- நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, சென்னை உயர்நீதிமன்றம் 2011-இல் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது கானுயிர் ஆர்வலர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்திருக்கிறது. இதனால் மனித-விலங்கு மோதல்கள் குறைய வாய்ப்புள்ளது.
மனிதர் விலங்கு ஒற்றுமை
- வனங்களில் வாழும் பழங்குடியினரும், கிராமங்களில் வாழ்பவர்களும் விலங்குளோடு ஒன்றாய் வாழ்ந்து உணவையும், குடிநீரையும் பகிர்ந்துகொண்டு எவ்வித முரண்பாடுமின்றி மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரங்களில் உள்ள கோவை மாவட்டத்து விவசாய நிலங்களில் வாழும் பெரும்பாலான படிப்பறிவில்லாத விவசாயிகள், யானைகளுடனேதான் வாழ வேண்டியதாக இருக்கிறது.
- யானைகள் விளைநிலங்களில் புகுந்து பயிரை உண்ணுவதும் வீடுகளை சேதப்படுத்துவதும் நடக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் அந்த எளிய மக்கள் யானைகளை வெறுக்காமல், அவற்றை "பெரியசாமி' என்று பக்தியுடன் குறிப்பிடுகின்றனர்!
- குடகுப் பகுதியின் ஆகும்பேயில் வாழும் மக்கள் கடும் விஷமுடைய ராஜநாகங்களுடன் சேர்ந்து வாழ்கிறார்கள். குளிர் காலத்தில் ராஜநாகங்கள் வெப்பம் தேடி இம்மக்கள் வசிக்கும் வீடுகளின் குளியலறைகளுக்குள் தஞ்சம் புகுந்து விடுகின்றன. சில அங்கேய கூடுகளைக் கட்டி முட்டையும் இடுகின்றன.
- அந்த சமயத்தில் அம்மக்கள் பாம்புகளைத் தொந்தரவு செய்யாமல், தங்களின் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். குளிப்பதற்கு மட்டும் அக்கம் பக்கத்து வீட்டுக் குளியலறையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நாகங்களும் சில நாள்களில் சத்தமில்லாமல் வெளியேறிவிடுகின்றன. இது மனித - விலங்கு ஒற்றுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
- காலங்காலமாக வனங்களில் வாழும் பழங்குடியினர், விலங்குகளின் நடமாட்டம் இருப்பதை அவற்றின் வாசம், காற்றின் போக்கு போன்றவற்றின் மூலம் அறிந்து அவைகளோடான மோதலைப் பெரும்பாலும் தவிர்த்து விடுவார்கள். மேலும், இவர்கள் ஒவ்வொரு யானைக் கூட்டத்தையும், ஏன் அதில் உள்ள ஒவ்வொரு யானையையும் கூட அடையாளம் கண்டுகொள்ளும் திறமை பெற்றிருப்பார்கள். "குறும்பானை',"ஒத்தைக் கொம்பன்', என்றெல்லாம் பெயர் வைத்து அழைப்பார்கள்.
- இவர்களது வாழ்க்கை முறையும் வனங்கள், வன உயிர்கள் ஆகியவற்றின் இயல்புகளை ஒட்டியே இருக்கும். இவர்களது வாழ்க்கை முறையை மாற்றியமைக்க முனையும்போதுதான் முரண்பாடு ஏற்படுகிறது.
தற்கால வாழ்க்கை
- எங்களது அரசு சாரா அமைப்பின் மூலம் மலைவாழ் பழங்குடியினரின் கல்வி மேம்பாட்டுக்காக சில முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். அது சம்பந்தமாக நானும் சில மாணவர்களும், நீலகிரியிலுள்ள, தொலைத்தொடர்பு வசதி எதுவும் இல்லாத ஒரு வனப் பகுதிக்கு சென்று கொண்டிருந்தோம்.
- வழியில் ஒரு காவல் துறை அதிகாரிக்கு எங்கள் வாகனத்தில் இடம் கொடுத்து உதகை வரை அழைத்துச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. எங்களது பயணத்தின் நோக்கத்தைக் கேட்டறிந்த அவர் சற்று நேரம் சிந்தித்துவிட்டுப் பிறகு மிக்க ஆதங்கத்துடன் "அந்த மக்களை தயவு செய்து விட்டு விடுங்கள். அவரவர் சொந்த நிலங்களை ஆண்டு, அதில் பாடுபட்டு உழைத்து பேராசையில்லாமல் இருப்பதை வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருந்தார்கள்.
