TNPSC Thervupettagam

வ.உ.சி.யை ஏமாற்றினாரா காந்தி?

October 3 , 2019 1882 days 1048 0
  • சுதேசி இயக்கத்தின்போது சுதேசியக் கப்பல் கம்பெனியை நிறுவி, வெள்ளைக் காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடி 1908-ல் சிறை சென்று, ‘கப்பலோட்டிய தமிழர்’ என்றும் ‘செக்கிழுத்த செம்மல்’ என்றும் புகழ்பெற்றவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை (1872–1936). சிறைவாசத்தின்போது (மார்ச் 1908 – டிசம்பர் 1912) மட்டுமல்லாமல் அதன் பிறகும் வ.உ.சி. பட்ட துன்பங்களுக்கு அளவில்லை.
  • இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவரானதால் அவருடைய வழக்குரைஞர் சன்னது பறிபோனது. வருவாய்க்கு வாய்ப்பில்லாத நிலையில் அவருக்கு இந்தியத் தமிழர்கள் உதவினார்களோ இல்லையோ தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவு உதவிபுரிந்தனர். இவர்கள் காந்தி வழியாகவும் பொருள் உதவி செய்திருந்தனர்.
  • இதன் தொடர்பில் ஒரு விவாதம் தமிழ்ச் சூழலில் பல காலமாக நிகழ்ந்துவந்திருக்கிறது. சுருக்கமாக – கொச்சையாக – சொல்வதானால், வ.உ.சி.க்குப் பணம் தராமல் காந்தி ஏமாற்றிவிட்டார் என்பதே அதன் சாரம்.
  • இதுவரை முழுமையாக வெளிவராத வ.உ.சி. – காந்தி கடிதப் போக்குவரத்தின் அடிப்படையில் இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் ‘வென் காந்தி விஸிட்டட் மெட்ராஸ்’ (தி இந்து, 26 ஜனவரி 2003) என்ற தலைப்பில் பதினாறு ஆண்டுகளுக்கு முன் ஒரு கட்டுரையை எழுதினேன்.
  • தமிழ்ச் சூழலில் ஒரு தவறான வரலாற்றுச் செய்தி பரவிவிட்டால் எவ்வளவு ஆதாரங்களைப் படைக்கலனாகக் கொண்டாலும் அதை நேராக்குவதென்பது இயலாத காரியம். அழிக்க அழிக்க மயில்ராவணன்போல் ஐதீகங்கள் பல்கிக்கொண்டே இருக்கும்.
  • சமூக ஊடகங்கள் அந்த மயில்ராவணனுக்குக் குருதிக் கொடை கொடுக்கும் காலமிது. மேலும் பல புதிய செய்திகளோடு இக்கட்டுரை மீண்டும் இதை எதிர்கொள்ள முனைகிறது.
காந்திக்கு வ.உ.சி. எழுதிய கடிதம்
  • 1915 ஜனவரியில் காந்தி இந்தியாவுக்கு வந்துசேர்ந்தார். 21 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்திருந்தாலும் இந்தியாவில் அவர் அறிமுகமாகாதவர் என்று சொல்வதற்கில்லை.
  • 1896-லேயேகூட அவர் சென்னைக்கு வந்து உரையாற்றியிருக்கிறார். தென்னாப்பிரிக்க இந்தியரின் அரசியல் உரிமைகளுக்காகவும் மனித உரிமைக்காகவும் ஆதரவு திரட்டியிருக்கிறார். அவருடைய முதல் வாழ்க்கை வரலாறு 1909-ல் சென்னையிலிருந்துதான் வெளிவந்தது.
  • நூறு பெருந்தொகுதிகளாக வெளிவந்துள்ள மகாத்மா காந்தி தொகுப்பு நூல்களில் ஒரு முறைகூட இடம்பெறாத பெயர் வ.உ.சி.யினுடையது.
  • அத்தகைய ஒருவருக்கும் காந்திக்கும் இடையே நெடும் கடிதப் போக்குவரத்து நடந்திருந்தது என்பது நகைமுரண் மிகுந்தது.
