TNPSC Thervupettagam

வர்ண பகுப்பு ஜாதியமானது எப்படி

December 9 , 2023 380 days 226 0
  • இந்தியாவில் இன்று ஆயிரக்கணக்கான ஜாதிகள் உள்ளன. ஜாதி என்பது குலமா, பல குலமுறைகளின் தொகுப்பா, அந்தத் தொகுப்புகளின் பொதுப்பெயர்கள் ஜாதி உட்பிரிவுகளா, அல்லது உட்பரிவு தொகுப்புகளின் பொதுப்பெயர்தான் ஜாதியா என்பதிலெல்லாம் முழுமையான தெளிவு இருப்பதில்லை. ஆனால், அகமணமுறை என்பதை வைத்துப் பார்த்தால் குலமுறை தொகுப்புகளே ஜாதிகள் என்று கூற வேண்டும்.
  • சரி, அகமணமுறையைப் பின்பற்றும் சமூகப் பிரிவுகள் பல்வேறு நாடுகளிலும் இருக்கத்தானே செய்கின்றன! அவ்வாறு இருந்தால் என்ன பிரச்சினை, இருந்துவிட்டு போகட்டுமே என்றால், அதில்தான் இந்திய சமூகத்தில் கடுமையான பிரச்சினைகள் தோன்றுகின்றன.
  • முக்கியமான பிரச்சினை ஜாதிகள் இடையே தொடர்ந்து ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. சமூக இயக்கத்தில் அனைத்துப் பிரிவினருக்கும் சமச்சீரான பங்கு, வாய்ப்பு இருப்பதில்லை. ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 15% இருக்கக்கூடிய முற்பட்ட வகுப்பினருக்கும்,  பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினருக்கும் இடையே சமூக செல்வாக்கான பணிகளை மேற்கொள்வதில் பெரும்  இடைவெளி நிலவுகிறது.
  • இதில் பொருளாதாரம் மட்டுமே பிரச்சினை இல்லை. ஆங்கிலத்தில் ‘கல்சுரல் காபிடல்’, ‘சோஷியல் காபிடல்’ என்று கோட்பாட்டாக்கம் செய்யப்படும் கலாச்சார, சமூக மூலதனங்களில் கடுமையான வேறுபாடு நிலவுகிறது. ‘கிரேடட் இனீக்வாலிடி’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் படிநிலை சமமின்மை வேரூன்றியுள்ளது. இப்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டினால் இதனை முழுமையாகச் சீர்செய்ய இயலவில்லை.
  • இந்திய சமூக இயக்கத்தின் அடிப்படைக் கட்டுமானமாக ஜாதிய படிநிலை இன்றளவும் இருக்கிறது. அகமணமுறை என்பது இயல்பான தேர்வாக அல்லாமல், தனிநபர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாக, வன்முறையின் மூலம் கட்டாயப்படுத்தப்படும் நடைமுறையாக இன்றளவும் உள்ளது. இதுகுறித்து மேலும் விரிவாக பின்னர் விவாதிப்போம்.

ஜாதிய கட்டமைப்பும் வர்ண கோட்பாடும்

  • தொகுத்துச் சொன்னால் ஒரு சுதந்திரவாத மக்களாட்சி சமூகமாகவோ, முற்போக்கு சோஷலிஸ சமூகமாகவோ உருவாவதற்கு ஜாதியம் மிகப் பெரிய தடையாக விளங்கிவருவது கண்கூடு. சமூகத்தில் செல்வாக்குப் பெற்ற மகான்கள், அரசியலர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் பலரும் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறினாலும், அது எப்படி ஒழியும் என்பதற்கான சாத்தியங்கள் எதுவும் சரிவர தென்படவில்லை.
  • ஜாதியம் ஏற்படுத்திய சமமின்மையை சீர்செய்ய கடைபிடிக்கப்படும் இடஒதுக்கீட்டு நடைமுறைகளும், அவை குறித்த அரசியலும் ஜாதியத்தை வலுப்படுத்துவதாக சிலர் குயுக்தியாக பேசினாலும், ஜாதியம் என்பது இதையெல்லாம் கடந்த ஒரு சமூக உளவியல் வியக்தியாகவே (phenomenon) உள்ளது. இடஒதுக்கீடும், அதற்கான அரசியலும் இல்லாவிட்டால் ஜாதிகள் காற்றில் கரைந்துவிடுமா என்ன? மேலும் கடுமையாக இறுகிவிடும் எனலாம்.
  • இந்தப் பரவலான ஏராளமான அடையாளங்களைக் கொண்ட பிரம்மாண்டமான ஜாதிய கட்டமைப்பிற்கும், என்றோ ஒரு காலத்தில் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வர்ண கோட்பாட்டிற்கும் என்ன தொடர்பு என்ற ஒரு கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. “வர்ணம் என்பது ஆதிகாலத்தில் உருவான வேலைப் பிரிவினைதான்; அது எப்படியோ காலப்போக்கில் திரிந்து, சீர்கெட்டு ஜாதியமாக மாறிவிட்டது” என்று பலரும் பசப்பலாகக் கூறுவதை கவனிக்கலாம். இது மிகவும் தவறான கருத்தாகும்.