- நீங்கள் வந்து "இட ஒதுக்கீடு, கல்லூரியில் சேருங்கள், பொறியியல் படியுங்கள்', என்று அவர்களுக்கு ஆசை காட்டினீர்கள். இருக்கும் நிலங்களை எல்லாம் விற்று விட்டு, கல்வி கற்க நகரத்துக்குச் சென்றார்கள்.
- நகரத்து மாணவர்களோடு போட்டி போட முடியாமல் பாதியில் விட்டுவிட்டு வந்து விட்டார்கள். இருந்த நிலமும் போயிற்று. வீடு வாசல் எல்லாம் போய் விட்டன. ராஜா மாதிரி இருந்தவர்கள் இப்போது பிச்சைக்காரர்களாகி விட்டார்கள்' என்று கூறினார்.
- இதில் உண்மை இருப்பதை நாம் மறுக்க இயலாது. அரசின் கொள்கைகள் நல்ல நோக்குடன் செயல்படுத்தப் பட்டாலும், சில நேரங்களில் எதிர்மறையான பலன்களைத் தந்து விடுகின்றன.
- இப்படி மாற்றியமைக்கப்பட்ட வாழ்க்கை முறைகளோடு போராடும் நேரம் வரும்போது வனங்களில் வாழ்பவர்களேகூட மனித- விலங்கு முரண்பாட்டுக்குக் காரணமாகி விடுகிறார்கள்
- ஆதிவாசிகளுக்கும், பழங்குடியினருக்கும் அத்தியாவசியமான அடிப்படை வசதிகளை மட்டும் செய்து கொடுத்துவிட்டு அவர்கள் விரும்பாத, அவர்களுக்குப் பொருந்தாத வாழ்க்கை முறைகளை அவர்கள் மீது திணிக்கும் முயற்சிகளை அரசும் அரசு சாரா இயக்கங்களும் கைவிடவேண்டும்.
- அவர்களுக்கு நல்லது என்று நாம் நினைப்பது அவர்களுக்கு உண்மையில் கெடுதலே எனும் போது அதைச் செய்யாதிருத்தலே நல்லது.
- நம் நாட்டில் எல்லா வனங்களுக்குள்ளும் வழிபாட்டுத் தலங்கள் இருந்து வந்துள்ளன. அப்போது பக்தி அடக்கமாகவும் அமைதியாகவும் இருந்தது. அதனால் விலங்குகளுக்கு தொந்தரவு இல்லை. இப்போதோ வழிபாடு என்ற பெயரில் கூட்டம் கூட்டமாக மக்கள் கும்மாளமிட்டு அட்டகாசம் செய்கின்றனர்.
- வனங்களுக்குள் எந்தக் கட்டுமானப் பணியும் கூடாது என்று வனச்சட்டம் சொல்கிறது, ஆனால் சிறு கடவுள் சிலைகள் இருந்த வனங்களில் இன்று பெரிய கோயில்கள் எழும்பியுள்ளன. இந்த விதிமீறலை வனத்துறை ஏன் அனுமதித்தது? வனங்களுக்குள் வழிபாடு முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்.
- மத உணர்வுகளைப் புண்படுத்தும் என்று அரசு இதைச் செய்யத் தயங்கினால் வரும் காலங்களில் மனித - விலங்கு மோதல் அதிகரிக்கும்.
மனித - விலங்கு மோதல்
- வனங்களை ஒட்டிய விளைநிலங்களில் வனவிலங்குகளை ஈர்க்கும் பயிர்களைப் பயிரிடுவதும் மனித- விலங்கு மோதல் ஏற்படக் காரணமாகிறது. யானை நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் வாழை, பலா, பழ மரங்கள் ஆகியவற்றைப் பயிரிட வேண்டாம் என வனத்துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தியும் அவர்கள் கேட்பதாக இல்லை.
