வக்ஃபு திருத்த மசோதா எதிர்க்கப்படுவதன் காரணம்
- வக்ஃபு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் மசோதாவுக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. சிறுபான்மையினரின் விவகாரங்களில் தலையிடும் வகையிலும், அவர்களுக்குச் சொந்தமான நிலங்களை அரசு கையகப்படுத்த வழிசெய்யும் வகையிலும் இந்த மசோதா அமைந்திருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
பின்னணி என்ன?
- இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள், செல்வந்தர்கள், மக்களின் பயன்பாட்டுக்காக இறையருள் பெருகத் தங்கள் பகுதியில் இருக்கும் மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்கள் ஆகியவற்றின் பெயரால் தானமாக வழங்கப்பட்டவையே வக்ஃபு சொத்துக்களாகும். அவை அசையும் சொத்துக்களாகவும், அசையாச் சொத்துக்களாகவும் இருக்கின்றன. இந்தச் சொத்துக்களைக் கண்காணிப்பதற்காகவும், அதில் தவறு நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும், நாடாளுமன்றத்தில் வக்ஃபு சட்டங்களை அரசு 1954இல் இயற்றியது. அதன் தொடர்ச்சியாக அனைத்து மாநிலங்களிலும் வக்ஃபு வாரியங்கள் 1958இல் ஏற்படுத்தப்பட்டன.
- இச்சட்டங்கள் பின்னர் 1995இல் விரிவாக்கம் செய்யப்பட்டு, முழுமைப்படுத்தப்பட்டு, அந்தச் சட்ட விதிகளின் அடிப்படையில் அவை நிர்வகிக்கப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வருகின்றன. இந்த நிலையில்தான், வக்ஃபு வாரியத்தின் நிர்வாகச் செயல்திறனை மேம்படுத்திடவும், வக்ஃபு வாரியம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் வக்ஃபு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கூறி ‘வக்ஃபு சட்டத் திருத்த மசோதா 2024’ என்ற பெயரிலான மசோதாவை மத்திய அரசு தற்போது கொண்டுவந்திருக்கிறது.
என்னென்ன அம்சங்கள்?
- ‘வக்ஃபு சட்டம் 1995’ என்பது ‘ஒருங்கிணைந்த வக்ஃபு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மேம்பாடு சட்டம் 2024’ என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இவற்றில் வக்ஃபு வாரியத்துக்கு நிலத்தைக் கொடுப்பவர், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும்; வாரியத்தில் இஸ்லாமியப் பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்குவது; இஸ்லாம் அல்லாதவர்களும் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வது என்பன போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
- வக்ஃபு கவுன்சிலிலும், மாநில அளவிலான வக்ஃபு வாரியத்திலும் இஸ்லாமியர் அல்லாத இரண்டு பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்கிற புதிய விதிமுறையும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியருக்கு முக்கிய அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. மத்திய வலைதளம், தரவுத் தளம் மூலமாக வக்ஃபு வாரியச் சொத்துப் பதிவு முறைப்படுத்தப்படவும், வக்ஃபு நிலங்களை டிஜிட்டல் முறையில் பதிவிடுவதற்கும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. வக்ஃபு நிலமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பாக - சம்பந்தப்பட்டவருக்குத் தகவல் அளிக்கும் விதத்தில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் போரா, அகாகானிஷ் ஆகிய பிரிவினருக்காகத் தனிச் சொத்து வாரியம் உருவாக்குவதற்கான திருத்தங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதுபோல் ஏறத்தாழ 40 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
- விமர்சனங்களின் பின்னணி:
- நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு மேற்கொண்ட சட்டத்திருத்தம் வக்ஃபு வாரியங்களுக்கு 1995இல் கூடுதல் அதிகாரங்களை வழங்கியது. அதன் பின்னர், 2013இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சில திருத்தங்களைச் செய்து வக்ஃபு வாரிய சொத்துக்களுக்குப் புவியியல் தகவல் முறைமையை (ஜிஐஎஸ்) ஒழுங்குபடுத்தியது. இந்த வக்ஃபு வாரியங்களுக்கு 7.80 லட்சத்துக்கு மேற்பட்ட அசையாச் சொத்துக்கள், 9.40 லட்சம் ஏக்கர் நிலம் என்று சற்றேறக்குறைய ரூ.1.2 லட்சம் கோடி மதிப்புடையதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. வாரியச் சொத்துக்களை மாவட்ட நிர்வாகத்திடம் பதிவுசெய்யவும், வக்ஃபு தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 90 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யவும் திருத்தம் வழிவகை செய்கிறது. இவற்றை உற்றுநோக்கிப் பார்க்கையில், சட்டப்பிரிவு 30ஐ மீறும் வகையில், புதிய மசோதா சிறுபான்மையினரைக் குறிவைத்து, நசுக்கத் தொடங்கியிருப்பது தெரியவருகிறது.
