- அரசு நிறுவனங்கள், தங்கள் துறை சார்ந்த புள்ளிவிவரங்களைக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வெளியிடுவார்கள். உடனே, ஊடகங்களில், பொதுவெளிகளில், அவை சார்ந்த விவாதங்கள் நடக்கும். ஒட்டியும் வெட்டியும் விவாதங்கள் எழும்.
- ஆனால், ஒரே ஒரு புள்ளிவிவரம் வெளிவரும்போது மட்டும், ஊடகங்களில், பொதுவெளிகளில் பெரும் சோக கீதங்கள் ஒலிக்கும். அது இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை பற்றிய புள்ளிவிவரம். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்திய அரசு மொத்த வருமான வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 5.83 கோடி என அறிக்கை வெளியிட்டது.
வரி வகைகள்
- மொத்தம் 140 கோடி மக்கள்தொகையில், 5.83 கோடி மட்டுமே வரி செலுத்தினால், நாடு எப்படி வல்லரசாகும்? வரி ஏய்ப்பவர்களை, ஊழல் அரசியலர்களை ஒழிக்காமல், இந்தியா முன்னேறாது எனப் பல குரல்களில் சோக கீதங்கள் ஒலித்தன. உச்சகட்டமாக ஒரு அன்பர், எங்களை மட்டும் ஏன் சிலுவையில் அறைகிறார்கள் எனக் கேட்டார். உண்மையான துயரம். ஆனால், அது அறியாமையால் விளையும் துயரம் எனச் சொன்னால் நான் தேச விரோதி என அழைக்கப்பட்டுவிடும் அபாயம் இருந்ததால் வாயைத் திறக்கவில்லை.
- கற்றார் கல்லாதார் என வேறுபாடுகளின்றி இந்தியாவில் உள்ள மூடநம்பிக்கைகளில் தலையாயது, 2%-3% பேர் மட்டுமே இந்தியாவில் வரி செலுத்துகிறார்கள் என்பது ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு, உயர் இலக்கியம் பேசும் குழுவில் இதே வாதம் வைக்கப்பட்டபோதுதான், இது எவ்வளவு ஆழமானது என்பது புரிந்தது.
- வரிகள் இரண்டு வகைப்படும். ஒன்று நேர்முக வரி இன்னொன்று மறைமுக வரி. வருமான வரி, சொத்து வரி போன்றவை நேர்முக வரிகள். இவற்றில் நிறுவன மற்றும் தனிநபர் வருமான வரி என்பது மத்திய அரசால் வசூலிக்கப்படுவது. சொத்து வரி உள்ளூர் அரசாங்கமான மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சிகள் வசூல் செய்வது. விற்பனை வரி, கலால் வரி, சேவை வரி, செஸ் போன்றவை மறைமுக வரிகள். பொருட்கள் மற்றும் சேவைகளை மக்கள் பயன்படுத்துகையில் அரசு வசூலிப்பவை. இவற்றில் கலால் மற்றும் சேவை வரிகள் மத்திய அரசாலும், விற்பனை வரிகள், மாநிலக் கலால் வரிகள் மாநில அரசுகளாலும் வசூலிக்கப்படுகின்றன.
- நேரடி வரிகள்போல, மறைமுக வரிகள் தனிநபர்களிடம் இருந்தது நேரடியாக வசூலிக்கப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, 100 ரூபாய் மதிப்புள்ள பொருளை ஒருவர் வாங்குகையில், அதன் மீது அரசு விதித்துள்ள வரியையும் சேர்த்தே அவர் விலையாகக் கொடுக்கிறார். அந்தப் பொருள் மீது 18% வரி உள்ளது என்றால், அந்தப் பொருளின் மதிப்பு ரூ.84.74 உற்பத்தியாளருக்கு பொருளுக்கான விலையாகவும், ரூ.15.26 அரசாங்கத்துக்கு வரியாகவும் சென்று சேர்கிறது.