  • காந்திக்கு வ.உ.சி. எழுதிய ஒரு கடிதம் மட்டும் காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள நிலையில் வ.உ.சி.க்கு காந்தி எழுதிய சில கடிதங்கள் மட்டும் மிகவும் சிதைந்த நிலையில் புதிதாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • சில கடிதங்கள் தட்டச்சிடப்பட்டவை; காந்தி சொல்லப் பிறர் எழுத அவர் கைச்சாத்திட்டவை சில; சில அவரே கைப்பட எழுதியவை. தமிழில் எழுதிய ஒரு கடிதம் தவிர பிற அனைத்தும் ஆங்கிலத்தில் அமைந்துள்ளன.
  • நல்வாய்ப்பாக இக்கடிதங்களின் கீழ்ப்புறத்திலும் பின்புறத்திலும் இவற்றுக்கான பதிலை வ.உ.சி. தம் கைப்பட அடித்தும் திருத்தியும் கரட்டு வடிவமாக எழுதியிருக்கிறார்.
  • நல்ல நாளிலேயே நாழிப்பால் என்றொரு பழமொழி உண்டு. பொதுவாகவே காந்தியின் கையெழுத்தைப் படிப்பது கடினம். சிதைந்தும் ஒடிந்தும் நீர் பட்டு மை கரைந்தும் இருந்தால்? வ.உ.சி.யின் கையெழுத்து தெளிவாக இருக்கும்.
  • ஆனால், கிடைத்துள்ள கடிதங்களோ கரட்டு வடிவாதலால் அவற்றைப் படிப்பதிலும் சிக்கல். எப்படியோ கையெழுத்தைப் புதிரவிழ்த்து இக்கட்டுரையை வரைய முற்பட்டுள்ளேன்.
  • 1914 மே 5 நாளிட்ட ஒரு சுருக்கமான இரண்டு வரித் தட்டச்சுக் கடிதமே காந்தி வ.உ.சிக்கு எழுதிய முதல் கடிதமாகலாம். தம் தென்னாப்பிரிக்க வாழ்க்கையை ஏறக்கட்டிவிட்டு இந்தியாவுக்குத் திரும்புவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் நட்டால் ஃபீனிக்ஸ் பண்ணையிலிருந்து ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் இது.
  • தூத்துக்குடியில் வ.உ.சி. குடியிருந்தபோது ‘திரு.சிதம்பரம் பிள்ளை’ என்று விளித்து எழுதிய இக்கடிதத்தில், ‘உங்கள் மீது அனுதாபம் கொள்கிறேன் என்றாலும், உங்களுக்கு உதவும் வகையில் ஒரு நிதியைத் திரட்ட என்னால் இயலவில்லை’ என்று அதில் காந்தி குறிப்பிட்டிருந்தார்.
  • தமக்கு நிதி திரட்டித் தருமாறு வ.உ.சி. வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பதை இதிலிருந்து உய்த்துணரலாம். வேறு பின்புலம் தெரியவில்லை. இதன் பிறகு ஓராண்டுக்கு இருவரிடையே எந்தத் தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை.
வ.உ.சி. எழுதிய கடிதம்
  • இதற்கு ஓராண்டுக்குப் பிறகு, காந்திக்கு வ.உ.சி. எழுதிய கடிதத்தின் கரட்டு வடிவம் கிடைக்கிறது. (‘என் முதல் கடிதம்’ என்று அதன் தலைப்பில் வ.உ.சி. குறித்துள்ளார்.) 17 ஏப்ரல் 1915-ல் காந்தி சென்னைக்கு வந்துசேர்ந்த இரண்டொரு நாளுக்குள் எழுதப்பட்ட கடிதம் இது.
  • ‘ரயில் நிலையத்தில் தங்களையும் மதிப்புக்குரிய திருமதி காந்தியையும் காணக்கிடைத்த அதிர்ஷ்ட’த்தைக் குறிப்பிட்ட அக்கடிதம், ‘தாங்கள் இவ்வூரை விட்டுப் புறப்படும் முன்னர், தங்களுக்குச் சௌகரியப்படும் சமயத்தில் தங்களை அந்தரங்கமாகச் சந்திக்க விரும்புகிறேன்’ என்றும் அதில் வ.உ.சி. குறிப்பிட்டிருந்தார்.
