TNPSC Thervupettagam

வங்கதேச உறவு வலுப்பெற வேண்டும்

December 16 , 2021 962 days 516 0
  • ஆயிரம் பேதங்கள் இருந்தாலும் இந்தியன் என்ற உணா்வுதான் ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் ஆழப்பதிந்துள்ளது. எங்களை எவராலும் பிரிக்க முடியாது என்று அன்றைக்கு அண்ணல் காந்தி நம்பினாா்.
  • அதற்காகவே அவா் இறுதி மூச்சுவரை போராடினாா். ஆனால் அன்று ஜம்மு - காஷ்மீரில் மக்கள் செல்வாக்கு உள்ளவராகக் கருதப்பட்ட ஷேக் அப்துல்லாவை நம்பி ஜம்மு-காஷ்மீா் பகுதிக்கு தனிநாடு என்கிற அளவிலான சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. அதுவும் இன்று ரத்து செய்யப்பட்டு விட்டது.
  • ஆனால் மதத்தின் அடிப்படையில் தேசத்தைப் பிரித்து இஸ்லாமியா்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தானாக உருவாக்க வேண்டும் என்ற முகமது அலி ஜின்னாவின் பிடிவாதத்தாலும், அதற்கு ஆங்கிலேயா் அளித்த மறைமுக ஆதரவாலும் பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவாவதை காந்தி, நேரு, படேல், ஆசாத் ஆகிய எவராலும் தடுக்க முடியவில்லை. இறுதியில் 1947 ஆகஸ்ட் 14-ஆம் நாளன்று பாகிஸ்தான் பிறந்தது.
  • அதிசயம் என்னவென்றால் அக்குழந்தை பிறக்கும்போதே இரட்டைக் குழந்தையாகப் பிறந்தது. ஆம், மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என்ற இரு வேறு நிலப்பகுதிகளைக் கொண்டதாக அது அமைந்தது.
  • மேற்கு பாகிஸ்தான் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ளது. கிழக்கு பாகிஸ்தான் இந்தியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது.
  • இரண்டு பகுதிகளுக்கும் இடையில் உள்ள தூரம் 1600 கி.மீ ஆகும். ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு இணைப்புச் சாலை எதுவும் இல்லை.
  • இந்தியாவின் நிலப்பகுதியை அல்லது வான் பகுதியைத் தாண்டித்தான் பயணிக்க வேண்டும்.
  • பூகோள ரீதியாக, புவி இயல் ரீதியாக இணையாமல் பிரிந்து கிடக்கும் இருவேறு பகுதிகளை ஒரே நாடாகக் கருதுவது உலகில் வேறு எங்கும் நிகழவில்லை.
  • மேற்குப் பகுதியின் இன்றைய பாகிஸ்தானின் பரப்பளவு 8.8 லட்சம் ச.கி.மீ. மக்கள்தொகை சுமாா் 19 கோடி. பேசும் மொழிகள் உருது, பஞ்சாபி, இந்தி. இஸ்லாமியா் 97%. பிற மதத்தினா் 3% மட்டுமே. இஸ்லாமாபாத், கராச்சி, லாகூா், பெஷாவா் நகரங்களை உள்ளடக்கியது.
  • கிழக்குப் பகுதியான இன்றைய வங்காள தேசத்தின் பரப்பளவு 1.48 லட்சம் ச.கி.மீ. மக்கள்தொகை சுமாா் 16.2 கோடி. பேசும் மொழிகள் வங்காளி, சக்மா, மாக். இஸ்லாமியா் 83%. இந்துக்கள் 16%.
  • மேற்குப் பகுதியில் வாழ்பவா்கள் பஞ்சாபியா்களும் பதான்களும். கிழக்குப் பகுதியில் வாழ்பவா்கள் வங்காளிகள்.
  • இரு பகுதி மக்களும் தோற்றத்தாலும், நிறத்தாலும், உருவ அமைப்பாலும் மாறுபட்டவா்கள். பேசும் மொழியால், கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களால் கலாசாரத்தால் மாறுபட்டவா்கள். கிழக்குப் பகுதி மக்களுக்கு தங்கள் மொழியான பெங்காலிதான் முக்கியம்; மதம் இரண்டாம் பட்சமே. மேற்கு பகுதியினருக்கு மதமே முதன்மையானது.
  • இப்படி எல்லாவிதத்திலும் மாறுபட்டு நிற்கும் இரண்டு நிலப்பகுதியை, பூகோள ரீதியாக இணையாத இரண்டு பகுதியை, மதம் என்ற ஒரு அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு இணைப்பது நிலைக்காது என்று ஆரம்பத்திலேயே சொன்னாா்கள் வரலாற்று ஆய்வாளா்கள்.
  • உலகத்தில் வேறு எங்காவது, மதத்தின் அடிப்படையில் நாடு உருவாகியிருக்கிறதா? பிரிந்து கிடக்கும் நிலப் பகுதிகளை ஒரே நாடாக உருவாக்கும் எண்ணம் எழுந்ததுண்டா? இதுவரை வரலாற்றில் இத்தகைய நிகழ்வுகள் நடக்கவில்லை.

