- இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது என்ற வாதம் உருவாகியுள்ளது. இது சரியான கருத்து அல்ல எனவும், விரைவில் நம் நாட்டின் பொருளாதாரம் மிக அதிக அளவில் முன்னேறிவிடும் எனக் கூறி அதற்கான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி வருகிறார்.
பொருளாதார வளர்ச்சி
- அமர்த்தியா சென் எனும் மூத்த பொருளாதார வல்லுநர் 2011-ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி குறித்து விவாதித்தார். நமது நாடு சீனாவை விடவும் அதிக முன்னேற்றம் கண்டுள்ளது எனப் பல அரசியல் தலைவர்களும், அரசின் உயரதிகாரிகளும் பேசி வந்தனர். அந்த முன்னேற்றத்தின் குறியீடாக ஜி.என்.பி. எனப்படும் தேசிய கூட்டு உற்பத்தி கணக்கீட்டை அனைவரும் சுட்டிக்காட்டினர்.
இந்தக் குறியீடை மட்டும் நோக்காமல், சீனாவின் மற்ற முன்னேற்றங்களையும் நாம் நோக்க வேண்டும் என்பது அமர்த்தியா சென்னின் அறிவுரை. கல்வி, சுகாதாரம், மனிதர்களின் வாழ்வுக்கால வயது ஆகிய அம்சங்களையும் பார்த்துத்தான் நமது பொருளாதார முன்னேற்றத்தைக் கணிக்க முடியும் என அவர் விளக்கினார்.
- மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், ஏழை மக்களின் வறுமையை ஒழிக்கவும் ஜி.என்.பி. எனப்படும் பொருளாதாரக் குறியீட்டின் முன்னேற்றம் மிகவும் அவசியம். ஆனால், பொருளாதார முன்னேற்றம் வேறு பல முன்னேற்றங்களை உருவாக்குவது ஒரு நாட்டில் ஒழுங்கான முறையில் நடந்தேறும் சமூக, நிர்வாகக் கட்டமைப்புகள் சார்ந்தது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.
- இந்தியாவை சீனாவின் முன்னேற்றத்துடன் ஒப்பிட, பொருளாதார முன்னேற்றத்துடன் வேறுசில அம்சங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
உலக வங்கியின் மனித வளர்ச்சி அறிக்கையில், சீனர்களின் சராசரி வாழ்வு வயது 73.5 ஆண்டுகள்; இந்தியர்களின் சராசரி வாழ்வு வயது 64.4 ஆண்டுகள் என இருந்த நிலையில், இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய வேறுபாடு இருக்கவில்லை. அதே ஆண்டில் குழந்தை இறப்பு, இந்தியாவில் 1000-த்தில் 50-ஆகவும், சீனாவில் 17-ஆகவும் இருந்தது கவனிக்கத்தக்கது. 5 வயதுக்குக் குறைவான குழந்தைகளின் இறப்பு விகிதம் இந்தியாவில் 66, சீனாவில் 19 என்பதையும் நாம் உற்றுநோக்க வேண்டும்.
இந்திய இளைஞர்களில் கல்வி கற்று முன்னேறியவர்கள் 65 சதவீதம் என்பதை, சீனாவில் கல்வி கற்று முன்னேறிய இளைஞர்கள் 94 சதவீதம் என்பதுடன் ஒப்பிட வேண்டும். பள்ளிக் கல்வியில் சேர்ந்து பயிலும் குழந்தைகளின் வயது 4.4 வயது என இந்தியாவிலும், 7.5 வயது என சீனாவில் இருப்பதையும் ஒப்பிட வேண்டும்.
சமத்துவம்
- இந்தியாவில் ஆண்களுக்குச் சமமாக பெண்கள் கல்வி கற்க வேண்டும் எனத் தலைவர்கள் பலரும் சமூகநல விரும்பிகளும் கோரிக்கைகளை வைத்தும், 15 வயது முதல் 24 வயது வரையிலான இந்தியப் பெண்களின் கல்வி 80 சதவீதத்திலேயே உள்ளது. ஆனால், சீனாவில் இந்த வயது வரம்பு பெண்களில் 99 சதவீதத்தினர் கல்வி கற்றவர்களாகியுள்ளனர்.
