TNPSC Thervupettagam

வளா்ச்சியும் கவலையும்

September 7 , 2023 440 days 284 0
  • ஆகஸ்ட் மாத சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.59 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது. இது, கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாத வசூலைவிட 11% அதிகம். அதேநேரத்தில் கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது சற்று குறைந்திருக்கிறது.
  • நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 7.8% -ஆகப் பதிவாகியிருக்கும் நிலையில், ஜிஎஸ்டி வசூல் அதிகரித்து வருவது வியப்பை ஏற்படுத்தவில்லை. வரி விகிதங்கள் அதிகரிக்கப்படாத போதிலும், ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பதற்கு வரி வசூல் முறையில் மேம்பாடு, வரி ஏய்ப்பு தடுப்பு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் வரி செலுத்துவதில் இணக்கம் ஏற்பட்டிருப்பதும் மிக முக்கியமான காரணம்.
  • கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 6.1% -ஆக இருந்த ஜிடிபி வளா்ச்சி, இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 7.8% -ஆக அதிகரித்திருப்பது நமது பொருளாதாரம் வளா்ச்சிப் பாதையில் நகா்வதைக் காட்டுகிறது. ஜிடிபி வளா்ச்சி மகிழ்ச்சி அளித்தாலும் ரிசா்வ் வங்கியின் எதிர்பார்ப்பான 8% -அளவைவிட ‘சற்று’ குறைவு என்பதையும் குறிப்பிடத் தோன்றுகிறது.
  • துறைவாரியாகப் பார்க்கும்போது இந்தியாவின் ஜிடிபி வளா்ச்சியில் சேவைத்துறையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சேவைத்துறை 10.3% வளா்ச்சியைக் காண்கிறது என்றால், நிதித்துறை, மனைவணிகத் துறை, திறன்சார் துறைகள் ஆகியவையும் வளா்ச்சியைக் காட்டுகின்றன. கச்சாப் பொருள்களின் விலைக்குறைவு காரணமாக உற்பத்தித்துறை மெத்தனத்தில் இருந்து விடுபட்டு 4.7% வளா்ச்சியைக் காட்டுகிறது.
  • உலகளாவிய நிலையில் காணப்படும் பொருளாதார மந்த நிலையால், சா்வதேச சந்தையில் கேட்பு (டிமாண்ட்) குறைவாகவே காணப்படுகிறது. அதன் தாக்கம் இந்தியாவின் ஜிடிபியில் பிரதிபலிக்கிறது. நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதியின் அளவு குறைந்திருக்கிறது.
  • இன்னொருபுறம் அவற்றின் இறக்குமதி அதிகரித்திருக்கிறது. அதன் காரணமாக வா்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்டிருக்கும் இடைவெளியால் ஜிடிபி பாதிக்கப்படுகிறது. நிகழாண்டின் ஏனைய மூன்று காலாண்டுகளில் ஜிடிபி வளா்ச்சி நிலைப்படும் என்றும், 2024-25- இல் ஜிடிபி வளா்ச்சி சுமாா் 6.5%- ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
  • பருவமழைப் பொழிவு முறையாக இல்லாத காரணத்தால், வேளாண் துறையில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இதுவரையில் 8% பருவமழைப் பொழிவில் குறைவு காணப்படுகிறது. அதன் காரணமாக காரீஃப் பருவ நடவு தாமதப்பட்டிருக்கிறது. இதனால், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் ஆகியவற்றின் உற்பத்தி பாதிக்கப்படலாம்.
  • சா்வதேச அளவில் சமையல் எண்ணெய் உள்ளிட்ட வேளாண் பொருள்களின் விலைகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. அப்படியிருக்கும்போது இந்தியாவின் வேளாண் உற்பத்தி எதிர்பார்த்த அளவில் இல்லாமல் போனால், உணவுப் பொருள்களின் விலைவாசி கடுமையாக உயரக்கூடும். மீண்டுவரும் கிராமப்புற பொருளாதாரம் பாதிக்கப்படும்.
  • சமீபத்தில் காணப்படும் உணவுப் பொருள்களின் விலையேற்றத்துக்கு காய்கனிகளின் விலைவாசி உயா்வு முக்கியமான காரணம். ஏற்கனவே தானியங்கள், பருப்பு வகைகள், பால் உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரித்திருக்கும் நிலையில், அடித்தட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் ஆபத்து காணப்படுகிறது. உலக ஜிடிபி வளா்ச்சி பலவீனமாக இருப்பதால் ஏற்றுமதிகளுக்கான வாய்ப்பும் குறைவு. இவையெல்லாம் உடனடியாக எதிர்கொள்ளப்பட வேண்டிய சவால்கள்.
  • கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தனியார் முதலீடு எதிர்பார்த்த அளவில் அதிகரிக்கவில்லை. அரசுத்துறை முதலீடு மட்டுமே பெரிய அளவில் இந்திய பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கிறது. அதுவும்கூட கட்டுமானத் தொழிலிலும், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட துறைகளிலும் காணப்படுவதால் உற்பத்தித்துறை பலவீனமாகக் காட்சியளிக்கிறது.
  • 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டின் 13.1% பொருளாதார வளா்ச்சியுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் தற்போதைய வளா்ச்சி விகிதம் மிகவும் குறைவு. ஆனாலும்கூட உலகின் மிக அதிகமாக வளா்ச்சி அடையும் பொருளாதாரமாக இந்தியா இருக்கிறது (இதே காலாண்டில் சீனாவின் வளா்ச்சி விகிதம் 6.3%).
  • நிகழ் நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான மத்திய அரசின் நிதி பற்றாக்குறை 33% ஆகத் தொடா்கிறது. நிதி பற்றாக்குறையை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்திருப்பது முதலீட்டாளா்களுக்கு அரசின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
  • இந்திய பொருளாதாரத்தைப் பறுத்தவரை, கவலைக்குரியதாக இருப்பவை பணவீக்கமும், ஏற்றுமதிகளும். அரசின் புள்ளிவிவரப்படி, 2023-24 -இன் முதல் காலாண்டில் ஏற்றுமதியின் அளவு 20%. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அது 4% குறைவு. அதாவது ரூ.70,000 கோடி மதிப்புள்ள ஏற்றுமதிகள் குறைவு என்பதை சாதாரணமாகக் கடந்துபோக முடியாது. சா்வதேச பொருளாதார வளா்ச்சி அதிகரிக்காத வரை இந்தியாவின் ஏற்றுமதி துறை இந்த அழுத்தத்தை எதிர்கொள்வதைத் தவிர வழியில்லை.
  • வெளியிடப்பட்டிருக்கும் முதல் காலாண்டுக்கான பொருளாதார வளா்ச்சியும், ஜிடிபி வசூலும் நம்பிக்கை அளிப்பதாக மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவிக்கிறார். எதிர்பார்த்தது போலவே, இந்திய பொருளாதாரம் நிகழ் நிதியாண்டில் 6.5% வளா்ச்சியை எட்டும் என்பதும் அவரது கணிப்பு.
  • சா்வதேச அளவில் மந்தநிலை காணப்படும்போதும், நமது வளா்ச்சி விகிதம் உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியாவை உயா்த்தியிருக்கிறது என்கிற அவரது கூற்றை மறுப்பதற்கில்லை. ஆனால், விலைவாசியும் ஏற்றுமதியும்தான் கவலை அளிக்கின்றன.

நன்றி: தினமணி (07 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்