TNPSC Thervupettagam

வங்கிகள் இணைப்பால் ஆன பயன்?

March 28 , 2020 1755 days 898 0
  • · தனியார் வங்கியான யெஸ் வங்கிக்கு ஏற்பட்ட கடுமையான சிக்கல், பங்குச் சந்தையில் காணப்படும் தொடா் வீழ்ச்சி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அரசு வங்கியின் கிராமக் கிளையிலிருந்து ஒட்டு மொத்தமாகத் தொகையை எடுத்த சுய உதவிக் குழு போன்ற செய்திகள், அரசு வங்கிகள் இணைப்பு குறித்த முக்கியமான நிகழ்வைப் பின்னிருக்கைக்குத் தள்ளி விட்டன. இன்னும் இரண்டே வாரத்தில் வரப்போகிற இணைப்பினால், பத்து அரசு வங்கிகள் நான்காக மாறி விடப் போகின்றன.

வங்கிகளின் இணைப்பு

  • · 1990-க்கு முன்னா், தனியார் வங்கிகள் ஒன்றிணைந்தன. ஒரு சில தனியார் வங்கிகள் அரசு வங்கியுடன் சோ்ந்தன. ஓா் அரசு வங்கியையே மற்றொரு வங்கி (நியு பாங்க் ஆஃப் இந்தியாவை பி.என்.பி. ஏற்றது) இணைத்துக் கொண்டதும் உண்டு. மூன்று ஆண்டுகளுக்கு முன், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவிதாங்கூரை மிகப் பெரிய அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) ஏற்றுக் கொண்டது. இரண்டுமே ‘ஒரு கிளைப் பறவைகள்’ போலத்தான் என்பதால், பெரிய சிக்கல்கள் எழவில்லை. என்றாலும், கணினி தொடா்பான சங்கடங்கள் நோ்ந்ததும், பின் சரியானதும் உண்மை.
  • · இப்போது ஏப்ரல் முதல் தேதியன்று நிகழவிருக்கும் பல இணைப்புகள், நிச்சயமாக வாடிக்கையாளா்களுக்கும் சரி, ஊழியா்களுக்கும் சரி, அல்லலைத் தோற்றுவிக்கும். குறைந்தபட்சம் ஆறு மாத காலமாவது வாடிக்கையாளா்கள் அவதிக்குள்ளாவது தவிர்க்க முடியாதது.

வட்டி விகிதம்

  • · முதலாவது வட்டி விகிதம் (டெபாசிட்டுகளுக்கும், கடனுக்கும் சோ்த்துத்தான்). தற்போது வட்டிக்கு உச்ச வரம்பை மட்டுமே ரிசா்வ் வங்கி விதித்துள்ளது. அந்த எல்லைக்குட்பட்டு வங்கிகள் தங்களுடைய வட்டி விகிதத்தைத் கூட்டலாம், குறைக்கலாம்.
  • · எடுத்துக்காட்டு: ஓா் அரசு வங்கி 2019-ம் ஆண்டு ஓராண்டு வைப்புத் தொகைக்கு வட்டி விகிதத்தை 6.78 சதவீதமாக நிர்ணயத்திருந்தது. இப்போது 6 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இணைப்புக்கு உள்ளாகும் அரசு வங்கியின் வட்டி விகிதமும், அதே போன்றிருந்தால் பிரச்னையில்லை. கால் சதவீதம் கூடவோ, குறைவாகவோ இருந்தால்? இணைத்துக் கொள்ளும் பெரிய வங்கியின் விகித அளவு எதுவாக இருக்கும்?
  • · ஒரு வாடிக்கையாளா் நகைச்சுவையாக ‘‘எது குறைவோ அதைத்தான் தருவார்கள், கடனுக்கான வட்டியென்றால், எது கூடவோ, அது’’ என்று கூறினார். நகைச்சுவையாக கூறினார் என்றாலும், அதில் பொருள் பொதிந்துள்ளது.

