TNPSC Thervupettagam

வாங்கும் சக்தி அதிகரிக்க...

October 24 , 2019 1906 days 1047 0
  • பொருளாதாரத் தேக்க நிலையிலிருந்து இந்தியா விடுபட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
  • அதில் முக்கியமான ஒன்று, கிராமப்புற மக்களின் நுகர்வினைக் காட்ட ஊரக வேலைவாய்ப்பு ஊதியத்தை நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணுடன் இணைத்து வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
  • இது பலரால் வரவேற்கப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்து சற்று அறிவுப்பூர்வமாக ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் விவாதிப்பது அவசியம்.
  • 100 நாள் வேலை என்பதுதான் அனைவருக்கும் தெரிந்த சொல். இது குறித்துப் பல விவாதங்கள் இந்தத் திட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை உள்ளூரிலிருந்து உலக வங்கி வரை நடந்து கொண்டிருக்கின்றன.  

புள்ளி விவரங்கள்

  • ஆராய்ச்சி நிறுவனங்கள் நடத்தும் விவாதங்கள் முழுவதும் அறிவியல்பூர்வமாக எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகள் அடிப்படையில் நடைபெறுகின்றன;
  • மற்றவையெல்லாம் அபிப்பிராயங்கள் மற்றும் தனிப்பட்ட கருத்துகள்; அவற்றுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. 
  • இந்த விவாதங்களை மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுத்துக்கொள்வதில்லை. உலகத்தில் மிகப் பெரிய ஆராய்ச்சி நிறுவனங்கள் அதிக அளவில் பணம் செலவிட்டு 100 நாள் வேலைத் திட்டத்தை ஆராய்ச்சி செய்துள்ளன.  
  • இந்தத் திட்டம் குறித்த புரிதல் படித்தவர்கள் மத்தியிலேயே குறைவாக இருப்பதால், மீண்டும் மீண்டும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்த வண்ணம் உள்ளன.
  • இந்தக் கட்டுரைகளையெல்லாம் தொகுத்து ஐ.நா. நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. நம் நாட்டில்தான் படித்தவர்களே ஆதாரங்களின்றிப் பேசப் பழகியிருக்கிறார்கள்.

வேலை உறுதித் திட்டம்

  • அடிப்படையில் இந்தத் திட்டம் சட்டப்பூர்வமானது.
  • சட்டத்தின் மூலம் ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்போது, அந்தத் திட்டத்தின் பலன் பயனாளிகளுக்குக்  கிடைக்கவில்லையென்றால், நீதிமன்றத்தின் மூலம் தங்களுக்குக் கிடைக்க வேண்டியவற்றைப் பெற்றுவிடலாம்.
  • வேலை என்பதை உரிமையாக ஏழைகளுக்கு மத்திய அரசு அளித்த திட்டம் இந்த 100 நாள் வேலை உறுதித் திட்டம்.
  • உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு பெரிய திட்டம் இவ்வளவு அதிகத் தொகையுடன் இந்தியாபோல் செயல்படுத்தப்படவில்லை.
  • உலகத்திலேயே ஏழைகளுக்கான மிகப் பெரிய திட்டம் என்றால், அது இந்த 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம். 
  • இந்தத் திட்டம் தொடங்கிய ஆண்டில் ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்கப்பட்டது. இன்று ரூ.61,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • வலதுசாரிச் சிந்தனையாளர்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட திட்டம், விமர்சிக்கப்பட்ட திட்டம்; பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டம்  நீர்த்துப் போகும் எனப் பலர் வாதிட்டனர்.
  • இந்தத் திட்டத்தை நிறுத்தினால் மிகப் பெரிய மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்பதை நன்கு அறிந்துதான் இந்தத் திட்டத்தைத் தொடர்கிறது மத்திய அரசு.
  • அது மட்டுமல்ல, இந்தத் திட்டத்துக்கான செலவு அதிகரித்து உச்சகட்டமாக ஆண்டுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்க வேண்டிய சூழலுக்கு மத்திய அரசு தள்ளப்பட்டிருக்கிறது.
  • இந்தத் திட்டம் ஏழைகளுக்கான திட்டம் என உலகளவில் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றதாகும்.  
  • ஒட்டுமொத்தமாக கடந்த 15 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் 75 சதவீதம், இந்தத் திட்டத்தில் பணி செய்தவர்களுக்கு ஊதியமாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தில் பயனடைந்தவர்களில் 55 சதவீதம் பேர் பெண்கள்; 21 சதவீதம் பேர் தலித்துகள். சராசரியாக ஆண்டுக்கு ஒருவருக்கு 46 நாள்கள் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் நோக்கங்கள்

