TNPSC Thervupettagam

வரவேற்புக்குரிய ஆரம்பம் அக்னி பாதை

June 20 , 2022 779 days 499 0
  • மோடி அரசு அறிவித்திருக்கும் ‘அக்னிப் பாதை’ திட்டம் வரவேற்புக்குரிய ஒன்றாகும். இந்திய ராணுவத்துக்கான ஆள் சேர்ப்புப் பணியில் புதிய உத்தியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இதன் பின்னணியில் உள்ள யோசனைகள் கவனத்துக்குரியவை. இந்தத் திட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுவரும் போராட்டங்கள் இந்தியா எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான வேலைவாய்ப்பின்மை சார்ந்து நாட்டின் கவனத்தைக் கோருகிறது. தனித்து விவாதிக்கப்பட வேண்டியது அது. வேலைவாய்ப்புக்  களமாக ஆயுதப் படைகளைப் பார்ப்பது தவறான பார்வை என்பதை இங்கே  அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டி இருக்கிறது.
  • இந்திய ராணுவப் படைகள் அடுத்தத் தலைமுறை மாற்றத்தை எதிர்நோக்குகின்றன. போர்கள், போர்களுக்கான சூழல்கள் தவிர்ப்பட வேண்டியன; பாதுகாப்புப் படைகளுக்கான செலவுகள் எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கப்பட வேண்டுமோ அவ்வளவுக்கு அவ்வளவு குறைக்கப்படுவதே மக்கள் நல அரசுக்களுக்கான பாதை ஆகும். எனினும், ராணுவத்தை வைத்திருக்கும் ஒரு நாடு உலகளாவிய போர் வியூகப் போக்குகளுடன் தன்னுடைய ராணுவத்தை அனுசரிப்பது முக்கியம். அமெரிக்கா, சீனா என்று  உலகின் பெரும் ராணுவ சக்திகள் எல்லாமே மிக வேகமாக நவீனமாகி இருக்கின்றன.
  • இன்றைய போர்கள் ஆள் பலத்தைக் கொண்டு நடக்கும் தாக்குதல்களுக்கு மாறாக தொழில்நுட்பப் பலத்தைக் கொண்டு நடக்கும் தாக்குதல்களாக மாறி இருக்கின்றன; ஆளில்லா ட்ரோன்கள் முதல் நெடுந்தொலைவு துல்லிய இலக்குத் தாக்குதல் ஏவுகணைகள் வரை பெருமளவில் இயந்திரமயமாகி இருக்கின்றன. ராணுவப் படைகளில் தரைப் படையினரின் எண்ணிக்கையைக்  குறைத்து, கடல் மற்றும் வான் படைகளின் முக்கியத்துவத்தை  அதிகரிப்பது பேசப்படும் வியூகங்களில் ஒன்றாக இருக்கிறது.
  • இன்று சர்வதேச அளவில் ராணுவத் துறையில்  இரண்டு விஷயங்கள் இடையேயான சமநிலையைப் பேண அரசுகள் போராடுகின்றன. பாதுகாப்புப்  படைகளுக்கான செலவுகளை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியோடு (ஜிடிபி) ஒப்பிட குறைவான வீதத்தில் பராமரிக்க வேண்டும். அப்படிச்  செலவிடப்படும் தொகையில் கணிசமான பகுதி படைகளைத் திறன் மிக்கதாகப் புதுப்பிப்பதற்குச் செலவிடப்பட வேண்டும்.
  • இந்த வியூகத்தின் அடிப்படையில் படைகளில் ஆட்களின் எண்ணிக்கை குறைவது இயல்பாக நடக்கக்கூடியது என்பது புரிபட்டுவிடும். உள்ளபடி பாதுகாப்புப் படைகளில் ஈடுபடுத்தப்படும் மனிதர்களின் எண்ணிக்கை எவ்வளவுக்கு எவ்வளவு குறைப்படுகிறதோ அது நல்லது; அதுவே முற்போக்கான பார்வை.