இந்தியக் குழந்தைகளில் 50 சதவீதம் பேர் தரம் குறைந்த உணவுகளையே சாப்பிடுகின்றனர். ஆனால், சீனாவில் 15 சதவீத குழந்தைகளே தரம் குறைந்த உணவுகளைச் சாப்பிடுகின்றனர். இந்தியாவில், 66 சதவீத குழந்தைகளே நோய் தடுக்கும் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர்; சீனாவில் 97 சதவீத குழந்தைகள் டி.பி.டி. எனப்படும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்கின்றனர்.
- இது போன்ற கணக்கீடுகளில் முழுக்கவனம் செலுத்துவது நம் நாட்டுக்கு மிகவும் அவசியமாகிறது. இந்த விவரங்களை நாம் எல்லோரும் புரிந்துகொண்டால் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை தொடர்புடைய பெற்றோர் முதல் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் வரை புரிந்து திருந்தி நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
- சீனாவில் மேலே கூறப்பட்ட எல்லா முன்னேற்றங்களுக்கும் பொருளாதார முன்னேற்றம்தான் காரணம். ஆனால், நம் நாட்டிலும் வேறு சில நாடுகளிலும் பொருளாதார முன்னேற்றத்துக்கு இணையாக மற்ற முன்னேற்றங்கள் இல்லை.
அண்டை நாடு
- நமது பக்கத்து நாடாகிய வங்கதேசத்தை விடவும் அதிக அளவில் பொருளாதார முன்னேற்றம் அடைந்த நாம், தேசிய வருமானத்தை அந்த நாட்டையும்விட அதிக அளவு பெற்றுள்ளோம். 2004-ஆம் ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வருமான "பர் கேபிட்டா' எனும் தனி மனித சராசரி வருமானம் ரூ.3,250. அதே ஆண்டில், வங்கதேசத்தின் சராசரி தனி மனித வருமானம் ரூ.1,550.
- இன்றைய நிலையில் வங்கதேசத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இந்தத் தனி மனித வருமானம் இரண்டு மடங்காகியுள்ளது. ஆனால், இந்த வருமானம் மக்களுக்கான வளர்ச்சி பற்றிய வசதி அம்சங்களில் ஊடுருவவில்லை. வங்கதேசத்தில் தனி மனிதனின் வாழ்க்கை சராசரியாக 66.9 ஆண்டுகளாக உள்ளது. இந்தியாவில் அது 64.4 ஆண்டுகளே!
வங்கதேசத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் சராசரி வயது 4.8 எனவும், இந்தியாவில் 4.4 வயது எனவும் உள்ளது.
- வங்கதேசத்தில் பெண்கள் கல்வி கற்பது இந்தியாவை விடவும் அதிகம். எனவேதான் அந்த நாட்டின் இன்றைய முன்னேற்றத்துக்கு முக்கியமான காரணமாக பெண்களே உள்ளனர்.
சுகாதாரம்தான் மற்ற எல்லா அம்சங்களைவிடவும் நாட்டின் முன்னேற்றத்துக்கு அவசியம். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணம் இந்தியாவில் 66 சதவீதம், வங்கதேசத்தில் 52 சதவீதம்! கர்ப்பத்தில் தாயின் வயிற்றிலோ, பிறக்கும்போதோ இறக்கும் குழந்தைகளின் விகிதம் இந்தியாவில் 50 சதவீதம், வங்கதேசத்தில் 41 சதவீதம்.
இந்தியக் குழந்தைகளில் 66 சதவீதத்தினருக்கு டி.பி.டி. எனப்படும் தடுப்பூசி போடப்படும் நிலையில், வங்கதேசத்தில் 94 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
- இந்த அம்சங்களில் இந்தியாவைவிட வங்கதேசம் முன்னேற்றத்தில் இருக்கிறது. நமது நாட்டைவிட பாதியளவு குறைந்த தனி மனித சராசரி வருமானம் உள்ள நாடு வங்கதேசம் என்பதை, இந்தக் கணக்கீடுகளை அலசும்போது நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது போன்ற முன்னேற்றமான நடைமுறைகள் அந்த நாட்டில் நடைபெறுவதற்கு அதன் பொதுத் திட்டங்களும் அவற்றை நடைமுறைப்படுத்தும் தரமும், தொண்டு நிறுவனங்களும்தான் காரணம்.