  • இந்தத் திட்டத்தின் நோக்கங்கள் மூன்று. ஒன்று, வேலை வாய்ப்பை உறுதி செய்வது; இரண்டு, ஏழைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது; மூன்று, பஞ்சாயத்தை வலுப்படுத்துவது.
  • இந்தத் திட்டத்தில் 50 சதவீத வேலை கிராமப் பஞ்சாயத்தின் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்துக்கான பணிகளும் பணிகளை நிறைவேற்றும் பணியாளர்களைக் கொண்ட பணியாளர் அறிக்கையும் கிராம சபையின் உறுப்பினர்களால் அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும்.
  • இந்தத் திட்டத்தைச் சமூகத் தணிக்கை செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் இயற்கை வள மேம்பாடு அடைய செயல்பட வேண்டும்.
  •  இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி ஏழைகளுக்கான அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.
  • இந்தத் திட்டத்தில் பணி என்பது 5 கி.மீ. தொலைவுக்குள்தான் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் கிராமங்களை புனரமைக்க வேண்டும். இதில் மூன்றில் ஒரு பங்குக்குக் குறையாமல் பெண்களுக்கு பணி அளிக்க வேண்டும்.
  • அதிகபட்ச பணிகள் தலித்துகளுக்கு ஒதுக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் இயந்திரங்கள் பயன்படுத்தக் கூடாது. 
  • இந்தத் திட்டத்தில் வேலை உரிமையாக்கப்படுகிறது. அதேபோல் குறைந்தபட்ச ஊதியத்துக்கும் உத்தரவாதம் கொடுக்கப்பட்டு விட்டது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம் என்ற உரிமையும் இதில் உள்ளது.
  • அதேபோல் சரியான நேரத்தில் ஊதியம் என்பதும் உத்தரவாதமாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கும் மேலாக, ஒரு மரியாதையுடைய ஊதியமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.  கேள்வி கேட்பதையும் உரிமையாக்கித் தந்துள்ளது.
  • அதே நேரத்தில் இந்தத் திட்டப் பணிகளை நடைமுறைப்படுத்தும்போது, அனைவரையும் கடமைப்படுத்துதலையும் உரிமையாக்கித் தந்துள்ளது.
  • இவ்வளவு உரிமைகள் அடங்கியதுதான் இந்த 100 நாள் வேலை உறுதியளிப்புச் சட்டம்.
  • ஆனால், இந்த உரிமைகளெல்லாம் இந்தச் சட்டத்தில் இருக்கின்றன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இந்தியா முழுவதும் இந்தத் திட்டத்தில் இடைத்தரகர்கள் இல்லாது பயனாளியின் வங்கிக் கணக்கில் பணம் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.
    இந்தத் திட்டத்தைக் கைவிடுமாறு தொழிலதிபர்கள் பலர் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டனர்.
  • ஆனால், இந்தத் திட்டம் இரண்டு ஆண்டுகள் தொய்வடைந்த நேரத்தில் வாங்கும் சக்தியை மக்கள் இழந்து கிராமப்புற பொருளாதாரம் தேக்கமடைந்தது.
  • அதன் விளைவு, தாக்கம் தேசியப் பொருளாதாரத்தில் எதிரொலிக்க ஆரம்பித்தவுடன் இந்தத் திட்டத்தைத் தவிர்க்க எந்த நிறுவனத்தினர் கோரிக்கை வைத்தார்களோ, இந்தத் திட்டத்தை வலுப்படுத்த அவர்களே மத்திய அரசிடம்  கோரிக்கை வைத்தனர். 
  • இதைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தின் மூலம் பணம் செலவு செய்யும்போது, கிராமப்புற சந்தை வீரியம் பெற்று எழுந்ததை பல்வேறு ஆய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டின.

