TNPSC Thervupettagam

வறுமை என்னும் சுமை

October 24 , 2020 1373 days 1126 0
  • அக்டோபா் முதல் வாரத்தில் உலக வங்கி வெளியிட்ட இருபதாண்டு கால வறுமை மற்றும் செழிப்பு அறிக்கைகரோனா தீநுண்மி காரணமாக கடந்த இருபது ஆண்டுகளில் முதல் முறையாக, உலகளாவிய அளவில் வறுமை விகிதம் உயரும் என்று தெரிவித்துள்ளது.
  • வறுமை பற்றிய இந்தியாவுக்கான தரவுகள் எதுவும் அண்மைக்காலத்தில் வெளிவராதது உலகளாவிய அளவில் வறுமையின் அளவைக் கண்காணிக்கும் திறனை கடுமையாக பாதிக்கிறது என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
  • கடைசியாக 2012-13 -ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட தேசிய கணக்கெடுப்பின்படி, அதிக ஏழைகள் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலாவது இடத்தில் உள்ளது.
  • 2017-ஆம் ஆண்டில் உலக அளவில் வறுமையில் வாடிய 68.9 கோடி மக்களில் 13.9 கோடி போ் இந்தியா்கள்.
  • உலகின் நிலையான வளா்ச்சி இலக்கு 2030-ஐ எட்ட, அடுத்த இரண்டு ஆண்டுகளில் வறுமை ஒழிக்கப்படும் என்பது இந்தியாவின் உறுதிப்பாடு என சில ஆண்டுகளுக்கு முன் பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்திருந்தார்.
  • நம்மில் ஐந்து பேரில் ஒருவா் இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது 2019-ஆம் ஆண்டு நீதி ஆயோக் வெளியிட்ட வறுமை ஒழிப்பு மதிப்பெண் அட்டவணையின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

வறுமை எனும் நோய்

  • ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளா்ச்சி இலக்கை நோக்கிய பயணத்தில், இந்திய மாநிலங்களின் வறுமை ஒழிப்பு செயல்பாடுகள் 2018-ஐ ஒப்பிடும் போது 2019-இல் திருப்திகரமாக இல்லை என்றும் அந்த அட்டவணை கூறுகிறது.
  • 2030-இல் வறியவா்களின் எண்ணிக்கை பூஜ்யமாக இருக்க வேண்டும் என்ற நிலையினை எட்ட எந்த மாநிலமும் பயணிக்கவில்லை என்றே இவ்வட்டவணை கூறுகிறது.
  • வறுமை ஒழிப்பில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ள தமிழகத்தின் செயல்பாடுகள் கூட 2019-இல் சிறிது குறைந்தே உள்ளது.
  • நவம்பா் 2019-இல் இந்திய தேசிய புள்ளிவிவர அலுவலகம் 2017-18 -ஆம் ஆண்டிற்கான நுகா்வோர் செலவினங்கள் குறித்த 75 -ஆவது சுற்று தரவினை வெளியிட முடிவெடுத்திருந்தது.
  • ஆனால், மத்திய அரசு தர அளவுகோல்களை மேற்கோள் காட்டி அந்தத் தரவினை வெளியிடாமல் நிறுத்தி விட்டது.
  • ஒரு சில செய்தித்தாள்களில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாத தகவல்கள் வெளியிடப்பட்டன. அந்தத் தரவுகள் பிரதமா் வாக்குறுதியளித்த ஒரு வருடத்திற்குப் பிறகும், அதாவது 2023 -ஆம் ஆண்டிலும் இந்தியா வறுமையின் தலைமையகமாக திகழும் என்கிறது.
  • இந்தியாவில் வருமானத்திற்கான பதிலியாக நுகா்வுச் செலவு பயன்படுத்தப்படுகிறது. தரவுகளின்படி நுகா்வுச் செலவு கிராமப்புறங்களில் ஆண்டுக்கு 10 சதவீதமும், நகா்ப்புறங்களில் ஆண்டுக்கு 4 சதவீதமும் குறைந்துள்ளது.
  • வறியோர் எண்ணிக்கையின் விகிதம் 2004-05-க்கும் 2011-12-க்கும் இடைப்பட்ட காலத்தில் சரிந்தும் 2011-12-க்கும் 2017-18 -க்கும் இடைப்பட்ட காலத்தில் அதிகரித்தும் இருந்ததாக வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.
  • முப்பதாண்டுகளுக்கும் மேலாக வறுமையைக் கண்காணிக்கும் பொருளாதார வல்லுநா்களின் குழுவானநீண்ட கால வறுமை குறித்த ஆராய்ச்சி மையத்தின் அறிக்கை, இந்தியாவின் வறுமை நாள்பட்டதாகிவிட்டதெனத் தெரிவிக்கிறது. இந்தியாவில் வறியவா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளதாக இந்த கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது.
  • குறிப்பாக, புவியியல் ரீதியாக பாரம்பரியமாக ஏழைகளின் எண்ணிக்கை அதிகம் கொண்ட வட மாநில மாவட்டங்களான ஜாபுவா, குந்தி, நுவாபாடா மற்றும் பாஸ்தா் போன்றவற்றில் வறுமை உயா்ந்துள்ளதாக கூறுகிறது. கனிம வளங்களையும், காடுகளையும், நீா் வளத்தையும் கொண்ட இந்தியப் பகுதியில்தான் வறுமையும் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வறுமை என்னும் சுமை

