TNPSC Thervupettagam

வரலாறு ஒன்று – பாடங்கள் இரண்டு!

October 20 , 2024 11 days 37 0

வரலாறு ஒன்று – பாடங்கள் இரண்டு!

  • ஒரு நாடு எந்த வகையிலான அரசியல் கட்டமைப்பைப் பெறுகிறது என்பதைப் பொருத்தே அதன் பொருளாதார வளர்ச்சி அமைகிறது. எகிப்து, இந்தோனேசியா இரண்டும் சமீபத்திய வரலாற்றில் இதில் எதிரெதிர் உதாரணங்களாகத் திகழ்கின்றன. இரு நாடுகளிலும் எல்லாத் துறைகளிலும் ராணுவ ஆதிக்கம் கடந்த காலங்களில் நீக்கமற நிறைந்திருந்தன. பாகிஸ்தான் இன்று எந்த நிலையில் இருக்கிறதோ - அதே நிலையில் அவ்விரண்டும் இருந்தன. பிறகு இரண்டுமே வெவ்வேறு பாதையில் பயணப்பட்டன, அதனால் அவற்றின் பொருளாதார வளர்ச்சியும் வேறுபட்டுள்ளது.
  • எகிப்தில் சர்வாதிகாரம் செழிக்கிறது - பொருளாதாரம் தடுமாறுகிறது; இந்தோனேசியாவில் ஜனநாயகம் நன்கு செயல்படுகிறது - பொருளாதாரம் துடிப்பாக இருக்கிறது. இவ்விரண்டுமே பாகிஸ்தானுக்குப் பாடங்கள், வரலாற்றின் முக்கியமான கட்டத்தில் பாகிஸ்தான் இப்போது இருக்கிறது.

எகிப்து ‘முன்மாதிரி’

  • மத்திய கிழக்கில் உள்ள எகிப்து, அரபுக் குடியரசுகளில் முக்கியமான இடத்தில் இருக்கும் நாடு. மக்கள்தொகை 1,160 லட்சம் (11.6 கோடி). பெயரளவுக்கு அதை ஜனநாயக நாடு என்று அழைத்தாலும், விடுதலை பெற்ற 1922 முதல் மிகச் சிறிய காலமே அங்கு ஜனநாயகம் உண்மையாக நிலவியது. பெரும்பாலான காலத்தில் ராணுவத்தின் வழிகாட்டலில் ஒற்றைக் கட்சியின் ஆட்சியோ, ஒரே தனிநபரின் யதேச்சாதிகார ஆட்சியோதான் அங்கு வழக்கமாகிவிட்டது. சர்வசகஜமாகிவிட்ட மனித உரிமை மீறல்கள், நேர்மையான – சுதந்திரமான தேர்தல்களில் வாக்களிக்க மக்களுக்கு உரிமைகள் மறுப்பு, பேச்சுரிமை – அமைப்பாக சேர்ந்து செயல்படும் உரிமைகள் மறுப்பு என்பதே எகிப்தின் வரலாறாகத் தொடர்கிறது.
  • எகிப்து குடியரசு நாடு, சட்டப்படி அரைவாசி அதிபர் முறை ஆட்சியுள்ள நாடு என்றாலும் உண்மையில் ஒரேயொரு தலைவரின் விருப்பப்படியான யதேச்சாதிகார ஆட்சிதான் நிலவுகிறது. எகிப்தின் அனைத்துத் துறைகளிலும் ராணுவத்தின் தலையீடு அல்லது ஆதிக்கம்தான், அதன் பொருளாதார வளர்ச்சியிலும் எதிரொலிக்கிறது. பொருளாதாரமோ ஒட்டுண்ணி முதலாளியமாகிவிட்டது (சலுகைசார் முதலாளியம்). அரசுக்கு வரவேண்டிய வருமானத்தில் பெரும்பகுதியை அரசின் உயர்நிலையில் இருப்பவர்கள் சுரண்டுகின்றனர். ஆண்டுக்கு 3,500 டாலர்கள் நபர்வாரி வருமானம் என்பதால், நடுத்தர வருவாய் நாடுகளில், இது குறைந்த நடுத்தர வருவாயுள்ள நாடாக இருக்கிறது.
  • மக்களிடையே செல்வ வளம், வருமானம் ஆகியவற்றில் மிகப் பெரிய வேறுபாடு நிலவுகிறது, வறுமை எல்லாப் பகுதிகளிலும் பரந்து விரிந்திருக்கிறது. பாகிஸ்தானைப் போலவே கடுமையான நிதி நெருக்கடியிலிருந்து மீள, பன்னாட்டுச் செலாவணி நிதியத்தை (ஐஎம்எஃப்) எகிப்து தொடர்ந்து நாடிவருகிறது. அந்த அமைப்பிடம் அதிகக் கடன் வாங்கிய நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது எகிப்து. ஐஎம்எஃப் வழிகாட்டலில் 12 சீர்திருத்த நடவடிக்கைகளை அமல்செய்துவருகிறது.
  • ஐஎம்எஃப் உதவியோடு சவுதி அரேபியா உள்ளிட்ட பணக்கார வளைகுடா நாடுகளும் அவ்வப்போது கடன் தந்து எகிப்துக்கு உதவுகின்றன. எகிப்தை ஆளும் உயர்வர்க்கமோ அப்படி வாங்கும் கடன்களையும் வெளிநாட்டு மானியங்களையும் வீணான இனங்களில் செலவிட்டும், மக்களுக்குப் பயன்பட வேண்டிய திட்டங்களுக்குத் தரும் தொகைகளை மடைமாற்றி, தங்களுடைய கஜானாவில் சேர்த்துக்கொண்டும் நிதிநிலையை மேலும் மோசமாக்குகின்றன.
  • நிர்வாகத் திறனில் பாகிஸ்தானைப் போலவே எகிப்தும் மிகவும் மோசமான இடத்தில், உலக அளவில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. ஊழலில் எகிப்துக்கு 26வது இடம், பாகிஸ்தானுக்கு 22வது இடம். கொடுத்த கடனுக்குப் பொறுப்பு என்ற விதத்தில் பார்த்தால் எகிப்துக்கு 9வது இடம், பாகிஸ்தானுக்கு 25வது இடம். இந்த மதிப்பீட்டை உலக வங்கி வெளியிட்டிருக்கிறது.