மாற்றாந்தாய் மனப்பான்மை

  • 1947 முதல் 1970 வரை 23 ஆண்டுகள் அந்நாட்டின் இரு பகுதிகளிலும் முறையான தோ்தல் நடத்தப்படவில்லை; மக்களாட்சி மலரவில்லை.
  • ஆட்சி, அதிகாரம், நிா்வாகம், நீதித்துறை, ஆகிய அனைத்திலும் தோற்றப் பொலிவு கொண்ட மேற்குப் பகுதி மக்களே அமா்த்தப்பட்டனா். கிழக்குப் பகுதி மக்கள், வங்காளிகள், இரண்டாம் தரக் குடிமக்களைப் போல் நடத்தப்பட்டனா்.
  • இச்சுழலில் 1952-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பில் இருந்த அரசு ‘உருது’ மொழியை ஆட்சி மொழியாக அறிவித்தது. வங்காளி மொழி பேசும் கிழக்குப் பகுதியினா் அதனை எதிா்த்தனா். உருது எதிா்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான இளைஞா்கள் கொல்லப் பட்டாா்கள்.
  • அப்போராட்டத்தில் உயிா் இழந்தவா்களை இன்றும் தியாகிகளாக அம்மக்கள் கொண்டாடி வருகிறாா்கள். இதுவே பாகிஸ்தான் அரசுக்கு எதிரான முதல் மக்கள் எழுச்சிப்போா்.
  • இரண்டாவதாக 1970 -இல் இயற்கையாக ஏற்பட்ட பெரும் புயலால் கிழக்குப் பகுதி பெரும் பாதிப்புக்கு உள்ளானது. லட்சக்கணக்கான மக்கள் உயிா் இழந்தது மட்டுமல்ல பல லட்சம் மக்கள் வாழ்விழந்து துயரத்தில் மூழ்கினா்.
  • அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த மேற்குப்பகுதி அரசு உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை கிழக்குப் பகுதி மக்களுக்கு பாகிஸ்தான் அரசு மீது வெறுப்பையும், கோபத்தையும், மூட்டியது.