  • காந்திக்கே உரிய பாங்கில் உடனடியாகவும் சுருக்கமாகவும் ஒரே வரியில் 20 ஏப்ரல் 1915-ல் தட்டச்சிட்ட பதில் வந்தது. ‘அடுத்த வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு வந்தால் சில நிமிடங்கள் உங்களுக்காக ஒதுக்க முடியும்’ என்று அதில் எழுதியிருந்தது.
  • சென்னைக்குள் எழுதிப்போட்டால் அதே நாளிலிலோ அடுத்த நாளிலோ முகவரியாளரின் கைக்குக் கடிதம் கிடைத்த பொற்காலம் அது.
  • அடுத்தடுத்த நாள்களில் இருவருக்குமிடையே மிக வேகமாகக் கடிதங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
புண்பட்ட இதயங்கள்
  • 20 ஏப்ரலில் காந்தி எழுதிய கடிதத்திற்கு அடுத்த நாளே வ.உ.சி. விடை எழுதினார். ‘சில நிமிடங்கள்’ என்ற தொடர் வ.உ.சி.யைப் புண்படுத்திவிட்டதுபோலும். ‘என் உரையாடல் சில நிமிடங்களுக்கு மேல் எடுக்கலாம்’ என்று குறிப்பிட்ட அவர், அந்தத் தொடரை அடிக்கோடிட்டு, ‘என் வருகையின் மூலம் தங்களைச் சிரமத்திற்குள்ளாக்க விரும்பவில்லை. தங்கள் பொன்னான நேரத்தில் குறுக்கிட்டதற்காக மன்னிக்கவும்’ என்று பதிலெழுதிவிட்டார்.
  • இக்கடிதத்தை அதே நாளில் வரப்பெற்ற காந்தியும் பதிலுக்குப் புண்பட்டுவிட்டார்போலும். ‘உங்கள் கடிதம் கிடைத்தது. தாங்கள் என்னைச் சந்திக்க விரும்பவில்லையாயின் நானே தங்களைச் சந்திக்க விரும்புகிறேன்.
  • வரும் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை காலை 6 மணிக்கு எனக்குச் சில நிமிடங்களை ஒதுக்க முடியுமா?’ என்று கேட்டதோடு, ‘ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3 முதல் 4 வரை எவரையும் சந்திக்க நான் தயாராக இருக்கும் வேளையில் தாங்கள் வரலாம். அந்தரங்கப் பேட்டி வேண்டும் என்று தாங்கள் கேட்டதாலேயே தனிச் சந்திப்புகளுக்குக் காலை நேரத்தையே நான் ஒதுக்குவதால் வெள்ளிக்கிழமை காலையைக் குறிப்பிட்டேன்’ என்றும் அதில் விளக்கினார்.
  • இக்கடிதம் கண்ட வ.உ.சி. மிகவும் நெகிழ்ந்துவிட்டார். ‘தேசாபிமானிகள் கேட்டுக்கொள்ளும்பட்சத்தில் சில நிமிடங்கள் அல்ல, என் வாழ்நாளையே அவர்களுடன் செலவிடச் சித்தமாக இருக்கிறேன்’ என்று எழுதிய வ.உ.சி., சனிக்கிழமை காலை 6 மணிக்கு காந்தியைக் காண மறுத்தார்; மாறாக 6.30 மணிக்கு மேல்தான் சந்திக்க முடியும் என்றார்.
  • அதற்கு அவர் குறிப்பிட்ட காரணம் எவரையும் மனங்கலங்கச்செய்யும். சென்னையில் காந்தி, ‘இந்தியன் ரிவ்யு’ மாத இதழின் ஆசிரியரும், மிதவாதக் காங்கிரஸ் பிரமுகருமான ஜி.ஏ.நடேசனின் ஜார்ஜ் டவுண் சுங்குராம செட்டி தெரு இல்லத்தில் தங்கியிருந்தார்.
  • வ.உ.சி.யின் வீடு மயிலாப்பூர் பரிபூரண விநாயகர் கோயில் தெருவில் அமைந்திருந்தது. முதல் டிராம் வண்டி 5.30 மணிக்கு மேல்தான் மயிலையிலிருந்து புறப்படும் என்பதாலும், ‘இப்போதுள்ள என் வசதிக்கு இதைத் தவிர வேறு பயண மார்க்கம் இல்லை’ என்பதாலுமே காந்தியை 6 மணிக்குச் சந்திக்க முடியாது என்று வ.உ.சி. மறுத்திருக்கிறார்.
  • இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் மதிப்புள்ள இரண்டு நீராவிக் கப்பல்களை வாங்கிய தேசபக்தரின் வரிகள் இவை.
  • எப்படியோ காந்தி-வ.உ.சி. சந்திப்பு நிகழ்ந்தது. இந்தச் சந்திப்பு ‘சில நிமிடங்களுக்கு’ மேல் நீண்டதா, வ.உ.சி. டிராம் வண்டியில்தான் ஏறினாரா, குறித்த நேரத்திற்கு ஜி.ஏ.நடேசன் வீட்டுக்குப் போனாரா, இருவரும் என்ன பேசினர் என்ற விவரங்கள் தெரியவில்லை. ஆனால், இருவருக்கிடையேயான கடிதப் போக்குவரத்து இச்சந்திப்புடன் முடிந்துவிடவில்லை.
தொடரும் கடிதப் போக்குவரத்து
  • 21 ஏப்ரல் 1915-ல் காந்தி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த ஒரு விஷயம் தொடர்பாக மேலும் பல மாதங்களுக்குக் கடிதங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அந்தச் செய்தி வருமாறு: ‘சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் சார்பாக தென்னாப்பிரிக்காவில் திரட்டப்பட்ட பணத்தைத் தாங்கள் வரப்பெற்றீர்களா எனத் தங்களிடமிருந்து அறிய விரும்புகிறேன். உங்களுக்கு அனுப்பப்பட்டதாக நான் கருதிய சில பணக் கட்டளைகளைத் தேட முயன்றேன்.
  • ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. எனவே, என்னிடம் தரப்பட்ட பணம் தங்களிடம் வந்துசேர்ந்ததா எனத் தங்களிடமிருந்தே அறிந்துகொள்ள விரும்புகிறேன்.’ (1914-ல் காந்தி எழுதிய முதல் கடிதத்தோடு இது முரண்படுகிறது. இதற்கான காரணம் புலப்படவில்லை.)
  • தாமோ தமது மனைவியோ எந்தப் பணத்தையும் காந்தியிடமிருந்து வரப்பெறவில்லை என்று உடனே வ.உ.சி. 22 ஏப்ரலில் பதில் விடுத்தார். வ.உ.சி. தம் கடிதத்தில் தம் மனைவியைக் குறிப்பிட்டதற்கும், காந்தி கடிதத்தில் ‘சில ஆண்டுகளுக்கு முன்னர்’ என்று குறிப்பிட்டதற்கும் காரணம் உண்டு.
  • வ.உ.சி. சிறையிலிருந்தபோது அவருடைய வழக்கு தொடர்பான செலவுகளுக்காக நிதிவேண்டி வ.உ.சி.யின் மனைவி மீனாட்சி அம்மாள் அறிக்கை வெளியிட்டிருந்தார்; இதன் தொடர்பில் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் உதவினர் என்பதும் இதற்குப் பின்னணியாகும்.
  • வறுமையுற்ற நிலையிலிருந்தாலும் வ.உ.சி. மேலும் எழுதியதாவது, ‘தாங்கள் தவறாகக் கருதவில்லையாயின் நான் ஒன்று சொல்வேன். இது பற்றித் தாங்கள் சிரமப்பட வேண்டாம்... வேறு ஒரு நல்ல காரியத்திற்கே அந்தப் பணம் செலவாகியிருக்கும் என்பது உறுதி.’ இதை காந்தி ஏற்கவில்லை. ‘இந்த நிதியை வழங்கியவர்களின் பெயர்களை நான் அறிய மாட்டேன். அவர்கள் சார்பில் அந்தப் பணம் என் நண்பர் ஒருவர் மூலமாக என்னிடம் தரப்பட்டது.
  • அது தங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது என்றே இவ்வளவு காலமாகக் கருதியிருந்தேன். அந்தப் பணம் தங்களுக்குத் தேவையில்லாவிட்டாலும்கூட இது பற்றி விசாரித்து, பணம் தந்தவர்கள் பற்றிய செய்திகளைக் கண்டறிவேன்’ என்று பதிலெழுதினார் (20 மே 1915). இதற்கு வ.உ.சி. விடுத்த பதில் (22 மே 1915) கண்ணீரை வரவழைக்கக்கூடியது.
