TNPSC Thervupettagam

வக்ஃப் வாரியம்: புதைகுழிக்குள் தள்ளும் புதிய மசோதா

September 8 , 2024 129 days 131 0

வக்ஃப் வாரியம்: புதைகுழிக்குள் தள்ளும் புதிய மசோதா

  • வக்ஃப் வாரியம் முஸ்லிகளின் சொத்துகளை நிர்வாகம் செய்யும் அமைப்பு மட்டும் அன்று, இறைவனுக்குத் தானமாகத் தரப்படும் சொத்துகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, அறவழியில் ஏழை - எளிய முஸ்லிம்கள் பயன்பெறும் வகையிலான நற்காரியங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது அதன் அடிப்படைக் கொள்கை, பள்ளிவாசல் பராமரிப்பு, தர்கா பராமரிப்பு, முஸ்லிம் மக்களின் கல்வி மேம்பாடு என்பன போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு நிறுவப்பட்டதுதான் இந்த வாரியம். வழிபாட்டுத் தலங்களில் ஏற்படும் உள்முரண்களையும் பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டியதும்கூட.
  • முத்தவல்லி நிர்வாகிகளுக்கிடையே பிரச்சினை எற்பட்டால் அதைச் சரிப்படுத்த வேண்டியதும் வக்ஃப் வாரியத்தின் முதன்மைக் கடமைகள். வக்ஃபு வாரியத்தின் புதிய சட்டத் திருத்த மசோதா, முஸ்லிம்களின் மத விவகாரங்களை நிர்வாகம்செய்யும் இந்த அமைப்புக்குப் பெரும்பான்மை முஸ்லிம் அல்லாதவர்களை நிர்வாகிகளாக்க வகைசெய்கிறது. இதனால்தான் முஸ்லிகளும் மதச்சார்பற்றக் கட்சிகளும் புதிய மசோதாவுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள்.

மாயத் தோற்றம்!

  • இந்திய ராணுவம், ரயில்வேக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பெரிய நில உரிமையாளராக வக்ஃப் வாரியம் இருப்பதாக ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் ஆன்மிக மடங்களுக்குப் பல கோடி ஏக்கர் நிலம் உள்ளது. இந்து அறநிலையத் துறை மாநில அளவில் மட்டுமே உள்ளது. இந்திய அளவில் அதன் சொத்துகள் புள்ளி விவரங்கள் தரவுகள் இதுவரை சேகரிக்கப்படவில்லை பொதுவெளியில் வெளியிடப்படவும் இல்லை.
  • இந்தியாவிலுள்ள பல்வேறு மடங்களுக்குக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள். வணிக வளாகங்கள் என்பன போன்ற பெரும் வருமானத்தை ஈட்டக்கூடிய நிறுவனங்கள் இந்தியா முழுவதிலும் உள்ளன. இதைப் போல் கிறித்துவர்களுக்கும் வருமானம் ஈட்டும் அமைப்புகள் உள்ளன. ஆனால், முஸ்லிம் அமைப்புகளுக்கு மட்டுமே மிகப் பெரிய சொத்துகள் உள்ளதான ஒரு மாயையை முஸ்லிம்களே நம்புகிறார்கள் என்பது வேடிக்கையே. இந்த மாயத் தோற்றமானது முஸ்லிம்களின் மீதான வெறுப்பு அரசியலுக்குப் பெருமளவில் உதவுகிறது.
  • முஸ்லிம் நிறுவனங்களின் பராமரிப்பையும் கண்காணிப்பையும் வக்ஃப் வாரியம் மேற்கொண்டாலும், நிலம் வழங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களே சொத்துகளைப் பராமரித்துவந்தார்கள். அதன் வருமானத்தில் 7% மட்டும் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு அளிக்கப்பட்டுவந்தது. இப்படிச் சொத்துகளைப் பராமரிப்போரை முத்தவல்லிகள் (அறங்காவலர்கள்) என்கிறார்கள்.

