TNPSC Thervupettagam

வங்கிகளைக் காப்பதற்கு ஒரு நோபல்

October 13 , 2022 667 days 353 0
  • பொருளாதாரத்தில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள நோபல் விருதுகள் பல வகைகளில் வங்கிகளைப் பலப்படுத்த உதவும். அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று அறிஞர்களுக்கு இந்த ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு  அறிவிக்கப்பட்டுள்ளது. பென் எஸ். பிரனான்கி (68), டக்ளஸ் டபிள்யு. டயமண்ட் (68), பிலிப் எச். டிப்விக் (67).
  • வங்கிகள், நிதி நெருக்கடிகள் குறித்து இவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளுக்காகவும் அளித்த தீர்வுகளுக்காகவும் இந்த விருது வழங்கப்படுகிறது. இவர்களில் டக்ளஸ், சிகாகோ பல்கலைக்கழகத்திலும் பிலிப் டிப்விக், வாஷிங்டன் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றுகின்றனர். பிரனான்கி வாஷிங்டனில் உள்ள புரூக்கிங்ஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மூவரில் பிரனான்கி 2006 முதல் 2014 வரையில் அமெரிக்க ஃபெடரல் வங்கித் தலைவராகப் பதவி வகித்தவர் என்பது ஆய்வுக்கு வலு சேர்த்தது.

வங்கிகளின் நெருக்கடி

  • 1980களில் வங்கித் துறையில் ஏற்பட்ட நெருக்கடிகள் பிரச்சினைகள் குறித்து இவர்கள் மூவரும் விரிவாக ஆராய்ந்துள்ளனர். வங்கிகள் நொடிப்புக்குக் காரணங்கள் என்ன என்று எல்லாக் கோணங்களிலும் ஆராய்ந்தனர். திடீரென்று வங்கிகள் நொறுங்காமல் இருக்க, அமைப்புரீதியாகச் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
  • இந்தப் பரிந்துரைகள் 2008, 2020 ஆண்டுகளில் நேரிடவிருந்த பெரும் ஆபத்தின் அபாய அளவைக் குறைத்தன. இந்த ஆண்டுகளில் வங்கிகள் வீழ்ச்சியடையாமல் தடுப்பதில் உதவின.
  • இவர்களுக்கான நோபல் பரிசு அறிவிப்பில், “பொருளாதார வளர்ச்சியில் வங்கிகள் ஆற்றும் முக்கியப் பங்கு என்ன, வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாட்டுகள் எப்படி அமைய வேண்டும், வங்கித் துறையில் ஏற்படும் நெருக்கடிகளுக்குக் காரணம் என்ன, அவற்றை எப்படித் தடுக்கலாம், நிதி நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை மேற்கொண்டு ஆராயவும் தீர்வுகளைக் காணவும் மூவருடைய பணிகளும் பெரிதும் உதவியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறது விருதுக்குழு.

