TNPSC Thervupettagam

வடவர் ஆதிக்கத்தில் இந்திய ஆட்சிப் பணிகள்

December 18 , 2021 960 days 519 0
  • இந்திய ஆட்சிப்பணியில் வட இந்தியர்களின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கிறது. அதேபோல, வசதியுடைவர்கள் அதிகம் கோலோச்சும் சூழலும் அதிகரிக்கிறது. முன்னதாக இருந்த நிலைமையை சமீபத்திய போக்குகள் மேலும் தீவிரமாக்குவதைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பிராந்திய பிரதிநிதித்துவம்

  • இந்தியா குடியரசான எழுபது ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், வடக்கின் பிரதிநிதித்துவம் 20% எனும் நிலையிலிருந்து, 30.65% எனும் நிலை நோக்கி உயர்ந்திருக்கிறது. ஆனால், தெற்கின் பிரதிநிதித்துவம் 35% எனும் நிலையிலிருந்து 24.66% எனும் நிலை நோக்கி இறங்கியிருக்கிறது. இதேபோல, மேற்கின் பிரதிநிதித்துவம் 16% எனும் நிலையிலிருந்து, 8% எனும் நிலைக்கு இறங்கியிருக்கிறது. கிழக்கின் பிரதிநிதித்துவம் 10% எனும் நிலையிலிருந்து 13% எனும் நிலைக்கு உயர்ந்திருக்கிறது. மத்தியப் பிராந்தியம் 20% எனும் நிலையை அப்படியே ஒட்டிச்சென்றுகொண்டிருக்கிறது. வடகிழக்கின் பிரதிநிதித்துவம் 2.01% எனும் நிலையில் உறைந்திருக்கிறது.

பாலினப் பிரதிநிதித்துவம்

  • 1951 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட 6,575 ஐஏஎஸ் அதிகாரிகளில் மகளிர் 18%. மிச்ச 72% பேர் ஆண்கள். உண்மையில் 1950-களில் பாலினச் சமத்துவம் படுமோசமான நிலையில் இருந்தது. அப்போது 2.7% பேர் மட்டுமே பெண்களாக இருந்தார்கள்; 97.3% பேர் ஆண்களாகவே இருந்தார்கள். இப்போது ஆண்களின் விகிதம் 68.9% ஆகக் குறைந்து, பெண்களின் விகிதம் 31.1% ஆக உயர்ந்திருக்கிறது.

வயது பிரதிநிதித்துவம்

  • இந்தியா குடியரசான 1950-களில் இந்திய ஆட்சிப் பணியில் சேருகிறவர்களின் வயது சராசரியாக 23 ஆக இருந்தது. சென்ற பத்தாண்டுகளில் இது 27 ஆக உயர்ந்திருக்கிறது.

கல்விப் பிரதிநிதித்துவம்

  • தேர்ந்தெடுக்கப்படும் படிப்புகளில் அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் ஆகியவற்றை சார்ந்து சொல்லப்படும் ‘ஸ்டெம்’ பிரிவு மாணவர்கள் கோலோச்சுவது அதிகரிக்கிறது. 1950-களில் இவர்களுடைய எண்ணிக்கை 15.4% ஆக இருந்தது; இப்போது கிட்டத்தட்ட 80% ஆக அதிகரித்திருக்கிறது.

தரவுகள் சொல்லும் மறைமுக செய்தி என்ன?

  • முதலாவது, இந்தியாவின் அரசியல் ஆட்சி மன்றத்தில் வட இந்தியாவின் ஆதிக்கமே அதிகம். மக்களவையை எடுத்துக்கொண்டால், 543 தொகுதிகளில் தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம் வெறும் 23.9%. (தமிழ்நாடு&புதுவை -40, கர்நாடகம் 28, ஆந்திரம் 25, கேரளம் 20, தெலங்கானா 17).
  • ஆனால், இந்தி பெரும்பான்மை பேசும் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மட்டும் 42%. டெல்லி 7, உத்தர பிரதேசம் 80, உத்தராகண்ட் 5, ராஜஸ்தான் 25, பிஹார் 40, ஜார்கண்ட் 14, மத்திய பிரதேசம் 29, சத்தீஸ்கர் 11, இமாச்சல பிரதேசம் 4 என்று 225 தொகுதிகள். இவற்றை அன்றி மஹாராஷ்டிரம், குஜராத் போன்றவை இந்தி பெரும்பான்மை மாநிலங்கள் இல்லை என்றாலும், இந்தி பிராந்திய அரசியல் தாக்கத்திலிருந்து விலகாதவை என்பதை நாம் அறிவோம்.
  • ஆகையால், தெற்கின் பிரதிநிதித்துவம் அதிகாரத்தில் கொஞ்சம் அதிகமாக இருந்தது ஏதோ ஒருவகையில், இந்தி பெரும்பான்மைவாதத்துக்கு ஈடு கொடுக்க வல்லதாக மறைமுகமாக இருந்தது. இப்போது அங்கும் பேரிழப்பு நடக்கிறது. வடக்கின் எண்ணங்களும், திட்டங்களும் மேலோங்க இது மேலும் உதவலாம்.
  • இரண்டாவது, தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் வயது அதிகரிப்பதானது, தேர்வுக்காகத் தயாராகும் காலகட்டம் அதிகரிப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அதாவது, படிப்புக்காகப் பல ஆண்டுகள் செலவிடும் ஆற்றல் கொண்டவர்கள் அதிகம் உள்ளே வருகிறார்கள். ஏழை மாணவர்களால் இவ்வளவு காலம் செலவிட்டு தேர்வுகளுக்குத் தயாராக முடியாது. ஆகையால், வசதி படைத்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று சொல்லலாம்.
  • மூன்றாவது, ஒரே நல்ல செய்தி இதுதான். பெண்களின் விகிதாச்சாரம் தொடர்ந்து அதிகரிக்கிறது. சமத்துவத்துக்கு இது போதுமான அளவு இல்லை என்றாலும், ஆரோக்கியமான போக்குதான் இது.
  • நான்காவது, படிப்புப் பிரிவுகளில் ஒரே மாதிரியான பிண்ணணி கொண்டவர்கள் கோலோச்சுவது நல்லது இல்லை. இலக்கியம், வரலாறுசமூகவியல் என்று பல துறைகளையும் சேர்ந்தவர்கள் – முக்கியமாக சமூக அறிவியல் துறைகளைச் சார்ந்தவர்களின் எண்ணிக்கையும் நிர்வாகத்தில் அதிகமாக இருப்பது நல்லது. இப்போதைய போக்கு சரியில்லை.

