TNPSC Thervupettagam

வரவேற்கத்தக்க மாற்றம்

January 9 , 2021 1473 days 722 0
  • உலகிலேயே மிக வலிமையானது எது என்று கேட்டால், அதற்கு "காலம்' என்பதே பதிலாக இருக்கும். நாம் எல்லோரும் ஏதோ ஒரு நேரத்தில் உணர்ந்த உண்மைதான் இது. உதாரணமாக, நம்மிடம் இருக்கும் நமக்குப் பிடிக்காத ஒரு சட்டையை வேறு வழியின்றி உடுத்த நேர்வது, நமக்குப் பிடிக்காத உணவை கட்டாயமாக உண்ண நேர்வது, நாம் பார்க்க, பேச விரும்பாத நண்பரையோ அல்லது உறவினரையோ நாமே தேடிச் சென்று பேசும் அவசியம் உண்டாவது.
  • இதெல்லாம் ஏன் நேரிடுகிறது என்று ஒருவரை கேட்டால், அவர் தயங்காமல் கூறும் பதில், "இது காலத்தின் கட்டாயம்' என்பதாகவே இருக்கும். இந்த நிலை யாருக்கும், எந்த நேரத்திலும் வரலாம். இப்போது, படித்துவிட்டு அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு இந்த நிலை வந்துள்ளது, அவ்வளவுதான்.
  • தகவல் தொடர்பு சாதனங்களும், ஊடகங்களும் இல்லாமலிருந்த ஒரு நேரத்தில் மக்களின், குறிப்பாக இளைஞர்களின் உலகம் இலக்கியத் தேடல் மிகுந்ததாக இருந்தது. அவர்கள் புதுமையை தேடி அலைந்தபோதும், புதுமைகளைப் படைக்க விரும்பியபோதும் புத்தகங்கள் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றன.
  • அந்தத் தேடலின்போது அவர்கள் புத்தகங்களின் வாயிலாக மொழிவளத்தையும் அறிந்துகொண்டனர். பொழுதுபோக்குக்காக கதைகளைப் படிக்கத் தொடங்கியவர்கள், அதன் வழியாக முடிவில் இலக்கியத்தைச் சென்றடைந்தனர். இதனால், நினைவுத் திறன் கூடியதோடு, இளைஞர்களிடமிருந்து பல்வேறு படைப்புகள் உருவாயின.
  • ஆனால், இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் தங்கள் கருத்துகளை, கட்செவி அஞ்சல், முகநூல், சுட்டுரை போன்றவற்றில் பதிவிடுவது, உரையாடுவதோடு நின்று விடுகின்றனர். நல்ல படைப்புகளைப் பார்ப்பது, வாசிப்பது, உருவாக்குவது என்பது இப்போதெல்லாம் அரிதிலும் அரிதாகவே நிகழ்கிறது. கலை, இலக்கியம், இசை, ஓவியம் போன்றவற்றை பார்வையாளர்களாகவே கடந்து விடுகின்றனர். இதற்குக் காரணம் சமூக ஊடகங்களின் தாக்கம்தான் என்ற ஒற்றை வரியில் கூறிவிட முடியாது.
  • புத்தக வாசிப்பு என்பது ஒருவரிடம் திடீரென தோன்றி விடுவதல்ல. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அம்புலி மாமா, பாலமித்ரா, கண்ணன், கோகுலம் போன்ற பத்திரிகைகள் மூலம் சிறுவர்களிடம் வாசிப்புப் பழக்கம் தொடங்கியது. லயன் காமிக்ஸ், மாயஜால, பேய் கதைகள், துப்பறியும் நாவல்கள் அந்த வாசிப்பை தொடர்ந்து வளர்த்தன. நூலகங்களைத் தேடி ஓடும் மாணவர்களின் மனத்தில் ஒரு சுறுசுறுப்பும், வேகமும் இருந்தன. இந்த வேகம் அவர்களை வார இதழ்கள், சிறுகதைகள், புதினங்கள் பக்கம் நகர்த்தி, அவர்களின் வாசிப்பில் ஒரு வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும், இலக்கிய இதழ்கள், சிறு பத்திரிகைகள் என அது பரிணாமம் பெற்றது.