  • இந்தியா இந்த விஷயங்கள் எல்லாவற்றிலும் பின்தங்கி இருக்கிறது. 2013-14 – 2022-23 காலகட்டத்துக்குட்பட்ட இந்த எட்டாண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி ரூ.112 லட்சம் கோடியிலிருந்து ரூ.237 லட்சம் கோடி ஆக உயர்ந்திருக்கிறது. இதற்கு இணையாகப் பாதுகாப்புப் படைகளுக்குச் செலவிடப்படும் தொகையும் இரண்டு மடங்கு ஆகியிருக்கிறது. ஆனால், ராணுவம் விரும்பும் நவீனமயமாக்கல் நடக்கவில்லை. இதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று ராணுவத்துக்குச் செலவிடப்படும் தொகையில் கிட்டத்தட்ட சரிபாதி -  48.8% - படையினரின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்கே போய்விடுவதாகும். அமெரிக்கா 38.6% தொகையையும், சீனா 38.6% தொகையையும் இப்படிச் செலவிடுகின்றன. அதேபோல, இந்தியாவில் தரைப்படைதான் இந்தத் தொகையில் பெரும் பகுதியைப் பெறுகிறது. படையினருக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் முறையே 79% மற்றும் 86% தரைப்படையினரையே சென்றடைகிறது.
  • இந்திய ராணுவத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தத்தின் அவசியத்தை இந்தப்  புள்ளிவிவரங்கள் துல்லியமாக உணர்த்துகின்றன. இந்திய அரசு அது நோக்கி சரியாகவே அடியெடுத்து வைத்திருக்கிறது.
  • இன்று சற்றேறத்தாழ 12 லட்சம் பேர் ராணுவப் படைகளிலும், 10 லட்சம் பேர் துணை ராணுவப் படைகளிலும் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் படைகளின்  எண்ணிக்கையைக் குறைப்பதுடன், செலவையும் குறைக்க  புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் 'அக்னி பாதை' திட்டம் உதவும் என்று அரசு நம்புகிறது. ராணுவத்தில் 50:50 விகிதத்தில் 'அக்னி வீரர்'களை அது பயன்படுத்த உத்தேசிக்கிறது. இத்திட்டத்தின் கீழ், 17.5 வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் ஆண்டுக்கு 46,000 பேர் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். நான்கு ஆண்டுகள் இவர்கள் ராணுவப் பணியிலும், பல்வேறு பயிற்சிகளிலும் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்களில்  திறன் மிக்க 25% பேர் அடுத்து, நிரந்தரப் பணியில் சேர்க்கப்படுவார்கள். எஞ்சும் 75% பேர் ரூ.11.71 லட்சம் பணப் பலனுடன் விடுவிக்கப்படுவார்கள்.
  • இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், அரசின் ஓய்வூதியச் சுமை குறையும்; ராணுவத்தினரின் சராசரி வயது 32 என்பதிலிருந்து 26 ஆகக் குறையும்; எஞ்சும் நிதியை நவீனமயமாக்கலுக்குச் செலவிடலாம்; இதன் மூலம் ராணுவம் இளமையானதாகவும், கூடுதல் திறன் மிக்கதாகவும் செம்மையாக்கப்படும் என்கிறது அரசு. முன்னாள் தரைப்படைத் தளபதி வி.பி.மாலிக் உள்ளிட்டவர்களின் கருத்துகளைக் கணக்கில் கொண்டால் இத்திட்டம் சரியானதாகவே  தோன்றுகிறது.
  • இத்திட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைப்பவர்கள் மூன்று முக்கியமான கருத்துகளை முன்வைக்கிறார்கள்: 1. இப்படி நான்காண்டுகள் பயிற்சி பெறுபவர்களைக் கொண்டு திறன் மிக்க படைகளை உருவாக்க முடியாது. 2. சீக்கிரமே ராணுவத்திலிருந்து இப்படி விடுவிக்கப்படுவர்கள் சமூக அமைதியைச்  சீர்குலைக்கலாம். 3. ராணுவத்தில் கிடைக்கும் நல்ல வேலைவாய்ப்பை இத்திட்டம் சீர்குலைக்கும்.
