TNPSC Thervupettagam
June 28 , 2023 561 days 339 0
  • ரஷ்யாவின் சார்பில் உக்ரைன் போரில் ஈடுபட்டிருந்த வாக்னர் குழு என்னும் தனியார் ராணுவப் படை, ஜூன் 23 அன்று ரஷ்யாவுக்கு எதிராகக் கலகத்தைத் தொடங்கியது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்கே ஷோய்கு, அரசு ராணுவப் படைகளின் தலைவர் வாலரி ஜெரசிமோவ் இருவரையும் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என ரஷ்ய அரசுக்கு வாக்னர் குழுவின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் நிபந்தனை விதித்தார்.
  • உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரில் அமைந்துள்ள தெற்கு ரஷ்ய ராணுவத் தலைமையகத்தை வாக்னர் குழு கைப்பற்றிவிட்டதாக ப்ரிகோஷின் காணொளி ஒன்றை வெளியிட்டார். தங்கள் நிபந்தனையை வலியுறுத்தி வாக்னர் குழுவினர், தலைநகர் மாஸ்கோவை நோக்கி ஆயுதங்களுடன் அணிவகுத்துச் சென்றனர்.
  • இதையடுத்து, தான் தொடங்கிய கலகத்தை, ‘ரஷ்யாவில் ரத்தம் சிந்தப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு’ கைவிடுவதாக ப்ரிகோஷின் அறிவித்துவிட்டார். பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோவின் தலையீட்டினால் ஏற்பட்ட உடன்படிக்கையின் மூலம் பதற்றச் சூழல் நீங்கிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் குறுகிய காலக் கலகம் ரஷ்யாவின் தனியார் ராணுவக் குழுக்கள் குறித்த கவனத்தை ஈர்த்துள்ளது.

தனியார் ராணுவம்:

  • வாக்னர் குழுவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன், தனியார் ராணுவங்களைப் பற்றியும் ரஷ்யாவில் அவற்றின் இடத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். பனிப்போர் காலகட்டத்துக்குப் பின் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களும் தனியார் ராணுவ நிறுவனங்களும் உலக நாடுகளில் அதிகரிக்கத் தொடங்கின.
  • அரசுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இவற்றின் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளன. 21ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தான், இராக் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற போர்களில் தளவாடங்களை வழங்குவது தொடங்கி எதிரிகள் மீதான ஆயுதத் தாக்குதல்வரை கிட்டத்தட்ட அனைத்து நிலைகளிலும் தனியார் ராணுவ நிறுவனங்கள் பங்களித்துள்ளன.
  • சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிந்தைய ரஷ்யாவில், உள்நாட்டு ராணுவத்தின் எதிர்ப்பும் பொருளாதார நெருக்கடிகளும் தனியார் ராணுவ நிறுவனங்களின் ஊடுருவலைத் தடுத்தன. இன்றுவரை ரஷ்ய மண்ணில் தனியார் ராணுவ நிறுவனங்களைத் தொடங்குவதற்கு அந்நாட்டுச் சட்டம் அனுமதிக்கவில்லை. ஆனால், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, 1990களின் பிற்பகுதியில் ரஷ்யாவில் தனியார் ராணுவ நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின.
  • சிரியா, உக்ரைன் போர்களில் ரஷ்யப் பங்கேற்பின் விளைவாக ரஷ்யாவில் இயங்கிவரும் தனியார் ராணுவ நிறுவனங்கள் 2010களில் உலகின் கவனத்தை ஈர்த்தன. இவை பிற நாடுகளில் பதிவுசெய்யப்பட்டு ரஷ்யாவில் அந்நாட்டுக் குடிமக்களைப் பணியமர்த்தி இயங்கிவருகின்றன.

நிழல் படைகள்:

  • சோவியத் காலத்திலிருந்தே, போர்ச்சூழலில் இருக்கும் பிற நாடுகளுக்குத் தனது ‘நிழல்’ படைகளை அனுப்பிய வரலாறு ரஷ்யாவுக்கு உண்டு. எடுத்துக்காட்டாக, 1937இல் இரண்டாம் சீன-ஜப்பான் போரின்போது அனுப்பப்பட்ட ‘சோவியத் தன்னார்வலர்கள் குழு’வின் உறுப்பினர்கள், சோவியத் விமானப் படையைச் சேர்ந்தவர்கள்.
  • பிற நாடுகளில் ஊடுருவுவதற்கான மறைமுகக் கருவியாக அல்லது ‘நிழல்’ படையாகத் தனியார் ராணுவ நிறுவனங்களை ரஷ்யா பயன்படுத்துகிறது. இதன் மூலம் உலக நாடுகளிடம் ரஷ்யப் படை அங்கு நிறுத்தப்படவில்லை என்று மறுத்துவிட முடியும். இன்னொரு புறம் வெளிநாடுகளில் ராணுவப் படைகளை நிறுத்துவதால், ரஷ்ய வீரர்களின் உயிர்கள் பறிபோவது குறித்து உள்நாட்டில் எழக்கூடிய விமர்சனங்களை மட்டுப்படுத்தவும் ரஷ்ய அரசு தனியார் ராணுவச் சேவைகளைப் பயன்படுத்துகிறது.
  • 2012இல் ரஷ்யாவில் தனியார் ராணுவ நிறுவனங்களின் வலைப்பின்னலை உருவாக்கும் திட்டம் குறித்த கேள்விக்கு, அதற்கு ஆதரவான நிலைப்பாட்டில் தான் இருப்பதாக அப்போது ரஷ்யாவின் பிரதமராக இருந்த விளாடிமிர் புதின் கூறியிருந்தார்.