எகிப்து முன்னோடியா?

  • கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் செயல்பாட்டைப் பார்த்தால், எகிப்தை முன்மாதிரியாக ஏற்றுக்கொண்டுவிட்டார்களோ என்ற சந்தேகமே ஏற்படுகிறது. பாகிஸ்தான் அரசையும் ஒரே நபர் ஆட்டிப்படைக்கிறார், தேர்தல்கள் வெறும் கண் துடைப்புகளாகவே இருக்கின்றன, அரசமைப்புச் சட்டத்தை அமல்செய்ய வேண்டிய நீதிமன்றமோ கட்டப்பஞ்சாயத்தைப் போலவே (அதிகாரத்தில் இருப்பவர்களின் சொல்படி) நடந்துகொள்கிறது, ராணுவம் எல்லா இடங்களிலும் நீக்கமற நுழைந்து அதிகாரம் செய்கிறது, தீர்மானிக்கிறது. ‘முதலீட்டுக்கான உச்ச பேரவை’ என்ற அமைப்பு 2016இல், முதலீடுகளை எளிதாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டதும் அதையே உறுதிப்படுத்துகிறது. அரசியலில் எதிர்க்குரல்கள் ஒடுக்கப்படுகின்றன, மனித உரிமைகள் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன.
  • எகிப்தின் செயல்பாடுகளை முன்மாதிரியாகக்கொண்டு ஓர் அரசியல் கட்சியையே கொன்றுவிடும் அளவுக்கு, அடுத்த கட்டத்துக்குச் செல்கிறது பாகிஸ்தான் என்று அரசியல் விமர்சகர்கள் அஞ்சுகின்றனர். எகிப்தில் அதிபர் முகம்மது மோர்ஸியின் ‘சுதந்திரம் – நீதி கட்சி’ அழிக்கப்பட்டது, அந்தக் கட்சிக்கு ‘முஸ்லிம் சகோதரத்துவம்’ (முஸ்லிம் பிரதர்ஹூட்) என்ற பெயரும் உண்டு.

இந்தோனேசிய ராணுவம்

  • எகிப்திலும் பாகிஸ்தானிலும் ராணுவம் நடந்துகொள்வதைப் போல இந்தோனேசிய ராணுவம் நடந்துகொள்ளவில்லை. 1998இல் மக்களுடைய எதிர்ப்பு காரணமாக சுகார்த்தோ அரசு கவிழ்ந்த பிறகு அமைதியை நிலைநாட்ட ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஆனால், உலக வரலாற்றில் இருந்திராத வகையில் - மிகவும் துணிச்சலான, விவேகமான முடிவை ராணுவம் எடுத்தது. அதிகாரத்தைக் கையில் எடுத்த ராணுவம் நாட்டின் எல்லாத் துறைகளிலும் தலையிட்டு பாழ்படுத்தாமல் தேர்தலை நடத்தி, மக்களின் பிரதிநிதிகளிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு பாசறைக்குத் திரும்பிவிட வேண்டும் என்று முடிவெடுத்தது.
  • இந்த வரலாற்றைப் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் டிரைஸ்டன் திரெய்ஸ்பாச் என்பவர், மாணவர்களுக்கான ஆய்வுப் பாடமாகவே பதிவுசெய்துள்ளார். ‘மீண்டும் பாசறைக்கு: அரசியலிலிருந்து வெளியேறிய இந்தோனேசிய ராணுவம் 1998 – 2000’ என்று அதற்குத் தலைப்பிட்டுள்ளார்: முப்பதாண்டுகளுக்கும் மேல் இந்தோனேசியாவை ஆட்சிசெய்த அதிபர் சுகார்த்தோவுக்கு மக்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதனால் 1998 மே மாதம் ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டிய தருணம் ராணுவத்துக்கு வாய்த்தது. பல ஆண்டுகளாக, செய்யப்படாமல் இருந்த அரசியல் சீர்திருத்தங்களை மிகச் சிறிய குழுவாக இருந்த மூத்த ராணுவ அதிகாரிகளே பட்டியலிட்டு அமல்படுத்தி, அதிகாரத்தை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்துவிட்டு பாசறைக்குத் திரும்பிவிட்டனர்.

