TNPSC Thervupettagam

வருமுன் காப்போம்!

February 23 , 2019 2131 days 8981 0
தொற்றுநோய்களும் இந்தியாவும்
  • பனிக்காலம் முடிந்து கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னால் இந்தியா முழுவதும் பருவநிலை மாற்றத்தால் பல்வேறு தொற்று நோய்கள் உருவாவது என்பது புதிதல்ல.
  • மருத்துவ அறிவியல் எவ்வளவுதான் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று நாம் கூறிக்கொண்டாலும் கற்றது கைமண் அளவு என்பது போல, மனித இனம் அடையாளம் கண்டிருக்கும் நோய்கள் மூன்று இலக்க எண்ணிக்கையைத் தாண்டாது.
  • ஆயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் உள்ள பல்வேறு நோய்களும், உடல் ரீதியான பிரச்னைகளும் இன்னும் அறியப்படவில்லை என்பதுதான் உண்மை.
  • இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இப்போது காணப்படும் நோய்த் தொற்றுகள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்றன.
  • விஷக் காய்ச்சல் என்றோ, சாதாரண காய்ச்சல் என்றோ, வெறும் தலைவலி, ஜலதோஷம் என்றோ நம்மால் வகைப்படுத்தப்படும் பிரச்னைகள் ஒரே மாதிரியானவை அல்ல. இடத்துக்கு இடம், நபருக்கு நபர் மாறுபடுகிறது. மருத்துவ அறிவியல் அடையாளம் கண்டிருக்கும் சில மருந்துகளின் பொதுப்பிரயோகம் வெவ்வேறு விதமான காய்ச்சல்களுக்கும் விடை காண்பதாக இருப்பது மனித குலம் அடையும் ஆறுதல்.
ஃபுளு காய்ச்சல் – இந்தியா
  • ஃபுளு காய்ச்சல் என்று பரவலாக அறியப்படும் இன்ஃபுளுயன்ஸா காய்ச்சல் ஆண்டுதோறும் இந்தியாவின் பொது சுகாதாரத்துறை எதிர்கொள்ளும் சவால்.
  • ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான முதல் நான்கு மாதங்களில்தான் மிக அதிகமாக ஃபுளு காய்ச்சல் இந்தியாவின் பல பகுதிகளிலும் பரவுகிறது.
  • வழக்கம்போல இந்த ஆண்டும் புத்தாண்டு தொடங்கிய முதல் மூன்று வாரங்களிலேயே பல்வேறு மாநிலங்களில் ஃபுளு காய்ச்சல் பாதிப்பு தொடங்கிவிட்டது. இரண்டு மாதங்கள் கடந்தும்கூட இன்னும் பல்வேறு மாநிலங்களில் சுகாதாரத்துறை அதை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை என்பதுதான் வேதனை அளிக்கிறது.
  • கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஃபுளு காய்ச்சலால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலமாக ராஜஸ்தான் காட்சியளிக்கிறது.
  • ஜனவரி மாதத்திலேயே ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஃபுளு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 50-க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
  • கடந்த ஆறு ஆண்டுகளாகவே இந்தியாவின் பல பகுதிகளில் ஃபுளு காய்ச்சல் உச்சத்தை எட்டி, மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
  • இதனால் ஏற்படும் மனித உழைப்பின் இழப்பு ஒருபுறம் இருக்க, குடும்பத்தினர் அனைவருக்கும் பரவுவதால், பொருளாதார ரீதியாகவும், நடுத்தர அடித்தட்டு மக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.