  • மூன்று கருத்துகளுமே சாரமற்றவை. ராணுவத்தில் ஏழாண்டுகள் பணிக்கால முறை ஒருகாலகட்டம் வரை வெற்றிகரமாக இங்கே இருந்திருக்கிறது; இப்போதும் 15 ஆண்டுகள் சேவை முடித்துச் செல்வோர் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று சொல்லத்தக்க நிலை இல்லை; முக்கியமாக, ராணுவப் பணியானது சித்திரவதைகள் மிகுந்தது; அதை வசதியான வேலைவாய்ப்பாக ஒரு சமூகம் கருதும் நிலை மோசமான அவலம். மாறாக, நம்முடைய ராணுவப் படையினர் கண்ணியமான ஒரு வாழ்க்கைச் சூழலைப் பெறும் வகையில் அவர்களுக்கான பணிக்காலப் பணப் பயன்கள் அதிகரிக்கப்படுவதில் தொடங்கி ராணுவப் பணியிலிருந்து வெளியேறிய பிறகான மறுவேலைத் திட்டங்கள் வரை அவர்களுக்கான நல்வாழ்வுப் பலன்களை இத்திட்டத்தில் சேர்த்திடும் யோசனைகள் இங்கே பயன் தரக் கூடியவை.
  • அரசின் இந்தத் திட்டத்துக்கான முன்மொழிவிலும், திட்டத்தை எதிர்ப்பவர்கள் மத்தியிலும் ஒரு விஷயம் மையம் பெறுகிறது. அது பணிக்குப் பிந்தைய ஓய்வூதியம். இன்றைக்குப் படையினரில் கணிசமானோர் 15 ஆண்டுகள் பணியாற்றி 50 ஆண்டுகள் ஓய்வூதியம் பெறும் சூழல் நிலவுகிறது; இது பெரும் சுமை என்று கருதுகிறது அரசு. ஓய்வூதியம் ஓர் உரிமை என்று கருதுகின்றனர் எதிர்ப்போர்.
  • நிச்சயமாக ஓய்வூதியம் ஓர் உரிமை. ஆனால், அது சமூகத்தில் எந்த ஒரு பிரிவினருக்குமான விசேஷ  முன்னுரிமையாக இருக்க முடியாது. இன்றைய இந்திய மக்கள்தொகையான 140 கோடி பேரில் வெறும் 2% மட்டுமே உள்ள மத்திய, மாநில அரசுகளுடைய  ஊழியர்கள் - அவர்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி - எஞ்சிய 137 கோடி பேரில் இருந்து தனித்த பிரிவினராக நடத்தப்படுவது சரியான போக்கு இல்லை. அரசின் செலவீனத்தில் ஒரு பெரும் தொகையை இப்படி ஒரு சிறு பிரிவினர் மட்டும் கொண்டுசெல்வது சமூகநீதிக்கு முற்றிலும்  எதிரானது.
  • ஒவ்வொரு துறையிலும் பணியாற்றுபவர்கள் தங்களுடைய நியாயமான பணப் பயன்களைப் பணிக் காலத்திலேயே பெறட்டும். பணி ஓய்வுக்குப் பிறகு முதுமையில் ஒரு விவசாயியும், ராணுவ வீரரும்; கூலித் தொழிலாளியும் அதிகாரியும்; ஆட்டோ ஓட்டுநரும் மருத்துவரும் கண்ணியமான வாழ்க்கை வாழ ஒரே விதமான குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அரசு தரும் சூழல் உருவாகட்டும். அதுவே நல்லது. அதற்கான சீர்திருத்த ஆரம்பமாக 'அக்னி பாதை' அமையட்டும்.

நன்றி: அருஞ்சொல் (20 – 06 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்