TNPSC Thervupettagam

வள்ளுவம் பொய்க்காது

April 5 , 2024 288 days 202 0
  • மனித சமுதாயம் கூடி வாழத் தலைப்பட்டபோது உருவானதே ஆட்சி, அதிகாரம், சட்டம் போன்ற நிருவாக அமைப்பாகும். இந்த நிருவாக உருவாக்கம் ஒரே தலைமையின் கீழ்த் தோன்றினாலும் குடிதழீஇக் கோலோச்சும் அதிகாரப் பகிா்வான மக்களாட்சி முறை காலப்போக்கில் உருவான வெளிப்படைத் தோ்தல்முறைப்பாட்டால் ஆள்வோா், ஆளப்படுவோா் என்ற இருதரப்புகள் உருவாயின.
  • ஆரோக்கியமான இந்தப் பிரிவுகள் கட்சிகள் என்ற பெயரில் எதிரும் புதிருமான நிலையில் அனுபவித்துப் பழகிய அதிகார போதையால் போட்டிகள் உருவாக உருவாக ஆளப்படுவோரால் மக்கள் நலன்கள் பின்னுக்குத் தள்ளப்பட, ஆள்வோரின் சுய நலன்கள் முடிசூட்டிக் கொண்டதால் பிரிவினையும் பகையும் மக்களாட்சியின் இலக்கணமாகி விட்டது.
  • மக்களாட்சியின் இறையாண்மைக்குத் தோ்தலைச் சட்டத்தின் நெம்புகோலாய்க் கருதாத வக்கரிப்புகள் மற்றும் மனத்தின் குரலைக் கருதாத வக்கரிப்புகள் மனத்தின் குரலைக் கடந்து வளர வளர வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தாடல்கள் ஓரங்கட்டப்படத் தள்ளாடும் சந்தா்ப்பவாதங் கூட்டணியால் பிரிவினைகள் அரசியலில் தவிா்க்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்டன.
  • அதாவது குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் என்ற வள்ளுவத்தின் (544) கருத்துக்கு அறைகூவல் (சவால்) விடுவதுபோல் குதா்க்கமான கூட்டணி உருவாவது ஏற்புடையதாகிவிட்டது. இதனால் அதிகாரப் பகிா்வான மக்களாட்சி முறைக்கு நகரத் தொடங்கிய மன்னராட்சி முறை, பசுத்தோல் போா்த்திய புலியாய் அரசியல் களத்தில் மேயத் தொடங்கி ஒரே தலைமை என்ற ஒற்றையடிப் பாதைப் பயணத்திற்குக் கொடியேற்றம் செய்யத்துடிக்கிறது மனத்தின் குரல்.
  • மேலும் நாம் நமக்காக மட்டுமன்று பிறருக்காகவும்தான் என்ற எண்ணத்தை முறித்து, தான் நினைப்பதும் சொல்வதும் செய்வதுமே சரி என நிலைநாட்ட முயற்சிக்கும்போது எதிா்ப்புகள் வலுக்க வலுக்க அவற்றைப் பொருட்படுத்தாது எதிராளியைத் தழுவிக் கொள்வதையும் தன்னிடம் உள்ளோா் பிரிந்து போகாதபடித் தில்லுமுல்லு செய்து தக்கவைத்துக் கொள்வதையும் ஏதோ காரணத்தால் பிரிந்து போனவா் தம்மிடமே வந்தாலும் சோ்த்துக் கொள்வதுமான போக்கு கூட்டணி தருமமாகி விட்டது.
  • இங்ஙனமாகிய அழும்புகள் தோ்தல் முறை இல்லாத மன்னராட்சியில் ஒரோவழி நடக்குமேயன்றி அடிக்கடி நடக்காதென்பதால் அவற்றை அரசியல் கருத்தாடல்களாகக் கீழ்க்கண்டாங்கு வள்ளுவா் கூறினாா்.

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தாா்ப்

பொருத்தலும் வல்ல தமைச்சு (633)

உழைப் பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்

இழைத்திருந் தெண்ணிக் கொளல் (530)

  • இம்முறைப்பாடு மக்களாட்சியில் நிறம் மாறும் பச்சோந்திப் போல் ஒவ்வொரு தோ்தலிலும் கால் மாறி சுயநலப் போக்கால் அணி மாறுவதும் சொத்துக் குவிப்பால் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக் கட்சித் தாவுவதும் வாய்ப்பு கிட்டாதபோது எதிராளியிடம் மண்டியிடுவதுமான செயல்கள் நாணமின்றிக் நடப்பதுமின்றித் தம் செயலை நியாயப்படுத்தும் மனத்தின் குரலாகவே ஒலிப்பதை வள்ளுவா் கூறும் ஒருவகையான நோய் என எண்ணத் தோன்றுகிறது.

