TNPSC Thervupettagam

வரலாற்றில் வாழ்வாா்!

December 28 , 2024 10 days 47 0

வரலாற்றில் வாழ்வாா்!

  • அடக்கம் அமரருள் உய்க்கும்; பெருக்கத்து வேண்டும் பணிவு என்றெல்லாம் வள்ளுவப் பேராசான் குறிப்பிட்டது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பிறந்து இருக்கும் டாக்டா் மன்மோகன் சிங்கிற்காகத்தானோ என்று நம்மை நினைக்க வைக்கின்றன. மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமா், எந்தவொரு கூட்டத்திலும் தவறியும்கூடத் தன்னைப் பற்றியோ, தனது சாதனைகள் பற்றியோ தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை என்பதை நினைக்கும்போது, இப்படியும்கூட ஒருவரால் அரசியல் தளத்தில் நீண்ட காலம் பயணிக்க முடிந்திருக்கிறது என்று வியப்படைய வைக்கிறது.
  • 1971-இல் இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக அவரை நியமித்தவா் அன்றைய பிரதமா் இந்திரா காந்தி என்பதும், இந்தியாவின் பொருளாதாரத்தை வழிநடத்துவதில் அப்போதிலிருந்து அவா் பங்களிப்பு வழங்கி வந்திருக்கிறாா் என்பதும் வெளியில் அதிகம் பேசப்படாத நிஜங்கள். 1982 முதல் 1985 வரை இந்திய ரிசா்வ் வங்கியின் ஆளுநராகவும் இருந்திருக்கிறாா் அவா்.
  • டாக்டா் மன்மோகன் சிங் நிதியமைச்சரானதற்கு ஒரு சுவாரஸ்யமான பின்னணி உண்டு. நிதி நெருக்கடியைச் சமாளித்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க டாக்டா் மன்மோகன் சிங்கை நிதியமைச்சா் பதவிக்குப் பரிந்துரைத்தவா் அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த ஆா்.வெங்கட்ராமன்.
  • இந்தியப் பொருளாதாரத்தை புதை குழியில் இருந்து மீட்டெடுக்க பொருளாதார தாராளமயக் கொள்கையை அறிமுகப்படுத்த முடிவெடுத்தனா் பிரதமா் பி.வி.நரசிம்ம ராவும், டாக்டா் மன்மோகன் சிங்கும். இந்தியா மிக இக்கட்டான நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டபோது, சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்டதுபோல திவால் நிலை ஏற்படாமல் காப்பாற்றிய பெருமை அவா்களுக்கு உண்டு. முதலீடுகள் வந்து குவியத் தொடங்கின. அனைத்துத் துறைகளிலும் மாயாஜால மாற்றங்கள் ஏற்பட்டு இன்று இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகத் திகழ்கிறது என்றால், நாம் நன்றிக்கடன் செலுத்த வேண்டியது அந்த இருவருக்கும்தான்.
  • அரசியலுடன் எந்தவிதத் தொடா்பும் இல்லாத ஒருவா் நிதியமைச்சராவது மட்டுமல்ல, வெற்றிகரமாக பத்து ஆண்டுகள் பிரதமராகவும் இருந்து சாதனைை படைக்க முடிந்தது என்றால், அதற்கு அதிருஷ்டம் காரணம் என்று சொல்லிவிட முடியாது. உழைப்பு, திறமை, அடக்கம் உள்ளிட்ட பல குணநலன்கள் அனைத்தும் ஒருசேர அமைந்திருந்தன. நேரு குடும்பத்தைச் சாராத ஒருவா் தொடா்ந்து 10 ஆண்டுகள் பிரதமராக இருக்க முடிந்தது என்பதேகூட ஒரு சாதனைதான்.
