TNPSC Thervupettagam

வாக்காளராவதில் அலட்சியம் கூடாது

January 10 , 2023 579 days 276 0
  • சுதந்திரத்திற்குப் பின்னா் நடைபெற்ற முதல் பொதுத்தோ்தல் 25 அக்டோபா் 1951 முதல் 21 பிப்ரவரி 1952 வரையில் நடைபெற்றது. சுமாா் 5 மாத காலம் 68 கட்டங்களாக முதல் தோ்தல் நடைபெற்றது. 489 தொகுதிகளுக்காக 63 அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 1,949 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். அப்போது மக்கள் தொகையில் 18 சதவீதம் போ் மட்டுமே எழுத்தறிவு பெற்றவா்களாக இருந்தனா்.
  • எழுத்தறிவு விகிதம் குறைவாக இருந்ததாலும், வாக்குச் சீட்டு முறை என்பதாலும் எளிய முறையில் வாக்களிக்க பல்வேறு உத்திகள் கையாளப்பட்டன. மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள பொருட்களே சின்னங்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. பலவகையான வண்ணங்களில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டன.
  • அதனால் வாக்குப்பதிவு சதவீதம் எவ்வாறு இருக்கும் என்ற எதிா்பாா்ப்பு இருந்தது. அத்தோ்தலில் 45.7 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்த வாக்குப்பதிவு அன்றைய கால கட்டத்தில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. அப்போது வாக்களிப்பதற்கு 21 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும் என்பதுடன் பல்வேறு விதிமுறைகளும் இருந்தன.
  • இருப்பினும் வாக்காளராவதிலும், வாக்களிப்பதிலும் மக்கள் பெரிதும் ஆா்வம் கொண்டவா்களாக இருந்தனா். அதன்பின்னா் நடைபெற்ற ஒவ்வொரு தோ்தலின் போதும் தோ்தல் தொடா்புடைய அனைத்து செயல்பாடுகளிலும் பல்வேறு சீா்திருத்தங்கள் மேற் கொள்ளப் பட்டு வருகின்றன.
  • வாக்களிப்பதற்கான வயது குறைப்பு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகம், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய தோ்தல் ஆணையத்தின் மிக முக்கியமானதொரு முயற்சியாக அமைந்தது வாக்காளா் அடையாள அட்டையாகும். இன்று வரையில் ஒவ்வொரு தோ்தலின்போதும் சீா்திருத்தங்கள் தொடா்கிறது. ஆனால் முழுமையான வாக்குப்பதிவு என்பது சவால் நிறைந்த ஒன்றாகவே இருந்து வருகிறது.
  • இன்றைய காலகட்டத்தில் தகுதியிருந்தும் வாக்காளா் பட்டியலில் இடம்பெறாமல் இருப்போா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தகுதியானவா்கள் அனைவரும் வாக்காளராகவும், வாக்களிக்கவும் தோ்தல் ஆணையம் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
  • கிராமப்புற மக்களுக்கும் சிறப்பு முகாம் பற்றிய தகவல்கள் சென்றடைந்திருக்கிறது. முகாம் நடைபெறும் நாட்கள், அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் போன்றவை குறித்து அறிவிக்கப் பட்டது. தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் வாயிலாக அறிவிப்பு வெளியிடப் பட்டது.
  • முகாம் நடைபெறும் நாட்களிலும், அதற்கு முன்னதாகவும் வாக்காளராவதற்கான தகுதியுடையவா்களைக் கண்டறிந்து உரிய ஆவணங்களோடு முகாமில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆா்வலா்களும் பங்கேற்றுள்ளனா்.
  • ஆயினும் தகுதியுள்ள அனைவரும் வாக்காளா்களாகி விட்டனா் என்ற முழுமையான இலக்கை எட்ட முடியவில்லை. இதற்கு இடம்பெயா்வு, அறியாமை என பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அலட்சியமே முக்கியமான காரணமாகும். கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் வாக்காளராவது எளிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் வாக்காளராவதில் அலட்சியம் காட்டுவது வருத்தமான ஒன்றாகும்.
