TNPSC Thervupettagam

வன விலங்குகள் மட்டுமல்ல, விவசாயிகளும் முக்கியம்

July 10 , 2024 185 days 199 0
  • யானை வழித்தடங்களை விரிவாக்கம் செய்வது தொடர்பான ஓர் அறிக்கையைத் தமிழ்நாடு வனத் துறை ஏப்ரல் 24ஆம் தேதி இணையதளத்தில் வெளியிட்டது. இது தொடர்பான கருத்துகளை மக்கள் மே 5ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது.
  • அறிக்கை முழுக்கவும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்றும், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் வலுவாகக் குரல்கள் எழுந்தன. இதையடுத்து, முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் (பிசிசிஎஃப்) அலுவலகத்தில் மொழிபெயர்ப்புப் பணி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
  • சமீபத்திய சட்டமன்றக் கூட்டத் தொடரில், இந்த அறிக்கை தொடர்பாக மக்களின் கருத்தைக் கேட்டே முடிவெடுப்போம் என்று வனத் துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தது ஆறுதலளிக்கும் விஷயம். அதேவேளையில், இதன் அடிப்படைப் பிரச்சினைகளை அரசு முழுமையாகப் புரிந்துகொண்டால்தான் உறுதியான தீர்வுகளை நோக்கி நாம் நகர முடியும்.

நிலைகுலையும் வாழ்க்கை:

  • இந்திய அரசமைப்புச் சட்டம் பொதுப்பட்டியல் பிரிவு 17-ஏ, காடுகள், 17-பி வனவிலங்குகள், பறவைகளைப் பாதுகாத்தல் தொடர்பாகக் குறிப்பிடுகிறது. வனங்களையும், வன விலங்குகள் / பறவைகளையும் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மத்திய - மாநில அரசுகளுக்கு உள்ளது.
  • எனவே, அதற்கான சட்டங்கள், விதிகள், வழிமுறைகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வந்துள்ளன. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972, வனப் பாதுகாப்புச் சட்டம் 1980, பல்லுயிர்கள் பெருக்கச் சட்டம் 2002 போன்றவை மேற்குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்டவைதான். இத்தனை சட்டங்கள் இருந்தாலும் வனவிலங்குகள் கொல்லப்படுவதும், பல மாவட்டங்களில் வனவிலங்கு - மனித எதிர்கொள்ளலும் தொடர் நிகழ்வுகளாக இருந்துவருகின்றன.
  • வனவிலங்குகள் காடுகளைவிட்டு வெளியேறி, கிராமங்கள், நகரங்கள் என மக்களின் குடியிருப்புகளில் புகுந்து சேதம் விளைவிப்பது பரபரப்பான செய்தியாக அவ்வப்போது வெளியாகிறது. வேளாண் மகசூலை அழிப்பதிலும் வனவிலங்குகள் முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கின்றன. குறிப்பாக யானை, மான், குரங்கு, மயில், காட்டுப்பன்றி போன்றவற்றால் பழங்குடி மக்களும், காட்டு எல்லை விவசாயிகளும் பெரும் இழப்புக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
  • விவசாயத்துக்கு அடுத்தபடியாகக் கால்நடைகள்தான் அவர்களின் வாழ்வாதாரம். இரண்டுமே வனவிலங்குகளால் அழிக்கப்படும்போது அந்தக் குடும்பமே நிலை குலைந்துபோகிறது. இவற்றை ஈடுசெய்யும் வகையிலான அரசு நடவடிக்கைகளும் இல்லை. ஆண்டுதோறும் வனவிலங்குகளால் எவ்வளவு மதிப்புக்கு வேளாண் பயிர்கள் அழிக்கப்படுகின்றன என்பது குறித்த முறையான கணக்குகூட அரசிடம் இல்லை.

கேரள முன்னுதாரணம்:

  • வனவிலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. அதே நேரத்தில், அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். காட்டுப் பன்றிகளால்தான் அதிகமான பயிர் பாதிப்பு ஏற்படுகிறது. இரவு நேரத்தில் காட்டுப் பன்றிகள் கூட்டமாக வந்து சில மணி நேரத்தில் ஏக்கர் கணக்கில் அழிவை ஏற்படுத்திவிடுகின்றன.
  • வயல்வரப்புகளில் சிறுவகை வெடிகுண்டுகளை வைத்து அதைக் காட்டுப் பன்றிகள் கவ்வும்போது வெடித்துச் சிதறவைப்பதற்கு ஒப்புதல் அளித்து கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் காட்டுப் பன்றிகளை அழிக்க அரசு சொல்லியிருக்கும் யோசனைகளோ நடைமுறைச் சாத்தியமற்றவை.
  • இதற்காகக் குழு அமைப்பது, அக்குழு ஆய்வுசெய்து மாவட்ட வன அலுவலருக்குப் பரிந்துரை செய்வது, பிறகு அவர் ரேஞ்சருக்கு அனுமதி கொடுத்தால் ரேஞ்சர் வந்து பன்றிகளை வேட்டையாடுவார் என்பதெல்லாம் கவைக்கு உதவாத யோசனைகள். அதற்குள் பன்றிக்கூட்டம் மொத்தக் காட்டையும் உழுது நிரவிவிட்டுச் சென்றுவிடும்.
  • வயல்வெளிகளுக்கு வந்து பயிர்களை அழிக்கும் பன்றிகளை அழிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகள் - மனிதர்களைத் தாக்குவதற்கும் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் யார் காரணம் என்பது முக்கியக் கேள்வி. வனவிலங்குகள் காட்டைவிட்டு வெளியேறுவதற்குப் போதுமான உணவு காட்டுக்குள் கிடைக்காதது, தண்ணீர் இல்லாதது, ஆக்கிரமிப்புகளால் காட்டின் பரப்பளவு குறைந்துவருவது போன்றவை முக்கியக் காரணங்கள்.
  • எனவே, உணவைத் தேடியும் - தண்ணீரைத் தேடியும் வன விலங்குகள் காட்டைவிட்டு வெளியேறுகின்றன. இதைத் தடுக்கக் காட்டுக்குள்ளேயே, தண்ணீர்த் தொட்டிகள், தடுப்பணைகள், குளங்கள் மூலம் தண்ணீருக்கு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அடர்ந்த காடுகளை வளர்ப்பதன் மூலம் யானைகளுக்குரிய உணவு கிடைக்கும்.
  • ஆடு - மாடுகளை மேய அனுமதிப்பதன் மூலம் காடுகளுக்குரிய எரு கிடைத்துக் காடு செழித்து வளர உதவும். ஆனால், கால்நடைகள் மேய்வதால் காடுகள் அழிகின்றன என்ற தவறான கண்ணோட்டத்துடன் வனத் துறையினர் செயல்படுகின்றனர். இயற்கைச் சமன்பாடு என்கிற விதி காட்டைச் சார்ந்து வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும்.
  • சுற்றுலாவை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில் அதையொட்டி பெரிய ரிசார்ட்டுகள், தங்கும் குடில்கள் உருவாக்குவதன் காரணமாக, வன விலங்கு நடமாட்டங்கள் தடுக்கப்படுகின்றன. வளர்ச்சித் திட்டங்கள் என்கிற பெயரில் காட்டு நிலங்கள் வேறு பயன்பாடுகளுக்குத் திருப்பிவிடப்படுகின்றன. யானையின் வழக்கமான வழித்தடங்கள் இவ்வாறு மறிக்கப்படும்போது, புதிய வழித்தடங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயம் யானைகளுக்கு ஏற்படுகிறது.
  • தமிழ்நாட்டில் 2017இல் 18 யானை வழித்தடங்கள் இருந்தன. அது 2023ல் 36 ஆக அதிகரித்துவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் ஒரு வழக்கில் வனத் துறையால் சமர்ப்பிக்கப்பட்ட பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது அது 42 ஆக விரிவடைந்துவிட்டதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
  • இதனால் பாதிக்கப்படுவது அப்பாவிப் பழங்குடி மக்களும் விவசாயிகளும்தான். பாரம்பரியமான வழித்தடங்களில் தடை ஏற்படுத்தப்படும்போது யானைகள் திகைப்படைந்து ஏதாவதொரு புதிய வழியை ஏற்படுத்திக்கொள்கின்றன.
  • யானை என்னும் பேருயிர் பல்லாண்டு காலமாகக் காடுகளில் வாழ்ந்துவருகிறது. திடீரென்று 7 ஆண்டு காலத்தில் எப்படி அதன் வழித்தடம் இரண்டரை மடங்கு அதிகரிக்கும்? இதனால், பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை இடம்பெயர வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தங்கள் மூதாதையர் வாழ்ந்த இடத்தை, வீட்டைவிட்டு, தங்களின் வாழ்வாதாரமான நிலத்தைவிட்டு மக்கள் எப்படி வெளியேற முடியும்? இவ்வளவு இழப்புகளுக்கு மத்தியிலும் மக்கள் அங்கேயே தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவருகின்றனர். எனவே, சாதாரண மக்களைப் பாதிக்கும் வகையிலான ஆலோசனைகள் முற்றிலும் திரும்பப் பெறப்பட வேண்டும்.

அரசு செய்ய வேண்டியவை:

  • சம்பந்தப்பட்ட மாவட்டங்களில், பகுதிகளில் சிறப்புக் கிராம சபைக் கூட்டத்தை நடத்தி மக்களிடம் கருத்துக் கேட்க ஏற்பாடு செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து மக்களை வெளியேற்றுவது என்கிற முடிவை எடுக்கக் கூடாது.
  • யானையின் பாரம்பரிய வழித்தடங்களில் உள்ள பெரும் கட்டிடங்கள் அகற்றப்பட வேண்டும். ஏழை மக்களின் குடியிருப்புகள் தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட வேண்டியிருந்தால், மாற்று இடம், இழப்பீடு, வீடு கட்டிக் கொடுப்பது உள்ளிட்ட முழுப் பாதுகாப்புக்கு அரசு உத்தரவாதம் தர வேண்டும்.
  • வன விலங்குகளால் ஏற்படும் உயிர்ச்சேதம், பயிரிழப்பு, பொருள்சேதம் ஆகியவற்றுக்கு முழுமையான இழப்பீடு உடனடியாக வழங்கப்பட வேண்டும். இயற்கைப் பேரழிவு என்கிற முறையில் வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் பாதிப்புகளுக்கும் முழுமையாக இழப்பீட்டை வழங்க அரசு முன்வர வேண்டும்.
  • அத்துடன், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் காப்பீடு கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட வேண்டும். மனித உயிரிழப்புக்குத் தற்போது ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. ஆனால், பலத்த காயமடைந்தால்கூட ரூ.50,000 மட்டுமே வழங்கப்படுகிறது.
  • நிரந்தரமான ஊனம் ஏற்பட்டால் எந்த உதவியும் இல்லாத நிலை. பயிரிழப்புகளுக்கு அதிகபட்சம் ரூ.25,000 என்பதெல்லாம் ஏற்புடையதாக இல்லை. இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட வேண்டும். அரசு இவற்றை முழு மனதுடன் நிறைவேற்றினால் வன விலங்குகளும் விவசாயிகளும் பாதுகாக்கப்படுவார்கள்!

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்