TNPSC Thervupettagam

வண்டல் மண் எனும் வரப்பிரசாதம்

April 25 , 2022 834 days 528 0
  • இந்தியா ஓர் விவசாய நாடு. விவசாய அபிவிருத்திக்கு அடிப்படைத் தேவை நீர் ஆதாரம், கூடுதலான விவசாய நிலம். மிக முக்கியமாக பயிர் செய்யும் விவசாயிகளின் நலன்.
  • அதாவது அவர்கள் விவசாயத் தொழிலை விட்டு விலகிவிடக்கூடாது. அவ்வாறு ஒரு விவசாயி வேளாண்மைத் தொழிலை விட்டு வெளியேறினால் வேறு ஒரு விவசாயி புதிதாக உள்ளே நுழைய வேண்டும்.
  • அப்போதுதான் விவசாயத் தொழில் எப்போதும் சமநிலையில் இருக்கும்.
  • ஆனால், இன்றைக்கு விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு இடும் இடுபொருள்களான ரசாயன உரங்களின் விலை தங்கத்தின் விலைபோல் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
  • ஆனால் விளைந்த தானியங்களுக்கான விலையோ இடுபொருள்களின் விலையேற்றத்திற்கான விகிதாசாரத்தில் இல்லாமல் அதலபாதாளத்தில் உள்ளது.
  • இதுதான் இப்படியென்றால் விவசாயிகள் தங்களது நிலத்தின் தன்மையை உயர்த்துவதற்காக இயற்கையான குப்பைகள், ஆட்டு, மாட்டு சாணங்கள் என பல தேவைகளை அவ்வப்போது மண்ணுக்கு கொடுக்க வேண்டியுள்ளது. இந்தக் குப்பைகள், எருக்களை விவசாயிகள் விலைக்கு வாங்கியே வயலில் போடவேண்டும்.
  • முற்காலங்களில் தன் வீட்டிலே வளர்க்கும் ஆடு, மாடுகளை கிடைபோட்டு அதன் சாணத்தை மண்ணுக்கு இட்டு அதை வளப்படுத்தி வந்தார்கள்.
  • ஆனால் இன்றைய காலகட்டத்தில் இயந்திரங்களின் வரவாலும் கால்நடைகளைப் பராமரிப்பதில் உள்ள சிரமங்களாலும் அவை முற்றிலுமாக குறைந்துவிட்டன.