  • ‘தாங்கள் சென்ற மாதம் 21-ம் நாள் எழுதிய கடிதத்திலிருந்து எனக்குத் தருவதற்காகத் தங்களிடம் தரப்பட்ட பணம் தென்னாப்பிரிக்கச் சாத்வீகப் போராட்டத்துக்காகச் செலவிடப்பட்டுவிட்டது என்றும், எனவே அந்தப் பணத்தைத் தங்கள் கையிலிருந்து தர விரும்புவதாகவும், அதுவும் முழுமையாக இராது என்றும் நினைத்தேன்.
  • எனவே, அதுகுறித்து இனிமேல் தாங்கள் தொந்தரவுபட வேண்டியதில்லை என்று எழுதினேன். ஆனால், இம்மாதம் 20-ம் நாள் தாங்கள் எழுதிய கடிதத்திலிருந்து அந்தப் பணம் எதற்கும் செலவிடப்படவில்லை என்பதும், அது இன்னும் எனக்குத் தரப்படுவதற்காகத் தங்களிடமே இருக்கிறது என்பதும் தெளிவாகிறது...
தென் ஆப்பிரிக்க நண்பர்கள்
  • கடந்த இரண்டாண்டுக் காலமாகச் சில தென்னாப்பிரிக்க நண்பர்கள் தயவே என்னையும் என் குடும்பத்தையும் காத்துவருகிறது என்பதை நான் ஏற்கெனவே தங்களிடம் நேரில் தெரிவித்துள்ளேன்... இந்த நிலையில், எனக்காகத் தரப்பட்ட பணத்தை எனக்காகத் தரப்படத் தயாராய் இருக்கும் பணத்தை வேண்டாம் என்று சொல்ல எக்காரணமும் இல்லை.
  • இப்போது இருக்கும் நிலையில் அந்தப் பணம் வேண்டாம் என்று சொல்வேனேயானால் அது நான் எனக்கும் என் குடும்பத்திற்கும் இழைக்கும் தவறேயாகும். ஆதலால், தாங்கள் தங்களுக்கு வசதிப்பட்டபோது அன்போடு அப்பணத்தை... அனுப்பி உதவ வேண்டுகிறேன்.’
  • காந்தி பணம் தர வேண்டி இருந்தது என்பதும், வ.உ.சி. அதைப் பெற ஆவலாக இருந்தார் என்பதும் உறுதியாகிவிட்ட நிலையிலும் விவகாரம் முடிவுக்கு வந்துவிடவில்லை. மேலும், ஏழெட்டு மாதங்களுக்குக் கடிதப் போக்குவரத்து தொடர்ந்திருக்கிறது. வ.உ.சி. இறைஞ்சி எழுதிய நெடுங்கடிதங்களுக்கு காந்தி பெரும்பாலும் மணிச்சுருக்கமாக அஞ்சலட்டைகள் அனுப்பியிருக்கிறார்.
வ.உ.சி.யின் மன்றாடல்
  • ‘பணம் செலுத்தியவர்களின் பட்டியலைக் கேட்டு நட்டாலுக்கு எழுதுவேன். அவர்கள் அனுப்பிய பணமும் தெரியாது, அவர்கள் பெயரும் தெரியாது. ஆனால், அவற்றைப் பெற முடியும் என்று நம்புகிறேன்’ என காந்தி 28 மே 1915-ல் உறுதியளித்தார்.
  • ஆனால், பொருள் முட்டுப்பாடு வ.உ.சி.யைப் பொறுமைகாக்க விடவில்லை. ‘தங்கள் நண்பர் கொடுத்த பணம் இவ்வளவு என்று தோராயமாகவாவது தங்களுக்குத் தெரியாதா? தெரியுமென்றால் அத்தொகையினையோ அல்லது அதன் பெரும் பகுதியையோ தாங்கள் அனுப்பிவைத்தால் இப்போதைய எனது இக்கட்டான சூழ்நிலையில் மிக்க உதவியாக இருக்கும். கணக்குப் புத்தகம் கிடைத்த பின் மீதித் தொகையை அனுப்பலாம்’ என்று வ.உ.சி. மன்றாடினார் (31 மே 1915).
