- கடன் என்ற சொல்லுக்கு நெருங்கிய உறவு சொல் வட்டி என்பதாகும். அவை இரண்டும் இரட்டைப் பிறவிகள் என்றும் சொல்லலாம்.
கடனும், அது சார்ந்த வட்டியும் பொருளாதார சுழற்சியின் முக்கிய அங்கங்களாகும். அரசாங்கம் முதல் தனி நபர் வரை வட்டியின் தாக்கம் பரந்து விரிகிறது. ஒவ்வொரு வகையான கடனுக்குமான விலையை வட்டி எனலாம். கடன் வழங்குபவர், தன்னிடமிருக்கும் தொகையை தேவைப்படுபவருக்கு வழங்கும்போது வட்டி என்ற விலை எழுகிறது.
கடன்
- கடன் தொகையின் அளவு, அதன் தேவைக்கான அவசரம், திருப்பிச் செலுத்தும் காலம் ஆகிய காரணிகள் அடங்கிய சூத்திரம் ஒவ்வொரு கடனுக்கான வட்டியின் அளவை நிர்ணயிக்கிறது. கந்து வட்டி, மீட்டர் வட்டி ஆகிய வானளாவிய செயற்கை வட்டிகளுக்கான வழிமுறைகள் முறைபடுத்தப்பட்ட எந்தவிதமான சூத்திரங்களுக்குள்ளும் அடங்காது. பேராசை, மனிதநேயமின்மை, கடன் வாங்குவோரிடம் விழிப்புணர்வு இல்லாதது ஆகியவைதான் இத்தகைய முறையற்ற வட்டி வசூல்களுக்குக் காரணங்களாக அமைகின்றன.
- ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்க்கையில் வட்டி என்ற செலவைச் சந்திக்காதவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான் என்று உறுதியாகச் சொல்ல முடியும். நேரடியாக கடன் வாங்கி, அதற்கான வட்டி செலுத்தவில்லை என்றாலும், நாம் பயன்படுத்தும் உற்பத்திப் பொருள்களின் விலை நிர்ணயத்தில், உற்பத்தியாளரால் பெறப்பட்ட தொழில் கடனுக்கான வட்டியும் ஒரு முக்கியக் காரணியாக அமைகிறது.
வங்கி வர்த்தகம்
- வங்கி வர்த்தகத்தைப் பொருத்தவரை, அதன் வரவு-செலவுக் கணக்கில் வட்டி பெரும் பங்கு வகிக்கிறது. வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் பலவிதமான வைப்புத் தொகைகளுக்கு கால அளவைப் பொருத்து வட்டியை வங்கிகள் வழங்குகின்றன. இது வங்கிகளின் முக்கியச் செலவினமாகும்.
- வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் ஒவ்வொரு 100 ரூபாயிலிருந்தும், அவர்களுடைய நலன் கருதி 23 சதவீத பிணையத் தொகையை, ரிசர்வ் வங்கியில் முதலீடாக வங்கிகள் பாதுகாக்க வேண்டும்.
- மீதமுள்ள 77 ரூபாயை மட்டும்தான் வங்கிகள் கடனாக வழங்க முடியும். இந்த மாதிரி முதலீடுகளிலிருந்து குறைந்த அளவிலேயே வங்கிகளுக்கு வருவாய் கிடைக்கும்.
வங்கிகள் வழங்கும் கடன்கள் மூலம் கிடைக்கும் முக்கிய வருவாய் வட்டிதான். வழங்கப்படும் கடன் தொகை வசூலில் விளையக்கூடிய இடர்ப்பாடுகள், பிணையத்தின் தன்மை மற்றும் மதிப்பீடு, திருப்பிச் செலுத்தப்படும் கால அளவு, கடனுக்கான நோக்கம் ஆகியவற்றைச் சார்ந்து, கடனுக்கான வட்டி வங்கிகளால் நிர்ணயிக்கப்படுகிறது.
- வைப்புத் தொகை மூலம் தாங்கள் பெறும் நிதி ஆதாரங்களுக்கு ஏற்ப,கடனுக்கான வட்டி விகிதங்களை ஒவ்வொரு வங்கியும் நிர்ணயித்துக் கொள்கின்றன.
