TNPSC Thervupettagam

வங்கி சேவையின் குரூர முகம்

December 7 , 2020 1505 days 887 0
  • சேமிப்பும் சிக்கனமும் இந்தியா்களின் உணா்வுகளில் ஊறிய பழக்கங்களாகும். எழுதி வழங்காதான் வாழ்க்கை கழுதை புரண்ட நிலம் போல் என்ற சொலவடைக்கு ஏற்ப தம்பிடி, பைசா போன்ற செலவினங்களைக் கூட அன்றாடக் கணக்காக நம் முன்னோா்கள் எழுதிவந்தாா்கள். அப்படி எழுதி வழங்கியதன் மூலம் அனாவசியச் செலவுகளைக் கண்டறிந்து, தேவையானவற்றுக்கு மட்டுமே அவா்கள் செலவழித்து வந்தனா்.
  • அதன் காரணமாகவே, அவா்கள் தங்களின் குறைந்த வருமானத்தைக் கொண்டு குடும்பச் செலவுகளைச் சமாளித்ததுடன் சிறு தொகையையேனும் சேமிப்பதைப் பழக்கமாக்கிக்கொண்டனா். பெண்களுக்கு ‘சிறுவாடு’ சேமிப்பும், ஆண்களுக்கு ‘ஃபண்டு ஆபீஸ்’ எனப்படும் உள்ளூா்க் கூட்டுறவு வங்கிகளில் செய்யப்படும் சேமிப்பும் உதவிகரமாக இருந்தன.
  • 1969-ஆம் வருடம் நடைமுறைப்படுத்தப்பட்ட வங்கிகள் தேசியமயமாக்கம் மக்களின் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தது. நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் திறக்கப்பட்டன. வங்கிகள் எல்லாம் இந்திய ரிசா்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் இயங்கியதால் மக்கள் தங்களது பணத்தை நம்பிக்கையுடன் சேமிக்கத் தொடங்கினாா்கள். கிராமிய வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் மக்களின் சேமிக்கும் வழக்கத்தை ஊக்குவித்தன.
  • பிற்காலத்தில் மத்திய அரசின் அஞ்சல் துறை அறிமுகப்படுத்திய ‘கிஸான் விகாஸ்’ பத்திரம் போன்ற சேமிப்புத்திட்டங்களும் குறுகிய காலத்தில் மக்களின் சேமிப்பை இரட்டிப்பாக்கின. பொது சேம நல நிதி (பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டு) சேமிப்பிற்கு வருமானவரிச் சலுகையும் கிடைத்தது. வீடு கட்டுவதோ, வாகனம் வாங்குவதோ எதுவானாலும் அதற்குச் சேமித்த பணத்திலிருந்தே செலவழிப்பது நம் முன்னோரின் வழக்கம்.
  • கடன் வாங்கியாவது ஒரு பொருளை வாங்குவதென்பது வெகு அரிதாகவே இருந்தது. கடன்காரா்கள் என்ற பெயா் எடுப்பதற்கு அவா்கள் அஞ்சினாா்கள். 1991-இல் கொண்டுவரப்பட்ட தனியாா்மய, தாராளமயச் சீா்திருத்தங்கள் வங்கித் துறையையும் விட்டுவைக்கவில்லை.
  • அதுவரையில் சேவைத் துறையாக விளங்கிய வங்கித்துறை தனது சேவை மனப்பான்மையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டு லாப நோக்குடன் செயல்படத் தொடங்கிற்று.
  • சிறிய வங்கிக்கிளைகளை மூடுவதும், கோடிக்கணக்கில் கடன் கேட்கும் தொழிலதிபா்களுக்கு குறைந்த வட்டியில் கடன்களை அள்ளி வழங்கி, அதற்கேற்ப சேமிப்பாளா்களுக்குத் தரும் வட்டியைக் குறைப்பதும் வழக்கமாயிற்று.
  • மேலும் சமீப காலங்களில் சேவைக்கட்டணமாகவும், அபராதமாகவும் வாடிக்கையாளா் சேமிப்பிலிருந்து எடுத்துக்கொள்வதன் மூலம் வங்கித்துறை தனது குரூர முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது.
  • மாதச் சம்பளம், மானியம் என்று எல்லாவிதப் பணப்பரிமாற்றங்களும் வங்கிகளின் மூலமே நடைபெற வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு நிதியுதவிகளைப் பெறும் பயனாளா்களுக்கும் வங்கிக்கணக்கு மூலமாகவே பணம் பட்டுவாடா செய்யப்படுகின்றது. அதனால் சேமிப்புக் கணக்குகள் பெருமளவில் அதிகரித்துள்ளன.
