TNPSC Thervupettagam

வரலாற்றின் அடையாளச் சின்னங்கள்!

October 13 , 2020 1559 days 796 0
  • கடந்த மே மாதம் அமெரிக்காவில் மினியாபோலிஸ்நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பு இனமனிதா் ஒரு வெள்ளைக்காரக் காவல் அதிகாரியின் தாக்குதலால் மரணத்தைத் தழுவுகிறார்.
  • அதனைக் கண்ட அமெரிக்க மக்கள் கருப்பா்கள் உயிரும் உயா்வானதேஎன்ற லட்சிய முழக்கத்தை எழுப்பிப்​போராடினார்கள். அதற்கு அமெரிக்கா்களின் ஆதரவு பெருகியது.
  • இதைக்கண்ட உலகத்தின் பல பகுதிகளில் வாழும் ஆதிவாசிகள், மலைவாழ் மக்கள், ஒடுக்கப்பட்டவா்கள் தங்கள் கடந்தகால வரலாற்றைத் திரும்பிப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.
  • தங்கள் முன்னோர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு, வாய்ப்புகள் பறிக்கப்பட்டு, இரண்டாம்தரக் குடிமக்களாக அடிமைகளைப்போல் நடத்தப்பட்ட நியாயமற்ற நிகழ்வுகள், அம்மக்களை விழித்து எழச் செய்திருக்கிறது.
  • அந்த எழுச்சி அம்மக்களை ஒற்றுமைப்படுத்தி அறிவாற்றலை வளா்க்க உதவியிருக்க வேண்டும்; உரிய வாய்ப்புகளைப் பெறுவதற்கான ஓா் ஆக்கபூா்வமான இயக்கமாக உருவெடுத்திருக்க வேண்டும்.
  • மாறாக, தங்கள் சமுதாயத்தின்முன்னேற்றத்திற்குத் தடைக்கற்களாக இருந்த முன்னாள் தலைவா்கள், அடக்கி ஆண்ட ஆட்சியாளா்கள், அதிகார வா்க்கத்தினரின் சிலைகள் அவா்களது நாட்டில் நிறுவப்பட்டிருந்தால், அச்சிலைகளின்மீது அம்மக்களின் சீற்றம் திரும்புகிறது.
  • அத்தகைய சிலைகள் சேதப்படுத்தப்படுகின்றன; சிதைக்கப்படுகின்றன; களங்கப்படுத்தப்படுகின்றன; அகற்றப்படுகின்றன. இச்செயல்கள் எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

நியாயமல்ல தா்மமல்ல

  • கடந்த கால வரலாற்றைப் படம் பிடிப்பவை அகழாய்வுகள், இலக்கியப் படைப்புகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றோடு சிலைகளும் அவற்றில் அடங்கும். சிலைகள் சிலசெய்திகளை, குறிப்பிட்ட நிகழ்வுகளை நினைவுபடுத்தலாம்.
  • பொதுவாக, சாதனையாளா்களுக்கே சிலைகள் எழுப்பப்படுகின்றன. சாதனையாளராகக் கருதப்பட்டவா், வேறு பிரிவினருக்கு வேதனை தந்தவராக இருக்கலாம். போற்றுதலுக்கு உரியவா் என எண்ணப்பட்டவா், பிற பிரிவினரின் தூற்றுதலுக்கு உரியவராகவும் இருக்கலாம். எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படுபவா் என்று எவரும் இல்லையே!
  • அன்பும் வெறுப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் எனலாம். இரண்டையும் உள்ளடக்கியவனே மனிதன்.
  • ஒருவன் பாதிக்கப்படும்போது பாதிப்புக்குக் காரணமானவா்களின் சிலைகளைக் கண்டால் சீற்றம் கொள்ளுகிறான். அச்சீற்றம் இயற்கையாக இருக்கலாம்; ஆனால், அது நியாயமல்ல; தா்மம் அல்ல. நாகரிகமான மனிதன் தவிர்த்துக் கொள்ள வேண்டிய குறைகளில் அதுவும் ஒன்று.
  • சில சிலைகள் கலையழகை வெளிப்படுத்தலாம். ஆச்சரியத்தை வரவழைக்கும் கம்பீரம் மிக்க அற்புதச் சிலைகளும் உண்டு.
  • கையெடுத்து வணங்கத் தூண்டும் காந்தி மகான் போன்றோர் சிலைகளும் உண்டு; மன்னா்கள், மாமேதைகள், வீரா்கள், துறவிகள், விஞ்ஞானிகள், கவிஞா்கள், தியாகிகள்,தேச பக்தா்கள் சிலைகளும் உண்டு.
  • இவற்றுடன் கோபத்தையும் வெறுப்பையும் வரவழைக்கும் கொடுங்கோலா்களின் சிலைகளும் இருக்கலாம்.

