TNPSC Thervupettagam

வழக்குகள் கோடிக்கணக்கில் தேங்குவது ஏன்?

September 22 , 2024 65 days 78 0

வழக்குகள் கோடிக்கணக்கில் தேங்குவது ஏன்?

  • இந்தியா முழுவதும் உள்ள மாவட்டங்களில் கோடிக்கணக்கான வழக்குகள் விசாரணை நிலையிலேயே, நிலுவையில் உள்ளன. இவற்றில் பல, பல்லாண்டுகளாக இந்த நிலையிலேயே நீடிக்கின்றன. நீதித் துறையும் இந்த நிலுவைகளைக் குறைக்க பல்வேறு முயற்சிகளைத் தீவிரப்படுத்தியும் இந்த எண்ணிக்கை குறைவதாகத் தெரியவில்லை.
  • இதற்கான காரணங்களை ‘தேசிய நீதித் துறை தரவுகள் தொகுப்பு மையம்’ (என்ஜேடிஜி – National Judicial Data Grid) ரக வாரியாகப் பிரித்திருக்கிறது. விசாரணைக்கு வர வேண்டிய வழக்கறிஞர்கள் வேறு வழக்குகளில் வாதம்செய்யச் செல்வதிலிருந்து வெவ்வேறு காரணங்களால் வர முடியாமல்போவதும் நிலுவைக்குக் காரணம்.
  • மாவட்ட நீதிமன்றங்களில் கிட்டத்தட்ட 2 கோடிக்கும் மேற்பட்ட குற்றவியல், உரிமையியல் (சிவில்) வழக்குகள் தேங்கியுள்ளன. ஆனால், மொத்தமாகப் பார்த்தால் இப்படித் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 4 கோடிக்கும் மேல் என்றும் இதில் குற்றவியல் வழக்குகள் எண்ணிக்கை மட்டுமே 3 கோடிக்கும் மேல் என்றும் தெரிகிறது. தரவுகள் மையத்திடம் விசாரணைக்குக் காரணம் என்னவென்று தெரிந்து தொகுக்கப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை மட்டும்தான் 1.92 கோடி. இந்த 1.92 கோடி வழக்குகளில் குற்றவியல் வழக்குகள் 1.51 கோடி, 41.62 லட்சம் உரிமையியல் வழக்குகள்.

ஜல்தி…

  • டெல்லியில் லாப நோக்கமின்றிச் செயல்படும் ‘சட்டக் கொள்கைக்கான விதி மையம்’ என்ற அமைப்பு ‘ஜல்தி’ என்றொரு குழுவைக் கொண்டிருக்கிறது. இது ஆங்கிலத்தில் ‘ஜஸ்டிஸ், ஏக்ஸஸ் அண்ட் லோயரிங் டிலேஸ் இனிசியேடிவ்’ (Justice, Access and Lowering Delays Initiative - JALDI) என்ற, முதல் எழுத்துகளின் சுருக்கப்படி ‘ஜல்தி’ என்று அழைக்கப்படுகிறது. ‘ஜல்தி’ என்றால் விரைவாக – வேகமாக என்று பொருள். வழக்குகள் அப்படி நகர வேண்டும் என்ற விருப்பத்தில் தன்னார்வக் குழு பெயரைச் சூட்டிக்கொண்டிருக்கிறது.

இந்தக் குழுவைச் சேர்ந்த பிரியம்வதா சிவாஜி தெரிவிப்பதாவது:

  • “கடலில் அலைகள் ஓய்வதில்லை என்பதைப் போல நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவது குறைவதாகவே இல்லை. பழைய வழக்குகளை விரைவாக விசாரித்து எண்ணிக்கையைக் குறைத்தாலும், அந்த எண்ணிக்கைக்கு கிட்டத்தட்ட சமமாக ஒவ்வோர் ஆண்டும் புதிய வழக்குகள் பதிவாகின்றன.”
  • “நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை விசாரித்து முடிக்க வேண்டும் என்று அதில் கவனம் செலுத்தப்படுவதில்லை என்பதும் தேக்கத்துக்கு ஒரு காரணம். ஐந்தாண்டுகளுக்கும் மேலாகிவிட்ட வழக்குகளை விசாரிக்க முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று எல்லா மாவட்ட நீதிமன்றங்களுக்கும் அடிக்கடி உத்தரவிடப்படுகிறது.”