  • இவ்வாறு இறைஞ்சியதோடல்லாமல் பணம் தந்தோரின் பெயர்களையும் விடாமல் ஒவ்வொரு கடிதத்திலும் கேட்டுவந்தார். செய்ந்நன்றி மறவாத செந்நெறியாளரான வ.உ.சி., கொடையளித்தவர்களுக்குத் தம் நூல்களைத் தன் நன்றியறிதலின் வெளிப்பாடாக அனுப்பப் பெரிதும் விழைந்திருக்கிறார்.
  • வ.உ.சி.யின் மன்றாடலைப் பொருட்படுத்தாமல் காந்தியோ பொறுமைகாக்க வேண்டினார். ‘தாங்கள் கொஞ்சம் காத்திருந்தால் பணத்தையும் பிற விவரங்களையும் அனுப்புவேன்.
  • அந்த நண்பரின் பெயர் தெரிந்தால் கட்டாயம் தங்களுக்குத் தெரிவிப்பேன்’ என்று வ.உ.சி.யை அமைதிப் படுத்திய காந்தி, ‘விரும்பினால் தாங்கள் திரு போலக், அஞ்சல் பெட்டி 6522, ஜோஹனஸ்பர்கு’ என்ற முகவரிக்கு எழுதலாம் என்றும் கூறினார் (? ஜூன் 1915). (ஹெச்.எஸ்.எல்.போலக் காந்தியின் உற்ற தென்னாப்பிரிக்க நண்பர்.)
காந்தியின் தமிழ்க் கடிதம்
  • வ.உ.சி. மேலும் பல நினைவூட்டல் மடல்கள் எழுதியிருப்பார் போலும். ‘இன்னும் இல்லை’ என்று இரண்டே சொற்களில் ஒரு அஞ்சலட்டை 23 ஜூலை 1915-ல் பதிலாக வந்திருக்கிறது. இதை காந்தி அவசரத்தில் எழுதினாரா, பொறுமை இழந்து எழுதினாரா என்று அனுமானிக்க இயலவில்லை.
  • இந்த நிலையில் மேலும் ஒரு நினைவூட்டல் கடிதத்திற்கு காந்தி தமிழில் பதில் எழுதியிருக்கிறார். மிகவும் சிதைந்துள்ள இக்கடிதத்தின் வாசகங்கள் இவை: ‘...கார்டு வந்துசேர்ந்தது... [தென்னாப்]பிரிக்காவிலிருந்து இன்னும் [வ]ந்து சேரவில்லை. அதற்கு... எனக்குத் தெரியவில்லை... வருவதற்கு மூன்று... றது. வந்தே மாதரம். மோகந்தாஸ் காந்தி.’ (? ஆகஸ்டு 1915)
  • காந்தி தமிழில் எழுதியதைக் கண்டதும் வ.உ.சி.க்குத் தமது வறுமை, பொருள் முட்டுப்பாடு எல்லாம் மறந்தே போய் விட்டது. ‘தாங்கள் தமிழில் எழுதிய அஞ்சல் அட்டை உரிய தேதியில் கிடைத்தது. எந்தப் பிழையும் இல்லாமல் தாங்கள் எழுதியுள்ளதைக் காண மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
  • சாதாரண நடையில் எழுதப்பட்ட தமிழ் உரைநடை, செய்யுள் நூல்களைத் தாங்கள் வாசித்துப் புரிந்துகொள்ளக்கூடும் என்றால் நான் எழுதிய புத்தகங்கள் அனைத்தையும் தங்களுக்கு அனுப்பி மகிழ்வேன்’ (28 ஆகஸ்டு 1915) என்று ஆர்வம் பொங்க மிக உற்சாகமாகப் பதிலிட்டார்.
  • இக்கடிதத்திற்குப் பதில் வந்ததா எனத் தெரியவில்லை. இதற்குப் பிறகு இரண்டு மாதங்கள் கழித்தே அடுத்த கடிதம் கிடைக்கிறது. 10 டிசம்பர் 1915-ல் வ.உ.சி.யின் கைக்குக் கிடைத்த கடிதம் மீண்டும் பழைய பல்லவியையே பாடியது:
  • ‘சில நண்பர்கள் தங்களுக்குள்ளேயே இந்தப் பணத்தைத் திரட்டியுள்ளனர். எப்போதும்போலவே உடனுக்குடன் பணம் அனுப்பிவைக்கப்பட்டுவிட்டது என்று நான் கருதிய ஒரே காரணத்தினாலேயே இந்தப் பணம் தங்களிடம் செலுத்தப்படவில்லை.