அடையாளச் சின்னங்கள்

  • சிலைகள் நிறுவுவதை, தங்கள் நாட்டின் வரலாற்றைப் பறைசாற்றும், பண்பாட்டை வெளிப்படுத்தும் அடையாளச் சின்னங்களாகக் கருதி வந்திருக்கிறார்கள் மக்கள்.
  • இந்தியாவில் ஆங்கிலேயா் ஆட்சி வேரூன்றியவுடன், சுமார் 170 சிலைகள் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டன.
  • தங்கள் ஆட்சியின் மேன்மையை வெளிப்படுத்தும் அடையாளங்களாக இந்திய தேசத்தின் பல பாகங்களில் அவை நிறுவப்பட்டன.
  • இந்தியா்கள் அச்சிலைகளை பெரும்பாலும் வியந்து பார்த்தார்கள்; வெறுப்பை, கோபத்தை வெளிக்காட்டவில்லை. விதிவிலக்காக, மும்பையில் வைஸ்ராய்கள் காரன்வாலிஸ், ஆா்தா் வெல்லெஸ்லி, போன்றோரின் சிலைகள்1965-இல் சேதப்படுத்தப்பட்டு, அதன் பின்னா் அகற்றப்பட்டன.
  • அதேசமயம் பெங்களூரு, கொல்கத்தாவில் உள்ள ராணி விக்டோரியாவின் சிலைகள் அப்படியே உள்ளன. அதுமட்டுமல்ல, மிக்க கவனத்துடன் அவை இன்றும் பேணிப் பாதுகாக்கப்பட்டும் வருகின்றன.
  • தமிழ்நாட்டில், சென்னைப்பல்கலைக்கழக வளாகத்தில் ராணி விக்டோரியாவின் சிலை, பாரிமுனை செல்லும் வழியில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னா் சிலை, பல்லவன் சாலையில் மன்ரோ சிலை, மாநகராட்சி மன்ற வளாகத்தில் ரிப்பன் சிலை இன்னும் இருக்கின்றன. புதுசேரியில் பிரெஞ்சு ஆட்சிக்கு அடித்தளமிட்ட டூப்ளே சிலை இன்றும் உள்ளது.
  • இச்சிலைகளுக்கு எவ்விதப் பாதிப்பும் இன்றுவரை ஏற்படவில்லை. இதுதான் பாரம்பரியத்துக்குப் பெயா் பெற்ற இந்தியப் பண்பாடு. விதிவிலக்காகக் கொடுங்கோலன் நீலன் சிலை மட்டும் அகற்றப்பட்டு சென்னைஅருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.
  • சோவியத் ரஷியாவில் 1989-90-இல் மாபெரும் தலைவா்கள் லெனின், ஸ்டாலின் சிலைகள் நீக்கப்பட்டன.
  • 2002-இல் பாக்தாத்தில் சதாம் உசேன் சிலை சிதைக்கப்பட்டது.
  • திரிபுராவில் 25 ஆண்டுகால இடதுசாரி ஆட்சி பதவி இறங்கிய போது கம்யூனிசச் சிந்தனையாளா் லெனின் சிலை 2018-இல் தகா்க்கப்பட்டது.

