்தியால் மாற்ற முடியவில்லை” என்று சீனிவாசன் கூறினார்.

 

பிற்காலத்தில் இந்தியாவில் பணி
  • இவர் 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார்.
  • 1923 ஆம் ஆண்டில் மதராஸ் சட்டசபையின் மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டு 1929 ஆம் ஆண்டு வரை அவர் அப்பதவியை வகித்தார்.
  • பொது வீதிகள், கட்டிடங்கள், கிணறுகள் மற்றும் சந்தைகளை நலிவுற்ற வகுப்பினர்களும் பயன்படுத்த அனுமதிக்கும் வகையிலான சட்டங்களைக் கொண்டு வருவதில் சீனிவாசன் முக்கியப் பங்காற்றினார்.
  • பஞ்சமார்கள், பறையர்கள் எனும் சொற்களை அதிகாரப்பூர்வ பயன்பாடுகளிலிருந்து விலக்கி ஆதி திராவிடர் மற்றும் ஆதி ஆந்திரர் என்பனவாக மாற்றுவதற்கான தீர்மானத்தை 1922 ஆம் ஆண்டில் MC ராஜா என்ற உறுப்பினர் நிறைவேற்றினார்.
  • ஆனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகும் இது தொடர்பான மீறல்கள் நடைபெற்றன.
  • எனவே சீனிவாசன் இது தொடர்பாக அவையில் குரலெழுப்பினார்.
  • மேலும் இவர் கிராம நிர்வாக அலுவலர் பதவியில் உயர் சாதி இந்துக்களின் ஆதிக்கத்தை ரத்து செய்ய முயன்றார். ஆனால் இது பின்னர் 1980 ஆம் ஆண்டில் எம்ஜிஆர் அரசால் மட்டுமே நடைமுறைப் படுத்தப்பட்டது.
  • தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் துன்பங்களை நிவர்த்தி செய்வதற்காக 1919 ஆம் ஆண்டில் ஆங்கில அரசால் ஏற்படுத்தப்பட்ட தொழிலாளர் நலத் துறையை அமைப்பதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார்.
  • 1928 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற முதல் ஆதி திராவிடர் மாகாண மாநாட்டின் இவர் அதன் தலைவராக்கப் பட்டார்.
  • மேலும் இவர் மாநிலத்தில் மதுவிற்கு முழுவதுமாக தடை விதிக்க வேண்டுமென்று சட்டசபையில் கோரினார்.
  • அவர் தனது சுயசரிதையான ஜீவிய சரித்திர சுருக்கம் (ஒரு சுருக்கமான சுயசரிதை) எனும் நூலைத் தானே எழுதினார். இது 1939 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

 

அம்பேத்கருடன்
  • பாபாசாஹிப் அம்பேத்கருடன் நெருக்கமாக சீனிவாசன் பணியாற்றினார்.
  • “நானும் அம்பேத்கரும் நகமும் சதையுமாகப் பணியாற்றினோம். நாங்கள் இருவரும் லண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதிகளாகச் சென்று அவர்களின் அரசியல் உரிமைகளுக்காகப் போராடினோம்” என்று சீனிவாசன் கூறியுள்ளார்.
  • 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மதராஸ் மாகாண தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கான கூட்டமைப்பின் தலைவராக கூட்டுப் பிரதிநிதித்துவத்தில் இடஒதுக்கீடு செய்யும் கருத்தை ஏற்க மறுத்தும் தனி பிரதிநிதித்துவத்தை ஆதரித்தும் பிரதிநிதித்துவமானது எண்ணிக்கையின் அடிப்படையிலும் அந்தந்த பிராந்தியங்களில் அவர்கள் எதிர்கொள்ளும் குறைகளுக்கு ஏற்றவாறும் இருக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
  • 1930 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அம்பேத்கருடன் இணைந்து நலிவுற்ற வகுப்பினரின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை சீனிவாசன் பெற்றார்.