- இஸ்லாமியரிடம் இருந்து வக்ஃபு வாரியச் சொத்துக்களை அபகரிப்பதற்காகவும், வாரியத்தின் அதிகாரங்களைக் குறைப்பதற்காகவும் இந்தச் சட்டத்திருத்தத்தை பாஜக அரசு கொண்டுவந்திருப்பதாக இஸ்லாமிய அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டுகின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் மத்திய அரசு, வக்ஃபு வாரிய சுதந்திரத்தில் தலையிடவில்லை என்றும், பெண்கள் உள்ளிட்டோரின் உரிமைகளை உறுதிசெய்வதும்; மாஃபியா கும்பலின் பிடியில் இருந்து வக்ஃபு வாரியத்தின் சொத்துக்களை மீட்பதும்தான் இதன் நோக்கம் என்றும் வாதிடுகிறது.
அதிருப்தி அம்சங்கள்:
- பொதுவாகத் திருத்தங்கள் என்று வருகிறபோது அதிகபட்சமாக 10 திருத்தங்கள்கூடச் செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால், 40க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் வக்ஃபு வாரியங்களை நிர்வகிக்கும் சட்டமான வக்ஃபு சட்டத்தில் உள்ள பல ஷரத்துகளை ரத்து செய்திருப்பதுதான் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
- தற்போதுள்ள வக்ஃபு சட்டத்தின்படி, எந்தவொரு சொத்தையும் சரிபார்க்காமல் வக்ஃபு வாரியம் உரிமை கோர முடியும். இந்த அதிகாரம் புதிய மசோதாவில் நீக்கப்பட்டிருக்கிறது. வக்ஃபு வாரியம் எந்தவொரு சொத்தையும் சரி பார்க்காமல் உரிமை கோர முடியாது. ஆனால், அதற்கு முன்பு வக்ஃபு வாரியம் ஒரு நிலத்தின் வில்லங்க விவரங்களை, அந்த நிலத்தின் மூலப்பத்திரங்கள் இல்லாமலேயே அவற்றின் மீதான உரிமையைக் கோரலாம். முறையான பத்திரங்கள் கிடைக்காதபட்சத்தில் வக்ஃபு வாரியமே அதை எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், இனிமேல் அப்படிச் செய்ய முடியாது என்பது மத்திய அரசினுடைய வாதம். இதுபோன்ற திருத்தங்கள்தான் பெரும்பாலும் இடம்பெற்றிருக்கிற அடிப்படைக் கூறுகள் என்று மத்திய அரசு தனது வாதத்தை முன்வைக்கிறது.
- வக்ஃபு வாரியத்துக்கும், அரசுக்கும் அல்லது மக்களுக்கும் இடையே உள்ள சொத்து தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க மாவட்ட ஆட்சியருக்கு இந்த மசோதா அதிகாரம் அளித்திருக்கிறது. அதன் அடிப்படையில், அந்தச் சொத்தின் மீது ஏதேனும் சர்ச்சைகள் இருந்தால், அது அரசாங்கச் சொத்தா என்பதைத் தீர்மானித்துச் சமர்ப்பிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு, வக்ஃபு வாரியம் வைத்திருந்த அதிகாரம் தற்போது நீக்கப்பட்டிருக்கிறது.