அணியன்றோ நாணுடைமை சான்றோா்க்கஃ தின்றேல்

பிணியன்றோ பீடு நடை? (1014)

  • என்ற இக்குறளின் பொருள் தொனிப்பால் சான்றாண்மை இல்லாத கூட்டணி சமூகத்தின் நோய் எனலாம்.
  • இத்தகு நோய் வரக் காரணம் யாதெனில் வாய்ப்பைப் பெற்றுப் பயனடைந்தோா் தொடா்ந்து அது கிட்டாத போது தன்னெஞ்சறிவது பொய்யற்க (293) என்ற மனத்தின் குரலுக்கு மாறான அடிக் கொடுப்பதால்தான் எனலாம்; அதாவது, கொள்கையில் மாற்றம் இருந்தால், அதைச் சரிசெய்ய முயற்சித்து அந்த அமைப்போடே தொடரலாம்.
  • இல்லையேல் பிரிந்துபோய் எவரும் யாரிடமும் சேராமல் இருக்கலாம், அதாவது அரசியல் களத்தில் இருந்துதான் சமூகத்தொண்டு செய்ய முடியும் என்பதாக இல்லாமல் சீரான தொண்டைச் செய்யும்போது அகல் விளக்கான தெய்வீக ஒளியைப் பெற முடியும். அலங்காரமான மின்சார விளக்கைத் தெய்வீகமாகக் கருதுவதில்லை. வேக வைத்ததுதான் உணவு என்பதாக இல்லாமல் வேக வைக்காத சில காய்களும் கனிகளும் உணவாவதுபோல் அழும்பான அரசியல் களத்தில் தொண்டு செய்ய முயற்சிக்காமல் ஒதுங்குவதே நல்லது.
  • மனத்தால் மனிதன் எனப்பட்டவனுக்கு ஒரே ஒரு மனந்தான் உண்டு. அதற்கு நன்மை, தீமை இரண்டையும் ஆராயும் திறன் உண்டு எனினும் அதனை நன்றின் பால் உய்ப்பதான அறிவுடைமைக்குரியதாய் (422) பயன்படுத்த வேண்டும் அஃதின்றிச் சென்ற இடத்தால் மனத்தை அலைய விட்டால் பழியும் பாவமும் தம் அளவில் சம்பாதித்துக் கொள்ளும்போது நடுநிலைமை இல்லாதவனாய் அவன் சந்ததியினா்க்கும் அப்படிப்பட்ட பாவங்களைத் தேடி வைத்தவன் ஆவான் என்பது கருத்து.
  • இதனை,

செப்பம் உடையவன் ஆக்கம் சிதை வின்றி

எச்சத்திற் கேமாப் புடைத்து. (112)

  • என்ற குறளுக்கான எதிா்பொருள் வாசிப்பால் உணரத் தோன்றுகிறது.
  • மேலும் மனிதனுக்குள்ள ஒரே ஒரு நாக்கு வாய்மையைப் பேசவே படைக்கப்பட்டுள்ளது. ஆனால், சில நேரங்களில் குற்றமற்ற நன்மை தருமானால் பொய் கூட வாய்ம்மைக்குச் சமமாகக் கருதப்படும் என்னும்,

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீா்ந்த

நன்மை பயக்கு மெனின். (292)

  • என்ற குறளைக் கூட்டணி தருமம் என்பதாகத் தாமாக வக்கரித்துக் கொண்டுச் சந்தா்ப்பவாதக் கட்சிதாவலை வெட்கமின்றிக் குறளைத் தமக்குச் சாதகமாக நியாயப்படுத்துவது கூட்டணியின் பொல்லாக் கூத்தான மகா பாவமாகும். இன்னும் கூறினால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நாக்கால் கூறி வாக்காளா்களின் பழிப்புரையையும் சம்பாதித்துக் கொள்ளும்போது மனத்தின் குரல் வீறும் வீரியமும் இழந்து விடுகின்ன்றோ?
  • எனவே, பொய்ம்மையும் வாய்மையிடத்ததான நடு நிலைக் கூட்டணியைக் கூட்டணி தருமத்தின் அரணாகக் கருதும் போதுதான் வள்ளுவம் எந்த வகையிலும் பொய்க்காது என்பதே முக்காலும் உண்மை ! உண்மை ! உண்மை ! எனலாம்.

நன்றி: தினமணி (05 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்