  • கடந்த ஆறு ஆண்டுகளில் சராசரியாக 42, 592 பேர் பாதிக்கப்பட்டதாக அரசின் புள்ளிவிவரம் தெரிவித்தாலும், அவை குடும்பங்களா, நபர்களா என்பது குறித்து தெளிவில்லை. ஃபுளு காய்ச்சலின் தாக்கம் லட்சக்கணக்கானோரை பாதிக்கிறது என்பது அனுபவப்பூர்வ உண்மை. அரசு புள்ளிவிவரத்தின்படி, 2015-இல் மட்டும் சுமார் 3,000 பேருக்கு முறையான சிகிச்சை மேற்கொள்ளப்படாததால் ஃபுளு காய்ச்சலில் இறந்திருப்பதாகத் தெரிவிக்கிறது.
  • இது வேண்டுமானால், ஓரளவுக்கு ஏற்புடைய புள்ளிவிவரமாக இருக்கும்.
வருமுன் காப்போம்!
  • தீவிரமாக இருக்கும் தொற்றுநோய் நுண்ணுயிரி எது என்பதை புரிந்துகொண்டு அதற்குத் தேவையான தடுப்பு மருந்துகளைத் தயார் நிலையில், மாநில அரசின் சுகாதாரத் துறைகள் வைத்திருக்கு மேயானால், ஃபுளு காய்ச்சல் பரவாமலும், உயிரிழப்பு ஏற்படாமலும் நிச்சயமாகத் தடுக்க முடியும்.
  • கடந்த ஆண்டு ஃபுளு காய்ச்சல் பரவத் தொடங்கியவுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தொற்றுநோய் பரவாமல் இருக்க ராஜஸ்தானுக்கு மருத்துவர்களையும், சமூக சேவகர்களையும் அனுப்பிவைத்தது.
  • நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், இதயநோய், சர்க்கரை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள், குழந்தைகள், முதியோர் ஆகியோருக்கு முன்கூட்டியே தடுப்பூசிகள் போட்டு சமூகநலத்துறை பாதுகாக்க முற்பட்டால் ஃபுளு காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுகளால் பெரிய அளவு பாதிப்பு ஏற்படாமல் தடுத்துவிட முடியும்.
  • கடந்த ஆண்டு மத்திய சுகாதார அமைச்சகம் இன்ஃபுளுயன்ஸா-ஏ, இன்ஃபுளுயன்ஸா-பி போன்ற தொற்று நோய்களுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் இன்னின்ன என்று அறிவித்தது.
  • அப்படி இருந்தும், பெரும்பாலான பொது சுகாதாரத்திட்டங்கள் அந்த நோய்த் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தி, தடுப்பூசிகள் போடும் முயற்சியில் முனைப்புக் காட்டவில்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
  • போதுமான அளவு நோய்த்தடுப்பு மருந்துகள் கிடைக்காமல் இருப்பதும், அதைப் பயன்படுத்தி சிலர் கொள்ளை லாபம் அடைவது, தடுக்கப்படாமல் இருப்பதும் மிக முக்கியமான குறைபாடு.
  • பருவம் தோறும் தலைதூக்கும் ஃபுளு காய்ச்சலுக்கு ஏதாவது மருத்துவ நிவாரணம் கண்டறியப்பட்டால், பொது சுகாதாரத் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்ய அரசு முன்வருவதன் மூலம் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முடியும்.
  • ராஜஸ்தான், மகாராஷ்டிரம், குஜராத், தில்லி, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலிருந்துதான் மிக அதிகமான அளவில் விஷக் காய்ச்சல் ஆண்டுதோறும் பரவுவது வழக்கமாகி இருக்கிறது.
  • நல்ல வேளையாக தமிழகத்தைப் பொருத்தவரை ஆரம்பம் முதலே நமது சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும்கூட, மிக அதிகமான மக்கள் இடப்பெயர்வு ஏற்படும் நிலையில், ஏனைய மாநிலங்களில் விஷக்காய்ச்சல் தொற்றுநோய் பரவும்போது, அது தமிழகத்திலும் ஊடுருவுவதை நம்மால் தடுத்துவிட முடியாது.
  • அதனால், அதிக எச்சரிக்கையுடனும் முனைப்புடனும் தயார் நிலையில் இருப்பது மிக மிக அவசியம்.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்