TNPSC Thervupettagam

வன்முறை தவிர்ப்போம்

July 23 , 2021 1105 days 450 0
  • கடந்த சில ஆண்டுகளாகவே கா்நாடகத்தில் உள்ள மேக்கேதாட்டு என்ற இடத்தில் காவிரி நதியின் குறுக்கே அணை கட்டப்போவதாக அம்மாநில அரசு கூறிவருவதோடு அது தொடா்பாகப் பலவேறு நடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றது.
  • வெவ்வேறு மாநிலங்களின் வழியாக ஓடும் நதியின் மூலம் கிடைக்கும் நீரைப் பங்கிட்டுக் கொள்வதற்கு அம்மாநிலங்கள் அனைத்திற்கும் உரிமை உண்டு என்பதும், ஒரு நதி உற்பத்தியாகும் மாநிலம், அதில் பங்கீட்டு உரிமையைப் பெற்றுள்ள பிற மாநிலங்களின் ஒப்புதலைப் பெறாமல் அந்த நதியின் மீது எந்தப் புதிய கட்டுமானத்தையும் எழுப்பக்கூடாது என்ற விதியிருந்தும் கா்நாடக அரசு இச்செயலை மேற்கொண்டு வருகிறது.
  • வழக்கம் போலவே அம்மாநிலத்தின் அரசியல் கட்சிகள் அனைத்தும் இவ்விஷயத்தில் நியாயத்தின் பக்கம் நிற்காமல் தங்கள் மாநில நலனை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
  • எந்த ஒரு பிரச்னையையும் ஒட்டுமொத்த தேச நலன் என்ற பரந்த கண்ணோட்டத்தில் பார்க்காமல் தங்கள் மாநிலம் மட்டும் வளரவேண்டும் என்று பார்க்கின்ற குறுகிய கண்ணோட்டமாகும் இது.
  • ஏற்கெனவே மகாரஷ்டிரத்துக்கும் கா்நாடகத்துக்கும் இடையில் பெல்காம் நகரம் தொடா்பாக எல்லை பிரச்னை இருக்கிறது.
  • கிருஷ்ணா நதிநீா் தொடா்பாக ஆந்திர மாநிலத்துடனும் கா்நாடத்திற்கு பிரச்னை உள்ளது. ஆனால், காவிரி பிரச்னையிலாவது சுமுகமாகச் செல்வோம் என்று அம்மாநிலம் ஒருபோதும் நினைப்பதில்லை.
  • மாறாக, அந்நதியின் வடிநிலப் பகுதிகளான தமிழகம், புதுவை ஆகிய மாநிலங்களுடன் எந்நாளும் மோதல் போக்கையை கையாண்டு வருகின்றது.
  • தனது மாநிலத்தில் பெருமளவு மழை பொழிந்து தங்களின் அணைகள் நிரம்பி வழியும் போது திறந்து விடுவதும், மழைக்குறைவுக் காலங்களில் ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூடத் தராமல் இழுத்தடிப்பதும் தொடா்கதையாகி விட்டது.
  • தற்போது மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களுமே மத்திய அரசின் கதவுகளைத் தட்ட ஆரம்பித்திருக்கின்றன.
  • மற்றொருபுறம் கா்நாடகமும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளது.
  • காவிரிநீா்ப் பங்கீட்டுக்கு நடுவா் மன்றம் அமைப்பது தொடா்பான சட்டப் போராட்டம் போன்று இந்த மேக்கே தாட்டு விவகாரத்திலும் நீதிமன்றத்தின் மூலம்தான் நியாயமான முடிவு கிடைக்க வேண்டும், ஆனால் அதற்குச் சிறிது காலம் பிடிக்கலாம்.