  • இருவரும் சேர்ந்து நலிவுற்ற வகுப்பினருக்கும் சிறுபான்மையினர் தகுதிநிலையை விரிவுபடுத்துவதை ஆதரித்தனர். அத்தகைய நடவடிக்கை மட்டுமே அவர்களுக்கான சரியான அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் என அவர்கள் கருதினர்.
  • லண்டனில் நடந்த முதல் இரண்டு வட்டமேசை மாநாடுகளில் (1930 & 1931) அம்பேத்கருடன் சேர்ந்து கலந்துக் கொண்டு பறையர்கள் பிரிவினரை அவர் பிரதிநிதித்துவப் படுத்தினார்.
  • 1932 ஆம் ஆண்டில் அம்பேத்கர், M.C. ராஜா மற்றும் R. சீனிவாசன் ஆகியோர் காந்தியால் உருவாக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்கான சேவகர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுவில் இணைந்தனர்.
  • இருப்பினும் சிறிது காலத்திலேயே இவர்கள் மூவரும் அக்குழுவிலிருந்து விலகினர். பின்னர் இது ஹரிஜன சேவா சங்கம் என மறுபெயரிடப்பட்டது.

 

சித்தாந்தங்கள்
  • அம்பேத்கரின் மதம் மாறும் முடிவைத் தொடர்ந்து, அவரது முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சீனிவாசன் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
  • மதராஸ் மாகாண அரசின் மேலவை உறுப்பினர் மற்றும் மதராஸ் மாகாண பட்டியலிடப்பட்ட இனத்தவர் கூட்டமைப்பின் தலைவர் ஆகிய பொறுப்புகளில் அவர் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் ஆதரவுடன் கூடிய ஒரு திட்டமிடப்பட்ட அரசியலமைப்பு மட்டுமே கீழ்த்தட்டு மக்களுக்கு நீதி வழங்கும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.
  • அம்பேத்கரைப் போலவே சீனிவாசனும் காந்தியின் சமய ரீதியான அணுகுமுறையானது நலிவுற்ற வகுப்பினரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது என நம்பினார். ஆனால் கோவில் நுழைவிற்குச் சாதகமான சட்டங்கள் நிச்சயமாக அவர்களின் சமூக நிலையை மேம்படுத்தும் என சீனிவாசன் கருதினார்.
  • வட்ட மேசை மாநாடுகளின் போது, சீனிவாசன் அரசர் ஐந்தாம் ஜார்ஜிடம் கைகுலுக்க மறுத்து “நான் ஒரு தீண்டத்தகாதவன்” என பகிரங்கமாக அறிவித்துத் தலித்துகளின் நிலையைக் குறிப்பிடும் வகையில் அவர் அதனை வெளிச்சத்திற்கு கொணர்ந்தார்.

 

இறுதிக் காலம்
  • 1945 ஆம் ஆண்டில் தனது 85 ஆம் வயதில் ரெட்டைமலை சீனிவாசன் காலமானார்.

 

கௌரவங்கள்
  • 1926 ஆம் ஆண்டில் ராவ் சாஹிப், 1930 ஆம் ஆண்டில் ராவ் பஹதூர், 1936 ஆம் ஆண்டில் திவான் பஹதூர் ஆகியப் பட்டங்களை வழங்கி ஆங்கிலேய அரசானது இவரைக் கௌரவித்தது.
  • திரு.வி.க.வின் முன்னிலையில் ராஜாஜியின் தலைமையில் 1940 ஆம் ஆண்டில் “திராவிட மணி” எனும் கௌரவத்தைப் இவர் பெற்றார்.
  • இவரின் பணிகளைக் கௌரவிக்கும் பொருட்டு ரெட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாளான ஜீன் 07 ஆம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா 2011 ஆம் ஆண்டு ஜூலை 06 ஆம் நாள் அறிவித்தார்.
  • சென்னையின் கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் ரெட்டை மலை சீனிவாசனுக்காக ஒரு மணிமண்டபம் நிறுவப்பட்டது.

  • 2000 ஆம் ஆண்டில் மத்திய அரசானது இவரின் நினைவு தபால் தலைகளை வெளியிட்டது.
  • விடுதலைச் சிறுத்தைகள் கட்சியானது சென்னைக்கு அருகில் உள்ள ஓட்டேரியில் “உரிமைக் களம்” எனும் பெயரில் இவரின் நினைவகத்தை நிறுவியது.

 

- - - - - - - - - - - - - - -

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்