ஏழை இந்தியா
- இதில் நேரடி வரிகள் முற்போக்கானவை என்றும் மறைமுக வரிகள் பிற்போக்கானவை என்றும் கருதப்படுகின்றன. வருமான உயர்வுக்கேற்ப அதிகமாகும் வரிகள் முற்போக்கானவை எனக் கருதப்படுகின்றன. இதனால், அதிக வருமானம் ஈட்டும் நபர்கள் / நிறுவனங்களிடமிருந்து அதிக வரிகள் பெற்று, மொத்த சமூகத்தின் நன்மைக்காக அவற்றைப் பயன்படுத்த முடியும் என்பதே இதன் அடிப்படை. வருமானம் ஈட்டும் தனிநபர்கள் / நிறுவனங்கள் அடையாளப்படுத்தப்ப்ட்டு அவர்களிடமிருந்து நேரடியாக வரிகளை வசூலிக்க முடியும் என்பதால் இவை நேரடி வரிகள் எனச் சொல்லப்படுகின்றன.
- மறைமுக வரிகள் என்பவை நுகர்வின் மீது விதிக்கப்படும் வரி. பொருட்கள் மற்றும் சேவைகளை ஏழை பணக்காரன் என்னும் வித்தியாசமில்லாமல் அனைவரும் நுகர்கிறார்கள். அப்படி அவர்கள் நுகரும் ஒவ்வொரு முறையையும் கணக்கிட்டு வசூல் செய்வது இயலாத காரியம். யார் எவ்வளவு நுகர்கிறார்கள் என்னும் தரவுகளும் அரசிடம் இன்று இல்லை. எனவே, அந்த வரிகளை அரசு, உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குபவர்களிடமிருந்து, அவர்களது விற்பனையில் ஒரு பகுதியாக வசூல் செய்கிறார்கள்.
- வளர்ந்த நாடுகளில், மறைமுக வரிகள் அதிகமாகவும், நேரடி வரிகள் குறைவாகவும் உள்ளன. ஏழை / வளர்கின்ற நாடுகளில், நேரடி வரி விதிப்பு சதவீதம் அதிகமாகவும், மறைமுக வரிகள் குறைவாகவும் உள்ளன. ஏழைகள் அதிகமாக உள்ள நாடுகள், மறைமுக வரிகளை அதிகரித்தால், அது எழைகளை அதிகம் பாதிக்கும் என்பதே முக்கிய காரணம்.
- உலகில் மிக அதிக ஏழைகள் உள்ள நாடான இந்தியாவுக்கு எந்த வரிகள் அதிகம் வேண்டும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (ஓஈசிடி- OECD), நேரடி மற்றும் மறைமுக வரிகள் 60:40 என்னும் விகிதத்தில் இருத்தல் நல்லது எனப் பரிந்துரைத்திருக்கிறது.
- மன்மோகன் சிங் அரசுக் காலத்தில், நேரடி வரிகள் 53%-54% வரை இருந்தன. ஆனால், தற்போதைய மோடி அரசுக் காலத்தில் நேரடி வரிகளின் சதவீதம் 40% ஆகக் குறைந்துவிட்டது. 60% வரிகள் மறைமுக வரிகளான விற்பனை வரி, கலால் வரி மூலம் பெறப்படுகிறது.
- மறைமுக வரிகள் நுகர்வின் மீதான வரிகள் என்பதால், 100% குடிமக்களும் இந்த வரியைச் செலுத்துகிறார்கள். பீடி, தீப்பெட்டி வாங்கும் ஏழைத் தொழிலாளி, அவர் தன் குழந்தைக்காக வாங்கும் மருந்து, முன்கட்டணம் செலுத்தும் கைபேசிச் சேவை, சினிமா என அவர்தம் நுகர்வின் மீதான வரிகளைச் செலுத்துகிறார். உழவர்கள் வாங்கும் டீசல், பூச்சி மருந்து, பம்ப் செட் என அனைத்தின் மீதும் வரிகள் உண்டு. தினசரி 3-4 லிட்டர் பெட்ரோல் வாங்கி, வாடகைக்கு ஆட்டோ ஒட்டும் ஓட்டுனர், 100-130 வரை மறைமுக வரியைச் செலுத்துகிறார். சராசரியாக மாதம் 3,000 ரூபாய் என, வருடம் 36,000 ரூபாய் மறைமுக வரி செலுத்துகிறார்.