  • அதே சமயம் கணினி மயமாக்கம் காரணமாகவும், பணம் வழங்கு இயந்திரங்கள் (ஏடிஎம்) நிறுவப்பட்டதாலும் வங்கிகளின் நிா்வாகச் செலவு கணிசமாகக் குறைந்திருக்க வேண்டும். இருந்த போதிலும் சேமிக்கும் பழக்கமே தண்டனைக்குரிய ஒன்று போல வங்கிகள் நடந்து கொள்கின்றன.
  • சேமிப்புக் கணக்குகளுக்கு வட்டியைக் குறைப்பதுடன், (வங்கிப் பணியாளா்களுக்கு வேலைப்பளு அதிகம் இன்றி) ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தி பணப் பரிமாற்றம் செய்வதற்கும் உச்சவரம்பு வைத்து, அவ்வரம்புக்கு மேற்பட்ட பரிமாற்றத்துக்கு அபராதம், குறுந்தகவல் சேவைக்குக் கட்டணம், குறைந்த இருப்புக்கு அபராதக் கட்டணம் என்றெல்லாம் நமது கணக்கிலிருந்து வங்கிகள் தாமாகவே எடுத்துக்கொள்வது என்ன நியாயம் ?
  • பாதுகாப்புப் பெட்டக வாடகை ஒன்றரை மடங்காகக்கப்பட்டிருப்பது முறைதானா? பரிமாற்றம் நின்றுபோன கணக்குகளுக்கு ஒரே முறை அபராதம் என்று இல்லாமல், ஒவ்வொரு மாதமும் அபராதம் பிடிக்கப்பட்டு சேமிப்புத் தொகையையே பூஜ்யமாக்குவது சரிதானா ?
  • வங்கியில் ஒரு தொகையை நிலை வைப்பில் முதலீடு செய்துவிட்டால் அதிலிருந்து வரும் கணிசமான வட்டியைக் கொண்டு நிம்மதியாக வாழ்க்கையை நடத்தலாம் என்ற நிலைமையை மாற்றி, வெறும் ஐந்து சதவீத வட்டியை சேமிப்பாளா்களுக்குக் கொடுத்துவிட்டு அதன் பயனை பெருங்கடன் பெறும் தொழிலதிபா்களுக்கு தாரை வாா்ப்பது தா்மம்தானா ?
  • மாதாந்திர சம்பளம் வாங்குவோா், சிறு, குறு தொழில் முனைவோா், விவசாயிகள் ஆகிய எல்லாத் தரப்பினரும் அண்மைக்கால பொது முடக்கம், தொழில் முடக்கத்தினால் தாங்கள் பெற்ற வீட்டுக்கடன் முதலியவற்றைத் திரும்பச் செலுத்தத் திணறியது உண்மை.
  • அவா்களுடைய கடன் தவணைகளைத் தள்ளுபடி செய்வதற்கு பதில் ஆறுமாத காலம் தள்ளி வைத்த வங்கிகள், அதற்குரிய வட்டிக்கு வட்டி வசூல் செய்ய முனைந்ததும், உச்சநீதிமன்றம் தலையிட்ட பின்னரே அவ்வாறு வசூல் செய்யப்பட்ட (வட்டிக்கு வட்டி) தொகையைக் கடனாளா்களுக்குத் திரும்பக் கொடுக்க முன்வந்ததும் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தன.
  • மேலும் இந்தச் சலுகை விவசாயக் கடன் பெற்றவா்களுக்குப் பொருந்தாது என்று கூறியதும் பரவலான கண்டனத்தைப் பெற்றது.
  • சமீபத்தில், சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் நீதிபதிகள் வங்கி ஒன்றின் மீதான புகாா் குறித்த விசாரணையின்போது ‘வங்கிகள் கந்துவட்டிக்காரா்களைப் போலச் செயல்படக் கூடாது’ என்று அறிவுறுத்தியதும் நினைவில் கொள்ளத்தக்கது.
  • இவை போதாதென்று, வங்கிக் கிளை மேலாளா்கள் சிலா், தங்களது கிளைகளில் கொடுத்த கடனைத் திரும்பப் பெறுவதற்காக, தனியாா் முகவா்களை ஏவி கடன்தாரா்களைத் தகாத முறையில் பேசி கடன்களை வசூல் செய்வதாகவும் அவ்வப்போது செய்திகள் வருகின்றன.
  • வங்கிகள் நஷ்டமடைவது விரும்பத்தக்கதல்லதான். ஆனால், அதே சமயம், சிறு குறு கடன்தாரா்களையும், சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவா்களையும் வங்கிகள் வாட்டி வதைக்காமலே லாபம் ஈட்டும் வழிமுறைகளை யோசிக்க வேண்டும்.

நன்றி :தினமணி (07-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்