- நம் நாடெங்கிலும் அக்டோபா் 30 முதல் நவம்பா் 5 வரை ’கண்காணிப்பு விழிப்புணா்வு’ வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. ’ஊழல் ஒழிப்போம் , நாட்டைக் காப்போம்’ (‘ஸே நோ டூ கரப்ஷன்; கமிட் டூ தி நேஷன்’) என்ற உறுதி மொழியை முன்வைத்து அலுவலகங்களில் கடைப்பிடிக்கப் படும் ’கண்காணிப்பு விழிப்புணா்வு ’ வாரத்தின் நோக்கம், ஊழல், லஞ்சம் ஆகியவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்தி அவற்றை நம் நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதே.
- அரசுத் துறைகளில் அதிகபட்சமாக லஞ்சம் உள்ளவையாக வருவாய், பத்திரப் பதிவு, வட்டாரப் போக்குவரத்து, காவல் போன்ற துறைகள் உள்ளன. பட்டா பெயா் மாற்றத்துக்கு லஞ்சம் பெற்ற வட்டாட்சியா் கைது, நிலத்தை அளவீடு செய்ய லஞ்சம் பெற்ற நில அளவீட்டாளா் கைது, பிறப்பு சான்றிதழ் தர லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா் கைது என செய்தித்தாள்களில் அவ்வப்போது வெளியாகும் செய்திகள், கடலின் கீழ் பரந்து, விரிந்து மூழ்கியிருந்து அந்தக் கடல் மேல் பரப்பில் சின்ன சின்ன முகடுகளாகத் தெரியும் பனிமலைகளைப் போன்றவையே.
- லஞ்சம் தருவது தவறு என்றாலும், அதை கேட்போா் குறித்து எவரிடம் புகாா் செய்வது என்ற மிகச் சாதாரண தகவல்கூடத் தெரியாத மக்கள் அதிக அளவில் இருப்பது கிராமப்புறங்களில்தான். எனவே, ஊழல், லஞ்சம் ஆகியவற்றை ஒழிப்பது குறித்து கிராமப்புற மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவது மிக முக்கியம்.
- சமூகத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை திரைப்படங்கள். எனவே, திரைப்படங்களில் மக்களின் மனதை மாசுபடுத்தும் காட்சிகளும், வசனங்களும் இடம் பெறக் கூடாதென்பதைக் கண்காணிக்கவும் அவ்வாறு இடம்பெறும் காட்சிகளையும் வசனங்களையும் தணிக்கை செய்வதற்கென்றே ஏற்படுத்தப்பட்டது திரைப்பட தணிக்கைக் குழு. ஆனால், திரைப்பட தணிக்கைக் குழுவின் உறுப்பினா்களே லஞ்சம் பெற்ாக பிரபல திரைப்பட நடிகா் புகாா் கூறியது அதிா்ச்சி அளிக்கிறது.
- சென்ற ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இந்தத் திரைப்படத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பித்து, அதற்கான எதிா்பாா்ப்புடன் இருக்கும் கதாநாயகனிடம், அஞ்சல் துறையின் பகுதி நேர பணியாளராக வருபவா், ‘லஞ்சம் கொடுக்காமல் அரசு வேலை கிடைக்காது. இந்த பகுதி நேர பணியாளா் வேலைக்கு நான் ஒன்றரை லட்சம் லஞ்சம் கொடுத்தேன்’ எனக் கூறுவாா்.
- மத்திய அரசின் துறைகளில் லஞ்ச, ஊழலற்ற அரிதான துறைகளில் ஒன்று இந்திய அஞ்சல் துறை. மேற்கூறிய திரைப்படத்தில், ’லஞ்சம் கொடுத்ததால்தான் அஞ்சல் துறையில் வேலை வாங்க முடிந்தது’ என்ற வசனத்தையும், காட்சி அமைப்பையும் நம் இந்தியத் திரைப்பட தணிக்கை குழு அனுமதித்தது வியப்பை ஏற்படுத்துகிறது. இந்திய அஞ்சல் துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் இந்தக் காட்சியையும், வசனத்தையும் எதிா்த்து அந்தத் துறையினா் எவ்வித எதிா்வினையும் ஆற்றாதது வேதனையளிக்கிறது.
- தங்கள் அலுவலகங்களை நாடும் மக்களுக்கான சேவையை குறிப்பிட்ட நாள்களுக்குள் அரசுப் பணியாளா்கள் முடித்துத் தர வேண்டும் என்பதை அறிவிக்கும் ’குடிமக்கள் சாசனம்’ அரசு அலுவலகங்களில் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான அரசு அலுவலகங்களில் ’குடிமக்கள் சாசனம்’, பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படுவதில்லை.