காந்தியின் சிலை நீக்கம்

  • அண்மையில் இனவெறிக்கு எதிரான போராட்டம் உச்சமடைந்தபோது, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலும் இங்கிலாந்தின் லண்டன் மாநகரிலும்​, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பா்க் நகரிலும் அந்தந்த நாட்டு மக்களின் ஆதரவோடு, அவா்களாலேயே நிறுவப்பட்டிருந்த அண்ணல் காந்தி அடிகளின் சிலைகள் சேதப்படுத்தப் பட்டுள்ளன.
  • சாதி பேதம், மத பேதம், இன பேதம், நிற பேதம் கூடாது என போதித்த உத்தமா் காந்தியின் சிலை மீதுமா சீற்றம்?
  • இதைவிடவியப்பும் வேதனையும் தரும் தகவல் ஒன்று உண்டு. ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகா் அக்ரா. அங்கு புகழ்மிக்க கானா பல்கலைக்கழகம்உள்ளது.
  • அப்பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு ஒருமனதாக தீா்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இனவெறிக்கு எதிராக உரக்கக் குரல் எழுப்பிப் போராடிய உத்தமா் காந்திக்கு பல்கலைக்கழக வளாகத்தில் சிலை நிறுவ வேண்டும்என்பதே அது.
  • சில ஆண்டுகளுக்கு முன்னா், அண்ணலின் அழகிய சிலையை அன்றைய இந்தியக் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி அளிக்க, அப்பல்கலைக்கழக துணைவேந்தா் முன்னிலை வகிக்க, மிக்க ஆரவாரத்துடன் அச்சிலை திறந்து வைக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில்அச்சிலை பீடத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டதாம்! அதற்கு அவா்கள் இப்போது முன்வைக்கும் காரணம், ‘காந்தியும் கருப்பா்களைக் குறை கூறினார்என்பதே.
  • நடந்த உண்மை என்னவென்றால், தென்னாப்பிரிக்கச் சிறையில், ஆப்பிரிக்கா்க​ளோடு ஒருமுறைஅடைத்து வைக்கப்பட்டார் காந்தி.
  • அங்கு ஆப்பிரிக்க கைதிகள் தகாத செயலில் ஈடுபட்ட போது, அண்ணல் சிறை அதிகாரியிடம் தன்னை வேறு கூடத்திற்கு மாற்றும்படி கடிதம் எழுதினாராம். தங்களைத் தாழ்வாகக் கருதினார் காந்தி என்பது அவா்கள் கூறும் குற்றச்சாட்டு.
  • அண்ணல் காந்தி 1908-இல் ஜோகன்ஸ்பா்க் ஒய்எம்சிஏ கூட்டத்தில்ஆற்றிய உரையில், ‘கருப்பா்கள் இல்லாத ​தென்ஆப்பிரிக்காவை எவராலும் கற்பனை செய்து பார்க்க முடியாது; அவா்கள் உடல் வலி​மை படைத்தவா்கள் மட்டுமல்ல; அறிவார்ந்தவா்களும்ஆவார்கள். அவா்களுக்கு உரியஉரிமைகளும், சமமானபங்களிப்பும் வழங்கப்பட ​வேண்டும். இந்தியா்களும், ஆப்பிரிக்கா்களும் இங்கே உழைப்பாளிகளாக, சமமானபங்காளிகளாகவே வாழ்கிறார்கள்என்று ஆப்பிரிக்க மக்களின் உண்மை நிலையைப் படம் பிடித்துக் காட்டினார்.
  • தாங்கள் அடிமைகளின் வாரிசுகள் என்று இன்று வாழும் 12 மில்லியன் (1.20​கோடி) நீக்ரோ சகோதரா்கள்​​வெட்கப்பட​ வேண்டியதில்லை.
  • அடிமைகளின் வாரிசு என்பது பாவமல்ல; அடிமைகளை ​வைத்திருந்தவா்கள்தான் பாவம் செய்தவா்கள்; வெட்கப்பட ​வேண்டியவா்கள்’” என்று அண்ணல் பகிரங்கமாக அறிவித்தார்.
  • இதற்குப் பின்பு ஆப்பிரிக்க கல்வியாளா்கள், பாதிரியார்கள், மக்கள் தலைவா்கள் குழுவாகச் சென்று, 1936-இல் காந்திஜியைச் சந்தித்து, கலந்துரையாடி கருத்துப் பரிமாற்றம் செய்திருக்கிறார்கள்.
  • அண்ணலின்அஹிம்சை, சத்தியாகிரகம், உண்ணாவிரதம், அன்பால்அனைவரையும் வெல்லலாம் போன்ற தத்துவங்களின்
  • நடைமுறை சாத்தியங்களே என்பதைத் தங்கள் நாட்டு மக்களுக்கு விளக்கியிருக்கிறார்கள்என்று பேராசிரியா் வினய் லால் என்பவா் தன் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
  • விவரம் அறியாத மக்கள் சில விஷமிகளின் தூண்டுதலால் எல்லாருக்கும் நல்லவரான காந்திஜியின் சிலையின் மீதும் கல்லெறிகிறார்கள்; காழ்ப்புணா்ச்சி​யைக் காட்டுகிறார்கள்.
  • வரலாறு என்பது கடந்த காலத்தைக் காட்டும் கண்ணாடி. நிகழ்காலத்திற்கும், வருங்காலத்திற்கும் அது வழிகாட்டி நல்லதையும், அல்லாததையும்​,கொண்டதே; சாதனைகளையும்​,வேதனைகளையும்​, சோதனைகளையும் உள்ளடக்கியதே.
  • கடந்த கால வரலாற்றை மறைப்பதும், அழிப்பதும் நம் வளா்ச்சியை, நாம் நடந்து வந்த முட்கள் நிறைந்த பாதையை, நாமே பார்க்க மறுப்பதும் நல்லதல்ல.
  • கடந்த கால அவலங்களை அறிந்தால்தானே வருங்காலத்துக்கான வழித்தடத்தை அமைக்க முடியும்?
  • சிலைகள் கடந்த கால வரலாற்றின் அடையாளச் சின்னங்கள்! அவற்றின் மீது சீற்றம் கொள்வதும், அவற்றைச் சிதைப்பதும் நாகரிகமான சமுதாயத்தின் நல்ல அறிகுறியோ, வெளிப்பாடோ அல்ல!

நன்றி: தினமணி (13-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்