- பொருளாதார முன்னேற்றத்தின் சிறப்பம்சமே, அதன் முன்னேற்றம் அரசின் வருமானத்தை அதிகப்படுத்தி, அரசின் செலவினத்தை நாட்டின் தேவைக்கேற்ற வகையில் செலவிட வழிசெய்யும் என்பதே. 7 சதவீத பொருளாதார முன்னேற்றம் நாட்டின் வருமானத்தை 9 சதவீதமாக உயர்த்தும். அதாவது, பொருளாதார முன்னேற்றம் தொழில் வளர்ச்சியையும், வர்த்தகத்தையும் பெருக்கி அதனால் அரசுக்கு வரும் வரி வருவாயையும் பெருக்கும்.
அரசின் செலவு முக்கியமான துறைகளில் அதிகம் செய்யப்படுகிறதா என்ற கேள்வியும் இந்த விவாதத்தில் உருப்பெருகிறது.
பொதுத் துறை மருத்துவ நிலையங்கள்
- நம் நாட்டில் பொதுத் துறை மருத்துவ நிலையங்கள் பரவலாகவும் அதிக அளவிலும் உருவாகி, நமது அண்டை நாடுகளான சீனா, வங்கதேசத்தைப்போல் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிராமப்புற மக்களில் பெரும்பாலோர் தனியாரின் மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெறுகிறார்கள். சிகிச்சை பெற வரும் மக்களுக்கு மருந்து வழங்கி பணம் பெற்றுக் கொண்டு அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிடும் மருத்துவர்களே கிராமப்புறங்களில் அதிகம்.
இவர்கள் சரியான பயிற்சி பெற்ற மருத்துவர்களே அல்லர். இதுபோன்ற அமைப்புகள் வட மாநிலங்களில் அதிகம். மருத்துவம் படிக்காமல், போலி மருத்துவர்களாக மக்களை குணப்படுத்த முயற்சிக்கும் மருத்துவர்களும் நம் நாட்டில் அதிகம்.
பொருளாதார முன்னேற்றம்
- ஆக, பொருளாதார முன்னேற்றம் மட்டும் நாட்டுக்கு நன்மை செய்துவிட முடியாது என்பதை உலகுக்கே நிரூபிக்கும் நாடாக இந்தியா விளங்குகிறது. இதற்கான பல காரணங்களில் தலையானது நிர்வாகச் சீர்கேடுகளே!
- அரசியலில் ஊழல் தலைவிரித்தாடுவதும், அரசியல் தலைவர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் சொன்னதை சட்ட விதிகளுக்குப் புறம்பாக நிறைவேற்றித் தரும் அரசு அதிகாரிகளும்தான் நிர்வாகச் சீர்கேடுகளுக்குக் காரணம். நல்ல பணிகளில் தரமான அதிகாரிகள் அமர்த்தப்படுவது கிடையாது. ஒருவர் அமைச்சராக ஐந்தாண்டுகள் பணியிலிருந்தால் பல்லாயிரம் கோடிகள் சம்பாதித்து, வெளிநாடுகளில் முதலீடு செய்து தன் வாழ்நாள் முழுவதும் பெரும் பணக்காரராக வலம் வரலாம் என்பதை நிரூபிப்பது நமது நாடு.
- உயரதிகாரிகளாக இருப்பவர்கள், அதிகாரத்திலிருக்கும் வேளையில் சம்பாதித்த பணத்தினால் சுமார் 5 வீடுகளை 5 நகரங்களில் பினாமிகள் பெயரில் வாங்கி ஓய்வுபெற்றபின் பணக்காரர்களாக வாழ்வதை நாம் காண்கிறோம். வட மாநிலம் ஒன்றில் இரண்டு முறை தலைமைச் செயலராக இருந்த ஒருவர் 74 பங்களாக்களை வாங்கிக் குவித்தது இதுவரை நடந்ததில் மிகப் பெரிய ஊழல். திறமையை விடவும் அன்றைய அரசியல்வாதிகளுக்கு உடன்பட்டவராக, ஊழலில் ஒத்துழைப்பவராக இவர் இருந்தார் என்பதே தேவையான அம்சமாக இருந்தது.
- இது சீனாவிலோ, வங்கதேசத்திலோ நடக்கவில்லை. அங்குள்ள மக்களுக்கு இது சாத்தியமா என்பதும் புரியாது. இதுதான் நமது நிலைமை.
நன்றி: தினமணி (13-12-2019)