- இந்தியாவின் ஏழை மற்றும் கீழ் நடுத்தர வர்க்கம், இந்தியாவில் பெரும்பான்மை வருடம் 3 லட்சத்துக்குக் குறைவாக வருமானம் ஈட்டுபவர்கள் 90% மக்கள். இன்று ஒன்றிய / மாநில அரசுகள் வசூல் செய்யும் 60% மறைமுக வரியில், பெருமளவு இவர்கள் செலுத்துவதே. ஆனால், வரிவிதிப்பு பற்றிய விவாதங்களில் இவர்களது பங்கேற்பு என்பது இல்லவே இல்லை. வரி மட்டுமல்ல, அரசின் கொள்கைகள் தொடர்பான எல்லா விவாதங்களிலும் இவர்களின் இருப்பும் பங்களிப்பும் பூஜ்யம்.
இலவசங்கள் சீரழிவா?
- 2022 ஜூலை மாத இறுதியில் பிரதமர் மோடி, பல அரசியல் கட்சிகளும் இலவசம் என்னும் பெயரில் மாநிலங்களில் நிதியை வீணடித்து, மாநிலங்களின் நிதி நிலைமையை மோசம் செய்கின்றன. இந்த ‘இலவசக் கலாச்சார’த்தை இளைஞர்கள் ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
- இந்த அறிவிப்பு தொடர்பாக ஊடகங்களில் பெரும் விவாதங்கள் நடந்தன. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என கட்சிகள் பிரிந்து விவாதித்தனர். வலதுசாரிகள், விமர்சகர்கள் எனத் தனிமனிதர்கள் விவாதங்களில் இடம்பெற்றனர். ஆனால், இந்தத் திட்டங்களின் பயனாளிகளான ஏழை மக்களோ அல்லது அவரது பிரதிநிதிகளோ இடம்பெறவில்லை.
- அவர்கள், வேறு வழிகள் இல்லாமல், உழைப்புக்கேற்ற கூலி கிடைக்காமல், வீட்டுப் பணியாளர்களாகவோ, கூலித் தொழிலாளர்களாகவோ, சிறு விவசாயிகளாகவோ குரலின்றி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்த உழைப்பின் பலனைத்தான் படித்தவர்கள், அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள், தொழிலதிபர்கள் என்னும், வருமான வரி கட்டும் 2%-3% சமூகம் அனுபவித்துக்கொண்டு, ‘இலவசங்கள் நாட்டின் நிதி நிலைமையைச் சீரழித்துவிடும்’ என சமயோஜிதமாகப் பேசிக்கொண்டிருக்கிறது.
- இந்த நிலைமை சரி செய்யப்பட வேண்டும். உணவு, கல்வி, மருத்துவம், வீடு என்னும் அடிப்படைத் தேவைகள் அனைவரின் அடிப்படை உரிமையாகக் கருதப்பட்டு, அவற்றைத் தரமாக, இலவசமாக வழங்குவதை அரசு முன்னிலைப்படுத்த வேண்டும். இதற்கு ஆகும் செலவு போக மீதத்தை அரசுகள் தங்கள் செலவுக்கு, ஊழியர்களின் சம்பளத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளட்டும். இன்று அரசின் நிர்வாகத்தில், ஊடகத்தில், பொதுவெளிகளில் பங்கேற்காமல் குரல் ஒடுங்கி நிற்கும் 90% மக்களுக்கு குரலும், இடமும் கிடைத்தால், அவர்கள் அரசுக்குச் சொல்ல விரும்புவது இதுவாகத்தான் இருக்கும்.
- உலகின் முன்னேறிய நாடுகள் பலவற்றிலும் இந்த அடிப்படைத் தேவைகள் தரமாக, இலவசமாகக் கிடைக்கின்றன. இந்திய அரசமைப்புச் சட்டம் பேசும் சமூகப் பொருளாதார நீதி இதுதான்!
நன்றி: அருஞ்சொல் (25– 08 – 2022)