TNPSC Thervupettagam

லயோலா 100 : உயர் கல்வித் துறையில் ஒரு மாறுபட்ட மைல்கல்!

August 1 , 2024 162 days 133 0
  • சென்னை லயோலா கல்லூரி, 2024-2025 இல் நூற்றாண்டுப் பயணத்தைப் புது எழுச்​சியோடு தொடர்​கிறது. 1925 முதல் 2025 வரை கடந்த 100 ஆண்டுகளில் இக்கல்லூரி இந்திய அறிவுசார் தளத்தில் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்​தியுள்ளது. இந்த நூற்றாண்டு காலப் பயணமானது விரிவாக்கம், அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, அறிவுசார் பயணம் என்ற மூன்று கருத்துகளை அடிப்​படையாகக் கொண்டு இயங்குகிறது.

உருவான பின்னணி:

  • லயோலா கல்லூரி மதராஸ் கத்தோலிக்க மறை மாவட்டப் பேராயர் ஜே.ஆலன் விடுத்த அழைப்பின் அடிப்​படையில், இயேசு சபையினரால் (Society of Jesus) நிறுவப்​பட்டது. லயோலா கல்லூரியின் வரலாறு 1924 மார்ச் 10 மதராஸ் மாகாணத்தின் ஆளுநர் வெல்லிங்​டனும், அவரது மனைவியும் இணைந்து நாட்டிய அடிக்​கல்லில் இருந்து தொடங்​கியது. தந்தை பிரான்சிஸ் பெட்ரம் முதல் பத்து வருடங்கள் தலைவராகவும் முதல்​வராகவும் கல்லூரிக்கான சிறந்த அடித்​தளத்தை ஏற்படுத்​தினார்.
  • கல்லூரியின் இரண்டாவது நிறுவனர் என்று பெருமையோடு அழைக்​கப்​படும் தந்தை ஜெரோம் டிசோசாவின் (1942-1950) பணிக் கா​லத்தில் பல புதிய துறைகள் உருவாக்​கப்​பட்டு கல்லூரி விரிவாக்​கப்​பட்டது. ஜே.குரியாகோஸ் (1970 முதல் 1983), தலைமையின் கீழ் லயோலா கல்லூரி அடுத்த கட்ட நகர்வை நோக்கி முன்னேறியது.
  • பல்கலைக்கழக மானியக் குழு வழங்கிய தன்னாட்சி அதிகாரத்தை (Autonomous) இந்தியாவில் எட்டு கல்லூரிகளில் ஒரு கல்லூரியாக லயோலா பெற்றது. இதன் மூலம் தனது பாடங்களை, பாடத்​திட்டத்தினை உருவாக்​கவும், தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிடவும் அதிகாரம் பெற்றது.

சமூக நோக்கம்:

  • லயோலா கல்லூரியின் முக்கிய லட்சியம் மக்களுக்குப் பாகுபாடற்ற கல்வி வழங்க வேண்டும் என்பதே. அதன் அடிப்​படையில் கல்லூரியின் அனைத்துச் செயல்​பாடுகளிலும் சமூகத்தில் பிற்படுத்​தப்​பட்ட, ஒடுக்​கப்​பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து மக்களுக்கும் வாய்ப்பு அளிக்​கப்​படுகிறது.
  • கல்லூரி மாணவர் சேர்க்​கையில், இத்தகைய பின்புலத்தில் இருந்து வரும் மாணவர்​களுக்குத் தனி வாய்ப்​பும், அந்த மாணவர்கள் கல்லூரியில் இணைந்த பிறகு சிறப்புக் கவனமும் மேம்பாடும் வழங்க வேண்டும் என முடிவுசெய்​யப்​பட்டது. அதனைக் கடந்த மூன்று தசாப்​தங்​களுக்கு மேலாகச் செயல்​படுத்தி, சமூகத்தில் ஒரு மெளனப் புரட்சியை ஏற்படுத்தி, இன்றும் செயல்​படுத்​திவருகிறது.
  • லயோலாவின் பாடத்​திட்டம் மாணவர்களை அறிவுத் திறத்​துடனும், மனிதர்கள் சார்ந்த அக்கறையுடனும் ஒருங்​கிணைந்து உருவாக்க வேண்டும் என்ற உயரிய கொள்கையோடு உருவாக்​கப்​பட்டது. தொடக்கம் முதலே மதிப்​பீட்டுக் கல்வி (Value Education), மதிப்​பீடுகள் அடிப்​படையான கல்விக்கு முக்கியத்​துவம் தரப்படுகிறது.
  • லயோலாவின் பாடத்​திட்டம் என்பது வெறும் வகுப்பு​களோடு நில்லாமல் சமூக, கள முன்னெடுப்புகள் மூலம் மாணவ, மாணவிகளின் அறிவுசார் ஆளுமை வளர்ச்சியையும், சமூகப் பொறுப்பையும் ஒருங்கே வழங்குகிறது.

