TNPSC Thervupettagam

வஞ்சிக்கப்பட்டதா நடுத்தர வர்க்கம்?

August 4 , 2024 164 days 149 0
  • ஒன்றிய அரசின் நிதிநிலை ஓரளவுக்கு வலுவாக இருப்பதால் 2024 - 2025 நிதியாண்டில் வருமான வரிச் சலுகை அதிகரிக்கப்படும், அரசைத் தொடர்ந்து ஆதரிக்கும் நடுத்தர வகுப்புக்கு நன்றி செலுத்தும் வகையில் அரசு அதைச் செய்யும் என்று அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமையாமல், மிகச் சிறு மாற்றங்களை மட்டும் செய்து சராசரியாக அதிகபட்சம் ரூ.17,500 மட்டும் வருமான வரியில் குறைப்பு செய்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
  • ஒன்றிய அரசு அறிவித்துள்ள புதிய வருமான வரிவிதிப்பை 2 கோடி வரியாளர்கள் ஏற்றுக்கொண்டால், ரூ.35,000 கோடி அரசுக்கு வரி இழப்பு ஏற்படும். பத்து லட்சத்துக்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ள உயர் நடுத்தர வகுப்புக்கும்கூட இந்தச் சலுகை ரூ.17,500 மட்டுமே. இதைக் கொண்டு, நடுத்தர வர்க்கம் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
  • எல்லோரும் சொல்வதைப் போல நடுத்தர வர்க்கத்தை நிதியமைச்சர் புறக்கணித்துவிட்டாரா? சில உண்மைகளைப் பார்ப்போம். முதலில் நடுத்தர வர்க்கம் எது என்ற வரையறைக்கு வருவோம். இந்தியாவின் வெவ்வேறு முகமைகள், நடுத்தர வர்க்கம் என்பதற்கு வெவ்வேறு அளவுகோல்கள் வைத்துள்ளன.

நடுத்தர வர்க்கம்

  • ‘பயன்பாட்டுப் பொருளாதார ஆய்வுக்கான தேசியப் பேரவை’ (என்சிஏஇஆர்), ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் தொடங்கி ரூ.10 லட்சத்துக்குள் பெறுவோர், நடுத்தர வர்க்கம் என்று வகைப்படுத்துகிறது. அது நடுத்தர வர்க்கத்தை மேலும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறது. ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானமுள்ளவர்கள், கீழ்நிலை நடுத்தர வர்க்கம். ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள், இடைநிலை நடுத்தர வர்க்கம். ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள், உயர்நிலை நடுத்தர வர்க்கம்.
  • ஆண்டு வருமானம் ரூ.3.5 லட்சம் முதல் ரூ.17.5 லட்சம் வரை பெறுகிறவர்களை நடுத்தர வர்க்கம் என்கிறது இந்தியன் ரிசர்வ் வங்கி.
  • ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாகப் பெறும் அனைவரும் பொருளாதாரரீதியாக நலிவுற்ற பிரிவினர் என்கிறது ஒன்றிய அரசு.
  • வருமான வரித் துறை தகவல்படி 2022-23 நிதியாண்டின்போது மொத்தம் 7.4 கோடிப் பேர் வருமான வரித் துறையிடம் கணக்கு தாக்கல் செய்தனர். அவர்களில் 2.24 கோடிப்பேர்தான் உண்மையில் வருமான வரி செலுத்தினர். 7.4 கோடிப் பேரில் 5.82 கோடிப் பேர், ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் என்று கூறியிருந்தனர். இது கணக்கு செலுத்தியவர்களில் 78%. எனவே 10 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

வரிச் சலுகை மட்டுமல்ல…

  • நிதிநிலை அறிக்கை என்பது வரிச்சலுகை அறிவிப்புக்காக மட்டும் அல்ல. நடுத்தர வர்க்கம் பயன்பெறும் வகையில் வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளனவா என்றும் பார்ப்பது அவசியம். மகளிருக்கு மட்டும் அறிவிக்கப்பட்ட சலுகைகளை அல்லது அறிவிப்புகளை வைத்து, மகளிருக்கான பயன்கள் என்ன என்று பால் அடிப்படையில் பார்ப்பது சமீபத்திய வழக்கமாகியிருக்கிறது. அந்த வகையில், நடுத்தர வர்க்கத்துக்கு வேறு பயன்கள் என்ன என்று பார்ப்போம்.

நடுத்தர வர்க்கத்தின் கவலைகள்

முதலாவது:

  • நடுத்தர வர்க்கம் தங்களுடைய வீட்டில் உள்ள மகன், மகள் ஆகியோரின் வேலைவாய்ப்பு குறித்தே அதிகம் கவலைப்படுகின்றனர். வேலைவாய்ப்பைப் பெருக்கவும் வேலைவாய்ப்புக்கான தகுதிகளைப் பெறவும் திறன் மேம்பாட்டுக்காக ரூ.2 லட்சம் கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அமைப்புரீதியாக திரட்டப்பட்டுள்ள துறையில் முதல் முறையாக வேலைபெறுவோருக்கு ஒரு மாத ஊதியம் ரொக்க ஊக்குவிப்பாக (அதிகபட்சம் ரூ.15,000) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2.1 கோடிப் பேருக்குப் பயன் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • வருங்கால வைப்பு நிதி சந்தாவாக மாதத்துக்கு ரூ.3,000 என்று அரசு மானியமும் செலுத்தப்போகிறது. இந்தச் சலுகை இரண்டு ஆண்டுகளுக்கு. 500 உயர்தொழில் நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு ஐந்து ஆண்டுகளில் தொழில் திறன் வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்படவிருக்கிறது. இதற்காக மாதந்தோறும் ரூ.5,000 அந்த இளைஞர்களுக்கு வழங்கப்படும். ஒரேயொருமுறை சலுகையாக பிற செலவுகளுக்கு அவர்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும்.
  • இதுபோக, ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறனைப் பெறும் பயிற்சிகள் அளிக்கப்படும். இந்தத் திட்டங்கள் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கானவை.

