TNPSC Thervupettagam

வங்கிகள் தனியார்மயமாக்கல் சாத்தியமா

August 7 , 2022 732 days 433 0
  • அனைத்து பொதுத் துறை வங்கிகளையும் தனியார் மயமாக்கப் பரிந்துரை செய்து, கொள்கை அறிக்கை ஒன்றை என்.சி.ஏ.இ.ஆர். தலைமை இயக்குநரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான பூனம் குப்தாவும் நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவரும், கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியருமான அரவிந்த் பனகாரியாவும் வெளியிட்டுள்ளனர்.
  • பாரத ஸ்டேட் வங்கி தவிர, மற்ற அனைத்து பொதுத் துறை வங்கிகளையும் தனியார்மயமாக்க வேண்டும் என்றும், பாரத ஸ்டேட் வங்கி மட்டுமே அதன் சிறந்த செயல்பாட்டின் காரணமாக, அரசு உரிமையின் கீழ் இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.
  • கொள்கையில், தனியார்மயமாக்கலுக்கான தேவை ஸ்டேட் பேங்க் உட்பட அனைத்து அரசு வங்கிகளுக்கும் பொருந்தும். ஆனால், இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பு - அரசியல் நெறிமுறைகளுக்குள், எந்தவொரு அரசாங்கமும் நாட்டின் வங்கிக் கட்டமைப்பில் ஒரு அரசு வங்கி இல்லாமல் இருக்க விரும்பாது என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
  • இதைக் கருத்தில் கொண்டு வெளிப்படையாகக் கூறப்பட்டாலும் அல்லது மறைமுகமாகச் சொன்னாலும், ஸ்டேட் பேங்க் தவிர மற்ற அனைத்து அரசு வங்கிகளையும் தனியார்மயமாக்குவதே குறிக்கோளாக இருக்க வேண்டும்…’ என்று அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
  • நிச்சயமாக, சில ஆண்டுகளுக்குப் பிறகு, சூழ்நிலைகள் தனியார்மயமாக்கலுக்கு இன்னும் சாதகமாக மாறினால், தனியார்மயமாக்கல் பட்டியலில் ஸ்டேட் பேங்க்கைச் சேர்க்க இலக்கு நகர்த்தப்படலாம்’ என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
  • வங்கித் துறையின் பெரும்பகுதி தனியார் துறைக்குச் செல்வதால், சிறந்த விளைவுகளை வழங்க அதன் செயல்முறைகள், விதிகள், ஒழுங்குமுறைகளை முறைப்படுத்துவதற்கான அழுத்தத்தை ரிசர்வ் வங்கி உணரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
  • இது தவிர மற்றொரு குறிப்பில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பொதுத் துறை வங்கிகளில் இணைப்பின் விளைவு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விரிவான ஆய்வை ஆராய்ந்த பின்னர், அடுத்த கட்ட பொதுத் துறை வங்கி இணைப்புகளைத் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாறு என்ன சொல்கிறது?

  • அனைத்து வங்கிகளையும் முழுவதுமாகத் தனியார்மயமாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கும் இவர்கள், இந்த நாட்டின் வங்கி வரலாற்றைப் பார்க்கத் தவறியுள்ளனர். 1969இல் பதினான்கு வங்கிகளை அரசு கையகப்படுத்திய பிறகு, வங்கிகளின் சேவை பட்டிதொட்டிகளுக்கெல்லாம் விரிந்தது.
  • சாதாரண மக்களை உள்ளடக்கிய வங்கி சேவை, அரசாங்க வங்கிகள் மூலம் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. விவசாயம், சிறுதொழில்களுக்கு உதவும் வகையில் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அரசு வங்கிகள் மட்டுமே முன்னணியில் இருந்தன.
  • சமீபத்திய அரசின் முயற்சியான பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா கணக்கைத் திறப்பதில் அரசுடைமை வங்கிகளின் மகத்தான பங்களிப்பின் விளைவாக 42 கோடி சாதாரண மக்கள் வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர்.
  • குறிப்பிட்ட வசதியுள்ள மக்களுக்கு மட்டுமே சேவை செய்துவந்த வங்கிகளை, எல்லா சாமானிய மக்களும் பயன் பெறும் வகையில் மாற்றியது, வங்கிகள் அரசுடமை ஆக்கப்பட்ட பிறகே நடந்தது. மீண்டும் வங்கிகளைத் தனியார்மயமாக்கினால் சாமானிய மக்களுக்கு வங்கி சேவையைப் பயன்படுத்த முடியாமல் போகும். தனியார் வங்கிகளின் நோக்கம் பங்குதாரர்களுக்கு அதிக லாபம் ஈட்டுவது மட்டுமே, சாமானியர்களுக்குச் சேவை செய்வது அல்ல.

