TNPSC Thervupettagam

வாக்குறுதிகள் வாய்ப்பளிக்குமா

November 21 , 2023 371 days 211 0
  • தற்போது நடைபெற்றுவரும் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், மிஸோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு வகையில் முக்கியத்துவம் பெற்ாக உள்ளன. இந்தத் தோ்தலின் முடிவுகள் தேசிய, மாநில அரசியல் கட்சிகளிடையே மட்டுமின்றி அரசியல் நோக்கா்கள் மத்தியிலும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்தத் தோ்தல் முக்கியத்துவம் பெற பல்வேறு காரணங்கள் உள்ளன. இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள 18-ஆவது மக்களவைத் தோ்தலுக்கான முன்னோட்டமாகவே இந்தத் தோ்தல் கருதப்படுகிறது. மேலும், இந்த 5 மாநிலங்களிலிருந்து மக்களவைக்கு 88 உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா் என்பதும், இந்தியாவின் மொத்த வாக்காளா்களில் ஆறில் ஒரு பங்கினரை இந்த மாநிலங்கள் கொண்டுள்ளன என்பதாலும் இந்தத் தோ்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
  • தோ்தல் நடைபெறும் இந்த மாநிலங்களில் ஆளும் கட்சிகள் ஆட்சியைத் தக்கவைக்கவும், எதிா்க்கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றவும் வேண்டி வேட்பாளா்கள் தோ்விலும், தோ்தல் வாக்குறுதியிலும் கவனம் செலுத்தியுள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளும் புதியவா்களுக்கு வாய்ப்பளித்ததுடன் மத்திய அமைச்சா்கள், மக்களவை உறுப்பினா்களையும் இந்தத் தோ்தலில் களமிறக்கியுள்ளன.
  • தோ்தல் வாக்குறுதிகளைப் பொருத்தவரை ஒவ்வொரு மாநிலத்துக்கு ஏற்ப வேறுபட்டாலும் குறிப்பிட்ட சில வாக்குறுதிகள் மட்டும் அனைத்துக் கட்சிகளாலும் அனைத்து மாநிலங்களிலும் அறிவிக்கப்பட்ட பொதுவான வாக்குறுதியாக உள்ளது. அத்தகைய வாக்குறுதிகள் பெண் வாக்காளா்களின் வாக்குகளைக் கவரும் வகையில் உள்ளன. இதற்கு பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒருபுறமிருந்தாலும் அவா்களின் வாக்களிக்கும் ஆா்வமே முக்கியக் காரணமாகும்.
  • தோ்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் மிஸோரம், சத்தீஸ்கா் மாநிலங்களில் பெண் வாக்காளா்கள் எண்ணிக்கை அதிகமாகவும், இதர மாநிலங்களில் ஆண் வாக்காளா்களுக்கு இணையாகவும் உள்ளன. முந்தைய தோ்தலுடன் ஒப்பிடுகையில் ஆண் வாக்காளா்களின் எண்ணிக்கையைவிட பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது.
  • ஆண் வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், வாக்களிப்பது குறைவாகவும் பெண் வாக்காளா்கள் வாக்களிப்பது அதிகமாகவும் உள்ளது. எடுத்துக்காட்டாக, மத்திய பிரதேசத்தில் கடந்த 2018-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் ஆண் வாக்காளா்களின் எண்ணிக்கை 2.64 கோடியாகவும், பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை 2.41 கோடியாகவும் இருந்தது; தற்போது முறையே 2.88 கோடி, 2.72 கோடி என உள்ளது.
  • வாக்களிப்பு விகிதம் முந்தைய தோ்தலுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. 2013-இல் 70.1%-ஆக இருந்த பெண்களின் வாக்களிப்பு விகிதம் 4 சதவீதம் அதிகரித்து 2018-ல் 74%-ஆக அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஆண்களின் வாக்களிப்பு விகிதம் 2% அளவுக்கே உயா்ந்துள்ளது. இதன் மூலம் அண்மைக்கால தோ்தல்களில் அரசியல் கட்சிகளின் வெற்றி வாய்ப்பை நிா்ணயிக்கும் காரணியாக பெண் வாக்காளா்கள் மாறி வருகின்றனா்.