இரண்டாவது:

  • ‘பிரதான் மந்திரி சூரிய முஃப்த் பிஜிலி யோஜனா’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கோடி குடும்பங்கள் வீட்டுக்கூரையில் சூரியஒளி மின்சார தயாரிப்பு திட்டத்தை மேற்கொண்டால், மாதந்தோறும் 300 யூனிட்டுகள் மின்சாரம் இலவசம். இந்தத் திட்டம் ஏழை, நடுத்தர குடும்பங்களுக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் சேருவோர் சூரியஒளி மின்னுற்பத்தி பலகைகள் வாங்க கடனுதவும் மானிய உதவியும் அளிக்கப்படும். சூரியஒளி மின்னுற்பத்தி திட்டத்தில் இணைப்புக்கு கட்டணம் கிடையாது. இவையெல்லாம் மின்கட்டணம் செலுத்துவதிலிருந்து விடுபடவும், மின்கட்டணச் செலவைக் குறைத்துக்கொள்ளவும் நிச்சயம் உதவும்.

மூன்றாவது:

  • ரூ.11,11,111 கோடி மதிப்புக்கு அடித்தளக் கட்டமைப்பு வளர்ச்சிக்காக மூலதனச் செலவு மேற்கொள்ளப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது அடித்தளக் கட்டமைப்புகளான சாலை, ரயில் பாதை, நீர்வழிப் பாதை, விமானப் போக்குவரத்து வசதி ஆகியவற்றுக்கானது. இதனால் போக்குவரத்து வசதி பெருகுவதுடன் பயணக் கட்டணம், சரக்குக் கட்டணம் குறையும். விளைபொருள்கள், உற்பத்தியான பொருள்களைச் சந்தைக்கு எடுத்துச் செல்வது எளிதாகும். இந்தத் திட்டங்களின் மறைமுகப் பலன்களுடன் புதிய வேலைவாய்ப்புகளும் மத்திய தர வகுப்புக்கு அதிகரிக்கும்.

நான்காவது:

  • ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ மூலம், நகரங்களில் குறைந்த வருவாயுள்ள நடுத்தர குடும்பங்களுக்கு ஒரு கோடி வீடுகளைக் கட்டும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது:

  • புத்தொழில்களைத் தொடங்க (ஸ்டார்ட்-அப்) பெறப்படும் நன்கொடை மூலதனத்துக்கு விதித்த ‘ஏஞ்சல் வரி’ ரத்துசெய்யப்பட்டுள்ளது. இது நடுத்தர வர்க்க இளைஞர்களுக்கு நல்லதொரு ஊக்குவிப்பு.

ஆறாவது:

  • சிலவகைப் பண்டங்களின் மீதான இறக்குமதி வரி குறைப்பால் அவற்றை உற்பத்தி செய்யும் பிரிவுகளில் வேலை வாய்ப்பு கிடைப்பதுடன், அந்தப் பொருள்களின் விலையும் குறையும். இவையும் நடுத்தர வர்க்க பயன்பாட்டுக்கானவை.

ஏழாவது:

  • புதிய கண்டுபிடிப்புகளை அனைவரும் மேற்கொள்ள ஆராய்ச்சி – கண்டுபிடிப்புகளுக்காக ரூ.1 லட்சம் கோடியை அரசு ஒதுக்கியிருக்கிறது. இதிலிருந்து தேவைப்படுவோருக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும். இந்தக் கடனை திருப்பிச் செலுத்த அதிகபட்சம் 50 ஆண்டுகள் வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.
  • இந்த அறிவிப்புகள் அனைத்தும் நடுத்தர வர்க்கத்துக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படக்கூடியவை. வருமான வரி விலக்கு சலுகை மட்டுமே நிதிநிலை அறிக்கை அல்ல.
  • சமூகநீதி அடிப்படையில்தான், பணக்காரர்களிடமிருந்தும் தாங்கக்கூடிய வலிமையுள்ளவர்களிடமிருந்தும் வரி வருவாயைப் பெறுகிறது அரசு. வருவாய் - சொத்துடைமை ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தில் அமைதியின்மையையும் மோதல்களையும் உருவாக்குகிறது. எனவே, பொருளாதாரரீதியாக தாழ்ந்து கிடப்பவர்களை மேலே தூக்கிவிட, அரசு அதிகம் செலவிட நேர்கிறது. அவர்களும் முன்னுக்கு வருவது சமூகநீதியை நிலைநாட்டுவதற்காக மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும்தான்.
  • நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்து தரப்பும் தங்களால் இயன்ற அளவு பங்களிப்பு செய்தால்தான் நாடு முன்னேற முடியும்.

நன்றி: அருஞ்சொல் (04 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்