காரணங்கள்

  • “பழைய வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க முடியாமல் பல தடைகள் ஏற்படுகின்றன. 66 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் வாதி – பிரதிவாதிகள் தரப்பில் வழக்காட வழக்கறிஞர்கள் நீதிமன்றம் வரவில்லை என்று காரணம் கூறப்பட்டிருக்கிறது. இதில் 15 லட்சம் வழக்குகள் உரிமையியல் வழக்குகள், எஞ்சியவை குற்றவியல் வழக்குகள்.”
  • 38 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில், “குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு வராததால் விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது. இதில் 186 உரிமையியல் (சிவில்) வழக்குகள். நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பிய பிறகும் அப்படி அழைப்பாணை பெற்றவர், இந்த வழக்குகளில் வரத் தவறியிருக்கலாம்.”
  • 28 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் சாட்சிகள் வரத் தவறியதால் ஒத்திவைக்க நேர்கிறது. இதில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டவை குற்றவியல் வழக்குகள். இவை தவிர ‘வேறு காரணங்க’ளுக்காக 24 லட்சம் வழக்குகளில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அவற்றில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டவை குற்றவியல் வழக்குகள். மாவட்ட நீதிமன்ற வழக்குகள் மட்டுமல்ல, குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களிலும் வழக்குகள் ஒத்திவைக்கப்பட பல காரணங்கள் உள்ளன.
  • இப்படி நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டேவருவதால் தாமதமாகும் வழக்குகள், தனிச் சட்டகத்தில் சேர்க்கப்படுகின்றன. அதற்குப் பிறகும் சில முறை ஒத்திவைக்க நேர்ந்தால் அந்த வழக்குகள் சட்டகத்திலிருந்தே மறைந்துவிடுகின்றன.
  • வழக்கை விரைந்து விசாரிக்க வைத்து முடிவைக் காண வேண்டும் என்ற முனைப்பு, வாதி – பிரதிவாதி ஆகிய இருவரிடமும் அல்லது ஒரு தரப்பில் இல்லை என்பதால் விசாரணைகள் இப்படி ஒத்திவைக்கப்படுகின்றன. நீதிமன்றங்களும் காலவரம்பு நிர்ணயித்து வழக்குகளை விசாரிக்க முடியவில்லை. பழைய வழக்குகள் எண்ணிக்கை இப்படிக் குறையாமலிருக்கும்போதே புதிய வழக்குகள் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் இந்திய நீதிமன்றங்களின் நீதி வழங்கும் ஆற்றலுக்கே மிகப் பெரிய குறை ஏற்பட்டுவிட்டது.

4 கோடி வழக்குகள்

  • காரணம் தெரிந்தவை - தெரியாதவை என்று மொத்தமாக நிலுவையில் உள்ள வழக்குகள் (இவை மாவட்ட நீதிமன்றங்களில் மட்டும் உள்ளவை, இதர நீதிமன்ற வழக்குகள் இதில் சேர்க்கப்படவில்லை) எண்ணிக்கை 4,49,46,546. இதில் 3.49 கோடி வழக்குகள் குற்றவியல் தன்மையுள்ளவை. இந்த வழக்குகளில் பெரும்பாலானவை மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் விசாரணைக்காகக் காத்திருப்பவை.
  • செப்டம்பர் 16 வரையிலான தரவுகள்படி மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் மட்டும் நிலுவையில் உள்ளவை 2 கோடிக்கும் மேல். இதில் 56 லட்சம் உரிமையியல் வழக்குகள், 25 லட்சம் குற்றவியல் நீதிமன்ற வழக்குகள். இவை போக, மோட்டார் வாகன விபத்து - இழப்பீட்டு வழக்குகளாக கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளவை எண்ணிக்கை 8 லட்சத்துக்கும் மேல்.
  • இவை தவிர உதிரியான குற்றவியல் வழக்குகள், உதிரியான உரிமையியல் வழக்குகள், மக்கள் தொடுத்த மேல் முறையீட்டு வழக்குகள், குற்றவியல் மேல் முறையீட்டு வழக்குகள், இளம் சிறார் மீதான வழக்குகள், நடுவரின் மத்தியஸ்துக்காக காத்திருக்கும் வழக்குகள், தேர்தல் முடிவுகளை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் போன்றவையும் நிலுவையில் உள்ளன.

