TNPSC Thervupettagam

வளர்ச்சிப்பாதையில் இந்தியா

November 6 , 2017 2634 days 10713 0

வளர்ச்சிப்பாதையில் இந்தியா

அ. மாணிக்கவள்ளி கண்ணதாசன்

- - - - - - - - - - - - -

  பிரமிக்கத்தக்க வளர்ச்சி
இந்தியாவின் வளர்ச்சியை உற்றுநோக்கினால் அதன் பின்னணி பிரமிக்க வைக்கத்தக்கதாகும். இந்தியா சுதந்திரம் அடைந்த பின் சிதறிக் கிடந்த 565 சிற்றரசுகள் கத்தியின்றி ரத்தமின்றி நம்முடன் இணைந்தது என்றால் அது எத்தகைய இமாலய சாதனை! அவை இணைவதற்கு மிகப்பெரிய போராட்டத்தினை இந்தியா சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்தவர்களுக்கு இடி விழுந்தது போல் ஆனது. அதற்காக நாம் சர்தார் வல்லபாய் படேலுக்கு நன்றி செலுத்தியே ஆக வேண்டும். ஆம்! காந்தி கற்றுக் கொடுத்த அகிம்சை வெற்றியடைந்தது.
.
சோதனைகளை முறியடித்த சாதனைகள்
இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது மக்களின் சராசரி வாழ்நாள் 32 வருடங்கள் மட்டுமே ஆகும். இன்று இந்திய மக்களின் சராசரி வாழ்நாள் 69 ஆக மாறியிருக்கின்றதென்றால் நாம் இந்திய மருத்துவத்துறையின் சேவையைப் பாராட்டியே ஆக வேண்டும். உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த போலியோ நோய் இந்தியாவையும் விட்டு வைக்க வில்லை. 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்கு வங்காளத்தில் பாதிக்கப்பட்ட நோயாளியே கடைசி நோயாளி ஆவார். கொடிய போலியோ நோயையும் வேரறுத்தப் பெருமை நம் மருத்துவத்துறையையே சாரும்.
 
மருத்துவத்துறையின் சாதனை நம்மை மலைக்க வைக்கின்றதென்றால் விண்வெளித் துறையின் சாதனை நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் நிலவுக்குச் சந்திராயன் 1 அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கச் சாதனையாகும். மேலும் மங்கள்யான் சாதனையும் நம் மனதினை விட்டு நீங்காத ஒன்றாகும். ஒரே ஒரு முயற்சியில் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பியவர்கள் நாம் மட்டுமே! நூற்றிற்கும் மேற்பட்டச் செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி வியத்தகு சாதனைகளைச் செய்த இந்தியா விளையாட்டுத்துறையிலும் தன்னுடைய வெற்றி முத்திரையினைப் பதிக்கத் தவறவில்லை.
 
1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அசைக்க முடியாத அணியாகக் கருதப்பட்ட மேற்கு இந்தியத் தீவுகளைத் தோற்கடித்து. இந்திய அணி கோப்பையினை கைப்பற்றியதை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அதனைத் தொடர்ந்து பல்வேறு விளையாட்டுகளில் நாம் முத்திரை பதித்து வருகின்றோம். பி.வி. சிந்து, சாய்னா நெய்வால், சானியா மிர்சா, தீபா கர்மாகர் , மிதாலி ராஜ் என்று வீராங்கனைகளின் அணிவரிசையானது ஆண்களுக்குத் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று இந்தியாவின் பெருமையை நிலைநாட்டி வருகின்றார்கள்.
 
அண்டை நாடுகளால் இரு முறை படையெடுக்கப்பட்டாலும், சமூக விரோதச் சக்திகள் நம்மைச் சீண்டி பார்த்தாலும் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து நாம் உலக அரங்கில் தலை நிமிர்ந்தே நிற்கின்றோம். உலகத் தரம் வாய்ந்த பள்ளிக்கூடங்கள் , சீர்மிகு பொருளாதாரக் கொள்கைகள் , அயல்நாடு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகள் என பல துறைகளிலும் அடையப்பெற்ற முன்னேற்றங்களை நம்மால் புறந்தள்ளி விட முடியாது.
 
2016 -17 ஆம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி வீதம் 7.1% ஆகும். பன்னாட்டு நாணய நிதியத்தின் அறிக்கையின் படி 2017-18 ஆம் ஆண்டு 7.2% ஆகவும் , 2018-19 ஆம் ஆண்டு 7.7% ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது வளர்ச்சிப் பாதையில் இந்தியா செல்வதற்கு ஒரு சான்றாகும்.
 
