- ஒரு வாரத்துக்கும் மேலாகக் குழப்பத்திலும், கலவரத்திலும் ஆழ்ந்திருந்த வங்கதேசம், கடந்த நான்கு நாள்களாக இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. தலைநகா் டாக்காவில் ஊரடங்கு உத்தரவு சில மணி நேரங்கள் தளா்த்தப்பட்டிருந்தாலும், அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இணையத் தொடா்பு வழங்கப்படவில்லை. பள்ளிகளும், கல்லூரிகளும் காலவரையின்றி மூடப்பட்டிருக்கின்றன. முற்றிலுமாக அமைதி எப்போது திரும்பும் என்று கூற முடியாத நிலை தொடா்கிறது.
- ஜூலை 16-ஆம் தேதி தொடங்கிய கலவரத்திலும், வன்முறையிலும் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்திருப்பதாக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. உண்மையான எண்ணிக்கை பலமடங்கு அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இடைக்காலமாக போராட்டக்காரா்கள் கலைந்திருந்தாலும், தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் மீண்டும் தெருவில் இறங்குவோம் என்று எச்சரித்திருக்கிறாா்கள்.
- வங்கதேசத்தில் நடைபெறும் போராட்டத்துக்கு இட ஒதுக்கீடுதான் அடிப்படை பிரச்னை. பெண்கள், பின்தங்கிய மாவட்டங்கள், சிறுபான்மையினா், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பங்களுக்கும் அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதுதான் பிரச்னைக்கு காரணம்.
- 1971-இல் வங்கதேச விடுதலைப் போரில் ஈடுபட்ட போராளிகளின் வாரிசுகளுக்கு இரண்டு தலைமுறை கடந்தும் அரசு வேலைவாய்ப்புகளில் 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு எதிராக 2018-இல் பெரிய அளவில் மாணவா் போராட்டம் வெடித்தது. அதைத் தொடா்ந்து ஷேக் ஹசீனா அரசு அந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது.
- கடந்த ஜூன் மாதம் வங்கதேசத்தின் உயா்நீதிமன்றம் மீண்டும் 30% இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென்று தீா்ப்பு வழங்கியது. அந்தத் தீா்ப்பை எதிா்த்துத்தான் மாணவா்கள் போராட்டத்தில் இறங்கினாா்கள். அமைதியாகத் தொடங்கிய போராட்டம் வன்முறைப் போராட்டமாக மாறியதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
- ‘1971 விடுதலைப் போரில் பங்குபெற்றவா்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்த துரோகிகளின் வாரிசுகளுக்கா ஒதுக்கீடு வழங்க முடியும்?’ என்கிற பிரதமரின் கருத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களை ஆத்திரப்படுத்தியது. அடங்கியிருந்த எதிா்க்கட்சிகளும், அரசுக்கு எதிரான இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளும் போராடும் மாணவா்களுக்கு மறைமுக ஆதரவை அளித்தன. பிரதமரின் அறிவிப்பை சமிக்ஞையாக எடுத்துக்கொண்டு, ஆளும் அவாமி லீக் கட்சியினா் போராடும் மாணவா்கள் மீது தாக்கியபோது தெருக்கள் கலவர பூமியாகின.
- எதிா்க்கட்சிகளின் தூண்டுதலில் போராட்டக்காரா்கள் வன்முறையில் இறங்குகிறாா்கள் என்கிற பிரதமா் ஷேக் ஹசீனா கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. அதே நேரத்தில் போராட்டக்காரா்களை அடக்குவதில் துப்பாக்கிச்சூடு, ஊரடங்கு உள்ளிட்ட அரசின் கடுமையான நடவடிக்கைகள் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக மேலும் தீவிரப்படுத்தின.
- ஆசியாவில் அதிவேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக வங்கதேசம் உயா்ந்திருப்பதற்கு பிரதமா் ஷேக் ஹசீனாவின் தலைமை மிக முக்கியமான காரணம். அதே நேரத்தில் பொருளாதார வளா்ச்சி வேலைவாய்ப்பை அதிகரிக்கவில்லை. 15 முதல் 30 வயதிலான இளைய தலைமுறையினா் 28% இருக்கும் வங்கதேசத்தில் போதுமான வேலைவாய்ப்பு உருவாகாமல் இருப்பது நீறுபூத்த நெருப்பாக கனன்றுகொண்டிருந்தது. அதை உயா்நீதிமன்ற தீா்ப்பு கொழுந்துவிட்டு எரியத் தூண்டியிருக்கிறது.
- ஆண்டுதோறும் ஜவுளி ஏற்றுமதியில் சுமாா் 4,000 கோடி டாலரை வங்கதேசம் ஈட்டுகிறது. வங்கதேசத்தில் படித்த இளைஞா்கள் குறிப்பாக, பட்டதாரிகள் ஜவுளி தொடா்பான தொழிற்சாலைகளில் பணியாற்றத் தயாராக இல்லை. கொவைட் 19 கொள்ளை நோய்த் தொற்று ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து பல நிறுவனங்கள் மீண்டு எழாத நிலைமை. திறன்சாா் கல்வியில்லாத இளைஞா்கள் அரசுப் பணிகளை மட்டுமே எதிா்பாா்க்கும் சூழலில் இட ஒதுக்கீடு பிரச்னையாக மாறியிருப்பதில் வியப்பில்லை.
- பிரதமா் ஷேக் ஹசீனாவைப் பொறுத்தவரை தொடா்ந்து நான்கு முறை பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பவா் என்பது மட்டுமல்லாமல், உலகில் மிக அதிக காலம் அரசின் தலைமைப் பொறுப்பிலுள்ள பெண்மணி என்கிற பெருமைக்கும் உரியவா். வங்கதேசம் மதச்சாா்பாற்ற நாடாகத் தொடா்வதை உறுதி செய்திருக்கிறாா் பிரதமா் ஷேக் ஹசீனா. வறுமையின் பிடியிலிருந்து லட்சக்கணக்கானவா்களை விடுவித்திருப்பது மட்டுமல்லாமல், மிக சாதுா்யமான தனது வெளியுறவுக் கொள்கையால் இந்தியாவையும் சீனாவையும் நட்புறவுடன் வைத்திருக்கிறாா்.
- 76 வயது பிரதமா் ஷேக் ஹசீனாவின் மிகப் பெரிய வெற்றி ராணுவத்தை கட்டுக்குள் வைத்திருப்பது. அவரது தோ்தல் வெற்றிகள் குறித்து ஐயப்பாடுகள் உண்டு. ஜனநாயகப் போா்வையில் சா்வாதிகாரம் நடத்துகிறாா் என்கிற குற்றச்சாட்டும் இல்லாமல் இல்லை. ராணுவத்தின் உதவியுடன் போராட்டத்தை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவர முடிந்திருக்கிறது என்பதும் உண்மை.
- வங்கதேச உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, விடுதலைப் போராட்ட தியாகிகளின் வம்சாவளிகளுக்கான ஒதுக்கீட்டை 30%-லிருந்து 5%-ஆக குறைத்திருக்கிறது. இட ஒதுக்கீடு ஓரங்கட்டப்பட்டுவிட்டது. இப்போது பிரதமா் ஹசீனாவின் மன்னிப்பு, ஒரு சில அமைச்சா்களின் பதவி விலகல் உள்ளிட்ட 9 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. எந்தவொரு பிரச்னைக்கும் நிரந்தரத் தீா்வாக அடக்குமுறை இருந்ததில்லை!
நன்றி: தினமணி (30 – 07 – 2024)