- ஷியாக்கள், சன்னிகள், போராக்கள், அகாகானிகள், இதர பிற்படுத்தப்பட்ட இஸ்லாம் சமூக வகுப்பினர்களுக்குத் தனித்தனியாகப் பிரதிநிதித்துவம் வழங்குவதற்கு இந்தச் சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது. இந்த மசோதாவில் மிகவும் சர்ச்சைக்குரிய அம்சங்களில் ஒன்று, ‘மத்திய வக்ஃபு கவுன்சில், மாநில வக்ஃபு வாரியங்கள், வக்ஃபு தீர்ப்பாயங்களில் இஸ்லாம் மதத்தைச் சாராதவர்களும் சேர்க்கப்படலாம்’ என்பது. வக்ஃபு வாரியங்களை நிர்வகிக்கும் சட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசிக்காமல் திருத்தங்கள் கொண்டுவரப்படுவது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. புதிய மசோதா, அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்கிற விமர்சனமும் மிக முக்கியமானது.
வக்ஃபு வாரியங்கள் வலுவிழக்குமா?
- நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வக்ஃபு சட்டத்துக்கு எதிராக சுமார் 120 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதன் விளைவாகத்தான் இந்தத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், சமண, சீக்கிய மதத்தினர், பிற சிறுபான்மையினர் உள்ளிட்டோருக்கு இதுபோன்ற சட்டங்கள் பொருந்தாது என்றும் சொல்லப்படுகிறது. இதுதான் இம்மசோதா மீதான சந்தேகத்தை வலுவடைய வைக்கிறது.
- ‘மத அடிப்படையில் எந்தத் தீர்ப்பாயமும் செயல்பட முடியாது. ஒரு விஷயத்தில் இரண்டு வெவ்வேறு சட்டங்கள் உள்ள நாடாக இந்தியா இருக்க முடியாது. ஒரு தேசம், ஒரு சட்டம் என்பதுதான் சரி’ என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், முதன்மையான நிலங்களை அரசு கையகப்படுத்தும் முயற்சியாகவே இஸ்லாமியர்கள் இதைப் பார்க்கிறார்கள். வக்ஃபு வாரியங்களில் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு இரண்டு பதவிகள் என்று சொன்னால், இந்துக் கோயில்களுக்கான வாரியத்தில் இஸ்லாமியர்களுக்கு இதுபோன்ற இடஒதுக்கீடு கிடைக்குமா என்கிற கேள்வி முக்கியமானது. வக்ஃபு சட்டத்தில் இருந்த வரம்பு சட்டத்தின் விதிகள் மாற்றப்பட்டிருக்கின்றன. இந்த விதிகள் சட்டமாக்கப்படும்பட்சத்தில் - வக்ஃபு சொத்துகளில் 90 சதவீதம் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளதால் - வக்ஃபு சொத்துக்கள் பெருமளவில் குறைந்துவிடும். குறிப்பாக பஞ்சாப், ஹரியாணாவில் வக்ஃபு சொத்துக்களைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருக்கிறவர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் சொத்துக்களின் உரிமையாளர்களாக மாறிவிடுவார்கள். ஆகவே, வக்ஃபு சொத்துக்கள் பெருத்த கேள்விக்குறியாகிவிடும். இது அந்தந்த மாநிலங்களில் உள்ள வக்ஃபு வாரியங்களைப் பலவீனப்படுத்தும் முயற்சி எனக் கருதப்படுகிறது.
- 31 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழு இந்த மசோதாவைக் கவனத்துடன் ஆராய்ந்து, அடுத்து வரும் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் இறுதி நாளில் தன் அறிக்கையைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. இப்போதைக்கு இதுதான் ஆறுதலான விஷயம்.
நன்றி: இந்து தமிழ் திசை (16 – 08 – 2024)