TNPSC Thervupettagam

லித்தியம் யாருக்குச் சொந்தம்

June 7 , 2023 539 days 296 0
  • மின் கார்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்கட்டமைப்புகள் ஆகியவற்றுக்கான மின்கலங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படும் தனிமம் லித்தியம். முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதப்படும் லித்தியம் படிவுகள், அண்மையில் ஜம்மு - காஷ்மீரில் கண்டறியப் பட்டிருப்பது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. இது இந்தியாவின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் உகந்தது என்று துறைசார் நிபுணர்கள் கூறியுள்ளனர். அதே நேரம், இதனால் ஏற்படக் கூடிய சமூக, சுற்றுச்சூழல் தாக்கங்கள் குறித்த கவலைகளையும் அவர்கள் புறந்தள்ளி விடவில்லை.

இந்தியாவில் லித்தியம் தொழில் துறை:

  • இந்தியாவில் மின் வாகனத் தொழில் துறையின் மதிப்பு 2021இல், 38.35 கோடி அமெரிக்க டாலர்கள் என்றும் 2030இல் இது 15,221 கோடி டாலராக அதிகரிக்கக்கூடும் என்றும் மதிப்பிடப் பட்டிருந்தது. 2019-2020இல் 92.66 கோடி டாலர்கள் (ரூ.6,600 கோடி) மதிப்பிலான 45 கோடி லித்தியம் மின்கலங்களை இந்தியா இறக்குமதி செய்தது. இப்படியான சூழலில், இந்தியாவிலேயே லித்தியம் படிவுகளைக் கண்டறிந்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
  • தற்போது குறைந்த கரிம வெளியீடு சார்ந்த பொருளாதாரங்களாக உலக நாடுகள் மாறிக்கொண்டிருப்பதும், செயற்கை நுண்ணறிவு, 5ஜி உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் அதிவேகப் பரவலும் உலகளாவிய, பிராந்திய புவிசார் அரசியலைப் பெருமளவில் மாற்றியமைக்கும் என்று சர்வதேச அரசியல் அறிஞர்கள் கணித்துள்ளனர். லித்தியம், கோபால்ட் உள்ளிட்ட அரிதான கனிமங்கள் எந்த நாட்டிடம் உள்ளன என்பது இந்த மாற்றங்களில் முக்கியப் பங்காற்றும் என்றும் அவர்கள் கூறிவருகின்றனர்.

கனிமங்கள் யாரிடம் இருக்க வேண்டும்?

  • நிலத்தின் அடியிலுள்ள அனைத்தும் நிலத்தின் உரிமையாளருக்கே சொந்தம் என்று 2013 ஜூலையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும் இந்தியாவில் காடுகள், குன்றுகள், மலைகள், தரிசு நிலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பெரும் நிலப்பகுதிகள் அரசுக்குச் சொந்தமானவையாகவே உள்ளன.
  • மிகுந்த கவனத்துடன் கையாளப்பட வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களைத் தனியார் தோண்டியெடுப்பதை மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் தடை செய்யலாம் என்பதையும் இந்தத் தீர்ப்பு நினைவுகூர்ந்தது. 1962 அணு ஆற்றல் சட்டத்தின்படி, தனியார் நிறுவனங்கள் யுரேனியத்தைத் தோண்டியெடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. லித்தியமும் யுரேனியம் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.

பிற நாடுகளில் லித்தியம்:

