TNPSC Thervupettagam

வரும்முன் காத்தோம்...

May 6 , 2019 2030 days 1048 0
  • ஒடிஸா மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது. பெருமளவிலான சேதம் ஏற்பட்டிருந்தாலும்கூட, அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படுத்தாமல் பானி புயல் தனது சீற்றத்தை வெளிப்படுத்தி ஓய்ந்திருக்கிறது. ஒடிஸா அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறது.
புயல்
  • இந்திய மாநிலங்களில் கடந்த நூறாண்டுகளில் சுமார் நூறு புயல்களால் தாக்கப்பட்டிருக்கும் மாநிலம் ஒடிஸா. 20 ஆண்டுகளுக்கு முன்பு 250 கி.மீ. வேகத்தில், 1999 அக்டோபர் 29-ஆம் தேதி ஒடிஸாவின் தலைநகர் புவனேஸ்வரத்தைத் தாக்கிய கடும் புயலுக்கு அடுத்தபடியாக இப்போது பானி புயல் 160 முதல் 175 கி.மீ.
  • வேகத்தில் அந்த மாநிலத்தைத் தாக்கி ஓய்ந்திருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு தாக்கிய புயலில் 9,688 பேர் உயிரிழந்தார்கள் என்றால், இந்த முறை ஒடிஸா அரசின் முன்னேற்பாடுகளால் உயிரிழப்புகள் சுமார் 34 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த காலங்களில்.....
  • கடந்த 30 ஆண்டுகளில் ஒடிஸாவையும் வங்கக் கடலோரத்தையும் நான்கு கடுமையான புயல்கள் தாக்கியிருக்கின்றன. இப்போது பானியுடன் சேர்த்து எண்ணிக்கை ஐந்தாகிறது. ஒடிஸா மாநிலத்தின் 13 மாவட்டங்களை பானி புயல் சின்னாபின்னமாக்கி நகர்ந்திருக்கிறது.
  • ஒரு கோடிக்கும் அதிகமானோர் உடைமைகளை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள். எல்லா அத்தியாவசியத் தேவைகளும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன.
  • தகவல் தொடர்பு முற்றிலுமாக இல்லாத நிலை. வீடுகள், வணிக நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சாலைகள், பாலங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட எல்லா கட்டமைப்பு வசதிகளும் பானி புயலின் கொடூரத் தாக்குதலில் சிதைந்து கிடக்கின்றன.
  • புரி, கோர்தா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன என்றால், கடலோர மாவட்டங்களான கட்டக், பத்ரக், கேந்திராபரா, ஜகத்சிங்பூர், பாலாசோர், மயூர்பன்ஜ், கியோன்ஞ்சர், தென்கானால், நயாகர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கட்டமைப்பு வசதிகள், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, தகவல் தொடர்பு இணைப்பு ஆகியவை அரசுக்கு மிகவும் சவாலாக உயர்ந்திருக்கின்றன. நல்லவேளையாக விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டாலும்கூட, விமானப் போக்குவரத்தைத் தாமதமில்லாமல் தொடங்க முடிந்திருக்கிறது. புவனேஸ்வர் ரயில்நிலையம் சிதைந்து கிடந்தாலும்கூட, ரயில் தொடர்பு இன்னும் ஓரிரு நாள்களில் சீரமைக்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது.
  • பானி புயலை எதிர்கொள்ள மாநில அரசும், பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினரும் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை.
  • ஏறத்தாழ 11 லட்சத்துக்கும் அதிகமானோர் புயல் தாக்குவதற்கு முந்தைய நாளே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருப்பதை அசுர சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமானோரும், புரி மாவட்டத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானோரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். பலரும் தங்களது வீடுகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற மறுத்த நிலையில், பிரச்னையின் உக்கிரத்தை நிவாரணப் பணியினர் அவர்களுக்கு எடுத்துச்சொல்லி ஒப்புக் கொள்ள வைத்தது மிகப் பெரிய சாதனை.
பாதுகாப்பு மையங்கள்
  • 400-க்கும் அதிகமான பாதுகாப்பு மையங்கள், சுமார் 1,000 சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கெல்லாம் மக்கள் தங்க வைக்கப்பட்டனர். புயல் பாதிப்புப் பகுதிகளில் உடனடி நிவாரணப் பணிகளுக்காக 300 பேரிடர் நிர்வாகக் குழுவினர் முன்னெச்சரிக்கையாக அமர்த்தப்பட்டனர். 1,000-க்கும் அதிகமான மருத்துவ முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
  • "ஒவ்வோர் உயிரும் முக்கியமானது' என்பதுதான் நிவாரணப் பணியினருக்கு ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் விடுத்திருந்த செய்தி. 1,000-க்கும் அதிகமாக பிரசவத்திற்குக் காத்திருந்த பெண்கள் முன்னுரிமையுடன் மருத்துவமனைகளில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டதை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதற்கு முன்னால் கடந்த சில ஆண்டுகளில் நாம் சந்தித்த ஹுட்ஹுட், பைலின், டிட்லி, தானே, வர்தா, ஒக்கி, கஜா புயல்களிலிருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் அனுபவ ரீதியாக அறிந்து கொண்ட பாடங்கள், பானி புயலை அதிக உயிரிழப்பில்லாமல் எதிர்கொள்ள உதவியது எனலாம்.
  • பானி புயல் பூமத்திய ரேகைக்கு அருகில் உருவாகி கடலிலேயே பல நாள்கள் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது. அதனால், கடலிலிருந்து கடல் வெப்பத்தால் உருவாகும் ஈரப்பசையுள்ள காற்றை உள்வாங்கியிருந்தது. அதிசக்தி வாய்ந்த புயல் உருவாகி வருவதை முன்கூட்டியே அறிந்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததால்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடிந்தது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
புயலின் பெயர் மற்றும் சீற்றம்
  • வங்கதேசத்தால் சூட்டப்பட்டிருக்கும் "ஃபோனி' ("பானி' புயலுக்கு "ஃபோனி' என்பதுதான் சரியான உச்சரிப்பு.) என்கிற பெயருக்கு நல்ல பாம்பின் படம் என்று பொருள். நல்ல பாம்பின் சீற்றத்தைப் போலவே பானி புயலும் ஒடிஸாவில் தனது சீற்றத்தைக் காட்டி மறைந்திருக்கிறது.
  • இதுபோன்ற இயற்கைப் பேரிடர் பாதிப்புகளுக்கு பருவநிலை மாற்றமும் ஒரு முக்கியமான காரணம் என்று யுனிசெஃப் அமைப்பு எச்சரித்திருக்கிறது. பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் கடல்நீர் அளவால் புயல் உருவாகிறது என்றும், அதனால் கடலோரப் பகுதிகளில் பலத்த மழையுடன் பாதிப்புகள் ஏற்படுவதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்திருக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க முனைப்புடன் நடவடிக்கை எடுக்காமல் போனால், கடலோரப் பகுதிகள் இதுபோல புயலால் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியாது.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்