வக்ஃப் வாரியத்தின் சொத்துகள்

  • கடந்த காலத்தில், இறைபக்தியோடும், நேர்மையோடும். அறத்தோடும் இந்த வாரியத்தை முத்தவல்லிகள் நிர்வாகம்செய்துவந்தனர். இளம் வாரிசுகள் சிலர் தங்களின் பாட்டனார்கள் இறைவனுக்குத் தானமாக வழங்கிய சொத்துகளைத் தங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்வதற்கு முற்பட்டார்கள். தமிழ்நாட்டில் நிலத்தின் மதிப்பு உச்சத்தைத் தொட்டது இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம்.
  • வக்ஃப் வாரியச் சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன: சட்ட விரோதமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. வக்ஃப் வாரியம் வழங்கும் தடையில்லாச் சான்றிதழ் (NOC) இந்த முறைகேட்டுக்கு ஆதரவாக உள்ளது என்ற குற்றச்சாட்டு முஸ்லிம்கள் மத்தியில் எழுந்தது. இதுபோன்ற முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும் என்றால் அரசு நிலத்துக்கு இருப்பதைப் போல வக்ஃப் வாரிய சொத்துகளுக்கும் பூஜ்ஜிய மதிப்பு என்ற நிலையை ஏற்படுத்த வக்ஃப் வாரியம் முயன்றது. ஆனால், அந்த முயற்சி பெருஞ்சவாலாக அமைந்ததுடன் மிகப் பெரிய விமர்சனத்தையும் எதிர்கொண்டது.
  • இதில் 1954இல் மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் சட்டம் வந்த பிறகு தமிழ்நாடு அரசால் வக்ஃப் சொத்துக்கள் அடையாளம் காட்டப்பட்டு, 1958ஆம் ஆண்டு மூல ஆவணங்கள் (ProForma) உருவாக்கப்படுகின்றன. இந்நிலையே இன்று வரை நீடிக்கிறது. நிலஅளவுத் துறை பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளது.
  • மேலும், 22.09.2021 என்னும் நாளிடப்பட்ட கடிதம் வழியே பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஏ.கார்த்திக் மூலமாக பத்திரப்பதிவுத் துறை ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. வக்ஃப் வாரியச் சட்டப்படி தமிழ்நாட்டில் 7,452 வக்ஃப் நிறுவனங்களின் கீழுள்ள 53,834 சொத்துகள் உள்ளதாகவும், இனிப் பதிவுசெய்வதாக இருந்தால் வக்ஃப் தலைமை நிர்வாகியிடம் (CEO) தடையில்லாச் சான்றிதழ் பெற்ற பிறகே பதிவுசெய்ய வேண்டும் என்ற அந்த உத்தரவு தெரிவித்தது.
  • மூல ஆவணத்தில் (ProForma) உள்ள சர்வே எண்கள் பல்வேறு நிலைகளில் மாற்றப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஒருவர் 100 சென்ட் நிலத்தில் 50 சென்ட் நிலத்தை மட்டும் வக்ஃப் வாரியத்திற்கு அளிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். 100 சென்ட்டுக்குமான சர்வே எண் 356 என்றால் அதில் உட்பிரிவு செய்யாமல் இருக்கும்பட்சத்தில் மற்ற 50 சென்ட் நிலத்துக்கான பத்திர மீள்பதிவு வக்ஃப் வாரியத்தால் தடுக்கப்பட்டும். திருச்சி மாவட்டம் திருச்செந்துறை கிராமத்தில் 389.3 ஏக்கர் நிலத்தின் பத்திரப்பதிவை வக்ஃப் வாரியம் நிறுத்தக்கோரியது.
  • இதைப் போல் பெரம்பலூர் மாவட்டத்தில், ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள நிலத்தின் பத்திரப்பதிவை வக்ஃப் வாரியம் நிறுத்தியுள்ளது. இதில் முஸ்லிம்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் பிரச்சினை ஏற்பட்ட உடன் வக்ஃப் வாரியம் திருச்செந்துறை விவகாரத்தை மட்டும் விலக்கிக்கொண்டது. இதுபோன்ற சொத்துகள் தமிழ்நாட்டில் ஏராளமாக உள்ளன. இவை வக்ஃப் வாரியத்தாலோ முத்தவல்லிகளாலோ பராமரிக்கப்படவில்லை. இவற்றிலிருந்து ஒரு ரூபாய்கூட வக்ஃப் வாரியத்துக்கு வருவாயும் இல்லை.

யார் பொறுப்பு?

  • தமிழ்நாடு முழுவதும் மூவேந்தர்களும் பாளையக்காரர்களும் பெரும் நிலச்சுவான்தார்களும் பள்ளிவால்களுக்கும் தர்காக்களுக்கும் இன்னும் பிற அறப்பணிகளுக்கும் கொடுத்த நிலம் ஏராளம்.
  • வாரியத்தின் அதிகப்படியான சொத்துகளை மத்திய மாநில அரசுகளும் அதிகாரமிக்கத் தனிமனிதர்களும் பன்னாட்டு நிறுவனங்களும் தமது தேவைக்குப் பயன்படுத்திக்கொள்கின்றன. பெரும்நிறுவனங்கள் பத்திரப்பதிவில் ஈடுபடுவதில்லை; ஆனால், சொத்தை அனுபவித்துக்கொள்கிறார்கள். ஆனால், சாமானியர்களின் நிலத்தைத் தேவைக்கு விற்பதற்கு இயலவில்லை. அவர்களது பத்திரப்பதிவு தடுக்கப்படுகிறது. இதற்குத் தமிழ்நாடு அரசும் வக்ஃப் வாரியமுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
  • வக்ஃப் வாரியத்தின் புதிய மசோதா தொடர்பாக மக்களவையில் பேசிய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு மூன்று முறை தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தைக் குறிப்பிட்டுப் பேசியதற்கு மேலே சொல்லப்பட்டவையே காரணங்கள். வக்ஃப் வாரியத்தில் பெண்களைச் சேர்ப்பது தொடர்பாகவும் பேசினார். ஆனால், பெண்கள் இருவர் எல்லா மாநில வாரியத்திலும் இருக்க வேண்டும் என்ற விதி ஏற்கெனவே இருக்கிறது.