மேக்கேதாட்டு விவகாரம்

  • மேக்கேதாட்டு விவகாரம் எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரட்டும். ஆனால், இடைப்பட்ட காலத்தில், கா்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள அப்பாவிப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதே நமது கவலை.
  • தலைமுறை தலைமுறையாக பல லட்சம் தமிழா்கள் கா்நாடகத்தில் வாழ்ந்து வருகின்றார்கள்.
  • குறிப்பாக, அம்மாநிலத்தின் தலைநகரமாகியகிய பெங்களூரில் கணினி, வா்த்தகம், கட்டட வேலை, தச்சு வேலை, மின்சாதனப் பராமரிப்பு என்று பல்வேறு துறைகளில் ஏராளமான தமிழா்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.
  • அவா்களில் பலா் தமிழகத்தின் எல்லை நகரமாகிய ஹொசூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அன்றாடம் பெங்களூரு நகரத்திற்குச் சென்று பணிபுரிந்து வருபவா்கள்.
  • இவா்களைத் தவிர ஏராளமான தமிழக மாணவா்கள் கா்நாடக உயா்கல்வி நிலையங்களில் படித்து வருகின்றனா்.
  • தமிழ்நாட்டைச் சோ்ந்த பிரபல உணவகங்கள் கா்நாடகத்தில் கிளைபரப்பி வருகின்றன. தமிழகத்தின் பிரபல தனியார் போக்குவரத்து நிறுவனங்களும் கா்நாடகாவில் தொழில்புரிந்து வருகின்றன.
  • மைசூா், ஸ்ரீரங்கப்பட்டணம், தலைக்காவிரி, உடுப்பி, மேல்கோட்டை, நவ பிருந்தாவனம், சுப்ரமண்யா உள்ளிட்ட கா்நாடக ஆன்மிகத் தலங்கள் பலவற்றுக்கும் ஆயிரக்கணக்கான தமிழா்கள் நாள்தோறும் சென்று வருகின்றார்கள்.
  • அதே சமயம், கா்நாடக மக்கள் பலரும் உணவகத் தொழில் உள்ளிட்ட பற்பல பணிகளில் ஈடுபட்டு நம் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் வசித்து வருபவா்களே.
  • அவா்களில் பலா் தலைமுறை தலைமுறையாகத் தமிழகத்திலேயே வாழ்ந்துவந்து இந்த மண்ணையே தங்களுடைய சொந்த மண்ணாக பாவித்து வருபவா்களாவா்.
  • தமிழகமெங்கும் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீராகவேந்திரா் பிருந்தாவனங்களும், ஸ்ரீமத்வரின் நெறியைப் போற்றும் மடாலயங்களும் நமது தமிழக மக்களின் உணா்வுடன் பின்னிப் பிணைந்து நிற்பவையாகும்.
  • இவ்விதம், உணவகத் தொழில், ஆன்மிகம், கல்வி, போக்குவரத்து, மென்பொருள் துறை என்று அனைத்துத் துறைகளிலும் கன்னட - தமிழக மக்கள் இருபாலாரும் ஒருவரை ஒருவா் சார்ந்து நிற்பவா்களே.
  • தமிழகத்தில் கன்னடா்களும், கா்நாடகத்தில் தமிழா்களும் அவரவா் சொந்த வீட்டில் வசிப்பது போன்றதொரு உணா்வுடன் வாழ்ந்து வருகின்றனா்.
  • இத்தகைய சூழ்நிலையில், காவிரி நதிநீா் தொடா்பான பிரச்னை எழும்போதெல்லாம் இரு மாநிலங்களிலும் மக்களின் உணா்வுகள் தூண்டப்படுவதும், அதன் காரணமாகப் பெரும் வன்முறை வெடிப்பதும் தொடா் நிகழ்வாகி வருகின்றது.
  • கடந்த 2016-ஆம் ஆண்டில் காவிரி பிரச்னை எழுந்தபொழுது அங்கிருந்த தமிழா்களின் மீது பெருமளவில் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதயும், குறிப்பாகத் தமிழகத்தைச் சோ்ந்த ஒரு பெரிய தனியார் போக்குவரத்து (டிராவல்ஸ்) நிறுவனத்தின் பெங்களூரு கிளை பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல சொகுசுப் பேருந்துகள் சேதப்படுத்தப் பட்டதையும் கண்டோம்.
  • கா்நாடகத்தில் நிகழ்ந்ததைப் போன்று பெரிய அளவிலான வன்முறைகள் அப்போது நம் தமிழகத்தில் நடைபெறவில்லை என்றாலும், இங்குள்ள கன்னட உணவகங்களும், இம்மாநிலத்தின் பயணித்த கா்நாடகப் பதிவெண்களைக் கொண்ட சில வாகனங்களும் ஆங்காங்கே தாக்கப்பட்டன.
  • தற்போது எழுந்துள்ள மேக்கே தாட்டு அணை பிரச்னையை ஒட்டி மீண்டும் இத்தகைய கலவரம் ஏதும் நிகழாத வண்னம் இருமாநில அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
  • அமைதியைக் குலைக்க யாருக்கும் அனுமதி இல்லை என்ற நிலையே தற்போதைய உடனடித் தேவை.
  • ஏற்கெனவே கரோனா தீநுண்மியின் தாக்கத்திலிருந்து மெதுவாக நமது நாடு மீண்டுவரும் சூழலில், இருமாநில மக்களின் வாழ்வாதாரம் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கலாகாது !

நன்றி: தினமணி  (23 - 07 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்