பணவீக்கம்
- தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகமாக இருந்தால், அதன் தாக்கம் உற்பத்திப் பொருள்களின் சந்தை விலையில் பிரதிபலிக்கும். அதனால், பணவீக்கம் அதிகரித்து பக்க விளைவுகளை உற்பத்தி செய்யும். ஆகவே, உயர்ந்த வட்டி விகிதங்களுடன் செயல்படும் பொருளாதார நடவடிக்கைகள் பெரும்பாலும் விரும்பத்தகாத ஒன்றாகும்.
- 17 சதவீத வட்டி விகிதத்துடன் செயல்படும் ஆர்ஜெண்டினாவின் பொருளாதாரம், 27 சதவீத அளவிலான பணவீக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருப்பது இதற்கு நல்ல உதாரணமாகும்.
- பணவீக்க அளவை முழுவதுமாக ஈடுகட்டுவதாக வட்டி விகிதம் அமைய வேண்டும் என்பதுதான் பொது விதி. உதாரணத்துக்கு, 5 சதவீத பணவீக்க அளவுள்ள பொருளாதார சூழ்நிலையில், சேமிப்புக்கான வட்டி விகிதம் 5 சதவீதத்துக்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்.
- பொருளாதாரத்தில் தோன்றும் பண வீக்கம், உற்பத்திப் பொருள்களின் தேக்கம், வங்கிகள் கடன் வழங்குவதில் மந்த நிலைமை, உள்நாட்டு நாணயத்தின் மதிப்பை நிலைநிறுத்துதல், சேமிப்பை ஊக்கப்படுத்துதல் போன்ற எண்ணற்ற குறைபாடுகளைச் சரி செய்வதற்கு, வட்டியில் ஏற்ற இறக்கம் என்ற ஆயுதத்தை ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கியும் அவ்வப்போது கையாள்கின்றன.
பொருளாதார மந்த நிலை
- நம் நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலைமையைச் சமாளிக்க, ரெப்போ ரேட் (வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறைந்த கால கடன்களுக்கான வட்டி விகிதம்) என்ற வட்டி விகிதத்தை 25 சதவீத அளவில் ரிசர்வ் வங்கி அண்மையில் குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இதையும் சேர்த்து கடந்த ஒன்பது மாதங்களில் 0.75 சதவீதம் வரை ரெப்போ வட்டி குறைப்புகள் அறிவிக்கப்பட்டன.
வட்டி குறைப்பு அறிவிப்புகள் என்பது, பொருளாதார காரணிகளை கணக்கில் கொண்டு ரிசர்வ் வங்கியால் நிதிச் சந்தைக்கு வழங்கப்படும் ஒரு சமிக்ஞைதான்.
- அதற்கேற்ப, கடனுக்கான வட்டிகளைக் குறைக்கவோ, கூட்டவோ வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட முடியாது. பொருளாதார நிலைமையைப் பொருத்து கடனுக்கான வட்டி விகிதங்கள், வங்கிக்கு வங்கி ஓரளவு மாறுபடும் வாய்ப்புகள் உண்டு. ரெப்போ வட்டி விகிதம் 75 சதவீத அளவில் குறைக்கப்பட்டாலும், அதில் மூன்றில் ஒரு பங்கு அளவில்கூட கடனுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் குறைக்காததற்குப் பல காரணங்கள் உண்டு.
- வாராக் கடன் என்ற சுழலில் சிக்கித் தவித்து, அதற்கான நிதி ஒதுக்கீடுகள் லாபத்தை வெகுவாக விழுங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில், தங்கள் முக்கிய வருமானமான வட்டியைக் குறைப்பதற்கு வங்கிகள் அவசரம் காட்டவில்லை. அதே சமயத்தில், வைப்புத் தொகைகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்தால், வைப்புத் தொகைகளின் அளவு வெகுவாகச் சரிவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதனால், கடன் வழங்கும் செயல்பாட்டுத் திறன் குறைந்து, வங்கிகளின் வர்த்தக வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே, கடன் மற்றும் வைப்புத் தொகை ஆகிய தராசு தட்டுகள் இரண்டையும் சமன் செய்வதற்கு வங்கிகளுக்கு சற்று கால அவகாசம் தேவைப்படும்.
- தற்போதைய அறிகுறிகளின்படி, நம் பொருளாதாரம் குறைந்த வட்டிக்கான தளம் நோக்கி நகர்த்தப்படுவதால், நாளடைவில் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை மேலும் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு வங்கிகள் தள்ளப்படும்.
- வங்கிகளில் வைக்கப்படும் வைப்புத் தொகைக்கு குறைந்த வட்டி என்பது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வல்லமை படைத்தது.
