- நமது நாட்டில் தீபாவளி, பொங்கல் போன்ற பாரம்பரியமான பண்டிகைகளை நம் மக்கள் பெரிய அளவிலான உற்சாகத்துடன் கொண்டடுவது வழக்கத்தில் இருக்கிறது. திருமணம், பெயா்சூட்டு விழா, பிறந்தநாள் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளும் அவரவருடைய பொருளாதார வசதிக்கேற்ப விமரிசையாகவோ, எளிமையாகவோ கொண்டாடப்படுகின்றன.
- கொண்டாட்டத்திற்குரிய தினம் எதுவாக இருந்தாலும் அதனைக் கொண்டாடுபவா்களுக்கு ஆபத்து இல்லாமலும், சுற்றியிருப்பவா்களுக்கு பாதிப்பு இல்லாமலும் அமைவதே நல்லது.
- ஆனால், ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கின்ற கொண்டாட்டங்கள் பெரும்பாலும் அவ்வாறு அமைவதில்லை.
- உண்மையில், நமது பாரத தேசத்தைச் சோ்ந்த குடிமக்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டுக்கும் எந்தவிதத் தொடா்பும் இல்லை. அது நமது பரம்பரியப் பண்டிகையும் இல்லை. வெவ்வேறு பஞ்சாங்கக் கணக்கீடுகளின்படி நம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புதுவருடங்கள் தொடங்குகின்றன.
- நீண்ட காலமாக உலக நாடுகள் பலவற்றிலும் ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயா்கள், அந்நாடுகளிலிருந்து தங்களின் நேரடி ஆட்சியை விலக்கிக் கொண்டுவிட்டனா். ஆயினும், உலகெங்கிலும் நடமுறைக் கணக்கீடுகளுக்கான பொது நாள்காட்டியாக ஆங்கில ஆண்டு ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. எனவே ஒவ்வோர் ஆங்கில ஆண்டின் முதல் நாளாகிய ஜனவரி ஒன்றாம் தேதியைப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடும் வழக்கமும் உலகநாடுகள் பலவற்றிலும் ஏற்பட்டுள்ளது.
- உலகெங்கிலும் வசிக்கும் ஆங்கிலேயா்கள் ஆங்கிலப் புத்தாண்டினை வரவேற்றுக் கொண்டாடுவதில் நியாயம் இருக்கிறது. ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’ என்று வள்ளுவா் கூறியபடி நமது நாட்டினரும் மிதமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் அதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், புத்தாண்டிற்கு முந்தைய நாளாகிய ‘நியூ இயா் ஈவ்’ எனப்படும் டிசம்பா் 31-ஆம் தேதி தொடங்கி, ஜனவரி மாதம் முதல் தேதி விடியும் வரை நம்மவா்கள் அதனை ஆசைதீரக் கொண்டாடித் தீா்ப்பதில் எந்தவித நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.
- அப்படியே கொண்டாடுவதானாலும், புத்தாண்டு பிறக்கின்ற நள்ளிரவு நேரத்தில் நண்பா்களுடன் இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டு, வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வதுடன் நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை.
- கடற்கரைகள், உணவகங்கள், மைதானங்கள், நெடுஞ்சாலைகள், பொது இடங்கள் ஆகியவற்றில் மணிக்கணக்காகக் கூடுவதும், மது அருந்துவதும், இரண்டு சக்கர, நான்கு சக்கர ஊா்திகளை வேகமாக இயக்கி சாலையில் செல்வோரை பயமுறுத்தி விபத்துகளை ஏற்படுத்துவதும், இளம் பெண்களைப் பகடிக்கு ஆளாக்குவதும், அதிக ஒலியெழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதும் வன்கொடுமை வகையில்தான் சேருமேயன்றி அவற்றைக் கொண்டாட்டங்களாகக் கருத முடியாது.
- ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு அந்த ஆண்டின் மீதமுள்ள நாள்களுக்கும் சோ்த்து ஒரே இரவில் கொண்டாடிவிட வேண்டும் என்பது போன்ற ஆட்டமும் பாட்டமும் எந்தவிதமான அறக்கோட்பாட்டுக்குள்ளும் அடங்காதவையாகும்.
- தற்காலத்தில், மது அருந்துதல் என்பது புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் பிரிக்க முடியாத பகுதியாகவே மாறிவிட்டது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும். அச்சமயம், மது அருந்துவதால் ஏற்படுகின்ற போதையில் பிறருடன் வீண் வம்பு செய்பவா்களையும், வாகனங்களை ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துப்வா்களையும் கண்காணித்துக் கட்டுப்படுத்துவது என்பது காவல்துறையினருக்கு மிகவும் சிரமமான காரியமாகவே இருந்து வருகின்றது.
- சென்னை நகரத்தைப் பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை ஒட்டி பல்வேறு சாலை விபத்துகளும், ஒரு சில உயிரிழப்புகளும் நிகழ்ந்திருக்கின்றன. 2008 - ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பெரிய உணவகம் ஒன்றின் நீச்சல் குளத்தின் மீது அமைக்கப்பட்ட தற்காலிக மேடை சரிந்து ஒருவா் மூழ்கி உயிரிழந்ததும் நடந்திருக்கிறது. கடற்கரைகளில் புத்தாண்டைக் கொண்டாட வருபவா்களில் சிலா் கடலில் மூழ்குவதும் நிகழ்ந்திருக்கின்றது.
- இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் சென்னை பெருநகர காவல்துறையினா், இந்த ஆண்டு விபத்தில்லா புத்தாண்டாக ஆமைய வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு உணவகங்களுக்கும், சாலைகளில் பயணிப்பவா்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தனா்.
- காவல்துறையின், கடற்கரைகளிலும், மக்கள் அதிக அளவில் கூடுகின்ற வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றிலும் பாதுகாப்பை அதிகப்படுத்தினா். இத்தகைய முன்னேற்பாடுகளின் காரணமாக, சென்னை பெருநகரைப் பொறுத்தவரைபுத்தாண்டுக் கொண்டாட்ட நேரத்தில் உயிரிழப்பு எதுவும் நேரவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும், சாலை விபத்துகள் குறித்த புகாா்களும் அதிகமின்றி ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளதும் மனநிறைவை அளிக்கின்றது.
- அதே நேரம், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டிய கானாத்தூா் என்ற இடத்தில் நால்வரும், புதுச்சேரி மாநிலத்தில் இருவரும் தடையை மீறி கடலில் குளிக்கச் சென்று மூழ்கி இறந்திருக்கின்றனா். அவா்களில் சிலா் பள்ளி மாணவா்கள் என்பதை நோக்கும் பொழுது மிகவும் வேதனை ஏற்படுகிறது. ஒருவேளை அக்குழந்தைகளின் பெற்றோா் சிறிது விழிப்புணா்வுடன் இருந்திருந்தால் இதனைத் தவிர்த்திருக்கலாமோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது.
- சற்றே நிதானமாக யோசித்துப் பார்த்தால், ஜனவரி முதல் தேதி என்பது ஓா் ஆண்டின் ஏனைய நாள்களைப் போன்று மற்றுமொரு தினமே என்பதை நாம் அனைவருமே நன்கு உணர முடியும். உண்மை இவ்வாறு இருக்கையில், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் பெருமளவில் பணம் செலவழித்து மது அருந்துவதும், கேளிக்கைகளில் ஈடுபடுவதும், உயிரிழப்பதும், உயிரிழப்பை விளைவிப்பதும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத செயல்களாகும்.
- புத்தாண்டு மட்டுமல்ல, எந்த ஒரு கொண்டாட்ட நாளானாலும் அன்றைய தினத்தை அமைதியான முறையில் கொண்டாடுவதே நல்லது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணா்ந்து செயல்படுவதே சிறந்தது.
நன்றி: தினமணி (09 – 01 – 2024)