  • இந்தத் தொடர் மாற்றங்களுக்கு அன்றைய பெற்றோர் பெருமளவில் காரணமாக இருந்தார்கள் என்பதே உண்மை. வசதியானவர்கள் மட்டுமில்லாமல், பெரும்பாலான நடுத்தர குடும்பத்தினரும் ஏதேனும் ஒரு வார, மாத இதழை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். வாங்க இயலாதவர்கள் இரவல் வாங்கியாவது படித்தார்கள். இது அந்தச் சூழலில் வளர்ந்த குழந்தைகளுக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தியதோடு, பாடப்புத்தகம் அல்லாத பிற புத்தகங்களை வாசித்து, கருத்தை, மொழியை வளர்த்துக் கொள்ளும் களமாகவும் இருந்தது.
  • ஆனால், இன்றைய சூழலில் பெரும்பாலான வீடுகளில் எந்த இதழும் - நாளேடுகள் கூட - வாங்கப்படுவதில்லை. குறிப்பாக, கணவன், மனைவி இருவரும் பணியாற்றும் வீடுகளில் வாசிப்புக்கான இடமே இல்லாமல் போய்விட்டது. சிறிது நேரம் இருந்தாலும், அதை காட்சி ஊடகங்களும், சமூக ஊடகங்களும் பறித்துவிடுகின்றன. அவர்களை பின்தொடரும் அவர்களது குழந்தைகளுக்கும் அதுவே பழக்கமாக அமைந்து விடுகிறது.
  • இப்போது இருக்கும் தலைமுறைக்கு, அந்தக் காலத்து எழுத்து ஆளுமைகளில் எத்தனை பேரின் பெயர்கள் தெரிந்திருக்கும் என்பதும், சிறந்த இலக்கியப் பேச்சாளர்கள், கலை விமர்சகர்கள் எத்தனை பேரைத் தெரிந்திருக்கும் என்பதும் கேள்விக்குறியே. இன்றைக்கு, நல்ல இசை, வாய்ப்பாட்டு, நாட்டியம், ஓவியம், சிற்பம் போன்றவை பொழுதுபோக்கு அம்சமாகவே கடந்துபோய்விடுகின்றன.
  • இந்தச் சூழலில்தான், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் நடத்திய குரூப் 1 முதல் நிலைத் தேர்வில், இளைஞர்களை கலை, இலக்கிய படைப்புகளை நோக்கி நகர்த்தும் வகையில், "பரியேறும் பெருமாள்' திரைப்படம், "வீரயுக நாயகன் வேள்பாரி' வரலாற்றுப் புதினம் குறித்த வினாக்களை இடம்பெறச்செய்துள்ளது. இதுபோன்ற வினாக்களுக்கு கையேடுகளோ, பயிற்சி வகுப்புகளோ பயனளிக்காது. அரசு வேலை தேடும் இளைஞர்கள் இனி இலக்கிய நூல்களை வாசித்தாக வேண்டும்.
  • நடிகர்களுக்காக படம் பார்ப்பதைத் தவிர்த்து, சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களையும் பார்க்க வேண்டும். அது மட்டுமே போதாது. அவற்றை விமர்சிக்கவும், பொதுவெளியில் வரும் விமர்சனங்களை கவனிக்கவும் வேண்டும். அரசியல் தலைவர்களின் வரலாற்றுக் குறிப்புகளை மட்டுமே மனப்பாடம் செய்யாமல், அவர்களின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள், சிக்கலான நிலையில் அவர்கள் எடுத்த தீர்க்கமான முடிவுகள் குறித்தும் முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.
  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இந்த உத்தி, தனியார் துறை தேர்வுகளிலும் பிரதிபலிக்கும் வாய்ப்பும் அதிகம். எனவே, வாழ்வில் முன்னேற நினைக்கும் நிகழ்கால, எதிர்கால இளைஞர்களுக்கு வாசிப்பும், கலை அறிவும் இனி காலத்தின் கட்டாயம். அரசு தேர்வாணையத்தின் முன்னெடுப்பு, இலக்கிய அறிவுமிக்க ஒரு வளமான தமிழகம் அமைவதற்கான நம்பிக்கைக்கீற்று.

நன்றி: தினமணி (09 – 01 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்