அகுஸ் விஜோஹரோ

  • அகுஸ் விஜோஹரோ என்ற ராணுவ அதிகாரி, அந்தச் சீர்திருத்த வரைவு அறிக்கைகளைத் தயாரித்தார். ராணுவத்துக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் அதுவரை இருந்த உறவுமுறையை மாற்றியதுடன், அது எப்படி இருப்பது ஜனநாயகத்துக்கு நல்லதோ அந்த வகையில் வழிகாட்டியிருந்தார். அதுவரையில் அரசியலிலும் அரசு நிர்வாகத்தின் பல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திவந்த ராணுவம் அவற்றிலிருந்தெல்லாம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
  • ஆளுங்கட்சியுடன் இருந்த தொடர்பை முதலில் துண்டித்துக்கொண்டது. நாடாளுமன்றத்தில் ராணுவத்துக்கு தரப்பட்ட பிரதிநிதித்துவம் குறைத்துக்கொள்ளப்பட்டது. மக்களாட்சியின் பல பகுதிகளில் முக்கியப் பொறுப்புகளில் இருந்த ராணுவ அதிகாரிகளை, பொறுப்பாளர்களை சிவிலியன் அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடும்படி ராணுவத் தலைமை கட்டளையிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ராணுவ அமைப்புகள் மீதும் ராணுவக் கொள்கை மீதும் கட்டுப்பாடு இருக்குமாறு சட்டங்களும் திருத்தப்பட்டன.
  • வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த முடிவுகளுக்குப் பிறகு இந்தோனேசியாவின் பொருளாதாரம் பெருமளவுக்கு வளர்ச்சி கண்டது. அன்று முதல் இன்றுவரை அதில் மாற்றமே இல்லை. 1998 தொடங்கி 2023 வரையில், அமெரிக்க டாலர் மதிப்பில் நாட்டின் ஜிடிபி 14 மடங்கு (1400%) அதிகரித்தது. நபர்வாரி வருமானம் 11 மடங்கு (1100%) உயர்ந்தது. இந்தோனேசியாவில் 2022இல் மட்டும் 2500 கோடி அமெரிக்க டாலர்கள் அன்னிய நேரடி முதலீடாக பெற்றப்பட்டது, தென்கிழக்கு ஆசியாவில் இந்தோனேசியா பெரிய பொருளாதார நாடு.
  • இதோடு ஒப்பிட்டால் எகிப்தின் நபர்வாரி ஆண்டு சராசரி வருமானம் இதே காலத்தில் 2.8 மடங்கு மட்டுமே உயர்ந்தது, பாகிஸ்தானில் 3.3 மடங்கு.
  • கடந்த சில பத்தாண்டுகளில் எகிப்தில் ராணுவத்தின் தலையீடு மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டேவருகிறது. ஜனநாயக அமைப்புகளைக் கலைப்பது, மக்களுடைய விருப்பங்களுக்கு மாறான முடிவுகளை எடுப்பது, ஆட்சியாளர்களின் முடிவுகளை மக்கள் மீது திணிப்பது என்று சர்வாதிகாரம் வலுப்பட்டதால் எகிப்தில் பொருளாதாரம் வளர்வதற்குப் பதிலாக, வீழ்ச்சி அடைந்துவருகிறது.
  • அரசு நிர்வாகம் நமக்கெதற்கு அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்று ஜனநாயகத்துக்கு ஆதரவாக இந்தோனேசிய ராணுவம் செயல்பட்டதால், அந்த நாடு பொருளாதார வல்லரசாகவே மாறிக்கொண்டிருக்கிறது. எகிப்து, இந்தோனேசியா ஆகிய இரண்டில் எதை முன்மாதிரியாகக்கொள்வது என்பது நாட்டுப்பற்றுள்ள பாகிஸ்தானியர்களால் எளிதில் தீர்மானிக்க முடிந்ததே.

நன்றி: அருஞ்சொல் (20 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்