  • சிலே, பொலிவியா ஆகிய இரண்டு தென் அமெரிக்க நாடுகள் உலகின் மிக அதிக லித்தியத் தொகுப்புகளைக் கொண்டிருப்பவையாக அறியப்படுகின்றன.
  • சிலே அரசு லித்தியத்தை வியூகம்சார் வளமாக அடையாளப்படுத்தியுள்ளது. அதைக் கண்டெடுப்பது அரசின் பிரத்யேக உரிமை ஆக்கப்பட்டுள்ளது. எஸ்.க்யூ.எம் (SQM), ஆல்பமார்ல் (Albemarle) ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே லித்தியம் கனிமத்தைப் பிரித்தெடுக்க அந்த நாடு உரிமம் அளித்துள்ளது. சிலே அதிபர் கேப்ரியல் போரிக், 2023இல் புதிய ‘தேசிய லித்தியம் கொள்கை’யை அறிவித்தார்.
  • இந்தப் புதிய கொள்கை, எதிர்கால லித்தியம் திட்டங்களுக்கு அரசு-தனியார் கூட்டுச் செயல்பாட்டுக்கு அழைப்புவிடுத்தது. இதன் மூலம் லித்தியத்தைத் தோண்டியெடுப்பதால் விளையக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளை அரசு கட்டுப்படுத்த முடியும். லித்தியம் படிவுகளை வெட்டுவதன் மூலம் கிடைக்கும் வருவாயை உள்நாட்டுச் சமூகங்களுக்கு நியாயமான முறையில் பகிர்ந்தளிக்க முடியும். லித்தியம் சார்ந்த பசுமைத் தொழில்நுட்பங்கள் தொடர்பான ஆராய்ச்சியை ஊக்குவிக்க முடியும் என்று சிலே அரசு கருதுகிறது.
  • பொலிவியாவின் முன்னாள் அதிபர் ஈவோ மொரேலஸ் தலைமையிலான அரசு லித்தியத்தைத் தேசியமயமாக்கியது. அதில் தனியார் - வெளிநாட்டவர் பங்கேற்புக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது. தேசியமயமாக்கப்பட்டுக் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும், அந்த நாட்டில் வணிகம் செய்யும் அளவுக்கு லித்தியம் உற்பத்தி செய்ய முடியாததற்கு இதுவே காரணம் என்று கூறப்படுகிறது.
  • பொலிவியாவின் தற்போதைய அதிபர் லூயிஸ் ஆர்சே இந்த நிலையை மாற்ற விரும்புகிறார். அதற்காக லித்தியம் வளத்தைத் தனியார் துறைக்குத் தாரைவார்ப்பதற்கு மாற்றாக, இதர லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் கைகோத்து அவை அனைத்தின் பொருளாதாரத்துக்கும் பயனளிக்கக்கூடிய ‘லித்தியம் கொள்கை’யை வடிவமைக்க முனைப்புக் காண்பிக்கிறார். மெக்ஸிகோ அதிபர் ஆந்த்ரெஸ் மானுவல் லோபெஸ் ஒப்ராதோர் இந்த ஆண்டு பிப்ரவரியில் லித்தியத்தைத் தேசியமயமாக்கினார்.
  • பொதுவாக, லத்தீன் - தென் அமெரிக்க நாடுகள் இந்த விஷயத்தில் பல்முனை உத்தி ஒன்றை வகுப்பதற்கான வழிகளை ஆராய்ந்துவருகின்றன. இந்த நாடுகளின் அரசுகள் லித்தியம் தொடர்பாகக் குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கின்றன.
  • தனியார் பங்கேற்பின் அளவு ஒவ்வொருநாட்டிலும் மாறுபடுகிறது. இந்த நாடுகளின் லித்தியம்சார்ந்த செயல்பாடுகள், அரசுகளையும் பெருநிறுவனங்களையும் கேள்விக்கு உள்படுத்தும் உள்நாட்டு பூர்வகுடிக் குழுக்களின் செயல்பாடுகளுக்கான எதிர்வினையாகவும் அமைகின்றன.

அடுத்து என்ன?

  • இந்தியா தன்னிடம் உள்ள லித்தியம் படிவுகளைத் தோண்டியெடுக்கும்போது, இந்திய அரசு உயரிய அளவிலான செயல்திறனை வெளிப்படுத்துவதைப் பொறுத்தே இத்துறை உரிய வளர்ச்சியைப் பெறவைக்க முடியும். இந்தியாவின் அரிய கனிம வளங்களைத் தோண்டியெடுப்பது என்பது சமூக நல்வாழ்வு, சுற்றுச்சூழலைப் பேணுதல், தேசிய ஆற்றல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு இலக்குகளைக் கொண்டது. இவை அனைத்தும் நிறைவேற்றப் பட வேண்டும் என்றால், லித்தியம் துறை மிகவும் கவனமாகவும் பயனுள்ள வகையிலும் கையாளப் படுவது இன்றியமையாதது.

நன்றி: தி இந்து (07 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்