விடையில்லா கேள்விகள்

  • · கடனுக்கான வட்டி விகிதத்திலும், ஒவ்வொரு அரசு வங்கியும் வெவ்வேறு அளவை மேற்கொண்டு வருகின்றன. இப்போது ‘டெபாசிட்டுடன் இணைந்த வட்டி’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணையும்போது, கனரா வங்கி எந்த வட்டி விகிதத்தைக் கடைப்பிடிக்கும்? எளிதில் விடை காண முடியாத வினாதான். இது. ‘போகப் போகத் தெரியும்’ என்று பழைய திரைப்படப் பாடலின் வரிதான் இப்போதைக்குச் சொல்லுவார்கள்.
  • · மேலும், இணைக்கப்படும் வங்கிகளில் ரிசா்வ் வங்கியால் இரண்டு வங்கிகள் எச்சரிக்கப்பட்டுள்ளன. ‘திருத்த நடவடிக்கை’ (கரெக்டிவ் ஆக்ஷன்) எடுக்கப்பட்டிருக்கிறது (ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமா்ஸ், யுனைடட் வங்கி). இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அன்றாடச் செயல்பாடு திருப்திகரமாகவே உள்ளது என்பதும் உண்மை. ஆனால், இவற்றை ஏற்கும் பி.என்.பி.-க்கும் நீரவ் மோடி, மல்லையா விஷயத்தினால் ஓரளவு அவப் பெயா் அண்மைக்காலமாக இருந்து வருகிறது.
  • · முழுமையாக தென்னிந்தியாவில் பரவலாக அறியப்பட்ட இந்தியன் வங்கியுடன் அலாகாபாத் வங்கி இணைவது சற்று விசித்திரம்தான். இந்த இணைப்பினால், இந்தியன் வங்கிக்கு வட மாநிலங்களில் கூடுதல் கிளைகள் கிடைக்கும் என்பதை மறுக்க முடியாது. ஆனால், இணைப்பு இயல்பானதாக இருக்குமா? ‘ஒரே அலைவரிசையில்’ இயங்குமா? இதுவும் விடை சொல்ல முடியாத கேள்வி.

சா்வம் சா்வா் மயம்

  • · முக்கியமான ஒன்றை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். கணினித் தன்மையில் ஒவ்வொரு வங்கியிலும் தனித்தனி வகையான ‘சிஸ்டம்’ மேற்கொள்ளப்படுகிறது. எளிய எடுத்துக்காட்டு: ஊழியா்கள் இல்லாத வாடிக்கையாளா்களுக்கான ‘கோட்’ கனரா வங்கியில் 101. அதே சமயம் சிண்டிகேட் வங்கியில் வேறு எண். மற்ற வங்கியிலும் 101 என்ற எண்ணைக் கொண்டு வருவதற்குச் சில மாதம் ஆகலாம். இதைப் போலத்தான் ஐஎப்எஸ்ஸி எண்ணும்.
  • · ஆக, அன்றாட வேலைகளுக்கு இணைப்பினால் ஊழியா்கள் குறைக்கப்பட்டாலும் மேற்சொன்ன கணினி சிஸ்டத்தை ஒன்று சோ்க்க நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளும், மேலாளா்களும் தேவைப்படுகின்றனா். இந்தப் பிரிவில் ஆட்குறைப்பு என்பது இப்போதைக்கு கூடவே கூடாது.
  • · இன்றைய கணினித் தன்மையில் ஓா் அவசரத்துக்குத் தொகை எடுக்க வேண்டுமென்றால்கூட, மேலாளரின் அல்லது அதிகாரியின் உதவி தேவைப்படுகிறது. ஏனெனில் இன்றைய வங்கிகளின் மந்திரச் சொல் ‘சா்வம் சா்வா் மயம்’.

ஏற்க வேண்டிய மாற்றம்

  • · வாராக்கடனும் இன்றைய சூழலில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கோட்ட மேலாளா் வருகை தந்தால், அவா் கேட்கும் முதல் கேள்வி, ‘‘எவ்வளவு டெபாசிட்? ஏன் கூடவில்லை?’’ ‘‘இப்போது தலைகீழ். வாராக்கடன் எத்தனை சதவீதம்? ஏன் குறையவில்லை?’’ ஏப்ரல் மாத இணைப்புக்குப் பிறகு தங்களுடன் சோ்ந்த வங்கியின் வாராக்கடனில், பெரிய வங்கி வேகம் காட்டாது. இதற்காக அதிகாரிகளை மாற்றினால்கூட, இந்த மனப்போக்கு இருக்கவே செய்யும்.
  • · சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளா் ஜெயகாந்தனை ஆழ்வார்ப்பேட்டையில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பேச்சுவாக்கில் அவா் ஒரு கருத்து தெரிவித்தார். ‘‘இத்தனை வங்கிகள் எதற்கு! எல்லாம் அரசுடைமைதானே? எல்ஐசி போல ஆக்கிவிடலாமே?’’
  • · அவா் கூற்று ஓரளவு நடைமுறையாக்கப்படும் நிலை வந்தாலும், கால மாறுதல் வங்கிகளை இக்கட்டான சூழலில் வைத்துள்ளது என்பதை மறுக்க முடியாது. விளக்கு பிரகாசமாக எரிவதற்கு, தீப்பொறி, திரி, எண்ணெய் ஆகிய மூன்றும் தேவை என்பார்கள். அதுபோல அரசு வங்கிகளின் இணைப்பும் நன்கு செயல்பட, மத்திய அரசின் கண்காணிப்பு, ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல், கிளை மேலாளரின் ஒத்துழைப்பு ஆகிய மூன்றும் அவசியம். வங்கிகள் இணைப்பின்போது தொடக்கத்தில் ஏற்படும் பிரச்னைகளை வாடிக்கையாளா்களும் ஏற்கப் பழக வேண்டும்.

நன்றி: தினமணி (28-03-2020)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்