TNPSC Thervupettagam

வங்கதேசம் 50 - தீரமிகு இந்தியா... வீரமிகு இந்திரா

December 16 , 2021 962 days 548 0
  • 1971 இந்தியா-பாகிஸ்தான் போரின்போது வங்கத்தி லிருந்து அகதிகளாக வந்தவர்கள் ஒரு கோடிப் பேருக்கும் அதிகமாக இருந்ததால், இந்தியா இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
  • கிழக்கு பாகிஸ்தானில் ஆயுதம் ஏந்திப் போராடிய முக்தி வாகினி படையினர், கிழக்கு பாகிஸ்தானை ‘சுதந்திரமான வங்கதேச’மாகப் பிரகடனம் செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக இந்தியா தன்னுடைய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்துக் குரல்கொடுத்தன.
  • விடுதலைப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான கருத்தைத் திரட்டுவதற்காக அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, உலகச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். தொலைநோக்குப் பார்வையுடன் சோவியத் ஒன்றியத்துக்குச் சென்று அமைதி, நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
  • இது, இந்திரா காந்தியின் மிகப் பெரிய சாதனை. அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் தலையீடுகளைத் தடுக்கும் மிகப் பெரிய பாதுகாப்பை இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியா பெற்றது.
  • பாகிஸ்தானின் ராணுவத் தளவாடத் தேவையின் பெரும் பகுதியை அமெரிக்காவும் கணிசமான பகுதியைச் சீனாவும் வழங்கிப் பூர்த்திசெய்தன என்பது குறிப்பிடத்தக்கது.
  • வங்கதேசப் பிரச்சினையில் உலகத்தின் ஆதரவைத் திரட்டுவதற்காக இந்திரா காந்தி, மத்திய அமைச்சர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பினார்.
  • குறிப்பாக, சர்தார் ஸ்வரண் சிங், கே.சி.பந்த், ஒய்.பி.சவான், ஜெகஜீவன்ராம் ஆகியோர் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினர். அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சரான கிஸிங்கர் இந்தியாவுக்குப் பறந்துவந்தார்.
  • “முஜீபர் ரஹ்மானை விடுதலை செய்வதும், கிழக்கு பாகிஸ்தான் பிரச்சினைக்கு உடனடியாக அரசியல் தீர்வு காண்பதுமே நிலைமையைக் கட்டுப்படுத்தும்” என்று கிஸிங்கரிடம் இந்திரா காந்தி எடுத்துச்சொன்னார்.
  • கிழக்கு வங்க மக்கள் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே முடிவுசெய்யும் நிலை உருவாகும் என்றும் இந்திரா காந்தி வாதிட்டார்.
  • அதே சமயம், எந்த நேரத்திலும் கிழக்கு பாகிஸ்தானுக்குள் நுழைவதற்கு இந்தியப் படைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் இந்திரா காந்தி ரகசிய உத்தரவு பிறப்பித்திருந்தார்.
  • 1971 டிசம்பரில் பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் திடீரென்று இந்திய விமானத் தளங்கள்மீது தாக்குதல் நடத்தின. அந்தச் சமயம், இந்திரா காந்தி கல்கத்தாவில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தார்.
  • செய்தி கிடைத்தவுடன் பேச்சை முடித்துக்கொண்டு டெல்லிக்கு இந்திய ராணுவ விமானத்தில் பயணமானார். அமைச்சரவைக் கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டு, பாகிஸ்தான் மீது போர் தொடுக்க முடிவுசெய்யப்பட்டது.
  • இந்திய ராணுவம் கிழக்கு பாகிஸ்தானுக்குள் புகுந்தது. இந்தியாவின் கவனத்தை மேற்குப் பக்கம் திருப்ப, பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையைத் தாக்கியது. அந்தத் தாக்குதல் இந்தியப் படைகளால் முறியடிக்கப்பட்டது.
  • சீன - அமெரிக்க ஆக்கிரமிப்பிலிருந்து இந்தியாவுக்குப் பாதுகாப்பளிக்கும் வாக்குறுதியைச் சோவியத் ஒன்றியம் பகிரங்கமாக அறிவித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவ நடவடிக்கைக்கு மேஜர் ஜெனரல் மானெக்‌ஷா தலைமை தாங்கினார்.
  • இந்தப் போரில் பாகிஸ்தான் படைகள் சுற்றிவளைக்கப்பட்டன. சரணாகதி அடைவதற்கு அவர்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது.
  • 1971, டிசம்பர் மாதம் 16-ம் நாள் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரணாகதி அடைந்தார்கள். பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் போர் வீரர்களும் பல்லாயிரக்கணக்கில் போர்க் கைதிகளாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.
  • இந்திரா காந்தியின் ராஜதந்திரத்தாலும் ராணுவ நடவடிக்கையாலும் வங்கதேசம் என்கிற புதிய நாடு உதயமாயிற்று. ஜனாதிபதி யஹ்யா கான் ராஜினாமா செய்தார்.
  • எஞ்சியிருந்த மேற்கு பாகிஸ்தானின் நிர்வாகப் பொறுப்பை பூட்டோ ஏற்றுக்கொண்டார். இந்தியாவின் உதவியுடன் கிழக்கு பாகிஸ்தான், ‘வங்கதேசம்’ என்கிற சுதந்திர தேசமாக உருப்பெற்றது.
  • ‘மதஉணர்ச்சி மட்டும் ஒரு தேசத்தை உருவாக்கப் போதுமானது அல்ல’ என்கிற உண்மை மீண்டும் ஒருமுறை வரலாற்றில் நிரூபிக்கப்பட்டது.
  • அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசுகளின் அச்சுறுத்தலுக்கு இந்தியா பணியாது என்பதையும் உலகுக்கு நிரூபித்துக் காட்டினார் இந்திரா காந்தி.

நன்றி: இந்து தமிழ் திசை (16 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்