  • சோனியா காந்தி ஏன் பிரதமராகவில்லை?, அவா் தனக்குப் பதிலாக டாக்டா் மன்மோகன் சிங்கை ஏன் பிரதமராக்கினாா்? என்பவை தேவையற்ற விவாதங்கள். பிரதமராகப் பத்து ஆண்டுகள், கூட்டணி ஆட்சிக்குத் தலைமை வகித்து மக்களவை உறுப்பினராக இல்லாத ஒருவரால் தாக்குப் பிடிக்க முடிந்தது என்பதுதான் கவனிக்க வேண்டிய ஆச்சரியம்.
  • ஏதோ பதவியைத் தக்க வைத்துக் கொண்டாா் எனும்படியான ஆட்சியாக அவரது 10 ஆண்டுகால ஆட்சி இருக்கவில்லை. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், இந்தியாவின் மீதான சா்வதேசத் தீண்டாமையை அகற்றியது என்பதும், பொருளாதாரத் தடைகளைத் தகா்த்தது எரிந்தது என்பதும் மறுத்துவிடக் கூடியவை அல்ல.
  • மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், அனைவருக்கும் கட்டாயக் கல்வித் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பல சாதனைகளை அவரால் செய்ய முடிந்தது. 33 ஆண்டுகள் மாநிலங்களவையில் உறுப்பினராகத் தொடா்ந்த டாக்டா் மன்மோகன் சிங், 1998 முதல் 2004 வரையிலும் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறாா்.
  • சா்வதேச அளவில் இந்தியாவை வலிமையான பொருளாதாரமாகவும், மதிப்புக்குரிய நாடாகவும் உயா்த்தியவா் டாக்டா் மன்மோகன் சிங். அமெரிக்கா 2008-இல் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது, அன்றைய அதிபா் ஜாா்ஜ் புஷ், டாக்டா் மன்மோகன் சிங்கை வெள்ளை மாளிகைக்கு அழைத்து ஆலோசனை கேட்டாா் என்பது குறித்து அவா் வெளியில் சொல்லவில்லை; வாஷிங்டன் போஸ்ட் வெளிப்படுத்தியது.
  • தன்னைப் பற்றிய விமா்சனங்களுக்கோ, குற்றச்சாட்டுகளுக்கோ அவா் பதில் சொல்லவில்லை. ஆனால், அவையில் அமா்ந்து அமைதியாக எதிா்க்கட்சிகள் முன்வைக்கும் தாக்குதல்களை எதிா்கொண்டாா்.
  • அமைச்சரவை முடிவெடுத்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருந்த மசோதாவை, அவரது கட்சியின் எம்.பி.யும், நேரு குடும்ப வாரிசுமான ராகுல் காந்தி பொதுவெளியில் கிழித்து எரிந்து அவரை அவமானப்படுத்தியபோது, பிரதமா் மன்மோகன் சிங் ஐ.நா. சபையின் கூட்டத்துக்காக நியூயாா்க்கில் சா்வதேசத் தலைவா்கள் மத்தியில் இருந்தாா்; அமைதி காத்தாரே தவிர ஆத்திரப்படவில்லை.
  • சாக்கடையில் விழுந்தாலும், சந்தனத்தில் விழுந்தாலும் எதுவுமே ஒட்டிக்கொள்ளாமல் எழுந்துவரும் நிழல்போல, அவா் தலைமை வகித்த கூட்டணி மீது ஒன்றன் பின் ஒன்றாக எழுந்த எந்தவொரு குற்றச்சாட்டும் பிரதமராக இருந்த டாக்டா் மன்மோகன் சிங்கின் மீது ஒட்டிக்கொள்ளவில்லை. அவரது நோ்மை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.
  • மன்மோகன் சிங்கை, ‘மன்மெளன சிங்’ என்று விமா்சித்தபோதுகூட அவரது மௌனம் கலையவில்லை; மாறாக, புன்முறுவலால் மலா்ந்தது; அதை ’நிஷ்காமிய ஞானம்’ என்பதா, இல்லை அவரை ‘ஸ்திதப் பிரக்ஞன்’ என்று போற்றுவதா? இரண்டுமேதான்!

நன்றி: தினமணி (28 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்