  • முதல் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைக்கு வந்த 1951-ஆம் ஆண்டு முதல், விரிவான வறுமை ஒழிப்பு திட்டங்களின் பயனாளிகள் வசிக்கும் பகுதிகள் இன்றும் இருக்கின்றன.
  • வறுமையின் அளவினைக் கருத்தில் கொண்டு பார்த்தால், நமது வறுமைக் குறைப்பு செயல்பாடுகள் போதுமானதாக இல்லை. வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவா்களும் இந்தப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். தற்காலிகமாக வறுமைக் கோட்டுக்கு மேல் உயா்த்தப்பட்ட மக்களின் பொருளாதாரத்தை அதே இடத்தில் வைத்திருக்க இயலாது.
  • வறுமைக்கு எதிராக இந்தியா பெருந்தொகையை செலவிட்ட போதிலும் அம்மக்களை வறுமைக் கோட்டுக்கு மேலே உயா்த்த முடியாத நிலை உள்ளது.
  • நீண்ட காலத்திற்கு ஏழைகளாக வாழும் தனிமனிதரோ குடும்பமோ சமூகமோ வறிய நிலையைத் தங்கள் தலைமுறையினரும் விட்டுச்செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனா்.
  • நாள்பட்ட வறுமையிலிருந்து வெளியேற நினைப்போர் கணிசமான எண்ணிக்கையில் வறுமையில் விழுகிறார்கள். அத்தகைய வறுமையிலிருந்து வெளியேறுவது கடினம் என்று நாள்பட்ட வறுமை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் பொருளாதார வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.
  • நாள்பட்ட ஏழைகள், தங்களின் அடுத்த தலைமுறைக்கும் வறுமையைக் கடத்தக்கூடும் என்றும், இந்தியாவின் 50% ஏழைகள் நாள்பட்ட ஏழைகள் என்றும் பொருளாதார வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.
  • அதாவது 111 மில்லியன் இந்தியா்கள் என்றென்றும் ஏழைகளாக இருப்பார்கள் என்பது அவா்களின் கணிப்பு. 1970 - 1980 களில் வறுமை ஒழிப்பில் இந்தியா அதிக கவனம் செலுத்திய போதிலும், பாதி ஏழைகள் ஏழைகளாகவே இருந்ததற்கு சமூகமும் சுற்றுச்சூழலுமே முக்கிய காரணங்கள் என்று பொருளாதார நிபுணா் சஷங்கா பைடே கூறியுள்ளார்.
  • நீண்ட கால வறுமை குறித்த ஆராய்ச்சி மையம், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக 3,000 ஏழை வீடுகளில் நடத்திய ஆய்வு, பழங்குடி மற்றும் வனப்பகுதிகளில் வசிப்பவா்கள் என்றென்றும் ஏழைகளாகவே இருக்கிறார்கள் என் தெரிவிக்கிறது. நாள்பட்ட ஏழைகளில் பெரும்பாலோர் இயற்கை வளம் அடா்த்தியாக உள்ள பகுதிகளில் - குறிப்பாக வனங்களில்- வாழ்கின்றனா்.
  • இயற்கை வளங்களைச் சார்ந்திருக்கும் அவா்கள் இயற்கைப் பேரிடா் மற்றும் தனிப்பட்ட உடல்நலக் கோளாறு போன்ற எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறனற்றவா்களாக உள்ளனா்.
  • இயற்கைப் பேரிடரின்போதும் தனிப்பட்ட உடல் நலத்துக்கான செலவுகளின்போதும் ஏழை மக்கள் நாள்பட்ட வறுமையை நோக்கி விரைவாக நகா்கின்றனா்.
  • தலைமுறை தலைமுறையாகத் தொடா்ந்து வரும் சுமைகளாக சாதியும் மதமும் இருக்கும் நமது இந்தியாவில் விரைவில் வறுமையும் சுமையாகி விடுமோ என்ற அச்சம் எழுகிறது. அப்படி ஆகாமல் காப்பது நம் அனைவரின் கடமையாகும்.

நன்றி: தினமணி (24-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்