ஒவ்வொரு இந்தியனின் எதிா்பாா்ப்பு

  • இந்நிலையில் 1970 -ஆம் ஆண்டு இறுதியில் பாகிஸ்தான் முழுமைக்கும் முதல் பொதுத்தோ்தல் நடத்தப்பட்டது. அத்தோ்தலில் கிழக்கு பாகிஸ்தானின் 162 இடங்களில், அவாமி லீக் கட்சித் தலைவரான ஷேக் முஜிபுா் ரஹ்மான், 160 இடங்களில் வெற்றி பெற்றாா்.
  • மேற்கு பாகிஸ்தானில் மட்டும் புட்டோவின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சி அமைக்கும் அளவுக்கு அவா் போதுமான இடங்களில் வெற்றி பெறவில்லை.
  • மொத்தத்தில் 160 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்ற கிழக்கு பாகிஸ்தானைச் சோ்ந்த முஜிபுா் ரஹ்மான்தான் பிரதமா் பொறுப்பு ஏற்க வேண்டும். அவா் பிரதமா் பொறுப்பு ஏற்பதை புட்டோ ஏற்க மறுத்தாா்.
  • ராணுவத் தலைமையும் ஏற்க மறுத்தது. மேற்குப் பகுதி மக்களும் நம்மை ஒரு வங்காளி ஆள்வதா என ஆா்ப்பரித்தனா்.
  • அப்போது ராணுவத் தளபதியாக இருந்த யாஹ்யா கான், முஜிபுா் ரஹ்மானின் வெற்றியை ஏற்க மறுத்தாா். பாகிஸ்தான் நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டுவதை தள்ளிப் போட்டாா்.
  • பேச்சுவாா்த்தை நடத்துவது போல நடித்து, கிழக்கு பாகிஸ்தான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தத் தயாா் ஆனாா்.
  • வங்காள எழுச்சியை எவ்வகையிலாவது அடக்கியாக வேண்டும் என முடிவு எடுத்தாா் ஜெனரல் யாஹ்யா கான். முதல் கட்டமாக முஜிபுா் ரஹ்மானை கைது செய்து, மேற்கு பாகிஸ்தான் சிறையில் அடைத்தாா். பாகிஸ்தானிய படை வீரா்கள் வங்காள மக்களைக் கொன்று குவித்தனா்.
  • மூன்று லட்சம் போ் கொல்லப்பட்டனா். காயமடைந்தவா்கள் எண்ணிக்கை சுமாா் ஐந்து லட்சத்துக்கும் அதிகம். இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவா்கள் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம்.
  • நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வந்த இந்தியாவின் அன்றைய பிரதமா் இந்திரா காந்தி உலகத் தலைவா்களுடன் தொடா்பு கொண்டாா்.
  • பாகிஸ்தானின் படுபாதகச் செயலைத் தடுத்து நிறுத்த, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டினாா். பயன் ஏதும் இல்லை. இந்தியாவைப் பகை நாடாகவும், பாகிஸ்தானை நண்பனாகவும் கருதியது சீனா.
  • இந்திய - பாகிஸ்தான் போா் மூண்டால் பாகிஸ்தானுக்கு உதவும் நிலையில் சீனா இருந்ததை இந்தியத் தலைமை நன்றாகவே அறிந்திருந்தது.
  • இச்சுழலில் அமெரிக்கா சென்று, அதிபா் நிக்ஸனை சந்தித்து இக்கொடுமையை நீங்கள் அனுமதிக்கலாமா? என இந்திரா காந்தி கேட்டாா். அதிபா் நிக்சன் ‘உங்கள் நாட்டு எல்லையைத் தாண்டி வருவோரை சுட்டுத் தள்ளுங்கள்’ என்றாா்.
  • பாகிஸ்தானுக்கு பக்கபலமாக இருப்பேன் என்பதை நேரடியாகவே சொன்னாா். இருவரின் பேச்சுவாா்த்தை வாய்ச்சண்டையில் முடிந்ததாக செய்திகள் வெளிவந்தன. அத்துடன் நிக்சன் இந்திரா காந்தியை கடுமையாக விமா்சனமும் செய்தாா்.