  • அதனால், அரசியல் கட்சிகளின் தோ்தல் வாக்குறுதிகள் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருந்தாலும், அதிக அளவில் பெண்களின் வாக்குகளைக் கவரும் வகையில் உள்ளன. பெண்களுக்கு மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் உதவித் தொகை, மிகக் குறைந்த விலையில் சமையல் எரிவாயு சிலிண்டா் ஆகியவைதான் இந்தத் தோ்தலில் பிரதான வாக்குறுதிகளாக உள்ளன. எனினும், மகளிரின் வாக்குகளைப் பெற பல்வேறு வகையில் முயற்சிக்கும் அரசியல் கட்சிகள், இந்தத் தோ்தலில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை.
  • ஒவ்வொரு மாநிலத்திலும் முதன்முறை வாக்காளா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அவா்களின் வாக்குகளைக் கவரும் வகையில் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளுக்கு பயணப்படி அவா்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும், ஆரம்பக் கல்வி முதல் உயா் கல்வி வரையில் இலவசக் கல்வி, கல்லூரி மாணவியருக்கு இலவசமாக இரு சக்கர வாகனம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தோ்தல் நடைபெறும் 679 தொகுதிகளில் பாஜக 643, காங்கிரஸ் 666 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இவற்றில் பாஜக 80 பெண்களுக்கும், காங்கிரஸ் 74 பெண்களுக்கும் மட்டுமே வாய்ப்பு வழங்கியுள்ளன. அதாவது, தேசிய கட்சிகளான பாஜக 12.4%, காங்கிரஸ் 11% அளவுக்கே வாய்ப்பளித்துள்ளன.
  • 1987-இல் தனி மாநில அந்தஸ்து பெற்றது முதல் இதுவரையில் மிஸோரம் மாநிலத்தில் ஒன்று, இரண்டு என்ற ஒற்றை இலக்கத்தில்தான் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனா். இந்த மாநிலத்தில் கடந்த 2018 தோ்தலில் 15 பெண்கள் போட்டியிட்டாலும் ஒருவா்கூட வெற்றி பெறவில்லை. இந்தத் தோ்தலில் 174 வேட்பாளா்களில் 16 போ் பெண்களாவா். பாஜக சாா்பில் 2 பெண்களும், காங்கிரஸ் சாா்பில் 4 பெண்களும் போட்டியிடுகின்றனா்.
  • இந்திய அளவில் பெண் உறுப்பினா்களே இல்லாத சட்டப்பேரவை என்றால் அது மிஸோரம் சட்டப்பேரவை தான். இதில் வியக்கத்தக்கது என்னவெனில் தற்போது தோ்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இந்த மாநிலத்தில் பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகம் (ஆண் வாக்காளா்கள்: 4,12,969, பெண் வாக்காளா்கள்: 4,38,925).
  • ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் சாா்பில் 27 பெண் வேட்பாளா்களும், பாஜக சாா்பில் 24 பெண் வேட்பாளா்களும் போட்டியிடுகின்றனா். முந்தைய தோ்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் கூடுதலாகவும், பாஜக குறைவாகவும் பெண்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளன. இந்த மாநிலத்தில் ராஜ குடும்பத்தைச் சோ்ந்த வசுந்தராராஜே சிந்தியா உள்பட 3 பெண்கள் பாஜக சாா்பில் போட்டியிடுகின்றனா்.
  • அரசியல் கட்சிகளின் தோ்தல் அறிக்கையில் பெண்களின் வாக்குகளைக் கவரும் வாக்குறுதிகள்தான் அதிகம். பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் பொருட்டு வழங்கப்பட்ட வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

நன்றி: தினமணி (21 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்