- மலைப்பகுதிகளில் வனங்களெல்லாம் தேயிலைத் தோட்டங்களாகவும், பழத்தோட்டங்களாகவும், காபி எஸ்டேட்டுகளாகவும் மாறிவிட்ட நிலையில், அங்கு வாழ்ந்திருந்த விலங்குகள் எங்கு போகும்? ஊருக்குள்தான் வரும். அரசு தலையிட்டு காப்புக் காடுகள், வேளாண் நிலங்கள் என்று தெளிவாக எல்லைகளை வரையறுக்க வேண்டும்.
- மனித- விலங்கு முரண்பாடுகள் அதிகமுள்ள பகுதிகளில் விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப் பண்ணை முறையில் மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு அவற்றை சந்தைப்படுத்தவும் அரசே பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது ஒரு தற்காலிக தீர்வுதான். அது பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாகாது.
- மிகப்பெரிய பரப்பளவோடு இருந்த வனங்களெல்லாம் வளர்ச்சி என்ற பெயரில் துண்டாடப்பட்டு விட்டன. இதனால் யானைகளின் வழித்தடங்கள் குறுகி விட்டன. வனங்கள் துண்டாடப் படுவதைத் தவிர்க்க ஒரே வழி, அரசின் வனக் கொள்கைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவது.
- கானுயிர் விஞ்ஞானிகள், சுற்றுச்சூழலியலாளர்கள் ஆகியோரின் ஆலோசனைகளை ஏற்று, இழந்த வனங்களை மீட்கும் வகையில் சட்டங்களை இயற்ற வேண்டும்.
- அரசின் "சூழல் சுற்றுலாத்' திட்டம், சரியான வழிகாட்டுதல்கள், நெறிமுறைகள் இல்லாததால் வனங்களின் அழிவுக்கு வழிவகுத்து, மனித-விலங்கு மோதல் அதிகரிக்கக் காரணமாகி இருக்கிறது.
- ஒரு நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் எல்லாமே இன்னொரு நாட்டுக்கும் பொருந்தி வரும் என்று கூற இயலாது.
- ஆப்பிரிக்க நாடுகளில்,அரசுக்குப் பெரும் வருவாயை ஈட்டித் தரும் "கானுயிர் சுற்றுலா' கடும் கட்டுப்பாடுகளோடுதான் அனுமதிக்கப்படுகிறது. அதிநுட்ப கண்காணிப்பு, பொறுப்பான பயணிகள் ஆகியவற்றால் ஆப்பிரிக்க நாடுகளில் சூழல் சுற்றுலா வெற்றிகரமாக செயல்படுகிறது.
- இதேபோல் நம் நாட்டிலும் கடும் கட்டுப்பாடுகளுடன் "சூழல் சுற்றுலா' திட்டம் நடத்தப்பட வேண்டும். இல்லையேல் அது தடை செய்யப் படவேண்டும்.
- நீலகிரி போன்ற வனப்பகுதிகளில் வாகனங்களில் செல்வோர், வனத்துறையின் எச்சரிக்கையை மீறி சாலைகளில் வண்டியை நிறுத்தி விலங்குகளுக்கு உணவளிக்கின்றனர். இதனால் சாலைகளின் ஓரங்களில் குரங்குகள் உணவுக்காகக் காத்து நிற்கின்றன. அவற்றைத் தேடி சிறுத்தைகள் சாலைக்கு வருகின்றன. அங்கு மனித- விலங்கு மோதல் உருவாகிறது. தொடர் கண்காணிப்பு, கடும் அபராதம் ஆகியவை தேவை.
- மனித- விலங்கு மோதலைத் தடுக்க வேண்டுமானால், முதலில் வனங்களை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
- கர்நாடக மாநில வனத்துறை, அம்மாநிலத்தின் வனங்களையும், விலங்குகளையும் பற்றி "தி வைல்ட் கர்நாடகா' என்ற ஒரு அருமையான செய்திப் படத்தை வெளியிட்டுள்ளது. இப்படிப்பட்ட படங்களை பொதுமக்களுக்கு, - முக்கியமாக குழந்தைகளுக்கு - காட்டினால் அவர்களின் மனப்போக்கு மாறும்.
- மனிதன் இயற்கையை நேசித்து, அதன் அம்சமான வன விலங்குகளைப் போற்றி, பாதுகாத்து அவற்றோடு இணைந்து வாழப் பழகிவிட்டால் மனித- விலங்கு மோதல்களுக்கு இடமே இருக்காது என்பது உறுதி.
நன்றி : தினமணி (27-10-2020)