எந்த நிலையில் தேக்கம்?

  • இந்த வழக்குகளில் 17 லட்சத்துக்கும் மேல், வழக்கு அறிமுக நிலையிலும் சாட்சிகளை விசாரிக்கத் தொடங்கிய நிலையிலும் உள்ளவை. 9 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் எழுத்துப்பூர்வமாக தங்கள் தரப்பைத் தெரிவிக்க வேண்டிய நிலையில் அல்லது அழைப்பாணை பெற்ற நிலையில் உள்ளவை.
  • தேக்கநிலையில் உள்ள பெரும்பாலான வழக்குகள், தொடக்க கட்டத்திலேயே உள்ளவைதான். உரிமையியல் வழக்குகள் என்றால் பெரும்பாலும் அழைப்பாணை நிலையிலும், குற்றவியல் வழக்குகள் என்றால் குற்றஞ்சாட்டப்பட்டவரை விசாரிக்க வேண்டிய நிலையிலும் வழக்குகள் தேங்குகின்றன.
  • அடுத்த கட்டமாக வாத, பிரதிவாதங்கள் நடைபெறும் நிலையில் வழக்கு விசாரணை தடைப்பட்டுவிடுகிறது. மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதிகள் ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளைத் தொடர்ந்து விசாரிக்க வேண்டியிருக்கிறது. எனவே, நீண்ட வாத - பிரதிவாதங்களை அனுமதிக்க நீதிபதிகளுக்கு நேரம் இருப்பதில்லை. இதனாலும் விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வழக்குகள் தேங்குகின்றன.
  • நீதித் துறையும் அரசும் இதில் தொடர்புள்ளவர்களும் கூடிப்பேசி வழியைக் கண்டாலொழிய வழக்குகள் தேங்குவதைத் தவிர்க்கவே முடியாது என்கிறார் பிரியம்வதா சிவாஜி.

245வது சட்ட ஆணையம்

  • வழக்குகள் நிலுவை, தேக்கம் தொடர்பாக கவனம் செலுத்திய 245வது இந்திய சட்ட ஆணையம், புதிய உத்தியைப் பரிந்துரைத்தது. ஓராண்டில் புதிதாக பதியப்படும் வழக்குகள் எண்ணிக்கையைவிட விசாரித்து முடிக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றது. புதிதாக ஒரு வழக்கு பதிவாகிறது என்றால் பழைய வழக்கில் ஒன்று கழிய வேண்டும் என்பது உத்தி. ஆனால், இதுவும் சாத்தியப்படாத வகையில் பல காரணங்கள் தடுத்துவருகின்றன.
  • 2024இல் மாவட்ட நீதிமன்றங்களில் புதிதாக 26,69,108 வழக்குகள் பதிவாகியுள்ளன, அதேசமயம் 26,94,788 வழக்குகள் விசாரித்து முடிக்கப்பட்டுள்ளன. 2022 முதல் 2023க்குள் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன, விசாரித்து முடிக்கப்பட்டன. 2021இல் 31 லட்சம் வழக்குகள் புதிதாக பதிவாகின, 25 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரித்து முடிக்கப்பட்டன. 2022 – 2023இல் அதற்கும் முந்தைய ஆண்டைவிட அதிக வழக்குகள் விசாரித்து முடிக்கப்பட்டன.
  • கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் நீதிமன்றங்கள் மூடப்பட்டதால், புதிய வழக்குகள் பதிவது குறைவாகவும் பழைய வழக்குகள் விசாரித்து முடித்தது அதிகமாகவும் இருந்தது.

நன்றி: அருஞ்சொல் (22 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்