முடிவாக!

  • ஓர் அரசியலர் ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருக்கிறார்; பத்தாண்டுகள் தொடர்ந்து அதிகாரத்தில் அவர் நீடிப்பது பெரும் சவால். ஆனால், கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், நிர்வாகத்தை முன்னெடுப்பதிலும் சக கூட்டாளிகள்போலச் செயல்படும் அதிகாரிகள் 25-35 ஆண்டுகள் வரை அதிகாரத்தில் இருக்கும் சாத்தியம் கொண்டவர்கள். மறைமுகமாக இவர்களும் இந்தியாவை ஆள்கிறவர்கள். இந்த இடத்தில் சரியான பிரதிநிதித்தும் இருந்தால்தான் சமத்துவம் நிலவும். இன்றைய சூழல் அப்படி இல்லை. இது மாற வேண்டும்.
  • அரசியல் வர்க்கத்தில் வட இந்தியர்களின் எண்ணிக்கை எப்போதுமே அதிகம். இந்நிலையில், அதிகார வர்க்கத்தில் தென் இந்தியர்கள் கணிசமாக இருந்ததால் முடிவுகள் எடுக்கும் இடத்தில் பல தரப்பினரையும் பற்றி யோசிக்கும் சாத்தியம் முன்பு அதிகம் இருந்தது. இப்போது அது குறைகிறது. வடக்கின் எண்ணிக்கை அதிகம் ஆகிறது.

முந்தைய போக்கு

  • பெரும்பாலும் வயதில் இருபதுகளின் இறுதிப் பகுதியில் இருப்பவராகவும், ஆடவராகவும், (ஸ்டெம்) அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் படித்தவராகவும் இருப்பார். அதிலும் குறிப்பாக வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவராக இருப்பார்.
  • பெண்களின் எண்ணிக்கை தொடக்க காலத்தில் மிக மிகக் குறைவாகவே இருந்தது, கடந்த பத்தாண்டுகளில் நிலைமை மேம்பட்டிருக்கிறது. 2010 தொடங்கி 2019-க்குள் அவர்களுடைய எண்ணிக்கை 27 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

சதவீதம்

  • ஸ்டெம்’ கல்வி பின்புலம் இல்லாதவர்கள் 72 சதவீதம். 2010-ல் இது 33 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
  1. சராசரி வயது: 1951 முதல் 2020 வரையில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவர்களின் சராசரி வயது 22-ல் தொடங்கி 2007-ல் 28.2 ஆக உச்சம் பெற்று, 2020-ல் 27.4 ஆகக் குறைந்தது.
  2. பிராந்திய ஆதிக்கம்: ஒவ்வொரு பத்தாண்டிலும் பிரதேசவாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வரைபடம் காட்டுகிறது. 1950, 2000 ஆண்டுகளில் மட்டும் தெற்கு கோலோச்சியது. மற்ற ஆண்டுகளில் வட மாநிலத்தவர்கள்தான் ஆதிக்கம். 2010 மற்றும் 2019-க்கு இடையில் வடக்கு, தெற்கு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 55 சதவீதத்துக்கும் மேல். 1960 முதல் வட-கிழக்கு, மேற்கு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெறுவது 10 சதவீதத்துக்கும் குறைவு.
  3. குறையும் பாலின இடைவெளி: நேர்முகமாகவும் வழக்கமாகவும் ஐஏஎஸ் பணிக்குத் தேர்வு செய்யப்படுவோரில் ஆண், பெண் பாலின வேறுபாடு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை எப்படி இருந்தது என்பதைக் காட்டுகிறது வரைபடம். 1950-களில் பெண்களின் எண்ணிக்கை 2.7 சதவீதமாகவும் ஆடவர் 97.3 சதவீதமாகவும் இருந்தது. அந்த இடைவெளி குறைந்து வந்தாலும் மகளிரின் பங்களிப்பு ஆடவர் எண்ணிக்கை, விகிதங்களைவிடக் குறைவாகவே தொடர்கிறது.
  4. ஸ்டெம்’ பின்னணி அதிகரிப்பு: அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் படித்தவர்கள் எண்ணிக்கை 1951 முதல் 2020 வரையில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. 1954-ல் ‘ஸ்டெம்’ பின்னணியில் வந்தவர்கள் 15.4 சதவீதம். 2020-ல் அவர்கள் எண்ணிக்கை 80 சதவீதம். எம்பிபிஎஸ் படித்தவர்கள் கூட ‘ஸ்டெம்’ பிரிவில்தான் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நன்றி: அருஞ்சொல் (18 – 12 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்