வதந்திகளும் திவால்களும்

  • உலக வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த 1930களின் அமெரிக்கப் பொருளாதார பெருவீழ்ச்சி தொடர்பில் பென் பிரனான்கி ஆய்வு செய்திருக்கிறார். வதந்திகளால் வங்கிகள் செயலிழந்து மூடப்படுவது அதோடு முடிகிற விஷயமல்ல என்பதையும் வங்கிகளின் தோல்வி அடுத்து வரப்போகும் பொருளாதார நெருக்கடிக்கு மேலும் ஒரு காரணமாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்டினார் பிரனான்கி. வங்கித் துறையில் சமீப காலங்களில் அப்படியொரு வீழ்ச்சி ஏற்பட முடியாமல் அரசுகள்  தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க இது கணிசமாக உதவியது.
  • இப்போது உலக அளவில் விலைவாசி உயர்வு, செலாவணி மதிப்புகளின் வீழ்ச்சி ஆகிய இரு பெரும் பிரச்சினைகள் வலுத்துவருவதால் இம்மூவரின் ஆய்வுகள் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வழிகாட்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
  • அமெரிக்காவின் வீடமைப்புச் சந்தையில் கடன் வாங்கி வீடு கட்டியவர்கள், வருமானம் போதாமையாலும் வேலையிழப்புகளாலும் வீட்டுக் கடன்களை அடைக்க முடியாமல் வாங்கிய வீடுகளைத் திரும்ப ஒப்படைக்க முன்வந்தபோது மிகப் பெரிய சிக்கலாக அது உருவெடுத்தது. வீடு கட்டுவதற்குக் கடன் கொடுத்த வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் அது நெருக்கடியாக மாறியது. அப்போது அமெரிக்க பெடரல் அரசின் உதவியுடன், வங்கி – நிதித்துறைக்கு உதவிகளைச் செய்து, மீட்சிபெற வைத்தார் பிரனான்கி. ஆனால், லெம்மான் பிரதர்ஸ் வங்கி இதே போன்ற நெருக்கடியில் சிக்கியபோது அது மூழ்கட்டும் என்று பெடரல் வங்கியும் அரசும் அனுமதித்தன. பிரனான்கி அதில் முக்கியப் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • வங்கிகள் எப்படி உருவாகின்றன, வதந்திகள் காரணமாக மட்டும் அவை எப்படி திடீரென நொறுங்கிவிடுகின்றன, இப்படிப்பட்ட ஆபத்துகள் நேராமல் சமூகம் எப்படி அவற்றைத் தடுக்கலாம் என்று டக்ளஸ் டயமண்டும் பிலிப்பும் கருத்தியல் மாதிரிகளை உருவாக்கி விளக்கியுள்ளனர்.

அரசின் வாக்குறுதி எனும் கவசம்

  • வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறும் ரொக்க முதலீடுகளுக்கு (டெபாசிட்டுகளுக்கு), அரசு ஈடு நின்று காப்புறுதி அளித்தாலேயே முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை வலுப்படும், வதந்திகளால் வங்கிகள் நொறுங்கும் ஆபத்து நேராது என்று விளக்கியுள்ளனர்.
  • வங்கியின் நிதி நிலைமை மோசமானாலும் நாம் செலுத்திய டெபாசிட்டுகள் திரும்பக் கிடைத்துவிடும் - அதற்கு அரசு உத்தரவாதம் அளித்திருக்கிறது என்ற நம்பிக்கை வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுவிட்டால், எப்படிப்பட்ட வதந்தியானாலும் உடனே கவலைப்பட்டு வங்கிகளுக்குப் போய் தங்களுடைய டெபாசிட்டுகளைத் திரும்பப் பெறுவதில் வேகம் காட்ட மாட்டார்கள் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
  • தங்களுடைய சேமிப்புகளை வங்கிகளில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கும், தங்களுடைய தொழில் – வர்த்தகத்துக்குத் தேவையான முதலீட்டைக் கடனாகப் பெற வரும் வாடிக்கையாளர்களுக்கும் இணைப்புப் பாலமாகச் செயல்படுபவை வங்கிகள். கடன் வாங்க விண்ணப்பித்தவர் நல்ல நோக்கத்துடன்தான் கடனுக்காக அணுகுகிறாரா, அவருடைய அனுபவம், திட்டம், தொழில் முயற்சி ஆகியவை நல்ல பலனைத் தருமா, கடன் கொடுத்தால் பயன் இருக்குமா, அவரால் திருப்பிச் செலுத்த முடியுமா என்பதையெல்லாம் மதிப்பிட வங்கிகளே சிறந்த அமைப்புகள் என்று டயமண்ட் விவரித்துள்ளார்.
  • பொருளாதார உலகில் நிகழும் நேரடியான பாதிப்புகளை ஆராய்ந்து அவற்றுக்குத் தீர்வுகளைக் கண்ட அறிஞர்களுக்கு விருது வழங்கியிருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியது என்று பலரும் வரவேற்றுள்ளனர்.

நன்றி: அருஞ்சொல் (13 10– 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்