உற்சாகப்படுத்த வேண்டும்

  • "ஏரினும் நன்றால் எருஇடுதல்' என்கிறார் வள்ளுவர். இந்த நிலையில் விவசாயிகளுக்குள்ள இன்னொரு வரப்பிரசாதம், தங்கள் வயல்களுக்கு நீர் பாய்ச்சும் கண்மாய்கள், ஏரிகள், குளங்களில் ஆகியவற்றில் படிந்துள்ள வண்டல் மண். இவ்வகை மண்களில் (குறிப்பாக கரம்பை மண்) வயலுக்கு வேண்டிய வளமான சத்துகள் நிறைய உள்ளன.
  • முற்காலங்களில் விவசாயிகள் மாட்டு வண்டிகளில் மூலம் இந்த மண்ணைஅள்ளி வயலுக்கு அடித்து பயன் அடைந்து வந்தார்கள்.
  • ஆனால், இந்த வகையான முயற்சியில் முழுக்கமுழுக்க மனித உழைப்பே அதிகம் தேவைப் பட்டதால் அவர்களால் அந்தப் பணிகளை முழுமையாக செய்து கொள்ள முடியவில்லை.
  • அக்காலங்களில் கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றின் மராமத்துப் பணிகள் மனித உழைப்பின் மூலமே செயல்படுத்தப்பட்டன.
  • அதனால் கண்மாய், ஏரிகளை ஆழமாக, அதிகமான நீர் கொள்வதற்கு ஏதுவாக தோண்ட முடியவில்லை. பல ஏரிகளிலும், கண்மாய்களிலும் கரைகளே இல்லாத சூழ்நிலையும் ஏற்பட்டது.
  • ஆனால் இன்று நவீன இயந்திரங்கள் வந்துவிட்டன. ஒரு நாள் முழுதும் 10 மாட்டு வண்டிகளில் அள்ளிய மண்ணை 10 நிமிடங்களில் ஜேசிபி இயந்திரம் மூலம் அள்ள முடியும்.
  • இந்த இயந்திரங்களின் வரவை நினைத்து விவசாயிகள் மகிழ்சியாக இருந்த நிலையில், அரசு வண்டல் மண் அள்ளுவதை தடை செய்தது. அப்படி அவர்கள் அள்ளுவதானால் வருவாய் துறை அனுமதி பெற்று அதன் விதிகளுக்குட்பட்டு அள்ள வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தது.
  • இது யாரையோ நினைத்து யாருக்காகவோ கொண்டு வந்த சட்டம். ஆனால் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது கிராமத்து விவசாயிகள்தாம்.
  • தங்களது சொந்த வயலில் உள்ள மேடு பள்ளங்களைக்கூட இயந்திரங்கள் மூலம் சீர் செய்ய முடியவில்லை. ஏகப்பட்ட கெடுபிடிகள்.
  • வருவாய் துறைக்கு வருவாய் கொடுத்ததால் தான் தங்களின் பட்டா நிலங்களை சமன் செய்ய முடியும் என்கிற நிலை. இந்த நிலை எப்போது மாறும் என்று ஏங்கியிருந்தார்கள் விவசாயிகள்.
  • இந்த நிலையில் தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பு அவர்கள் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.
  • "கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஏரி, குளங்கள் வறண்டும், நீர் மட்டம் குறைந்தும் காணப்படுகின்றன. இந்நிலையில், நீர் நிலைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை, விவசாயிகள் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்' என தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • இந்த அறிவிப்பு விவசாயிகளின் நலன் சார்ந்த அறிவிப்பு என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இதனால் கண்மாய்கள், ஏரிகளை அரசுப் பணத்தில் மராமத்து செய்வதற்கு ஆகும் பல கோடி ரூபாய் சேமிக்கப்படும்.
  • அந்தந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கண்மாய் வண்டல் மண்ணை தங்கள் நிலத்துக்கு தங்கள் செலவிலே அள்ளுவதால் அவர்களும் பயன்அடைகிறார்கள்.
  • அவர்களுக்கு நீரளிக்கும் கண்மாய் ஏரிகளையும் ஆழப்படுத்தி வளப்படுத்துகிறார்கள். கண்மாய்கள், ஏரிகள் ஆழப்படுத்துவதற்கென்று தனியாக நிதி ஒதுக்கும்போது முந்தைய அளவிலிருந்து இது குறையும்.
  • ஆனால், இது "நிபந்தனைகளுக்கு உட்பட்டு' என்று பல வணிக நிறுவனங்களின் சலுகை அறிவிப்பு போல் ஆகிவிடக்கூடாது.
  • மறுபடியும் வருவாய் அலுவலர்களின் அலுவலக வாசல்களில் விவசாயிகள் காத்துக் கிடக்கும் சூழ்நிலை உருவாகிவிடக்கூடாது.
  • கிராமங்களில் உள்ள கண்மாய், ஏரிகளில் பாசன வசதி உள்ளவர்களை மட்டுமே பயனாளிகளாக நிர்ணயிக்க வேண்டும். அவரவர் தங்கள் வயலுக்குத் தேவையான அளவு மண்ணை மட்டுமே அள்ள அனுமதிக்க வேண்டும்.
  • இதில் வேறு எந்த அரசியல் குறுக்கீடும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிலர் மண்ணை அள்ளி விவசாயிகளுக்கு விற்பதோ இதனை வணிகமாக மாற்றி வியாபாரம் செய்யும் தரகர்கள் உள்ளே நுழைவதோ தவிர்க்கப்பட வேண்டும்.
  • ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த ஊரைச் சேர்ந்தவர்களை வைத்தே ஒரு குழு அமைத்து அதன் மூலம் இப்பணியைச் செய்ய அனுமதிக்கலாம்.
  • வெளியாட்கள் நுழையாமல் தடுக்க வேண்டும். ஏதாவது காரணம் சொல்லி வருவாய் துறை அலுவலர்கள் விவசாயிகளிடம் பணம் பறித்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • இவ்வாறெல்லாம் கவனித்து செயல்பட்டால், விவசாயிகள் நிச்சயம் பயன் அடைவார்கள்; விவசாய நிலங்கள் மேம்படும். அவ்வாறு விவசாய நிலங்கள் வளமாகும் பட்சத்தில் விளை நிலங்களில் விளைச்சல் அதிகரிக்கும்.
  • ரசாயன உரங்களைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் இதுபோன்ற நியாயமான சலுகைகளை விவசாயிகளக்கு அளித்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.

நன்றி: தினமணி (25 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்