வர்ண தோற்றவியலே, ஜாதிய தோற்றவியல்

  • முதலில் இந்தத் தோற்றவியல் என்ற வார்த்தையை எந்தப் பொருளில் பயன்படுத்துகிறேன் என்பதை விளக்கிவிட வேண்டும். மேற்கத்திய தத்துவத்தில் ‘ஆன்டாலஜி’ என்று குறிப்பிடப்படுவதைத்தான் நான் தோற்றவியல் என்று கூறுகிறேன். அதைத் தத்துவ தளத்தில் விளக்குவதைவிட இந்த கட்டுரைத் தொடரைப் பொறுத்தவறை எந்தப் பொருளில் பயன்படுத்துகிறேன் என்பதைக் கூறுவதே பயனுள்ளது.
  • தோற்றம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு இரண்டு விதமான பொருள் உள்ளது. ‘அவருடைய அழகிய தோற்றம்’ என்று சொல்லும்போது அது உருவத்தை, பருப்பொருள் இருப்பைக் குறிக்கிறது (ஆங்கிலத்தில் அப்பியரன்ஸ் – ‘appearance’). இன்னொரு பொருள் துவக்கம் (ஆங்கிலத்தில் பிகினிங், ஆரிஜின் – ‘beginning’, ‘origin’). ‘உலகம் தோன்றியபோது’ என்று கூறுவதுபோல.
  • இரண்டையும் இணைத்தால் நம்முன் காணப்பெறுவது அவ்வண்ணமே தோன்றி எக்காலத்திலும் அவ்வண்ணமே நிலவக்கூடியது என்று நினைக்கும் தன்மைக்கு இட்டுச்செல்வதையே தோற்றவியல் என்று கூறுகிறோம். அதாவது, நாம் அடையாளப்படுத்தும் பொருட்களின் மாறாப்பண்பாக நாம் கொள்வதே தோற்றவியல் சாராம்சம்.   
  • உதாரணமாக, நாற்காலி நான்கு கால்கள் கொண்ட இருக்கை என்பது ஒரு திடப்பொருளைக் குறிப்பது மட்டுமல்ல; அது ஒரு சாராம்சமான கருத்தாகும். தனிப்பட்ட நாற்காலிகள் உருவத்திலும், நிறத்திலும், பண்பிலும் வேறுபட்டிருக்கலாம். ஆனால், நாற்காலி என்பது ஒரு தோற்றவியல் இருப்பு எனலாம்.
  • நாம் சென்ற அத்தியாயத்தில் விவாதித்தபடி பிரம்மன் தன் உடலில் இருந்து நான்கு வர்ணங்களை உருவாக்கியதாக கூறும்போது அந்த நான்கு வர்ணங்களும் தோற்றவியல் சாராம்சம் கொண்டவை என்பது தெளிவாகிறது. அந்த வர்ணங்கள் ஆன்மாக்களின் பாகுபாடா, உடல்களின் பாகுபாடா என்று பரிசீலித்தோம். ஓர் ஆன்மா மறுபிறவியில் மற்றொரு வர்ணத்தில் பிறக்கும் என்று கூறும்போது வர்ணம் ஆன்மாக்களின் பிரிவினை அல்ல என்று தீர்மானமாகிறது. அது உடல்களின் பிரிவினைதான்.
  • அப்படியானால், வர்ண உடல்களை அகமணமுறை மூலம் மறுஉற்பத்தி செய்வது தோற்றவியல் தேவையாகிறது. தாயின் வர்ணம்தான் குழந்தையின் வர்ணம் என்றோ, தந்தையின் வர்ணம்தான் குழந்தையின் வர்ணம் என்றோ கூறியிருந்தால்கூட அகமணமுறை தேவைப்பட்டிருக்காது. ஆனால், ஒரே வர்ணத்தைச் சேர்ந்தவர்களே மணம் புரியும்போதுதான் அந்த வர்ண உடல் மறுஉற்பத்தி செய்யப்படுகிறது என்பதால் அகமணமுறை இன்றியமையாததாகிறது.
  • சிலர் அனுலோமம், பிரதிலோமம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கலாம். அதாவது, மேல் கீழ் வர்ணங்களுக்குள் திருமணம் நடப்பது. அதெல்லாம் நடைமுறை விதிவிலக்குகள் என்பதால் அதற்குள் நாம் போக வேண்டாம். வர்ண பாகுபாடு என்பதே சமூக ஒழுங்கு, பிரபஞ்ச ஒழுங்கின் அங்கம் என்று மனு வர்ணிக்கும்போது அதன் தோற்றவியல்தன்மை திட்டவட்டமாகிறது.

