TNPSC Thervupettagam

வரிச் சலுகைகள் முக்கியமல்ல, 4 தவறுகள் கூடாது

June 30 , 2024 3 hrs 0 min 8 0
  • ஆண்டு வருமானம் ரூ.20 லட்சம் வரை பெறுவோருக்கு வருமான வரிச் சலுகை வேண்டும், பெட்ரோல் – டீசல் மீதான உற்பத்தி வரி (எக்சைஸ்) குறைக்கப்பட வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் குறைந்தபட்ச நாள் ஊதியத்தை உயர்த்த வேண்டும், பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதித் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்றெல்லாம் இந்தியத் தொழிலதிபர்கள் குழு, நிதித் துறை அதிகாரிகளுடனான பட்ஜெட்டுக்கு முந்தைய சந்திப்பில் கோரிக்கைகள் வைத்ததாக செய்திகள் வந்துள்ளன.
  • பொது சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) இனத்தில் மூன்று பிரிவு வரிவிதிப்புகள் மட்டுமே இருக்க வேண்டும், மூலதன ஆதாய வரிவிதிப்பில் உள்ள சிக்கல்கள் களையப்பட்டு நிதிசார் சொத்துகளுக்கு மட்டும் ஆதாய வரிவிதிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரியதாகத் தெரிகிறது.
  • இந்தக் கோரிக்கைகளை ஏற்று, வரும் ஜூலையில் தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில் அவற்றை அரசு அறிவிப்பது எந்த அளவுக்குச் சாத்தியம்? இந்த வரிச் சலுகை பரிந்துரைகளைவிட, நிதிநிலை அறிக்கையின் அமைப்பிலேயே செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்துத்தான் மோடி அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஜிஎஸ்டி வரி விகிதங்கள்

  • ஜிஎஸ்டி வரி விகிதங்களை மூன்று ரகங்களாக மட்டும் திருத்தியமைத்து – அதேசமயம் அரசின் வருவாய் குறைந்துவிடாமல் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கவனிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் இப்படிப்பட்ட அறிவிப்புகள் இடம்பெறுவதில்லை. இந்தப் பரிந்துரைகள் தொடர்பாக ஒன்றிய அரசின் நிதித் துறை உயர் அதிகாரிகளும் மாநில அரசுகளின் பிரதிநிதிகளும் ஏற்கெனவே ஆய்வுசெய்யத் தொடங்கிவிட்டனர். பின்னர் இது ஜிஎஸ்டி பேராயத்தில் விவாதிக்கப்பட்டு, இறுதி முடிவுகள் எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் நிலை என்ன என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையில் தெரிவிப்பாரா? நிச்சயம் மாட்டார்.
  • நிதி மற்றும் நிதியல்லாத வீடு-மனை, தங்க நகைகள் போன்றவற்றை விற்கும்போது கிடைக்கும் மூலதன ஆதாயத்தின் மீதான வரிவிதிப்பு தொடர்பான சிடுக்குகளைக் குறைத்து எளிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. பங்குகள், கடன் பத்திரங்கள் போன்ற நிதிச் சொத்துகளை வைத்திருப்பதற்கான காலம் மற்றும் அந்த ஆதாயம் மீதான வரி அளவு ஆகியவற்றில் சலுகைகள் வேண்டும் என்று கேட்பதும் நியாயமானது. அதிகபட்சமாக இந்த வரிவிதிப்பு 10%க்கு மேல் போகக் கூடாது என்பதை அரசு பரிசீலிப்பது நல்லது.
  • நிதிச் சொத்துகள் மீதான குறுகிய கால மூலதன ஆதாய வரி விகிதம் 15% என்ற அளவைத் தாண்டக் கூடாது என்பதும் நியாயமான கோரிக்கைதான். மூலதன ஆதாய வரிவிதிப்பு கட்டமைப்பு வெளிப்படையாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும் என்பதும் தகுந்த யோசனைதான். இந்தக் கோரிக்கைகள் சில ஆண்டுகளுக்கு முன்னால் எழுந்தவை என்றாலும் இப்போதாவது அரசு இறுதி முடிவெடுப்பது நல்லது.