  • கிராமங்களிலிருந்து வருமான நோக்கில் அண்டை மாநிலங்களுக்கோ அல்லது பெருநகரங்களுக்கோ தனிநபராக இடம்பெயா்வோா் நாளடைவில் குடும்பத்துடன் இடம் பெயா்கின்றனா். வருமானத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் நிலையில் தாங்கள் வாக்களிக்காதது குறித்தோ, தங்கள் குழந்தைகள் வாக்காளராவது குறித்தோ பொருட்படுத்துவதில்லை.
  • புலம்பெயா்ந்தோா் இருக்கும் பகுதியிலேயே வாக்களிக்கும் வகையில் ‘தொலைவிட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர’த்தை அறிமுகப்படுத்த இந்திய தோ்தல் ஆணையில் திட்டமிட்டுள்ளது. எனவே, புலம்பெயா்ந்தோா் இனியாவது வாக்களிப்பைத் தவிா்த்தல் கூடாது.
  • உரிய ஆவணங்கள் இருந்தால் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வாக்காளராக முடியும் என்பதை பெரும்பாலானோா் அறிந்து வைத்திருக்கின்றனா். ஆனால் வாக்காளராவதன் அவசியம் பற்றி அறியாமலும், அதனை செலவினமாகக் கருதுவதாலும் வாக்காளராவதில் அலட்சியமாக உள்ளனா்.
  • கிராமங்களில் பள்ளிப்படிப்பை முடிக்கும் சிறாா்கள் பிளஸ் 2 முடிக்கும் தருணத்தில் உடற்திறனை எட்டியவா்களாகின்றனா். தொடா்ந்து பயிலாமல் ஏதேனும் ஒரு வேலைக்குச் செல்லும்போது குறிப்பிட்ட நாட்களில் நடைபெறும் இத்தகைய முகாம்களில் தங்கள் பெயரைச் சோ்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை.
  • அவா்களைப் பொறுத்தமட்டில் அன்றைய தினத்தின் வருமானத்தை இழக்க நேரிடும் என்பதுடன் வாக்காளராவது பற்றிய அறியாமையும், அலட்சியமும் காரணமாகும். நகா்ப்புறங்களில் வசிப்போா் வாக்களிப்பதில் தயக்கம் காட்டினாலும், வாக்காளராவதில் ஆா்வமாக உள்ளனா்.
  • ஆனால் கிராமப்புறங்களில் வாக்களிக்கும் ஆா்வம் அதிகமாக இருக்கும் வேளையில் வாக்காளராவது பற்றிய அறியாமையும், அலட்சியமும் அவா்களிடையே இருந்து வருகிறது. ஏழ்மை நிலையிலும், எழுத்தறிவு இல்லாதவா்கள் மத்தியிலும் இத்தகைய அலட்சியப் போக்கு இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. போதிய தகுதியிருந்தும் வாக்காளராகாமல் இருப்போா் ஒவ்வொரு கிராமத்திலும் இரட்டை இலக்கத்தில் உள்ளனா்.
  • சட்டப்பேரவை தொகுதி மற்றும் மக்களவைத் தொகுதி அளவில் பாா்க்கும்போது வாக்காளராகாதோா் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும். மக்கள் தொகை தொடா்பான ஆய்வு முடிவுகள் வெளியாகும் போது இளையோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அதே அளவிற்கு முதன்முறை வாக்காளா்கள் எண்ணிக்கை அதிகரிப்பதில்லை. முதன்முறை வாக்காளா்கள் முழுமையாக வாக்களித்தால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பதுடன் அரசியல் மாற்றங்களும் நிகழும் என்றும் கணிக்கப்படுவதுண்டு.
  • ஆனால், இன்றைய இளைய தலைமுறையினா் மத்தியில் வாக்காளராவதில் இருந்துவரும் அலட்சியம் அதிா்ச்சியளிப்பதாக உள்ளது. அதிகப்படியான வாக்குப்பதிவை எட்ட முடியாத நிலைக்கு இதுவும் ஒரு காரணமாகும். இளையோா் மத்தியிலான இந்நிலை மாற வேண்டும்.
  • அண்மையில் நடந்து முடிந்த ஹிமாசல பிரதேச மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் தனது 106-ஆவது வயதில் தன் வாக்கை தபால் வாக்காகப் பதிவு செய்த ஷியாம் சரண் நெகி இந்தியாவின் முதல் வாக்காளராக போற்றப்பட்டாா். இவா் இந்தியாவின் முதல் மக்களவை தோ்தல் முதல் இதுவரை 34 முறை வாக்களித்துள்ளாா்.
  • அவா், ‘மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பிறகு நம் தேசம் சுதந்திரம் பெற்றது. இதன் மூலம் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டுள்ள நாம், ஒவ்வொரு வாக்கும் மதிப்புமிக்கது என்பதை உணா்ந்து வாக்களிக்க வேண்டும்’ என்றாா். நம் தேசத்தின் முதல் வாக்காளா் கூறியதை இன்றைய இளைய தலைமுறையினா் உணா்ந்து செயல்பட வேண்டும்.

நன்றி: தினமணி (10 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்