வாங்கும் திறன்
- சேமிப்புக்கான வட்டி குறைப்பினால், வங்கி வட்டியை பெரும்பாலும் சார்ந்திருக்கும் பலருடைய வருமானம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, அவர்களுடைய வாங்கும் திறன் குறையும். இதனால், தினசரி பயன்பாட்டுப் பொருள்களுக்கான தேவை குறைந்து, உற்பத்திப் பொருள்களின் தேக்கம் அதிகரிக்கும். எனவே, இந்த மாதிரி பொருளாதார நடவடிக்கைகள் சாதகங்களுடன் பாதகங்களும் நிறைந்த ஒரு சுழல் போன்றது.
வட்டி விகிதங்களை மாற்றி அமைப்பது போன்ற சில சாதனங்களைப் பயன்படுத்தி, பொருளாதார நகர்வுகளை சமன்படுத்துவதுதான் ரிசர்வ் வங்கியின் பணியாகும்.
- வட்டி விகிதங்களை அதிகரிப்பது, குறைப்பது என ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் அனைத்தும் சோதனை அடிப்படையில்தானே தவிர, அவை எதிர்பார்த்த பலன்களை முழுவதுமாக அள்ளி தரும் என்பது பகல் கனவாகும்.
- சேமிப்புக்கான வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்பிருக்கும் இந்தத் தருணத்தில், மாத அல்லது காலாண்டுக்கு ஒரு முறை வட்டி வருமானம் பெறும்படியான வைப்புத் தொகை திட்டங்களில், நீண்டகால அடிப்படையில், இப்போதே முதலீடு செய்வது பலன் அளிக்கும்.
- வங்கிகளில் சேமிப்புக்கான வட்டி விகிதம் குறையும்போது, அதையே வாய்ப்பாக மோசடி நிதி நிறுவனங்கள் பயன்படுத்தி, அதிக வட்டி என்ற போர்வையில் பாமர மக்களை ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அந்த மாதிரி மாய வலைகளில் சிக்காமல், தங்கள் சேமிப்பை பாதுகாக்க வேண்டிய விழிப்புணர்வை மக்களிடையே தகுந்த விளம்பரங்கள் மூலம் ரிசர்வ் வங்கி ஏற்படுத்த வேண்டும்.
முதியோருக்கான சேமிப்புத் திட்டம்
- முதியோருக்கான சேமிப்புத் திட்டத்தின் கீழ் அஞ்சலகங்களில் ரூ.15 லட்சம் வரை 5 ஆண்டுகள் டெபாசிட் செய்யலாம். தற்போதைய நிலவரப்படி, இந்த டெபாசிட்டுகளுக்கு ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி அளிப்பதால் முதலீடு செய்து பலன் அடையலாம்.
கடனுக்கான வட்டி குறைப்பு என்பது தொழில் சார்ந்த மூலதனங்களை அதிகரித்து, பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் கொள்கையாகும். ஆனால், அதுவே எல்லா பொருளாதாரப் பிரச்னைகளுக்கும் தீர்வாகாது.
- சேமிப்புக்கான வட்டி குறையும்போது, மற்ற முதலீட்டு வாய்ப்புகளை நோக்கி சிறு முதலீட்டாளர்கள் நகர ஆரம்பிக்கிறார்கள். அதில் ஒன்றுதான், தங்கத்தில் முதலீடு. இந்த உலோகம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மதிப்பீட்டிற்கு ஏற்ப, நாட்டின் அரிய பொக்கிஷமான அந்நியச் செலாவணி வெளியேறுகிறது.
- இறக்குமதி செலவுகள் அதிகமானால், அதுவே இந்திய நாணயத்தின் வெளிநாட்டு மதிப்பைக் குறைத்துவிடும் அபாயம் காத்திருக்கிறது.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவல்ல திட்டங்கள் அடங்கிய செயல் அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் நிகழ்வுதான் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை. பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் மூலதனங்களை ஊக்கப்படுத்தும் திட்டங்களைத் தவிர, வரிச் சலுகைகள் மூலம் சேமிப்புகளை ஊக்குவிக்கும் அறிவிப்புகள் இன்று (ஜூலை 5) தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டும்.
- நிதிநிலை அறிக்கையில் திட்ட அறிவிப்புகளை வெளியிடுவதுடன், நிபுணர்கள் குழு மூலம் அவற்றை உடனடியாகச் செயல்படுத்தி நாட்டின் பொருளாதார நிலையை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
நன்றி: தினமணி (05-07-2019)