அறிவிப்புகள் வராது

  • புதிய வரி கட்டமைப்பு எப்படி இருக்கும் என்று அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்குமா? கடந்த சில ஆண்டுகளாகவே முக்கியமான கொள்கை முடிவுகளை நிதிநிலை அறிக்கையில் சேர்ப்பதில்லை அரசு. இதற்கு முக்கிய காரணம், இதில் ஏதாவது தவறாக புரிந்துகொள்ளப்பட்டாலும் அல்லது சரியாகவே புரிந்துகொள்ளப்பட்டு உற்சாகம் மிகுந்தாலும் அது பங்குச் சந்தையில் படு வீழ்ச்சியாகவோ படு உச்சமாகவோ எதிரொலிக்கும்.
  • வரிச் சலுகை, புதிய திட்டங்கள் என்ற அறிவித்தல்களுடன் உள்ள நிதிநிலை அறிக்கை, இப்படிப்பட்ட நிகழ்வுகளால் மக்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதால், முக்கியமான முடிவுகளும் கொள்கை மாற்றங்களும் நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்படுவதில்லை.
  • ஒரு வகையில் சொல்வதென்றால், பங்குச் சந்தை உள்பட அனைத்து இடங்களிலும் மக்களுடைய வரவேற்பைப் பெறும் முடிவுகளும் மாற்றங்களும் மட்டுமே நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும். மூலதன ஆதாய வரி விகிதத்தைச் சீரமைப்பதும் எளிமைப்படுத்துவதும் அதைச் செலுத்துவோரிடையே மகிழ்ச்சியைத் தரும் வேறு சிலருக்கோ அது எரிச்சலையும் அதிருப்தியையும் தரும் - எனவே கடுமையாக எதிர்ப்பார்கள்.
  • மூலதன ஆதாய வரி கட்டமைப்பையும் விகிதங்களையும் திருத்தியமைக்கும் பணி ‘அதிகாரம் பெற்ற’ குழுவிடம் ஒப்படைக்கப்படுகிறது என்ற அறிவிப்போடு நிதிநிலை அறிக்கை நிறுத்திக்கொண்டுவிடும்.

கிஸான் சம்மான்

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் தரும் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும், விவசாயிகளுக்குப் பிரதான் மந்திரி கிஸான் திட்டப்படி தரும் உதவித் தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள், அடுத்து சில மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் மோடி அரசுக்கு ஏற்புடையதாகவே தெரியும், எனவே ஏற்கவும் கூடும்.
  • சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மக்களை மிகவும் பாதித்த அம்சங்கள் எவையென்று தெரியவந்திருப்பதால், குறைந்தபட்ச ஊதியத்தையும் விவசாயிகள் உதவித் தொகையையும் உயர்த்த அரசும் முடிவெடுக்கும்.
  • விலைவாசி உயர்வு காரணமாக ஏழைகள் மற்றும் கிராமப்புற மக்களின் நுகர்வுச் செலவு கணிசமாக குறைந்துவிட்டதைத் தரவுகள் காட்டுகின்றன. வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் நாள் கூலி நீண்ட நாள்களுக்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டது. விவசாயிகளுக்கான உதவித் தொகையும் 2019இல்தான் முடிவுசெய்யப்பட்டது. எனவே, இவற்றை இப்போதைய விலைவாசிக்கு ஏற்ப உயர்த்தித் தர வேண்டியது அவசியமாகிவருகிறது.
  • அரசின் நேர்முக – மறைமுக வரி வசூல் அதிகரித்திருப்பதும், இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு வழங்கியுள்ள தொகையின் அளவும் நிதிநிலை இருப்பை வளப்படுத்தியிருக்கின்றன. எனவே, அரசால் இத்தகைய முடிவுகளை எடுப்பதும் எளிதே.

வருமான வரி விலக்கு

  • நடுத்தர குடும்பங்கள் நிம்மதி அடையும் வகையில் வருமான வரிவிதிப்பில் சலுகைகள் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துவருகிறது. 2021 - 2022 நிதியாண்டில் 6.8 கோடிப் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தனர், அவர்களில் 5.8 கோடிப் பேர் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை உள்ளவர்கள். இந்தக் கணக்கில் மேலும் சில ஆயிரம் பேர் சேர்ந்திருப்பார்கள்.
  • இந்தப் பிரிவில் உள்ளவர்களுக்கு வரிவிதிப்பில் சலுகைகள் தருவது அவர்களுக்கு நிச்சயம் பெரிய நிம்மதியை அளிக்கும். அரசுக்கு நிதிப் பற்றாக்குறையையும் வருமான இழப்பையும் ஏற்படுத்திவிடும். ஆனால், தொழில் – வர்த்தகத் துறையினரோ இப்படி வரிச் சலுகை அளித்தால் அது நடுத்தர வகுப்பினருக்குச் செலவுக்குக் கிடைக்கும் தொகையை அதிகப்படுத்தும் அதனால் நுகர்வுச் செலவு அதிகமாகும், அது சந்தையில் கேட்பு அதிகமாகவும் உற்பத்தி, விற்பனை வருமானம் பெருகவும் வழி வகுக்கும் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
  • மோடி அரசு இதுவரை இப்படி வரிச் சலுகை அளித்து சந்தையில் கேட்பை அதிகப்படுத்தியதில்லை. அதற்குப் பதிலாக முதலீட்டை அதிகப்படுத்திப் பொருளாதாரத்தைப் புதுப்பிக்கப் பார்க்கிறது. மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்னால் இப்படி வருமான வரிச் சலுகைகளை அளித்திருந்தாலாவது, அரசியல்ரீதியாக அது வாக்குகளை அறுவடை செய்யப் பயன்பட்டிருக்கும்.
  • இனிமேல் அப்படிச் சலுகை தருவதால் நிதி நிர்வாகத்துக்குத்தான் வருவாய் பற்றாக்குறையை அதிகமாக்கும். அதேசமயம், நேர்முக வரி விகிதங்களிலும் விதிப்பு முறைகளிலும் சீர்திருத்தம் செய்வோம் என்று வாக்குறுதி அளித்திருக்கிறது மோடி அரசு. எனவே, அதன் வாயிலாக இந்தச் சலுகைகளை அளிக்கவும் முடியும்.
  • நடுத்தர வர்க்கத்துக்கு வருமான வரிச் சலுகை தரப்படுகிறதா என்று பார்த்து நிதிநிலை அறிக்கைக்கு மதிப்பு போடுவது தவறு. பெட்ரோல் – டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும், சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க நினைக்கும் நோக்கத்துக்கு நேரெதிரானது. அது மட்டுமல்லாமல் சர்வதேச சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெயின் உற்பத்தியும், விற்பனையும் பல்வேறு காரணங்களால் நிலையில்லாமலும் விலை உயர்ந்தும் காணப்படுகிறது. எனவே, அரசு இதில் சலுகை அளித்து கையைச் சுட்டுக்கொள்ளக் கூடாது.