நஷ்டமடைந்த வங்கிகள்

  • 1935இல் இந்திய ரிசர்வ் வங்கி உருவான பிறகு, நாடு சுதந்திரம் பெறும் காலம் வரை (1947) நம் நாட்டில் 900 வங்கிகள் திவாலாகியுள்ளன. 1947 முதல் 1969 வரை 665 வங்கிகள் தோல்வியடைந்தன. இந்த அனைத்து வங்கிகளிலும் டெபாசிட் செய்தவர்கள், டெபாசிட் செய்த பணத்தை இழந்துள்ளனர்.
  • 1969இல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு, 36 வங்கிகள் தோல்வியடைந்தன. ஆனால், இவை மற்ற அரசு வங்கிகளுடன் இணைப்பதன் மூலம் மீட்கப்பட்டன. குளோபல் டிரஸ்ட் பேங்க் லிமிடெட் போன்ற பெரிய வங்கியும் இதில் அடங்கும்.
  • சமீபத்தில் லட்சுமி விலாஸ் வங்கி லிமிடெட், யெஸ் பேங்க் லிமிடெட் ஆகிய வங்கிகளைக் காப்பாற்ற மற்ற நிறுவனங்களின் மூலதனத்தை ரிசர்வ் வங்கி செலுத்திக் காப்பாற்ற வேண்டியிருந்தது. பல கூட்டுறவு வங்கிகளும் மூடப்பட்டுள்ளன. 2004இல் இருந்த 1926 நகரக் கூட்டுறவு வங்கிகளின் எண்ணிக்கை, 2018இல் 1551ஆகச் சுருங்கின.
  • வங்கிகள் தனியார்மயமாக வேண்டும் என்று பரிந்துரைப்பவர்கள், கடந்த 90 ஆண்டுகளில் இத்தனை தனியார் வங்கிகள் திவாலாகியிருப்பதற்கு என்ன சமாதானம் சொல்வார்கள்? இதுபோன்ற வங்கித் தோல்விகள் மீண்டும் நடப்பதைத் தடுக்க அவர்கள் முன்வைத்துள்ள திட்டம்தான் என்ன?

சாத்தியமா?

  • சிறிய அளவு பங்குதாரர்களின் நிதியுடன் பெரிய அளவு பொதுமக்களின் வைப்புத்தொகையுடன் வங்கிகள் நடத்தப்படுகின்றன. எந்த வங்கியின் தோல்வியும் விகிதாசாரத்தில் அதிக அளவுக்குத் தொற்றுவிளைவை ஏற்படுத்தும் வகையில் வங்கித் தொழில் மற்ற தொழில்களிலிருந்து வேறுபட்டது. எந்த வங்கியின் தோல்வியும் அந்த வங்கியின் வாடிக்கையாளரை மட்டும் பாதிக்காமல், பல நிலைகளில் மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்களையும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையுமே பாதிக்கக்கூடியவை.
  • அரசுடைமை என்பது வங்கி டெபாசிட்டர்களுக்கு அளப்பரிய நம்பிக்கையை அளிக்கிறது. அத்துடன் அரசுடைமையின் காரணமாக அவர்கள் வங்கி வைப்புத்தொகையை மிகவும் குறைந்த வட்டிவிகிதத்தில் இருந்தாலும் தேர்வுசெய்கின்றனர். பெரும்பாலும் அவர்களின் வட்டி பணவீக்க விகிதத்தைவிடக் குறைவு. இந்தக் கட்டமைப்பைச் சீர்குலைப்பது வங்கிக் கட்டமைப்பைச் சிதைக்கும்.
  • வங்கிகளில் அரசு வைத்திருக்கும் பங்கின் சந்தை மதிப்பு சுமார் ரூ.4,80,207 கோடி. இந்த வங்கிகளைத் தனியார்மயமாக்க இவ்வளவு பணத்தை முதலீடு செய்து வாங்குபவர்கள் இருக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் உரிம விதிமுறைகளின்படி தொழில்துறை நிறுவனங்கள் வங்கிகளை நடத்த அனுமதியில்லை. தற்போது உள்ள தனியார் வங்கிகளுக்கோ அல்லது வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கோ இந்த வங்கிகளில் முதலீடு செய்யும் அளவு உபரி நிதி வசதி கிடையாது. எனவே, அனைத்து வங்கிகளையும் தனியார்மயமாக்கப் பரிந்துரைப்பது தேவையில்லாதது, நடைமுறைப்படுத்த முடியாத ஒன்றும் கூட!

நன்றி: தி இந்து (07 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்