திட்டத்தின் நிலை

  • கிராமங்களில் ஏழைத் தொழிலாளர்களுக்குக் கூலி உயர்வு கிடைத்தது இந்தத் திட்டத்தால்தான். அத்துடன்சுயமரியாதை உயர்வதாக ஏழைகளுக்கு ஓர் உணர்வு பிறந்தது. 
  • பல்லுயிர்ப் பெருக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல நடவடிக்கைகள் இந்தத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டன.
  • லட்சக்கணக்கான மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தால் கிராமங்களில் பாலின சமத்துவம் ஏழைகள் வீட்டில் ஏற்றம் பெற ஆரம்பித்தன.
  • இந்தத் திட்டத்தால் ஏழைகளுக்கு சமூகப் பாதுகாப்பு கிடைத்தது. வேலையில்லாத் திண்டாட்டத்தால் இடம்பெயர்வது நிறுத்தப்பட்டது.
  • பட்டினிச் சாவு இல்லாமல் பாதுகாக்கப்பட்டது. கிராமப்புற மேம்பாட்டுக்கான திட்டங்களிலேயே மிகக் குறைந்த ஊழல் உள்ள திட்டம்இந்தத் திட்டம்தான்.
  • ஆனால், இந்தத் திட்டத்தில் ஒருசில குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதில் ஒன்று, இந்தத் திட்டத்தின் பணிகள் மூலம் உருவாக்க வேண்டிய சொத்துகள் உருவாக்கப்படவில்லை.
  • இந்தத் திட்டம் அதிக ஏழ்மை நிலை கொண்ட மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பிகார் போன்றவற்றுக்கு மிக உதவிகரமாக இருக்கும். ஆனால், இந்தத் திட்டத்தை அந்த மாநிலங்கள் சிறப்பாக நிறைவேற்ற முன்வரவில்லை.
  • குறைந்த ஏழைகளைக் கொண்ட கேரளம்தான் இந்தத் திட்டத்துக்காக அதிகத் தொகையைப்  பெற்று செலவழித்திருக்கிறது. 
  • இந்தத் திட்டத்தில் அதிகமாகப் பயன் அடைந்தவர்கள் பெண்கள். ஏழை மாநிலங்களான பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிகக் குறைந்த அளவிலான நிதிதான் இந்தத் திட்டத்துக்காகச் செலவிடப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும்போது மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும்.
  • சமூகப் பணியாற்ற இந்தத் திட்டத்தின் மூலம் சமூக சேவகர்களை உருவாக்கியிருக்க வேண்டும். மேற்கூறியவையெல்லாம் உருவாக்கப்படவில்லை. 
    இவ்வளவு குறைபாடுகள் உள்ளபோதும், இந்தத் திட்டம் ஏழைகளுக்கான ஓர் அற்புதமான திட்டம்.
  • அதைப் புரிந்து கொண்டு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் ஏழைகளின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
  • இந்தத் திட்டத்தை வலுப்படுத்த நாம் செய்ய வேண்டிய பணி சமூகத் தணிக்கை செய்வது;
  • இந்தப் பணியை ராஜஸ்தான், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் சிறப்பாகச் செய்து வருகின்றன.  பிற மாநிலங்களும் அதைப் பின்பற்றி இந்தத் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.

நன்றி : தினமணி (24-10-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்