4 கொள்கைக் கோளாறுகள்

  • புதிய நிதிநிலை அறிக்கை, நான்கு விதமான கொள்கைக் கோளாறுகளைத் தவிர்க்கிறதா என்று பார்ப்பதே நல்லது.

முதலாவது:

  • அரசின் வருவாய்க்கும் செலவுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துவிடாமல் நிர்வகிக்க முடிகிறதா என்று பார்க்க வேண்டும். கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு அரசின் செலவுகள் உயர்ந்தும், வருவாய் குறைந்தும் வருகிறது. எனவே, அரசின் நிதிநிலையைச் சமப்படுத்தவும், நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்கவும் ஏற்படுத்திய இலக்குகளை அதற்கான ஆண்டுகள் வரும்வரை காத்திராமல் வெகு விரைவிலேயே நிறைவேற்றுவது நல்லது. அதாவது அரசின் தேவையற்ற மானியங்களையும் வீண் விரயங்களையும் குறைக்க வேண்டும், அரசுக்கு வர வேண்டிய வருவாயை எல்லா இனங்களிலும் அதிகப்படுத்த வேண்டும்.

இரண்டாவது:

  • இறக்குமதித் தீர்வைகளை உயர்த்தும் போக்கை அரசு திரும்பப் பெற வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னால் இது ஏற்பட்டது. நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டுமென்றால் அத்தகைய ஏற்றுமதித் துறைகளுக்கு உதவும் இறக்குமதிகள் மீதான தீர்வையைக் குறைப்பது கட்டாயம். 

மூன்றாவது:

  • அடித்தளக் கட்டமைப்புகளை உருவாக்க, தான் செய்யும் முதலீடுகளை அரசு குறைப்பதோ, நிதானப்படுத்துவதோ கூடாது. மூலதனச் செலவை அரசு அதிகப்படுத்தியதால் இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துவருவதைக் கடந்த சில ஆண்டு காலச் செயல்பாடுகள் தெரிவிக்கின்றன. தனியார் துறையில் இதற்கேற்ப முதலீடு உயர்ந்ததா, இல்லையா என்று காட்ட தெளிவான அடையாளங்கள் இல்லாவிட்டாலும் அரசின் முதலீடு நிச்சயம் பல துறைகளை வளப்படுத்திவருகிறது.

நான்காவது:

  • சில துறைகளில் உற்பத்தியை அதிகரிக்க நிதி மானியம் தரும் நடவடிக்கையை (பிஎல்ஐ) அரசு கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த மானியச் சுமை அரசுடையது மட்டுமல்ல, உற்பத்தித் துறையுடையதும் ஆகும். உற்பத்தித் துறைக்கு இப்படி ரொக்க அல்லது வரிச் சலுகைகளை மானியமாக அளித்தால் நல்ல தரத்தில், குறைந்த உற்பத்திச் செலவில் பொருள்களைத் தயாரிக்க வேண்டும் என்ற முனைப்பு தொழில்முனைவோரிடையே நாளடைவில் குறைந்துவிடும்.
  • நேரடி வரிகளில் சலுகை அளிக்க வேண்டும் என்று இந்திய தொழில் – வர்த்தகத் துறை கேட்பதை இந்த 2024 - 2025 நிதிநிலை அறிக்கையில் முழுமையாக ஏற்க முடியாமலும் போகலாம், பெட்ரோல் – டீசல் வரிவிதிப்பிலும் சலுகை தராத நிலை தொடரலாம், மூலதன ஆதாய வரிவிதிப்பில் மறுசீரமைப்பு உடனடியாக சாத்தியமில்லாமல் இருக்கலாம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், பிரதான் மந்திரி கிஸான் நிதி மானிய திட்டம் ஆகியவற்றுக்கு அதிக நிதியை ஒதுக்க பட்ஜெட் தவறலாம். ஆனால், மேலே இறுதியாகக் கூறிய நான்கு தவறுகளை அரசு செய்யாமல் இருந்தால் போதும், நிதிநிலை மேம்பட்டு ஒட்டுமொத்த நாடும் அதனால் பயன்பெறும்.

நன்றி: அருஞ்சொல் (30 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்