  • இன்னும் நான் தகவலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்...’ என்று காந்தி எழுதினார். 1916 ஜனவரி தொடக்கம்வரையும்கூட இதே போன்ற பதிலே ‘நட்டாலிலிருந்து தகவல் எதிர்பார்த்திருக்கிறேன்’ காந்தியிடமிருந்து வ.உ.சி.க்குக் கிடைத்துவந்தது.
நட்டாலிலிருந்து தகவல் வந்துவிட்டது
  • ஒருவழியாக, கண்டேன் சீதை என்பதாக 20 ஜனவரி 1916-ல் காந்தி எழுதிய கடிதத்துடன் இந்த நாடகம் நிறைவுற்றது. ‘நட்டாலிலிருந்து தகவல் வந்துவிட்டது.’ வ.உ.சிக்குச் சேர வேண்டிய தொகை ரூ.347 அணா 12. நிதியைத் திரட்டியளித்தோரின் பெயர் கிடைத்த கடித நறுக்குகளில் காணப்படவில்லை.
  • வ.உ.சி. காந்தி கடிதப் போக்குவரத்து இதோடு நிறைவுபெறுகிறது. இதற்குப் பிறகு வேறு கடிதங்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில், தமது தென்னாப்பிரிக்க நண்பர் த.வேதியப் பிள்ளைக்கு 4 பிப்ரவரி 1916-ல் வ.உ.சி. எழுதிய கடிதம் கூடுதல் தகவலைத் தருகிறது. ‘ஸ்ரீமான் காந்தியவர்களிடமிருந்து ரூ 347120 வந்தது. ஓர் அச்சாபீஸ்காரருக்குப் புதிய டைப்புகள் வார்ப்பதற்காக ரூ 10000 கொடுத்தேன். பாக்கியைக் கொண்டு எனது கடன்களில் ரூ.50 தவிர மற்றைய எல்லாவற்றையும் நிவர்த்தித்துவிட்டேன். காகிதம் வாங்கும்போதுதான் இனிப் பணம் வேண்டும்.’
  • தொல்காப்பியம், திருக்குறள் ஆகிய பண்டைத் தமிழ் நூல்களுக்குத் தம் உரையை வெளியிடுவதற்காகவே தென்னாப்பிரிக்கத் தமிழர் நிதியைப் பயன்படுத்த உள்ளதாக காந்திக்கு வ.உ.சி. தெரிவித்திருந்தாலும் இவ்விரு நூல்களையும் அவர் உடனே வெளியிடவில்லை.
  • முதல் உலகப் போர் நடந்துவந்த காலமாதலால் காகிதப் பஞ்சம் நிலவிவந்த நிலையில் பென்னம்பெரிய நூல்களை வெளியிட வ.உ.சி. தயங்கினார்போலும். இவற்றுக்குப் பதிலாக ஏப்ரல் 1917-ல் திருக்குறள் மணக்குடவர் உரையையே அவர் வெளியிட்டார்.
  • நூலின் முன்னுரையில் ‘தென் ஆப்பிரிக்காவிலுள்ள இந்திய சகோதரர்களுக்கு’ நன்றி தெரிவித்திருந்த வ.உ.சி., அவர்களுடைய பெயர்களை முழுமையாக, நான்கு பக்க அளவில் நூலின் இறுதியில் ’எனது நூல்களுக்குத் தென்னாப்பிரிக்காவிலிருந்து பொருளுதவிய இந்திய சகோதரர்களின் பெயர்கள் முதலிய’ என்ற தலைப்பில் இணைத்திருந்தார்.
  • ஐந்து பவுன் முதல் இரண்டு ஷில்லிங் வரை பங்களித்த நூற்றுக்கு மேற்பட்டோர் பெயர்களை அப்பட்டியல் கொண்டிருந்தது.