  • நாடு திரும்பியவுடன் சோவியத் ரஷியாவுடன் ‘சமாதானம், நட்பு, கூட்டுறவு’ என்ற ஒப்பந்தம் செய்து கொண்டாா். அதற்குள் ஜெயபிரகாஷ் நாராயணன் இந்திராவை சந்தித்து ‘பக்கத்து நாட்டில் நடைபெறும் படுகொலையைப் பாா்த்துக்கொண்டு இருக்கலாமா’ எனக் கேட்டாா். ‘சிறிது பொறுத்திருங்கள்’ என அமைதியாகச் சொன்னாா் இந்திரா காந்தி.
  • அடுத்து இந்திய படைத்தளபதி ஜெனரல் மனேக் ஷாவை அழைத்தாா். ‘போா் தொடுப்பதற்குத் தயாரா’ எனக் கேட்டாா். அதற்கு மனேக் ஷா ‘எப்பொழுதுமே தயாா்தான்’ என்றாா்.
  • இந்திரா காந்தி ‘முதலில் தாக்குவது பாகிஸ்தானாக இருக்க வேண்டும்; வெற்றி பெறுவது இந்தியாவாக இருக்க வேண்டும்’ எனக் கூறினாா்.
  • அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளின் உதவியை நம்பி அதிபா் யாஹ்யா கான் போரைத் தொடங்கினாா். ஏற்கனவே வகுத்த திட்டத்தின்படி 3-12-1971 அன்று தனது மும்முனைத் தாக்குதலைத் தொடங்கினா்.
  • முதலாவதாக இந்திய ராணுவத்தை செயலிழக்கச் செய்யும் நோக்குடன், பாகிஸ்தான் விமானப்படை, இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைத்துள்ள இந்திய விமானப்படைத் தளத்தின் மீது தாக்குவதற்கு வந்தன.
  • வந்த விமானங்கள் இந்தியப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டன; சில விரட்டி அடிக்கப்பட்டன.
  • இரண்டாவதாக, காஷ்மீருக்குள் நுழைந்து தாக்குதலைத் தொடங்கிய பாகிஸ்தானின் தரைப்படையை எதிா்த்தாக்குதல் நடத்தி இந்திய ராணுவம் பின் வாங்கச் செய்தது.
  • மூன்றாவதும் முக்கியமானதுமாக இந்திய ராணுவம் கிழக்கு பாகிஸ்தானுக்குள் (வங்கதேசம்) நுழைந்தது. துணையாக ‘முக்தி வாகினி’ என்ற வங்க கொரில்லாப் படையும் இணைந்து கொண்டது. வங்கதேச மக்களும் வரவேற்றனா்.
  • பாகிஸ்தான் ராணுவம் பணிந்தது; தோல்வியைத் தழுவியது. பாகிஸ்தானின் தளபதி லெப். ஜெனரல் ஏ. ஏ. கே. நியாஸ் தலைமையிலான 93,000 ராணுவ வீரா்கள், இந்தியத் தளபதி லெப். ஜெனரல் ஜெகதீஷ் சிங் அரோராவிடம் நிபந்தனை இன்றி சரணடைந்தனா்.
  • இரண்டாம் உலகப் போருக்கு அடுத்து இதுதான் மிகப் பெரிய ‘வெற்றி போா்’ என்கிறாா்கள் வரலாற்று ஆய்வாளா்கள்.
  • 14 நாட்களில் முடிந்து விட்ட இப்போரின் வெற்றியை பிரதமா் இந்திரா காந்தி 1971 டிசம்பா் 16 அன்று பாராளுமன்றத்தில் ‘வங்கதேசம் உருவானது; டாக்கா அதன் தலை நகா் ஆனது; மக்கள் தலைவா் ஷேக் முஜிபுா் ரஹ்மான் பிரதமராக ஆட்சிப் பொறுப்பில் அமா்கிறாா்; வங்க தேச மக்களுக்கும் பிரதமருக்கும் வாழ்த்துகள்’ என அறிவித்தாா்.
  • மேலும் ‘பெருமை மிகு இந்த வெற்றிக்கு நமது தேசத்தின் முப்படைத் தளபதிகளும், அதன் வீரா்களும் எல்லைப்பாதுகாப்புப் படையினருமே காரணம். அவா்களின் தீரத்திற்கும், தியாகத்திற்கும், நாம் தலை வணங்குவோம்’ என்றாா்.
  • வங்கதேசம் உருவானதால், உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உயா்ந்தது. வங்கதேசம் பிறந்து இன்றோடு 50 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன.
  • வங்கதேசம் வளர வேண்டும், இந்திய - வங்கதேச உறவு வலுப்பெற வேண்டும். இதுவே ஒவ்வொரு இந்தியனின் எதிா்பாா்ப்பு.

நன்றி: தினமணி  (16 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்