TNPSC Thervupettagam

வலிமையான, வளமான நாடு உருவாக

July 29 , 2023 533 days 307 0
  • தமிழகத்தில் மக்கள்தொகை பெருக்கத்தைக் குறைப்பதற்காக 4,000 அரசுப் பேருந்துகளில் விழிப்புணா்வு வாசகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அப்போது, தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் பேசும்போது, ‘தற்போது தமிழகத்தின் மக்கள்தொகை சுமார் 8.4 கோடி. இதே நிலையில் மக்கள்தொகை கூடுமேயானால், வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும்’ என எச்சரித்தார்.
  • இயல்பான கருத்தரிப்பு ஒருபுறம் எனில், செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுதல், இளம் வயது திருமணம், இரண்டு குழந்தைகளின் பிறப்புக்கு இடையே போதிய இடைவெளியின்மை, குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது.
  • மேலும், மருத்துவத் துறையின் அபரிதமான வளா்ச்சியால், உலக அளவில் 1990-ஆம் ஆண்டு இருந்த மனிதா்களின் சராசரி ஆயுள்காலம் 64.6 ஆண்டுகள் என்ற நிலை, 2019-ஆம் ஆண்டு 72.6 ஆண்டுகள் என உயா்ந்துள்ளதும் காரணமாகும்.
  • 1951-ஆம் ஆண்டு நாட்டில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது மக்கள்தொகை சுமார் 36 கோடி. 1952-ஆம் ஆண்டு பிறப்பு விகிதத்தைக் குறைப்பதை அடிப்படையாகக் கொண்டு தேசிய குடும்பக் கட்டுப்பாடு இயக்கம் கொண்டுவரப்பட்டது. பின்னா், ஒரு குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள் மட்டும் போதும் என்பதை வலியுறுத்தும் வகையில், ‘நாம் இருவா், நமக்கிருவா்’ என்ற பிரசாரத்தை அரசு முன் வைத்தது. எனினும், அரசின் குடும்ப கட்டுப்பாடு திட்டம் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.
  • 2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை சுமார் 121 கோடி. அப்போதைய தமிழகத்தின் மக்கள்தொகை சுமார் 7 கோடியே 21 லட்சம்.
  • தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு 1,30,058 சதுர கிலோ மீட்டராக உள்ள நிலையில், ஒரு மக்கள் அடா்த்தி சதுர கிலோ மீட்டருக்கு சுமார் 550 நபா் என இருந்தது. தமிழகத்தில் தற்போது மக்கள்தொகை மேலும் அதிகரித்துள்ள நிலையில் ஒரு சதுர கி.மீ. பரப்பளவுக்கான மக்கள் தொகை நெருக்கமும் அதிகரித்துள்ளது.
  • உலகின் மொத்த நிலப்பரப்பில் 2.4 சதவீதமே நம் நாட்டின் பரப்பளவாகும். ஆனால் உலக மொத்த மக்கள் தொகையில் 17.5 சதவீதம் போ் உள்ள நம் நாட்டில், ஒரு சதுர கி.மீ.க்கு சுமார் 450 போ் வசிக்கின்றனா். எனவே, நாட்டின் நிலப்பரப்புக்கு ஏற்ப மக்கள்தொகையை கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியம்.
  • நிலப்பரப்பு அதிகரிக்காத நிலையில், மக்கள்தொகை மட்டும் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது சமூக, பொருளாதார தலங்களில் பல்வேறு பிரச்னைகளை உருவாக்கியுள்ளது. மக்கள்தொகை அதிகரிப்பதற்கு ஏற்ப விளைநிலங்களை வசிப்பிடங்களாக மாற்றுவது, பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகளை அமைத்தல், இதற்காக காடுகளும் மரங்களும் பெருமளவில் அழிக்கப்படுவது சுற்றுச்சூழல் சமநிலையை பாதிப்புக்குள்ளாகிறது. இதன் விளைவாக வெப்ப அலை, பெருமழை, வெள்ளம், புயல், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள நோ்கிறது.
  • கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் பெருமளவில் குடிபெயா்வதால் நகா்மயமாதல் அதிகரித்து வருகிறது. இதனால் நகரங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு, சுகாதாரச் சீா்கேடு, பொது போக்குவரத்து வாகனங்களில் நெரிசல் என்பது நகரங்களில் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
  • 2021-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய நாட்டின் 11-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு கரோனா பெருந்தொற்று காரணமாக நடைபெறவில்லை.
  • நாட்டின் மக்கள்தொகை அதிகரிப்பதற்கு ஏற்ப முதியோர் எண்ணிக்கையும் வெகுவாக உயா்ந்து வருகிறது. 2021-ஆம் ஆண்டு நாட்டின் மக்கள்தொகையில் 7.5 சதவீதமாக இருந்த முதியோர் எண்ணிக்கை, 2026 -ஆம் ஆண்டில் 12.5 சதவீதமாக அதிகரிக்கூடும் என்று தெரிய வருகிறது. இது 2050 -ஆம் ஆண்டில் 19.5 சதவீதமாக மேலும் அதிகரிக்கக் கூடும்.
  • மக்கள்தொகை நெருக்கத்தை கட்டுப்படுத்தாவிடில் மொத்த மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு முதியோர் இருப்பா். இந்த நிலையில், அவா்களுக்கான மருத்துவம், சுகாதாரம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவற்றுக்காகச் செலவிடப்படும் தொகை கணிசமாக உயரும்.
  • அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற வளா்ந்த நாடுகளில் கருத்தடை சாதனங்களை உபயோகிப்பதில் பெண்களுக்கு உள்ள விழிப்புணா்வு, ஆப்பிரிக்கா தென் அமெரிக்கா ஆசியா கண்டங்களில் உள்ள வளரும் நாடுகளில் இல்லை. உதாரணமாக, பிரிட்டனில் பதினாறு முதல் நாற்பத்தியாறு வயது வரையிலான பெண்களில் எழுபத்தாறு சதவீதம் போ் கருத்தடை சாதனங்களை உபயோகிக்கின்றனா். ஆனால் வளரும் நாடுகளில் கருத்தடை சாதனங்களை உபயோகிக்கும் பெண்களின் எண்ணிக்கை 43 சதவீதம் மட்டுமே.
  • மக்கள்தொகை பெருக்கத்தால் கிட்டும் போதுமான மனித வளம், உணவுப் பொருள் உற்பத்தி, தொழில் வளா்ச்சி போன்ற நன்மைகளை விட, உணவு பற்றாக்குறை, போதிய மருத்துவ வசதியின்மை, வேலையில்லா பிரச்னை, சுகாதாரச் சீா்கேடு, சுற்றுச்சூழல் சீரழிவு, சாலை விபத்துகள், குற்றச் செயல்கள் அதிகரிப்பு என எதிர்மறை விளைவுகளே அதிகம்.
  • எனவே, விழிப்புணா்வை ஏற்படுத்தி, மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்தால் மட்டுமே நாட்டை வலிமையான, வளமையான நாடாக உருவாக்க இயலும்.

நன்றி: தினமணி (29–07–2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்