காவியப் பொருத்தம்
  • இந்தக் கடிதப் போக்குவரத்து இரு வேறு ஆளுமைகளின் இயல்பைக் காட்டுகிறது. 1915-ல் மகாத்மா என்ற புகழை காந்தி இன்னும் அடையவில்லை என்றாலும் அவருடைய தென்னாப்பிரிக்க சத்தியாகிரகச் சாதனைகளால் இந்தியா முழுவதும் அறிமுகமாகியிருந்தார்.
  • வ.உ.சி.யின் அரசியல் தலைவரான திலகர் ஆறாண்டுச் சிறைவாசத்திற்குப் பிறகு வெளியேவந்து ஓராண்டே ஆகியிருந்த தருணம் அது. திலகரின் தலைமையை ஓரங்கட்டி இந்திய வெகுமக்களின் பெருந்தலைவராக காந்தி இன்னும் மாறத் தொடங்கவில்லை.
  • காந்தியின் அரசியல் தலைமையைப் பின்னாளில் ஏற்றுக்கொள்ள மறுத்த மிகச் சில தேசியத் தலைவர்களில் ஒருவரான வ.உ.சி இவ்வாறெல்லாம் சில ஆண்டுகளுக்குள் அரசியல் சூழல் மாறும் என்று கருதி இருக்க முடியாது.
  • ஆனால், தொடக்க நிலையிலேயே இருவரிடையேயான உறவில் சில உராய்வுகள் ஏற்பட்டதில் காவியப் பொருத்தம் இருக்கவே செய்கிறது. பண விவகாரங்களில் நேர்மையைக் கடைப்பிடித்த அதேவேளையில் வழிமுறைகளிலும் உறுதியான கறார்தன்மையை பின்பற்றியவர் காந்தி.
  • வழிமுறை தவறியதுதான் முன்பே உரிய நேரத்தில் வ.உ.சி.க்குப் பணம் விடுக்கப்படாததற்குக் காரணம் என்று கருதியே காந்தி இம்முறை மேலும் அதில் கண்டிப்பாக ஒழுகியிருக்கிறார்போலும்.
  • வேலை நெருக்கடிகளுக்கிடையிலும் வ.உ.சி.யின் கடிதங்களுக்குத் தவறாமல், சுருக்கமாகவேனும் விடை எழுதிவந்த காந்தி, கணக்குப் புத்தகம் வரும் வரை பணத்தை விடுத்துவைக்கத் தயாராக இல்லை.
  • பணத்தைக் கைமாற்றித் தருவதில் கால தாமதம் ஏற்பட்டதற்கு அவரே பொறுப்பு என்றாலும், கடன்பட்டார் நெஞ்சம்போல் அவர் கலங்கவில்லை. வழிமுறைகளைக் கைக்கொள்வதில் அவர் காட்டிய கண்டிப்பு அவருடைய இயல்புக்குப் பொருந்தியதே.
  • மாறாக, வ.உ.சி.யின் செயல்பாடுகளில் உணர்ச்சியின் மீதூரல் காணப்படுகிறது. பொது நலனுக்கும் தனிப்பட்ட வறுமைக்கும் இடையில் ஊசலாடிய துயர நிலையில் அவர் கடிதங்களை எழுதியிருக்கிறார்.
  • வறுமையில் செம்மை, செய்ந்நன்றி கொல்லாச் சால்பு ஆகியன அவரிடம் வெளிப்படுகின்றன. காந்தியின் தமிழ்க் கடித வரிகளைக் கண்டதும் வ.உ.சி.க்குத் தமது பொருளாதார நெருக்கடி மறந்துவிடுகிறது. அவருடைய கடிதங்களைப் படிப்பவர்கள் அவர் மீது பெருமதிப்பும் கழிவிரக்கமும் கொள்ளாமல் இருப்பது கடினம்.
  • இரு பேராளுமைகளின் இந்த உறவு ஒரு நாடகமாக எழுதுவதற்கு உரியது. வெறும் பணக் கொடுக்கல் வாங்கலாக இதைக் குறுக்கிப்பார்க்கும் புன்மதியாளர்களுக்குச் சான்றோர்களின் மாட்சியைப் புரியவைக்க முயல்வது குன்று முட்டிய குருவி கதையாகவே முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (03-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்