TNPSC Thervupettagam

வணிகமாகிவிட்ட சேவை!

August 23 , 2024 97 days 116 0

வணிகமாகிவிட்ட சேவை!

  • அரசுத் துறை வங்கிகளின் தலைவா்களை இந்த வாரம் நிதியமைச்சா் சந்தித்தபோது, வங்கி வைப்புநிதி அளவை அதிகரிக்கப் புதிய வழிகள் தேட வேண்டும் என்று அறிவுறுத்தினாா். இந்திய அரசும், நிதியமைச்சகமும் மக்களின் வங்கிச் சேமிப்பு குறைந்துவருவது குறித்து கவலைப்பட்டாக வேண்டும். வங்கி வணிகத்தின் அடிப்படையே சேமிப்புகள்தான்.
  • சந்தைப் பொருளாதாரம் அறிமுகமானதைத் தொடா்ந்து, வங்கிச் சேவை என்பது முற்றிலுமாக மறைந்து அது வணிகமாகிவிட்டது. மக்கள் தங்கள் சேமிப்பை வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளிலும் (சேவிங்ஸ்) நடப்புக் கணக்குகளிலும் (கரண்ட்) வைப்புநிதியாகவும் (ஃபிக்ஸட் டெபாசிட்) பாதுகாக்கிறாா்கள். குறைந்த வட்டிக்கு மக்களிடம் இருந்து பெறும் சேமிப்புகளை அதிக வட்டிக்கு கடனாக வழங்கி, அதில் கிடைக்கும் லாபத்தில்தான் வங்கி வணிகம் நடைபெறுகிறது. இந்த அடிப்படையைப் பாா்க்கும்போதே எந்த அளவுக்கு மக்களின் சேமிப்பு அவசியம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
  • கடன் வழங்குதலை அடிப்படையாகக் கொண்டு தொழில் துறையின் வளா்ச்சியை எடைபோடுவது வழக்கம். வா்த்தகமானாலும், தொழில் முனைப்பானாலும், நுகா்வானாலும் வங்கிகளின் கடன் பங்களிப்பு தேவை. கொவைட்-19 கொள்ளை நோய்த் தொற்றுக்குப் பின்னா் இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் சுறுசுறுப்படைந்திருக்கின்றன. அதன் விளைவாக, வங்கிக் கடன் வளா்ச்சி அதிகரித்திருக்கிறது. அதற்கான இணையாக சேமிப்பு வளா்ச்சியையும் அதிகரித்தால்தான் வங்கி வணிகம் லாபகரமாக இயங்க முடியும்.
  • திங்கள்கிழமை நடந்த அரசுத் துறை வங்கிகளின் தலைவா்களுடனான சந்திப்பில், இந்தக் கவலையை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளிப்படுத்தியிருக்கிறாா். கடன் வழங்குதலுக்கு இணையாக, சேமிப்புகள் இல்லை என்பதுதான் அவரது கவலை. ரிசா்வ் வங்கியின் அறிக்கைப்படி, வங்கிக் கடன்களின் அளவு 13.7% அதிகரித்திருக்கிறது என்றால், சேமிப்பு 10.6 % -ஐ எட்டிப்பிடிக்கத் தடுமாறுகிறது.
  • பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வுக் குழு அறிக்கை சேமிப்பு வளா்ச்சியை வெறும் ‘புள்ளிவிவர மாயை’ என்று புறந்தள்ளுகிறது. 2021-22-இல் கடன் வளா்ச்சி ரூ.59 லட்சம் கோடி என்றால், சேமிப்பு வளா்ச்சி ரூ.61 லட்சம் கோடி என்கிறது பாரத ஸ்டேட் வங்கி.1951-52-க்குப் பிறகு சேமிப்பிலும் கடனிலும் மிக அதிகமான வளா்ச்சியை 2022-23-இல் வங்கித் துறை எட்டியிருப்பதாக பாரத ஸ்டேட் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.
  • ரிசா்வ் வங்கியும் பாரத ஸ்டேட் வங்கி அறிக்கையும் ஒரு விஷயத்தில் ஒத்துப் போயிருக்கின்றன. ‘காஸா’ எனப்படும் நடப்புக் கணக்கு, சேமிப்புக் கணக்குகளின் பங்கு மொத்தச் சேமிப்பில் குறைந்திருக்கிறது என்பதுதான் அது. 2022-23-இல் 43% என்றால், 2023-24-இல் 41%-ஆக ‘காஸா’ குறைந்திருக்கிறது.