பிறப்பிலேயே தீர்மானமாகும் அடையாளம்

  • எந்தவிதமான குற்றங்களைச் செய்தால், ஒருவர் என்னவாக மறுபிறவி எடுப்பார் என்பதை மனு பட்டியிலிடுவதைப் பார்த்தோம். ஒரு பிராமணனைக் கொன்றால், மறுபிறவியில் சண்டாளனாகப் பிறப்பான் என்று கூறுகிறார் மனு. அப்போது சண்டாளனாகப் பிறப்பது என்பதே ஒரு தண்டனைதான். அது ஒரு தோற்றவியல் சாராம்சம். சண்டாளனை இழிபிறப்பாகக் கருதி, சமூக விலக்கங்களைக் கடைப்பிடித்தால்தான் அந்தப் பிரபஞ்ச நியதியான தண்டனை நிறைவேறும்.
  • வைக்கம் சத்தியாகிரகத்தில் காந்தியிடம் பேசிய வைதீகர்கள், ‘ஈழவர்கள், புலையர்களுக்குக் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் அனுமதி மறுப்பது என்பது அவர்களின் பிறப்பின் வடிவில் விதிக்கப்பட்ட கடவுளின் தண்டனையை நிறைவேற்றுவதுதான்!’ என்று வாதாடியதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • இப்படி பிறப்பிலேயே அடையாளம் திட்டவட்டமாக இருக்க வேண்டும் என்ற உளவியல்தான் ஜாதியத்தின் தகர்க்க முடியாத உளவியலாக உள்ளது. இந்தப் பிறப்பு சார்ந்த அடையாளம் என்பது பிற சமூகங்களில் இல்லையா என்ற கேள்வியும் முக்கியமானது. இருந்தது. இருக்கிறது. யார் எந்தக் குலத்தில் பிறக்கிறார்கள், ஒருவருடைய மூதாதையர்கள் யார் என்பது ஒருவருக்கு அடையாளத்தை வழங்குவது உலகம் முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறது எனலாம்.
  • ஆனால், முற்பிறவியல் செய்த பாவ, புண்ணியங்களின் விளைவுதான் ஒருவரது பிறப்பு என்பது இந்திய ஜாதிய சமூகத்தின் தனிப்பட்ட அம்சமாக விளங்குகிறது. அதாவது, பிறப்பு என்பது வரலாறு சார்ந்த தோற்றவியலாக மட்டுமில்லை. உண்மையான சாமுராய் வம்சத்தில் வந்தவனா, உண்மையான பிரபுக்குலத்தில் பிறந்தவனா என்பது மட்டும் கேள்வியல்ல.
  • ஒரு வர்ணத்தில், ஜாதியில் பிறப்பது என்பது பிரபஞ்ச தோற்றவியலாக மாறிவிடுகிறது. முற்பிறவியே இப்பிறவிக்குக் காரணம் என்பதால் இது குலம் - கோத்திரம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல. அதையும் தாண்டிய பிரபஞ்ச ஒழுங்கு; பிறவிகளின் ஊடாக ஆன்மாவின் பயணம் என்றாகிறது. இப்படிப்பட்ட வர்ணம் என்ற பிரபஞ்ச ஒழுங்கினையே, அதன் தோற்றவியலையே ஜாதியமும் கைக்கொள்கிறது என்பது வர்ண தர்மத்தை இன்றும் ஜாதியத்தின் அடித்தளமாக வைத்திருக்கும் முக்கியமான சமூக உளவியல் அம்சமாகும்.

நன்றி: அருஞ்சொல் (09 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்