எப்படி இருக்கிறது வாரியம்?

  • உலகின் பல நாடுகளின் வக்ஃப் வாரியங்கள், முறைப்படுத்தப்பட்ட நிர்வாகம் வாயிலாக அந்நாட்டு அரசுகளுக்குக் கடன் கொடுக்கும் அளவுக்கு முறையான வருவாயை ஈட்டுகின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும் வக்ஃப் வாரியம் தன் செயல்பாட்டுக்காக அரசிடமிருந்து மானியம் பெறுகிறது.
  • கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையில் இஸ்லாமிய சமூகம் உள்ளது. இதற்குப் பல்வேறு புள்ளி விவரங்கள் ஆதாரமாக உள்ளன. அதுமட்டுமல்ல பள்ளிகள், தொழிற்சாலைகள், குடிநீர், சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்டவை எங்கெல்லாம் குறைவாக இருக்கிறதோ, அங்கெல்லாம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என அடையாளம் காட்டுகின்றனர். இதுதான், முஸ்லிம்களின் யதார்த்த வாழ்க்கை நிலை.
  • வாரியத் தலைவர் தன்னுடைய கணக்கில் இருக்கும் சொத்துகளைப் பற்றி பரபரப்பான பேட்டிகளைத் தருகிறார். ஆனால், தமிழ்நாட்டில் 1968இல் தனிமனிதர்களால் தொடங்கப்பட்டு, பிறகு வக்ஃப் வாரியத்தில் இணைக்கப்பட்ட மதுரை வக்ஃப் வாரிய கல்லூரிக்குப் பிறகு கிட்டத்தட்ட 56 ஆண்டுகளாகத் தமிழ்நாடு வக்ஃப் வாரியம் முஸ்லிம் சமூக மக்களின் மேம்பாட்டுக்காக ஒரு தொடக்கப் பள்ளியோ, சமூக நலக்கூடம் நிறுவியதுண்டா? கல்வி உதவித் தொகை தந்திருக்கிறார்களா. ஏதேனும் சமூகம் சார்ந்த ஒரு நலத் திட்டத்தையாவது பட்டியலிட முடியுமா? வக்ஃப் வாரியத்தால் பயனடைந்தோர் யாரும் இருக்கிறார்களா? ஆனால், பாதிக்கப்பட்ட முஸ்லிம் பட்டியலே நீளமானது.
  • சிலர், வக்ஃப் வாரியம் மனித உடலின் ஆறாம் விரல்போல இருக்கிறது. வைத்துக்கொள்ளவும் முடியாது; வெட்டி எறியவும் முடியாது என்றே வாரியத்தைப் பார்க்கின்றனர்.

வேண்டும் வெளிப்படைத்தன்மை!

  • ஜமாத்துகளுக்குள் பிரச்சினை என்றால், பஞ்சாயத்து செய்வது, அதிகாரம் செலுத்துவது போன்றவையா வக்ஃப் வாரியத்தின் பணிகள்? வக்ஃப் வாரியம் முஸ்லிம் சமூகத்தை உன்னத நிலைக்கு எடுத்துச்செல்லும் உயரிய நோக்கத்தோடு நிறுவப்பட்டது என்பதை முஸ்லிம் தலைவர்கள் உணர வேண்டும்.
  • வக்ஃப் வாரியங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும். இந்திய வக்ஃப் வாரிய சொத்துக்கள் தொடர்பான கணினிமயமாக்கப்பட்ட தெளிவான தரவுகள் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும். சொத்துகளின் நிர்வாகத்தையும் ஒழுங்குமுறையையும் சீர்படுத்த வேண்டும்.
  • வக்ஃப் வாரியத்தை நவீனமயமாக்குவதற்கும், சீர்திருத்துவதற்கும் முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை உணர்ந்துகொண்ட இஸ்லாமிய நிர்வாகிகள் இதில் இருப்பதே நல்லது.
  • அப்படி, கவிக்கோ அப்துல் ரஹ்மான் வக்ஃப் வாரியத் தலைவராக இருந்தபோது, மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான முன்முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், கடைசிவரை அது நடைபெறாமல் போய்விட்டது. இந்தச் சூழலில் இஸ்லாமியர் அல்லாதவர்களை நிர்வாகிகளாக்கினால் வக்ஃப் வாரியம் புதைகுழிக்குள் தள்ளப்பட்டுவிடும் என்பதே இஸ்லாமிர்களின் ஒட்டுமொத்தக் கவலை.

நன்றி: அருஞ்சொல் (08 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்