வாக்னர் குழுவின் தோற்றம்:

  • 2013 வரை ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய டிமிட்ரி உட்கின் என்னும் அதிகாரிராணுவத்திலிருந்து விலகினார். ரஷ்ய ராணுவத்துடன் தொடர்பில் இருந்த இவர், ஹாங்காங்கில் பதிவுசெய்யப்பட்டு, சிரியா போரில் அரசுக்கு ஆதரவாக ஈடுபட்டிருந்த சால்வோனியப் படையில் இணைந்தார். 2014இல் அதிலிருந்து விலகி வாக்னர் குழுவைத் தொடங்கினார்.
  • வாக்னர்என்பது ராணுவத்தில் உட்கினை அடையாளப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெயர். அந்த ஆண்டு உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவச் செயல்பாடுகளில் வாக்னர் குழு பங்கேற்றது. ரஷ்ய அதிபர் புதினின் நம்பிக்கைக்குரிய சகாவாக அறியப்பட்டவரும் பெரும் தொழிலதிபருமான யெவ்கெனி ப்ரிகோஷின், வாக்னர் குழுவைத் தொடங்கியவர் என்று நீண்ட காலமாகக் கூறப்பட்டுவந்தாலும், 2022இல்தான் அவர் அதை ஒப்புக்கொண்டார்.
  • ரஷ்யாவிலோ பிற நாடுகளிலோ பதிவுசெய்துகொள்ளாத வாக்னர் குழு சட்டப்படி ஒரு நிறுவனமே அல்ல. ஆனால், ரஷ்ய அரசு அது இயங்குவதை அனுமதிப்பதோடு, அதன் செயல்பாடுகளைப் பல வகைகளில் ஆதரித்துவருகிறது. ரஷ்ய ராணுவத்தின் போர்க் கருவிகள் இந்தக் குழுவுக்கு வழங்கப்படுகின்றன. புதின் அரசின் ஆதரவு பெற்ற தனியார் ராணுவ நிறுவனமாக இது செயல்பட்டுவந்தது. 2022 பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்தப் போரில் வாக்னர் குழு குறிப்பிடத்தக்க பங்காற்றிவருகிறது.

கலகத்துக்கு வித்திட்ட காரணிகள்:

  • உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்தே வாக்னர் குழுவுக்கும் ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் இடையிலான மோதல் தீவிரமடையத் தொடங்கிவிட்டது. பாதுகாப்பு அமைச்சகத்தில் ஊழலும் திறனின்மையும் மலிந்திருப்பதாக வெளிப்படையாகவே ப்ரிகோஷின் குற்றம்சாட்டிவருகிறார்.
  • உக்ரைனில் பாக்முட் நகரைக் கைப்பற்றுவதற்கான யுத்தத்தில் வாக்னர் குழு வீரர்கள் கடுமையான இழப்புகளை எதிர்கொண்டதற்குப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலின்மையே காரணம் என்று ப்ரிகோஷின் குற்றம்சாட்டினார். வாக்னர் குழு பாக்முட்டை வெற்றிகரமாகக் கைப்பற்றிய சில நாள்களில் ரஷ்யாவின் துணை ராணுவப் படைகள் அனைத்தும் பாதுகாப்பு அமைச்சகத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அமைச்சர் ஷோய்கு அறிவித்தார்.
  • இதை வாக்னர் குழுவை உடைப்பதற்கான முயற்சியாகவே ப்ரிகோஷின் கருதுகிறார். ரஷ்யாவில் உள்நாட்டுப் போராகக் கொழுந்துவிட்டு எரிய வாய்ப்புள்ளது என்று அஞ்சப்பட்ட கலகத்துக்கான தீப்பொறி பற்றத் தொடங்கியது இப்படித்தான்.

நன்றி: தி இந்து (28  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்