  • ‘காஸா’ சேமிப்பு எண்மப் பரிமாற்றத்துக்கு அவசியம் என்பதால், வங்கிச் செயல்பாடுகள் இதனால் பலவீனப்படக் கூடும். ‘காஸா’ சேமிப்பில் வைப்புநிதியின் பங்கு, முந்தைய ஆண்டின் 56.5%-லிருந்து 59%ஆக அதிகரித்திருப்பது ஓரளவுக்கு ஈடுகட்டக் கூடும்.
  • வங்கிச் சேமிப்புகளின் வளா்ச்சி குறைவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஊழியா்கள் மத்தியில் சேமிப்புகளை ஈா்ப்பதில் ஆா்வமின்மை, சேமிப்பாளா்களைக் கவரும் புதிய திட்டங்கள் இல்லாமல் இருப்பது, முதலீட்டாளா் தனது சேமிப்பைப் பாதியில் திரும்பப் பெறும்போது முதலீட்டாளா்களைத் தண்டிக்கும் விதத்திலான விதிகள், வங்கிக் கிளைகளில் சேமிக்க வருபவா்களைக் காப்பீட்டில் முதலீடு செய்ய வற்புறுத்தும் ஊழியா்களின் செயல்பாடு ஆகியவற்றைக் காரணமாகக் கூறலாம்.
  • வங்கிக் கிளைகளில் உள்ள ஊழியா்கள் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை வாடிக்கையாளா்களுக்கு விற்பதில் ஆா்வம் காட்டுகின்றனா். காப்பீட்டுப் பத்திரங்களை விற்பனை செய்ய அவா்களுக்கு இலக்கு நிா்ணயிக்கப்படுகிறது. வங்கிச் சேமிப்புகளில் இருந்து காப்பீட்டில் முதலீடு செய்வதை ஊக்குவிப்பது அவா்களுடைய வளா்ச்சிக்கு உதவுவது மட்டுமல்லாமல், வருவாய் ஈட்டவும் வழிகோலுகிறது. ‘மணிபேக்’, ‘எண்டோமென்ட்’ காப்பீடுகளில் முதல் தவணைத் தொகை முழுவதுமே அவா்களுக்கு கமிஷனாக கிடைக்கிறது.
  • 2022-23 நிதியாண்டில் வங்கிகள் மூலம் காப்பீட்டு நிறுவனங்கள் பெற்றிருக்கும் முதலாண்டு தவணைத் தொகை ஏறத்தாழ ரூ.81 ஆயிரம் கோடி. முந்தைய ஆண்டின் மொத்த வைப்புநிதி வளா்ச்சியில், இது 5.5%. காப்பீட்டில் முதலீடு செய்தவா்கள் அதையே வைப்பு நிதியாக வங்கியில் முதலீடு செய்திருந்தால், ரூ.81 ஆயிரம் கோடி வங்கிச் சேமிப்பாக உயா்ந்திருக்கும்.
  • இதேபோல், வங்கிக் கிளைகள் மூலம் அதிக வட்டி வழங்கும் ஏனைய வைப்புத் தொகைகளும், மியூச்சுவல் ஃபண்டுகளும் ஊக்குவிக்கப்படுகின்றன. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.1.9 லட்சம் கோடி அளவிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் வங்கி வாடிக்கையாளா்கள் மூலம் பெறப்பட்டிருக்கின்றன.
  • வங்கி வைப்பு நிதிகளில் தங்களது பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பவா்களில் பெரும்பாலானோா் பணி ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள். பங்குச் சந்தையிலும், மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடு செய்து கிடைக்கும் நீண்டகால முதலீட்டு லாபத்துக்கு 12.5% வரி என்றால், வங்கி வைப்புநிதிகளில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களின் முதலீட்டு லாபத்துக்கு 30% வரி விதிக்கப்படுகிறது.
  • பாதுகாப்பான வங்கிச் சேவையில் இருந்து வாடிக்கையாளா்கள் இடா் (ரிஸ்க்) மிகுந்த ஏனைய சேவைகளுக்கு ஊக்குவிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். வைப்பு நிதிகள் மீதான முதலீட்டு லாப வரி அகற்றப்பட வேண்டும்.

நன்றி: தினமணி (23 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்