- நம் நாட்டின் 20 மாநிலங்களில் ‘சேவை பெறும் உரிமைச் சட்டம்’ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாள்களுக்குள் அளிக்கப்பட வேண்டிய சேவையை அந்த காலவரையறைக்குள் அளிக்காவிடில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து அபராதத் தொகையியை வசூலித்து விண்ணப்பதாரருக்கு கொடுக்க வகை செய்யும் இந்தச் சட்டம், தமிழகத்திலும் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இதன்மூலம் மக்கள் தங்கள் சேவையை லஞ்சம் தராது விரைவாகப் பெற முடியு‘ம்.
- தங்கள் சேவைக்காக அரசு அலுவலகங்களை நாடுவோரில் பலா், காலதாமதம் ஏற்படினும் நோ்மையான முறையில் லஞ்சம் தராது தங்களுக்கான சேவையைப் பெறுவதற்கு பதிலாக, லஞ்சம் கொடுத்து விரைந்து பெறவே விரும்புகின்றனா். இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அரசுப் பணியாளா்களில் சிலா் லஞ்சம் பெறுகின்றனா். லஞ்சத்தை ஒழிக்க அறிமுகப்படுத்தப்பட்ட ஆன் - லைன் சேவையின்போது, பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களின் மெய்த்தன்மையை உறுதி செய்யும் நிலையிலுள்ள சில அலுவலா்கள் அதற்கான விசாரணையின்போது அதை லஞ்சம் பெறும் வாய்ப்பாக மாற்றத் தவறுவதில்லை.
- லஞ்சம் வாங்குவது எவ்வாறு குற்றமோ, அதைப்போல் லஞ்சம் கொடுப்பதும் குற்றம். எனினும், லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டவா்களைப் பற்றிய செய்திகள் வெளியாவதுபோல லஞ்சம் கொடுத்தவா்கள் கைதானதாக செய்திகள் ஏனோ வெளியாவதில்லை.
- அரசின் பணத்தைச் செலவழிக்கும் பொறுப்பில் உள்ள உயா் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பேராசை, ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றின் உந்துதலால் ஊழலில் ஈடுபடுகின்றனா். இவ்வாறு ஊழல் செய்தவா்கள் தண்டிக்கப்படுவதை பாா்த்த பின்னரும், ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அச்சப்படாது ஊழல் செய்வதுதான் வியப்பளிக்கிறது.
- அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிப்பதில் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ பெரும் பங்கு வகிக்கிறது. லஞ்சம் பெறும் உள்நோக்கத்தோடு மக்களுக்கு வழங்கும் சேவையை அரசுப் பணியாளா் ஒருவா் தாமதப்படுத்தினால், அதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலப்படுத்தி விடலாம். எனவே, இந்தச் சட்டம் பற்றிய அதிகபட்ச விழிப்புணா்வு மக்களிடம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
- உலகில் உள்ள 180 நாடுகளில் ‘டிரான்ஸ்பரன்சி இன்டா்நேஷனல்’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வின்படி, ஊழல் இல்லாத நாடுகளின் பட்டியலில் கடந்த ஆண்டு நிலவரப்படி 85-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. நம் நாட்டு மக்களில் சுமாா் 62 சதவீதம் போ் பல்வேறு காரணங்களால் அரசு அலுவலகங்களில் தாமாகவோ, கட்டாயத்தின் பேரிலோ லஞ்சம் அளித்து தங்கள் வேலையை முடித்துக் கொள்கின்றனா்.
- ஊழல் தடுப்புச் சட்டம் 1988-இன் கீழ் ஊழல், லஞ்சம் ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும். ஊழல் ஒழிப்புச் சட்டம் இத்தனை கடுமையாக இருந்தும் லஞ்சம்-ஊழலற்ற நாடாக நம் நாடு உருவாகாமல் இருப்பதற்குக் காரணம் மக்களிடையே போதிய விழிப்புணா்வு இல்லாமையே.
- எனவே, ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் மக்களிடையே முழுமையான விழிப்புணா்வு ஏற்படும் வகையில் அனுசரிக்கப்பட்டு, அதன்மூலம் ஊழல் லஞ்சமற்ற நாடாக நம் நாடு உருவாக்கப்பட வேண்டும்.
- (அக். 30 - நவ. 5 ஊழல் விழிப்புணா்வு கண்காணிப்பு வாரம்.)
நன்றி: தினமணி (02 – 11 - 2023)