நமது அந்நியச் செலவாணியானது பெரும்பாலும் அமெரிக்க டாலர்களிலேயே உள்ளது. 5% அந்நியச் செலவாணியானது தங்கமாக இருக்கிறது. உலகிலேயே இந்தியா அதிக தங்கத்தினை வாங்கும் நாடாக இருப்பதே இதற்கான காரணமாகும். தங்கத்தின் மேல் மக்களுக்கு இருக்கும் மோகம் குறைந்தால் நம்முடைய அந்நியச் செலவாணி இன்னும் அதிகரிக்கும். மேலும், அந்நியச் செலவாணிக் கையிருப்பு உள்ள நாடுகளில் இந்தியாவானது எட்டாம் இடத்தில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
விலைவாசி உயர்வானது 2017-18 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 2 முதல் 3.5 சதவிகிதமாகவும், இரண்டாம் பாதியில் 4.5 % ஆகவும் இருக்கின்றது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை விலைவாசி உயர்வில் எந்த விதமான பாதிப்பினையும் ஏற்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாய் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பணவீக்கம் 1.5 சதவிகிதமாக குறைந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
 
இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து 1960 வரை நாம் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் தான் இருந்தோம். இன்று உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று நாம் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம் என்பது பெருமைக்குரியது.
 
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது 1988 ஆம் ஆண்டு பாராளுமன்றச்சட்டத்தினால் அமைக்கப்பட்டது ஆகும். இது தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கவும் , மேலாண்மை செய்யவும், மேம்பாட்டிற்காகவும் அமைக்கப்பட்டுச் செயலாற்றி வருகின்றது.
 
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடையாளம் அதன் ராணுவம். இன்றைய உலகில் பெரிய ராணுவ ஆற்றல் கொண்ட நான்கு நாடுகளினுள் ஒரு நாடாகத் திகழ்வதோடு மட்டுமில்லாமல் உலகத்தரம் வாய்ந்த ஏவுகணைத் திட்டங்களினையும் இந்தியா கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அடிமைப்பட்டுச் சுதந்திரம் அடைந்த நாடுகளினுள் இந்தியா மட்டுமே உடனடியாக தன் மக்களுக்கு வயதுவந்தோர் வாக்குரிமை வழங்கிய நாடு ஆகும். உலகின் இரண்டாவது பெரிய ஜனநாயக நாடான அமெரிக்கா கூட 150 ஆண்டுகள் கழித்து தான் வாக்குரிமையினைத் தம் மக்களுக்கு அளித்தது.
.
புதிய இந்தியாவுக்கான அடித்தளங்கள்
இத்தகையப் பெருமை கொண்ட நாட்டில் தற்போது வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் சில திட்டங்களை அறிவோமா! இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இருக்கக் கூடாது வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதே நம் பிரதமர் அவர்களின் முழக்கம். இதற்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் முத்ரா திட்டம் ஆகும். முத்ரா திட்டம் என்பது Micro Units Development and Refinancing Agency ஆகும். இதன் நோக்கம் சிறு நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்தல் ஆகும். இத்திட்டமானது சிஷு, கிஷோர், தருண் என மூன்று வகைகளாக வகைபடுத்தப்பட்டுள்ளது. சிஷு திட்டத்தின் மூலம் இந்திய அரசால் 50000 ரூபாய் வரை கடன் அளிக்க முடியும். கிஷோர் திட்டத்தின் மூலம் ரூபாய் 50000 த்திலிருந்து 5 லட்சம் வரை ஒருவர் கடன் பெற முடியும். தருண் திட்டத்தின் மூலம் ரூபாய் 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை கடன் பெற முடியும்.
 
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் 2022 ஆம் ஆண்டுக்குள் எல்லோருக்கும் வீடு என்ற கனவு நனவாக இருக்கின்றது. வீடுகள் அற்றோர் மற்றும் சிதைந்த வீடுகளில் வாழ்வோர் ஆகியோருக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் வழங்கப்பட இருக்கின்றன. ஒரு கோடி பேர் இத்திட்டத்தினால் பயனடைய இருக்கின்றார்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தோடு இணைந்து இத்திட்டம் செயல்பட இருக்கின்றது.
 
பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் நோக்கமானது வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 50 மில்லியன் பெண்மணிகளுக்கு இலவச எரிவாயு உருளைகளை மூன்று வருடத்திற்குள் அளிப்பது ஆகும். இத்திட்டம் 2016 ஆம் ஆண்டு மே 1 ஆம் நாள் துவங்கப்பட்டது. இதன் மூலம் விறகு மற்றும் பிற எரிபொருள்களால் உண்டாகும் காற்று மாசுபாட்டினைத் தடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ரயில்வேத் துறையில், சுதந்திரம் அடைந்தபோது இருந்ததை விட தற்போது பயணிகளின் போக்குவரத்தும், சரக்குப் போக்குவரத்தும் ஆறு மடங்கு பெருகியுள்ளது. இது சமூக பொருளாதார வளர்ச்சியின் காரணியாக விளங்குகின்றது. மேலும், நம் நாட்டிலேயே இந்திய ரயில்வேதான் அலுவலகப் பயன்பாட்டிற்குக் கணிணியை முதன்முதலில் பயன்படுத்திய பெருமையினைப் பெற்றதாகும்.
 
டிஜிட்டல் இந்தியா அதாவது மின்யுக திட்டமானது மின் ஆளுகைக்கான வழி என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு குடிமகனும் மின்யுக சேவை மூலம் தகவல் மற்றும் அறிவு பெறுவதே இதன் நோக்கமாகும். எழுத்தறிவற்றோர்க்கு முதலில் சுமையாக தோன்றும் டிஜிட்டல் மயம் வருங்கால இந்தியாவை வளமாக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. வெளிப்படைத்தன்மையும் , சீரிய நிர்வாகமும் இந்தியாவைச் சிறக்கச் செய்யும் தானே!
 
சுத்தம் சுதந்திரத்தினை விட மிக முக்கியம் என்றார் காந்திஜி. 2014 ஆம் ஆண்டு அவருடைய பிறந்த நாள் அன்று தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டமானது காந்தியடிகளின் 150 வது பிறந்த தினமான 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் அவரின் கனவு நிறைவேற திட்டமிடப்பட்டுள்ளது. திட்டம் சிறந்த திட்டமாக இருந்தாலும் மக்களிடையே போதுமான விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் அதிகரித்தாலொழிய இத்திட்டம் மாபெரும் வெற்றி பெற இயலாது.
 
திறன் இந்தியா திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்புக்கான திறன்சார் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. இப்பொழுது மேலும் ஒரு மைல் கல்லாக திறன் இந்தியா திட்டத்தின் கீழ் சங்கல்ப் எனப்படும் செயல்பாட்டின் மூலமாக 4000 கோடி முதலீட்டில் 350 மில்லியன் இளைஞர்களுக்குச் சந்தை தொடர்பான திறன்சார் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பயிற்சி பெறும் இளைஞர்கள் வளமான இந்தியாவை உருவாக்குவார்கள் என்பதில் எவ்வித ஐயமில்லை.
 
சரக்கு மற்றும் சேவை வரி எளிமையானது. அது மட்டுமல்லாமல் வெளிப்படையானதும் கூட . மேலும், ஊழலையும் கருப்புப் பணத்தினையும் ஒழிக்கக் கூடியது. ஒரே தேசம், ஒரே சந்தை, ஒரே வரி என்பதே அதன் நோக்கம் ஆகும் . வரி என்பது மக்களை வாட்டி வதைக்கக்கூடியதாக இருக்கக் கூடாது. மாறாக மக்களுக்கு நலத்திட்டங்களாய்த் திரும்பி வரச் செய்யக் கூடியதாகும் என்பதினை நாம் உணர வேண்டும்.
.
எழுச்சிமிகு இந்தியா
நல்ல ஆரோக்கியத்திற்கு மருத்துவரின் சிகிச்சை அவசியம், அது போல நல்ல பொருளாதாரத்திற்கு பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகள் அவசியம் எனக் கருதப்படுகிறது. தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா, தொடங்கிடு இந்தியா மற்றும் எழுந்து நில் இந்தியா, போன்ற திட்டங்கள் இந்தியாவிற்கு பொன்னான எதிர்காலத்தினை உருவாக்கித் தரக்கூடியவை. இதனை நாம் உளப்பூர்வமாய் உணர்வோம். எழுச்சிமிகு நாட்டை உருவாக்குவோம்.
.
- - - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்