பெருமைக்குரிய மாணவர்கள்:

  • இக்கல்லூரி தனது வரலாற்றுப் பயணத்தில் பல துறை வல்லுநர்களை, தலைவர்களை, விளையாட்டு வீரர்களை உருவாக்​கிக்​கொண்​டும், தொடர்ந்து பயணித்து​க்​கொண்டும் இருக்கிறது. இக்கல்​லூரியில் படித்துப் பின்னாள்​களில் பெரும் உயரங்​களைத் தொட்ட இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்​கட்​ராமன், வெண்மைப் புரட்​சியின் தந்தை வர்கீஸ் குரியன், ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும், பின்னர் பன்னிரண்​டாவது இந்திய நிதிக் குழுமத்தின் தலைவராகவும் இயங்கிய டாக்டர் சி.ரங்​கராஜன், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகராகவும் - அதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராகவும் பதவிவகித்த எம்.கே.நாராயணன், கல்வியாளர்களான முனைவர் மால்கம் எஸ்.ஆதிசேஷய்யா, முனைவர் டி.என்​.அனந்​தகிருஷ்ணன் போன்றோர் இங்கு பயின்​றவர்​கள்​தான்.
  • மேலும், புகழ்​பெற்ற பத்திரிகையாளர்களான என்.ராம், சசிகுமார் மேனன், மகசேசே விருது பெற்ற பி.சாய்நாத் ஆகியோர் இக்கல்​லூரியின் மாணவர்களே. உச்ச நீதிமன்​றத்தின் மூன்று நீதிபதிகள், பல இந்தியக் குடிமைப் பணி அதிகாரிகள், தலைவர்கள் எனப் பலரை இக்கல்லூரி உருவாக்கி தேசத்துக்கு வழங்கியிருக்​கிறது.
  • தவிர, பல்வேறு விளையாட்டு வீரர்​களையும் உருவாக்​கியுள்ளது. அதில் குறிப்பாக புகழ்​பெற்ற டென்னிஸ் வீரர்களான ராமநாதன் கிருஷ்ணன், அமிர்​தராஜ் சகோதரர்கள், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் போன்றவர்கள் இக்கல்லூரி வரலாற்றின் ஓர் அங்கத்​தினர். இத்துடன் புகழ்​பெற்ற திரைப்படக் கலைஞர்​களையும் இயக்குநர்​களையும் உருவாக்கிய பெருமை லயோலாவின் காட்சித் தொடர்​பியல் (Visual Communication) துறைக்கு உண்டு.

தொடரும் பயணம்:

  • 1925ஆம் ஆண்டு மூன்று இளங்கலைப் படிப்பு​களில், 75 மாணவர்​களோடு தொடங்கிய லயோலாவின் கல்விப் பயணமானது இன்று விரிவு பெற்று 24 இளங்கலைப் பட்டப்​படிப்புகள், 21 முதுகலைப் படிப்புகள், 15 வெவ்வேறு துறைகளில், முழு நேரம், பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வு என்று பெரும் வளர்ச்​சியைக் கண்டிருக்​கிறது.
  • இன்று இக்கல்​லூரியில் 450க்கும் மேற்பட்ட பேராசிரியர்​களின் வழிகாட்டலில் 10,000 மாணவ, மாணவிகள் கல்வி பயில்​கின்​றனர். என்றும் எதிலும் உயர்வானதை அடைய வேண்டும் என்கிற உத்வேகத்​துடன் இயங்கும் பேராசிரியர்​களின் வழிகாட்டுதல் மூலம் ‘பிரகாசிக்​கட்டும் உங்கள் ஒளி’ (Let Your Light Shine) என்ற விருது வாக்கோடு மாணவர்​களுக்கு ஊக்கமளிக்​கிறது இக்கல்​லூரி. ஆணும் பெண்ணும் பிறருக்கா​கவும் சமூகத்து​க்கா​கவும் (Men and Women for and With Others) என்ற நோக்கத்​துடன் பல மாணவ, மாணவிகளை உருவாக்கும் பயணத்தில் பல்வேறு சவால்களை எதிர்​கொண்டு, தடைகளைத் தாண்​டிப் பயணிக்​கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்